Wednesday, March 16, 2011

தேநீர் விடுதி - சினிமா பார்வை

"சூச்சு மாரி" - நமது குழந்தைகள் அனைத்தையும் முணுமுணுக்க வைத்த "பூ" படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அறிமுகம் ஆன, தனது முதல் படமான "பூ" படத்தின் மூலம் கவனிக்க தக்க இசை அமைப்பாளராக முன்நெரிவிட்டவர் குமரன்.

இளையராஜா அவர்களுக்கு பின்னர், மனதை தொடும் மெல்லிய கிராமிய இசை தருவதற்கு தற்சமயம் எஸ்.எஸ்.குமரனால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. களவாணி பாடல்களை தொடர்ந்து தற்போது அவர் இசை அமைப்பில் வெளிவந்து இருக்கும் "தேநீர் விடுதி" படத்தின் பாடல்களை, இசையை கேட்டால்.

இதில் இன்னொரு விஷயம்..இப்படத்தின் இயக்குனரும் குமரனேதான்.

அவரது சொந்த ஊரில் நடந்த கதை என்றும், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற தனது பத்து வருட கனவு, இசை அமைப்பாளராக வளர்ந்தபின் நிறைவேறிவிட்டதாக சொல்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

"நான் எனது பணியை குறும் படங்கள் மூலம் தொடர்ந்தேன். அதுமட்டுமன்றி எனக்கு இசைக்கருவிகள் வாசிப்பது மிகவும் பிடிக்கும், அதனாலேயே எனக்கு இசையின் மேல் ஆர்வம் வந்தது என்றார். டைரக்டர் சசி சாருக்குத்தான் என் நன்றி, ஏனெனில் பூ படத்திற்கு அவர்தான் என்னை அறிமுகம் செய்தார்" என்கிறார் குமரன்.

பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அனுஷ்கா தேவி தயாரிப்பில் எஸ்எஸ்.குமரன் இயக்கும் 'தேநீர் விடுதி'. இதில் ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா, பிரபாகர், பெரிய கருப்ப தேவர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பலசரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. கடைக்கு எதிரில் இருக்கிற டீக்கடையில் இருந்துதான் காதலுக்கே பேஸ்மென்ட் போடுகிறார் ஹீரோ.

"இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோவும் சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி சொல்லி இருக்கிறேன்" என்று பேட்டியில் இப்படம் பற்றி தெரிவித்தார் 'பூ' குமரன்.

இசையமைப்பாளர் டைரக்ட் செய்த படம். குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும்.

கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும்.அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

1 ."என்னமோ என்னமோ பண்ணுது புள்ள" - பாடலை கேட்டாலே மனதை என்னமோ பண்ணும் இந்த அழகிய பாடலை பாடி இருப்பவர்கள் சின்மயி,மாளவிகா மற்றும் எஸ்.எஸ்.குமரன்.

இளையராஜா அவர்கள் தான் இசை அமைக்கும் படத்தின் அழுத்தமான காட்சிகளில், சொந்த குரலில் மனதை தொடும்படி பாடுவாரே. அதைபோன்றே ஒரு குரல்வளம் குமரனுக்கும் இருக்கிறது.

2."மெல்லென சிரிப்பாளோ, ஜில்லென முறைப்பாளோ" - இப்பாடலை பாடி இருப்பவர்கள் கவுசிக் மற்றும் மிருதுளா. குமரனுக்கே உரித்தான குழந்தைகளின் பின்னணி குரலும் இப்பாடலில் இருக்கிறது. இப்பாடலின் துவக்கத்தில் வரும் கம்போசிங் மனதில் இடம் பிடிக்கிறது.

3. "ஒரு மாலை பொழுதில் நான் உனை பார்த்தேன்.
உனை பார்த்தேன், அன்பே, நான் என்னை பார்த்தேன்."

-"நெருங்கி வருவாய்" விளம்பர பாடல் பாடிய சோனா மோகபத்ரா பாடியிருக்கும் இந்த பாடல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கபோகிறது. உயிரோட்டமான ஒரு மெலடி. சோனாவின் கனமான குரலும், பாடல் வரிகளும் அருமை. எஸ்.எஸ். குமரனின் மெலடி இசை திறமைக்கு நல்ல சான்று இந்த பாடல்.

இதே "ஒரு மாலை பொழுதில்" வயலின் இசையில், வாத்திய இசையாக மட்டுமே இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும், அலுக்காத தேனிசை.

4 . "உயிரோடு உறவாடி, உலகம் மறந்து போவோம்" - இசை அமைப்பாளர் குமரன் பாடி இருக்கும் ஒரு சிறிய பாடல். இதுவும், அருமையான மெலடி.

யாஷ் கோல்சா பாடி இருக்கும் "ஏய்...இவன் பந்தல்காரன்" என்று வரும் பாடல், படத்தில் இந்த பாடல் மட்டுமே மெலடி இல்லாமல் குத்து பாடல் போன்று இருக்கிறது. ஆனாலும், ஒரு சில வரிகளே உள்ள சிறிய பாடல்.

"படத்தின் முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடும். ஒரு காட்சி கூட தேவையில்லாததாக இருக்காது என்பதுதான் அது. குளோஸ் அப் விளம்பரத்தில் வரும் 'நெருங்கி வருவாய்...' என்ற பாடலை பாடிய சோனா மோகபத்ராவை முதன் முறையாக தமிழில் பாட வைத்து இருக்கிறேன்" என்ற குமரன், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னுடன் முதல் படத்திலிருந்து பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி அவர்களை கவுரவித்தார்.

'தேநீர் விடுதி' முழுக்க முழுக்க யதார்த்தமான முழு நீள நகைச்சுவை படம் என்பதோடு, எளிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம்.

பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், பூ, வெண்ணிலா கபடி குழு, களவாணி, தென் மேற்கு பருவகாற்று என நமது மக்களின் ரசனையை மேம்படுத்தி இருக்கும் படங்களின் பட்டியலில், குமரனின் "தேநீர் விடுதி" நிச்சியம் இடம் பெரும் என்று எதிர்பார்க்கலாம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru