Tuesday, May 31, 2011

விலைக்கு வாங்கியதா ஆஸ்கார் விருது? - ஏ.ஆர். ரகுமான்


ஒரு காலத்தில் தமிழ் சினிமா என்றாலே, வட இந்தியர்களுக்கும் சரி, இந்தி சினிமா உலகிற்கும் சரி. ஒரு அலட்சியமான பார்வை இருந்தது. ரஜினி உட்பட நமது ஹீரோக்களை பற்றிய கிண்டல் உணர்வே இருந்தது.

அந்த பார்வையை தகர்த்து, இந்தி சினிமா உலகை விட, நம் தமிழில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நெற்றிபொட்டில் அடித்தாற்போல அவர்களுக்கு புரிய வைத்த படம்...இந்தியில் டப் செய்யப்பட்டு காஷ்மீர் உட்பட வட மாநிலங்களை கலக்கிய "ரோஜா".

ரோஜாவின் இயக்குனர் மணிரத்னம், இப்படத்தின் இந்தி வெளியீடு மூலம் அங்கு தவிர்க்க முடியாத ஒரு முக்கிய இயக்குனர் ஆனார்.

அதைவிட, வட இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்தது...ரோஜா படத்தின் பாடல்களும், மிரட்டலான பின்னணி இசையும்.

அதுவரை, யாரும் கேட்டிராத புதுப்புது இசை ஒலிகளை எழுப்பி, ஹாலிவுட் படங்களுக்கு இணையான இசையை தந்தார் நமது ஏ.ஆர்.ரகுமான்.

பின்னர் இதே மணிரத்னம் - ரகுமான் கூட்டணியில் வந்த "பம்பாய்" படமும், படத்தின் இசையும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

ராம்கோபால் வர்மா தனது "ரங்கீலா" படத்தின் மூலம் நேரடியாக இந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்க வைத்தார். இந்தியா மட்டுமில்லாமல் உலகம் எங்கும் ரங்கீலாவின் வசீகர இசையால் கவனம் பெற்றார் ரகுமான். இந்திய இளசுகளின் தேசிய கீதமானது ரங்கீலா பாடல்கள். இந்தியாவின் நம்பர் ஒன் இசை அமைப்பாளர் ஆனார் ரகுமான்.

அதன் பின், இந்தியில் வெளிவந்த "தாள்", "உயிரே" தொடர்ந்து உலகையே கவர்ந்த "லகான்" என்று இசை புயலின் ஆதிக்கம் இந்திய சினிமாவில் தொடர்ந்து வீசிவருவது நாம் அறிந்ததே.

ஏ.ஆர்.ரகுமான் கால்ஷீட் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற இசை அமைப்பாளர்களை தேடுகிறார்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும்.

இதில் பல பேருக்கு வயற்றுஎரிச்சல் குறிப்பாக இந்தி சினிமா உலகில் உள்ளோருக்கு.

Slumdog Millionaire படத்திற்கு சினிமா உலகின் மிகபெரிய விருதான "ஆஸ்கார்" விருதினை ஏ.ஆர்.ரகுமான் வென்றதும், அந்த விருது பெற்ற மேடையில் தமிழில் பேசி தனது தமிழன் என்ற அடையாளத்தை அறிமுகப்படுத்தியதும் வட இந்திய இசை அமைப்பாளர்களை 'மண்டை கொதிக்க' வைத்திருக்கும் என்று சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் மெய்ப்பிக்கிறது.

இஸ்மாயில் தர்பார் (படத்தில் இருப்பவர்) - இந்தி சினிமாவின் ஒரு முக்கிய இசை அமைப்பாளர். ஹம திலே தி சுக்கே சனம், தேவதாஸ் படங்களின் இசை அமைப்பாளர்.

இவர் சமிபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

" Slumdog Millionaire படம் எப்படி இசைக்கான இத்தனை கவுரவமிக்க விருதினை பெற்றது என்று எனக்கு தெரியவில்லை. இதற்க்கு பதில் ரோஜா அல்லது பம்பாய் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைத்திருந்தால் கூட சரி என்று சொல்லலாம்.

ஆனால், Slumdog Millionaire படத்திற்கு ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதின் மூலம் அந்த விருதுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? " - என்று தெரிவித்து இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.

ஆஸ்கார் விருது பெற்ற இந்த படத்தை விட, சிறப்பான இசையை தனது முந்தைய படங்களில் தந்து இருக்கிறார் ரகுமான் என்கிற அவரது கருத்து சரியானதே.

ஆனால், சர்வதே நிறுவனம் மற்றும் குழுவினர் உருவாகிய Slumdog Millionaire படம் போன்று ரகுமான் இசை அமைத்த முந்தைய படங்கள் சர்வதேச திரை உலகை சென்று அடையவில்லை. அவ்வாறு ரீச் ஆகியிருந்தால், ரகுமானுக்கு எப்போது இந்த ஆஸ்கார் விருது கிடைத்து இருக்கும்.

இஸ்மாயில் தர்பரின் இந்த கருத்தாவது பரவாயில்லை.

அவர் ஒரு அளவுக்கு மீறி, "ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆஸ்கார் விருதை பணம் கொடுத்து வாங்கி விட்டார்" என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை ரகுமான் மீது சுமத்தி இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.

இஸ்மாயில் தர்பாரின் இந்த பேச்சுக்கு வட இந்திய இசை உலகில் லலித் பண்டிட், சுலைமான் மர்ச்சன்ட் உட்பட பல முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியா மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் அடிபட்டு இருக்கிறது இந்த இஸ்மாயில் தர்பாரின் குற்றச்சாட்டு.

"ஆஸ்கார் விருது கமிட்டியில் 3000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி விலை பேசமுடியும்" என்று ஆவேசமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

தேவதாஸ் போன்ற படங்களின் மூலம் நல்ல தரமான இசையை தந்த இஸ்மாயில் தர்பார், ஏ.ஆர்.ரகுமான் பற்றியும், அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது பற்றியும் கொஞ்சமும் தரமில்லாமல் பேசி இருக்கிறார்.

ஒரு உயரிய விருது பெற்ற சக கலைஞனை, இப்படி முறையில்லாமல் பேசி
அவமானப்படுத்துபவன் எப்படி ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியும்??

-இன்பா

இன்றைய மாணவர்கள்....


செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று சில சமயங்களில் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அதில் வரும் செய்திகள் வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் மிகுந்த அவநம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

பெரும் பணக்காரர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை பணத்திற்காக யாரும், எவ்விதக் காரியத்திலும் ஈடுபடத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. அரசியல்வாதிகள், வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டத்தை எல்லாம் ஏற்கனவே கடந்துவிட்டதால், இச்செய்திகள் பெரிய மன அதிர்வை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக சமீபத்தில் வரும் செய்திகள்தான் மிகுந்த அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. குறிப்பாக, விருநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவன், தனது நண்பர்களைப் போல் ஜாலியாக வெளியூர் சுற்றுவதற்காகவும், புதிய ட்ரெஸ் வாங்குவதற்காகவும் வீடு வீடாக நகை கொள்ளையடித்தான் என்ற செய்தி மிகுந்த மனப்பதட்டத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆறு மாத காலத்திற்குள் இது போன்று ஏராளமான செய்திகள். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து, சென்னையில் பைக்குகளைத் திருடி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். இதில் ஒரு மாணவனின் பெற்றோர் சராசரி நடுத்தர வர்க்க அரசு ஊழியர்கள். செய்தி கேள்விப்பட்டு, போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவர்கள், மகனின் குற்றச் செயல் குறித்துக் கேள்விப்பட்டு, அதிர்ந்துபோய் பையனை ஜாமீனில் கூட எடுக்காமல் சென்றிருக்கிறார்கள்.

அதுபோல் ஒரு தலைமை ஆசிரியரின் மகன் கல்லூரியில் படிக்கும்போது ஆடம்பரச் செலவுகளுக்காக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுக் கைதாகியுள்ளான். ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள், அந்தக் கல்லூரியில் சீட்டு வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலையில் ஈடுபட்டு, அது தொடர்பாக இன்னொரு கோஷ்டியிடம் மோதல் ஏற்பட்டு பெரிய அடிதடியில் முடிந்திருக்கிறது.

இந்தச் செய்திகள் கூறும் செய்தி என்ன?

முன்பு போல் இளம் குற்றவாளிகள் என்பவர்கள் வறுமையினாலும், வளர்ப்புச் சூழலினாலும் விளிம்பு நிலையிலுள்ள சமூகத்திலிருந்து மட்டும் உருவாவதில்லை.

நம்மைப் போன்ற சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அக்கௌன்டன்ட்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் போன்றவர்களின் பிள்ளைகளும் கூட வழிப்பறிக்கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள் என்பது இந்தக் காலத்தின் அவலங்களுள் ஒன்று.

தெருவில் ஒரு கொலை நடந்தால் கூட எதற்கு வம்பு என்று ஓடி ஒளியும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து எப்படி இந்தக் குற்றவாளிகள் உருவானார்கள்?

படிக்கவேண்டும். படித்த பிறகு ஏதோ ஒரு சுமாரான வேலை கிடைத்து, ஒரு சுமாரான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு சுமாரான வீட்டில், ஒரு சுமாரான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற கனவுகளுடன் வளர்ந்து வந்த மாணவர் கூட்டம் என்றிலிருந்து திருடவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தது?

இவர்கள் எல்லாம் வறுமையினாலோ, கல்லூரி ஃபீஸ் கட்டுவதற்காகவோ, அக்கா, தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகவோ இந்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை.

இக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சொன்ன காரணம் ஒன்றுதான்: ஆடம்பரமாக வாழவேண்டும். பைக், கார், குடி, ரிசார்ட்ஸ், பெண்கள்... என்று சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசைதான், கடைசியில் இவர்களைக் கொள்ளைக்காரர்களாக மாற்றியுள்ளது.

உலகமயமாக்கலின் மறைமுக விளைவுகளில் இதுவும் ஒன்று.

உண்மையில் உலகமயமாக்கலின் ஆரம்ப காலகட்டத்தில், ஆங்கில ஊடகங்களின் பாதிப்பில் நானும் ஓபன் மார்க்கெட் எகானமிக்கு ஆதரவாகவே இருந்தேன். இருபது ஆண்டுகள் கழித்து நோக்கும்போது, உலகமயமாக்கலால் பத்து சதவீதத்திற்கும் குறைவான நபர்கள் மட்டுமே பயனடைந்திருக்க... அது நமது மொத்த சமூகத்திலும், தனி மனித வாழ்க்கையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் சீரழிவுகள்தான் இன்று பிரமாண்டமான அச்சுறுத்தலாக உள்ளது.

மாணவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதற்கான வித்து, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சக மாணவர்களாலேயே ஊன்றப்படுகிறது. முன்பு போல் இப்போது மாணவர்கள் கிடையாது.

முன்பு மாணவர்களின் வாழ்க்கை என்பது, கொஞ்சம் சிகரெட், எப்போதாவது தண்ணி, கொஞ்சம் கவிதை(?), அரைகுறை கம்யூனிஸ அறிவு, சிறிது காலத்திற்கு சமூகக் கோபங்கள், கட் அடித்துவிட்டு காலைக் காட்சி மலையாளச் சினிமா, சிறிது காதல், சைட் அடித்தல் என்பதோடு முடிந்துவிடும்.

ஆனால் நகரங்களில் இன்று கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்களின் வாழ்க்கை முறையைக் கேட்டால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

அவர்கள் எப்போதும் செல்ஃபோனை டாப்அப் செய்து செய்து பெண் தோழிகளிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய வர்த்தக வளாகங்களுக்குச் சென்று இஷ்டத்திற்கு செலவழிக்கிறார்கள. பெரிய பார்களில் ரெகுலராகத் தண்ணியடிக்கிறார்கள். ரிசார்ட்ஸ்களுக்குப் பெண்களைத் தள்ளிக்கொண்டு சென்று அனுபவிக்கிறார்கள்.

அனைத்து வசதியான மாணவர்களும் இப்படிச் செய்வதில்லை என்றாலும், வசதியுள்ள மாணவர்களில் பாதிக்குப் பாதி பேர் நிச்சயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாவதால், சுற்றிலுமுள்ள பணமில்லாத மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.

நமது சினிமாக்களும் இளைஞர்கள் என்றால் ஜாலியாகத் தண்ணியடித்துவிட்டு, பெண்களுடன் ஊர் சுற்றுவதுதான் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளதால், எப்பாடு பட்டாவது தானும் அந்த இன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்று துடிக்கிறார்கள். எனவே முதலில் இவர்கள் சிறிதாக வீட்டில் திருட ஆரம்பிப்பார்கள். ஆனால் இவர்கள் ஆடம்பரமாகச் செலவழிக்க நினைப்பதற்கெல்லாம் அது எந்த மூலைக்கு?

நான் விசாரித்த வரையில், சென்னை போன்ற நகரங்களில் ஜாலியாக இருப்பதற்கு இளைஞர்களுக்கு சராசரியாகப் பின்வருமாறு செலவாகிறது.

ஃபோன் செலவு மாதத்திற்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய். பெண் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு வேறு டாப்அப் செய்யவேண்டும். நல்ல பாரில் வாரத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு முறை பீர் அடித்தால் கூட அதற்குக் குறைந்தபட்சம் நானூறு ரூபாய் எடுத்து வைக்கவேண்டும். பெண் நண்பர்களும் பீர் அடித்தால், அவர்களுக்கும் இவர்கள்தான் அழவேண்டும். முதலில் எல்லாம் நட்சத்திர ஹோட்டல் பார்களில்தான் பெண்களைக் காணமுடியும். இப்போதெல்லாம் நடுத்தர மக்கள் வரும் பிக்னிக் பிளாஸா போன்ற பார்களில் கூட ஆண்களுடன், பெண்களும் சேர்ந்த வந்து தண்ணீர் அடிக்கும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கமுடிகிறது

(கிராமத்திலிருந்து வந்திருந்த என் நண்பன் ஒருவன் இதைப் பார்த்த அதிர்ச்சியில் விழித்துக்கொண்டிருக்க... அதில் ஒரு பெண் இவனிடம், "கேன் யு ஹேவ் மேட்ச்பாக்ஸ்?" என்று அவனிடமே சிகரெட்டுக்கு வத்திப்பெட்டி கேட்க... அவனுக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கிவிட்டது.).

பிறகு மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் சினிமா. பெண் தோழிகள் பிக்அப்பானால், ஏதாவது ரிசார்ட்ஸ். குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் இல்லாமல் ரிசார்ட்ஸ்க்கு செல்லமுடியாது. எனவே நவீன வாழ்க்கை முறை நமக்கு அளித்திருக்கும் சுகங்களை அனுபவிக்க குறைந்த பட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாயாவது ஒரு இளைஞனுக்குத் தேவைப்படுகிறது.

இது குறைந்த பட்சம்தான். நீங்கள் நினைத்தால் சென்னையில் மாதம் பத்து லட்சம் ரூபாய் கூட சுலபமாகச் செலவழிக்கமுடியும்.

வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால் வேலையில் இல்லாத மாணவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது?

நகரங்களில் பெரும்பாலான மாணவர்களின் தாய்-தந்தை இருவருமே வேலைக்குப் போவதால், பிள்ளைகளைக் கவனித்து வளர்க்காத குற்ற உணர்வைத் தணித்துக்கொள்ள பிள்ளைகள் கேட்கும்போது கேள்வி கேட்காமல், பணத்தைத் தருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் அந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை எல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை.

மேலும் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் எல்லாம் தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு சம்பாரித்தாலும், பெரியதொரு வீட்டில் இருப்பார்களே தவிர, வெளியே அவர்களைப் பார்த்தால் சாதாரணமான மக்களைப் போல்தான் இருப்பார்கள். எவ்வளவோ பெரிய மனிதர்கள் தங்கள் குழந்தைகளை,

சராசரி மனிதர்கள் போல் பஸ்களில் பள்ளிகளுக்கு அனுப்பியதைப் பற்றி (நடிகர் சிவகுமார் தனது மகன்களை பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்புவாராம்.) கேள்விப்பட்டிருக்கிறோம். என்னுடன் படித்த ஸ்ரீராம் என்ற நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வரையிலும் அவன் அவ்வளவு பெரிய பணக்காரன் என்று எனக்குத் தெரியவே தெரியாது.

ஆனால் இப்போதைய உயர் நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரிடையே எக்ஸிபிஷனிஸம் என்பது பெரும் நோயாக உருவெடுத்துள்ளது. கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத பையனுக்கு இருபதாயிரம் ரூபாயில் செல்ஃபோன்... கேட்கும்போது கேட்கும் பணம்... கார்... என்று அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.

இந்தக் காலத்தில், இவ்வளவு வசதிகளையும் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் நல்லபடியாக வளருவான் என்று எதிர்பார்த்தால் உங்களைப் போல் முட்டாள் வேறு யாரும் இல்லை.

இவ்வாறு வசதியாக வாழும் சக மாணவர்களைப் பார்க்கும் பிற மாணவர்களுக்கு தாமும் அது போல் வசதியாக செலவழிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சிலர் இதற்காகவே படிக்கும்போதே பார்ட் டைம் வேலையில் சேர்ந்து சம்பாரித்து செலவழிக்கின்றனர். இது பரவாயில்லை. ஆனால் அதில் கூட நினைத்த அளவுக்கு எல்லாம் பெரிதாக சம்பாரித்துவிட முடியாது என்ற நிலையில் சிலர் குற்றச் செயல்களிலும் இறங்குவதின் விளைவே நீங்கள் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த செய்திகள்.

அடுத்த காரணம், பெற்றோர்களின் கண்காணிப்பின்மை.

இந்தக் காலத்தில் பெரும்பாலான தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். வீடு திரும்ப இரவு ஏழு, எட்டு மணியாகிவிடும். பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் மதியம் 3 மணிக்கே விட்டுவிடுகிறது. பெற்றோர் வீட்டுக்கு வருவதற்குள் நடுவே நாலு மணி நேரம் லட்டு போல் இருக்கிறது(சே... நமக்கெல்லாம் அந்த சான்ஸ் கிடைக்காம போயிடுச்சு.).

இந்த நேரங்களில் தமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை. மேலும் சில வீடுகளில் தாய்மார்கள் வீட்டில் இருந்தாலும் கூட சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது குறித்த அறியாமை மற்றும் பிள்ளைகளின் மீதுள்ள அதீத நம்பிக்கையாலும் பிள்ளைகளைச் சரியாகக் கண்காணிப்பதில்லை.

எனது அலுவலக நண்பர் ஒருவர், "வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கினேன். இன்டர்நெட் வேண்டாம்னேன். ஆனா என் பையன் இன்டர்நெட் இல்லன்னா கம்ப்யூட்டரே வேண்டாம். இன்டர்நெட்லயே கோச்சிங்லாம் சொல்லித் தர்றாங்கன்னனான். சரின்னு போட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு, நாங்க இருக்கறப்ப அவன் இன்டர்நெட்டே போடுறதே இல்லை. ஆனா பில்லு மட்டும் ஆயிரம், இரண்டாயிரம்னு வருது" என்றார்.

எனக்கு அப்படியே அந்தாளைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று தோன்றியது.

வீட்டிலேயே இன்டர்நெட் கனெக்சனைக் கொடுத்துவிட்டு, ஒரு 18 வயதுப் பையன், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பார்ப்பான் என்று நீங்கள் நினைத்தால் உங்களை என்னத்தச் சொல்ல? நல்லா வருது வாயில.

உண்மையில் பிரச்னை என்னவென்றால், நமது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தற்போதைய பிள்ளைகள் எதிர்கொள்ளும் சூழல்கள் குறித்த அறிவே சுத்தமாகக் கிடையாது. சிலர் கூறலாம்.

பத்திரிகைகளில் எல்லாம் நிறைய செய்திகள் வருகிறதே என்று,
அதைப் படிப்பவர்கள் எல்லாம் ஒரு இருபத்தைந்து சதவீதம் இருந்தாலே பெரிய விஷயம். பெரும்பாலான நவீன பெற்றோர்கள், ஒரு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட இல்லாத, நம்மைச் சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத பெற்றோர்கள்தான்.

திடீரென்று பையனோ, பெண்ணோ புது செல்ஃபோன் வைத்திருப்பார்கள். கேட்டால் நண்பன் இலவசமாகக் கொடுத்தது என்பார்கள். அப்படியே நம்புவார்கள். யாராவது கொடுத்தார்கள் என்றால், யார் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? என்றெல்லாம் விசாரிக்கவேண்டும். ஆனால் எதுவும் கிடையாது. ஒரு வேளை ஒரு திருட்டுக் காரியத்தில் ஈடுபட்டுக் கூட அவர்கள் அந்தப் போனை வாங்கியிருக்கக் கூடும். எனவே கண்காணிப்பின்றி வளரும் குழந்தைகளும் திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று எவ்வாறு இயங்குகின்றன என்று பார்ப்போம். நமது பள்ளிகளில் மாரல் ஸ்டடீஸ் என்று ஒரு பாடம் இருக்கிறது. இது பெரும்பாலான பள்ளிகளில் ஐந்து அல்லது எட்டாம் வகுப்போடு முடிந்துவிடுகிறது. அடப்பாவிகளா... மாணவர்கள் கெட்டுப்போவதற்கான வயது என்பது 13க்கு மேலேதான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு மாரல் ஸ்டடீஸே கிடையாது.

அதுவும் நவீன குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலச் சூழலில்தான் அது மிகவும் அவசியம். விடலைப் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்குத்தான் மாரல் ஸ்டடீஸ் என்பது இன்றைய கட்டாயத் தேவை. அவர்களுக்கு இது போன்ற வகுப்புகளில், ஆடம்பர வாழ்க்கை மற்றும் கட்டற்ற சுதந்திரத்தின் பின் விளைவுகள் குறித்தும் எடுத்துக் கூறி, இது மாதிரியான காரியங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விளக்கவேண்டும். ஏனெனில் விடலைப் பருவம் என்பது, செய்யும் காரியங்களின் பின் விளைவுகளை அறியாத வயது. ஆனால் அந்தப் பருவத்தில் அதையெல்லாம் எடுத்துச் சொல்ல இங்கு ஆட்களே கிடையாது.

காலம் மாறிவிட்டது. குற்றங்கள் நடக்கின்றன என்பதற்காக அந்தக் காலத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளமுடியாது. ஆனால் குற்றங்களைத் தவிர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்?

பெற்றோர்கள், சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகி, அவர்கள் மனதில் உள்ள விஷயங்களைத் தங்களிடம் வெளிப்படையாக விவாதிக்குமாறு பிள்ளைகளை வளர்க்கவேண்டும். அவர்கள் தங்கள் பிரச்சினைகள் கூறும்போது, நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டமுடியும்(ஆனால் இவ்வாறு வளர்க்கும்போது நீங்கள் சிற்சில அதிர்ச்சிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். என் பையன் என்னிடம் ஃப்ரீயாகத் தினமும் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் கேட்கிறான்.).

இன்றைய மாணவர்கள் வளரும் சூழ்நிலை என்பது பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை அல்ல. அவன் உலகமயமாக்கலாலும், நுகர்ப்பொருள் கலாச்சாரத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நடுவே வளர்கிறான். எனவே முன்பு எப்போதையும் விட அதிக வழிகாட்டுதல் தேவைப்படும் காலகட்டம் அது.

எனவே தற்போதைய நவீன, ஆடம்பர மற்றும் கட்டற்ற சுதந்திர வாழ்க்கையின் பின் விளைவுகள் குறித்து வீட்டிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அம்மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு முறையான வழியில் விளக்கம் கூறி நல்வழிப்படுத்துவதே நமது மாணவர்களைக் குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க முடியும்.

வாழ்க்கை அற்புதமான ஒன்று.

சக மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும்போதெல்லாம், அதை மீட்டெடுக்கவென்றே யாரேனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பணத்திற்காக மாணவர்கள் கூட குற்றங்களில் ஈடுபடும் இன்றைய காலகட்டத்திலும், கையில் குழந்தையுடன் பூ வைக்க சிரமப்படும் இளம் தாய்க்கு, வியாபாரத்தை விட்டு விட்டு பூ வைத்துவிடும் பூக்காரப் பெண்மணிகளும், புரோட்டோக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து ஸ்டேட் ரேங்க் வாங்கும் மாணவர்களும், வங்கிகளில் பொறுமையாகக் கேட்பவர்களுக்கு எல்லாம் சலான் எழுதித் தரும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களே மனிதர்கள் குறித்த அவநம்பிக்கையிலிருந்து நம்மை மீட்கிறார்கள்.

(கட்டுரை:திரு.ஜி.ஆர்.சுரேந்திரநாத், உயிர்மை பதிப்பகம்)

Saturday, May 28, 2011

அசத்தும் "அஸ்வின்" - சென்னையின் வெற்றி ரகசியம்


ஐ.பி.எல்.2011 இறுதிப்போட்டி.

ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போல உள்ளூர் போட்டிகளில் சரிசமமாக மோதும் சென்னை - பெங்களூர் அணிகள் மோதிய போட்டி. சென்னை அணி 205 ரன்கள் குவித்து, பெங்களூருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்தும், யாருக்கும் சென்னை வெற்றி அடையும் என்கிற முழு நம்பிக்கை வரவில்லை.

இதற்க்கு காரணம்....இந்த தொடர் முழுவதும் தனது அதிரடியால் மிரளவைத்த பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரரும்,மேற்கிந்திய அணியை சேர்ந்தவருமான கிறிஸ் கெயில்.

ஆனால், மற்ற அணிகளில் சோபித்த அவர், சென்ற ஆட்டம் போலவே தமிழக வீரரின் முதல் ஓவரிலேயே எளிமையாக கீப்பர் தோனிக்கு 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.

இந்த தொடரில் அவரை ஆரம்பத்திலியே இரண்டு முறை வெளியேற்றியவர்.. நம்ம சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின்.

இது மட்டுமல்ல, உலக கோப்பை தொடரில், காலிறுதியில் உலகின் மிகசிறந்த பேட்ஸ்மேனான ஷேன் வாட்சனை வெளியேற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் அஷ்வின்.

சுழல் பந்து வீச்சாளாரான இவர்,கடந்த ஐ.பி.எல் தொடரில் துவக்க பந்து வீச்சாளராக களத்தில் நின்று, சென்னை அணிக்கு பெரும் திருப்பத்தை தந்தார். ஒரு ஸ்பின்னரை துவக்கத்தில் பந்து வீச செய்யும் ஒரு புது டிரண்டை செட் செய்தார் அஷ்வின்.

கடந்த சாம்பியன் கோப்பை போட்டிகளில், 14 விக்கெட்டுக்களை வீழ்த்தி, தொடரின் சிறந்த பந்து வீச்சாளருக்கான தங்கப்பந்து பரிசினை வென்றார்.

அஷ்வினின் பந்து வீச்சு, மற்ற சுழல் பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுப்பட்டது.

கேரம் என்னும் ஒரு புதுவகை பந்துகளை வீசுகிறார் அஷ்வின்.

"ஹர்பஜனுடன் ஒப்பிடுகையில் சராசரியாக தெரிந்தாலும் அஷ்வினின் திறமைகள் வேறுமாதிரியானவை. அவர் சம்பிரதாய சுழலர் அல்ல. சற்று வேகமாக நேராக சிக்கனமாக வீசக்கூடியவர்.

தூஸ்ரா, டென்னிஸ் பால், ஆர்ம் பால் உள்ளிட்ட பல வேறுபாடுகளை பந்து வீச்சில் கொண்டுள்ள அஷ்வின் கடுமையான நெருக்கடிகளின் போது அணித்தலைவரின் வலது கையாக செயல்படக் கூடியவர். மற்றொரு வலு அவர் பந்து வீச்சில் பெறும் பவுன்ஸ். ஓரளவுக்கு நல்ல மட்டையாளரும் கூட. அஷ்வினை புறக்கணிக்க முடியாது." என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் அபிலாஷ்.

"அவர் புதிதாக தன் வீச்சில் சேர்த்துள்ள கேரம் பந்துக்காக. இலங்கையின் அஜந்தா மெண்டிசினுடையது போன்றே அஷ்வினின் கேரம் பந்தும் லெக்-மிடில் குச்சி லைனில் விழுந்து எகிறுகிறது.

ஹர்பஜன் அளவுக்கு சுழல், லூப், ஃபிளைட் போன்ற செவ்வியல் அம்சங்கள் அஷ்வினுக்கு இல்லை. இந்த காரணத்தினாலே அவர் பஜ்ஜிக்கு சிறந்த ஜோடியாக இருப்பார். ஒரு முனையில் அஷ்வின் ஓட்டங்களை வறள வைத்தால், சர்தாரால் மறு முனைவில் தாக்க முடியும். இருவரும் முற்றிலும் மாறான வீச்சு முறை மற்றும் அணுகுமுறை கொண்டவர்கள் என்பதால் மட்டையாளர்கள் ஒரே போன்றதாக பழகி விடும்படி இந்த ஜோடி அமையாது.

இன்று வலுவான பந்து வீச்சு கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற அணிகள் சுழல் ஜோடிகளை முக்கிய ஆயுதமாக கொண்டுள்ளன. பாக்கிஸ்தானின் அஃப்ரிடியையும் அவ்வாறே கருதுவோமானால், இந்த ஜோடிகள் முழுநேர சுழலர்கள் தாம். மெண்டிஸைப் போன்றே அஷ்வினால் அவரை முதன்முறை சந்திக்கும் மட்டையாளர்களை தனது புதிர் காரம் பந்தால் கதிகலங்கடிக்க முடியும். " என்றும் கூறுகிறார் திரு.அபிலாஷ்.

இன்று நடந்த ஐ.பி.எல். போட்டியில், முதல் ஓவரில் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை, அஷ்வின் வீழ்த்திய போதே, சென்னை அணியின் அபார வெற்றி உறுதி ஆகிவிட்டது.
கெயிலின் விக்கெட் வீழ்ந்ததும், தோனி உட்பட நமது சென்னை அணியின் வீரர்கள் , அஷ்வினை கொண்டாடியபோதே, இந்த ஐ.பி.எல் கோப்பை நமதே என்று முடிவு செய்யப்பட்டது.

ஐ.பி.எல்லின் இறுதிப்போட்டியில் அவரின் பத்துவீச்சை கவனியுங்கள்.

நான்கு ஓவர்கள் - மூன்று மிக முக்கிய விக்கெட்டுகள் - கொடுத்த ரன்கள் வெறும் 16 ரன்கள் மட்டுமே.

ஹர்பஜனுக்கு மாற்றாக உருவாகிவரும் அஷ்வின், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

ரஞ்சி கோப்பை போட்டிகளில்,30 ஓவர்கள் வீசும் அஷ்வினுக்கு, டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.


"ஒவ்வொரு போட்டியிலும், நான் புதிதாக கற்று வருகிறேன்.எந்த சூழலிலும் "நம்மால் முடியும்" என்ற எண்ணத்தை நான் விட்டுவிடுவதில்லை" என்று தன்னடக்கத்தோடு தெரிவிக்கிறார் 24 வயது அஷ்வின்.

விளையாடும் ஐந்து போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே முறையாக பந்து வீசிவிட்டு, மற்ற போட்டிகளில் 'மொக்கை' போட்டுவிட்டு, பெரிய 'படம்' காட்டும் ஸ்ரீசாந்தை, ஏதோ மலையாள தெய்வம் போன்று கொண்டாடுகிறார்கள் கேரள மீடியாக்கள்.

ஆனால், எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், விக்கெட்டுகளை வெற்றிகளோடு குவித்து வரும் ரவிச்சந்திரன் அஷ்வின். வளரும் பல கிரிக்கெட் வீர்களுக்கு,ஸ்ரீசாந்துக்கும் சேர்த்து
ஒரு நல்ல முன்னுதாரணம்.

-இன்பா

Thursday, May 26, 2011

"என்னை ஓவியனாக்கிய இந்து மதம் " - எம்.எப்.ஹுசைன்


பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், தற்சமயம் இந்தியாவை விட்டு வெளியேறி, கத்தார் நாட்டில் குடிவுரிமை பெற்று அங்கே வசித்து வருகிறார்.

இந்து மத தெய்வங்களை நிர்வாண ஓவியமாக வரைந்தமைக்காக, அவருக்கு நேர்ந்த கடும் எதிர்ப்பும், மிரட்டல்களுமே இதற்க்கு காரணம் என்பது நமக்கு தெரிந்ததே.

ஆனால், ஹுசைன் அவர்கள் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவர் ஓவியராக உருவாக காரணமே, இந்து மத கடவுள்கள் மீது அவர்க்கு இருந்த காதல்தான் என்று முன்பு ஒரு முறை தெஹல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார் திரு.எம்.எப்.ஹுசைன்.

அவர் அளித்த பதில்கள் இங்கே...

ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்?

இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கடுமையான அறிக்கைகளை நாடி, கிட்டத் தட்ட நம்பி - ஊடகங்கள் என்னிடம் வருகின்றன.

ஆனால், உண்மையில் இந்தியாவைப் பற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தப் போக்கைக் காலத்தின் ஒரு சிறிய கணமாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு சிறிய தடங்கல் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய வேலைகள் 5000 ஆண்டுகளாக வலுவான ஒரு விசையுடன் நடந்துவருகின்றன.

இளைய தலைமுறை அடிப் படைவாதத்தை, பழமைவாதத்தை வெறுத்து ஒதுக்கி, இந்த நிலையை மாற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என் வீட்டை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை. அதே சமயத்தில் பழமைவாத சக்திகள் சமூகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் பெரிய தொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு குழந்தை வீட்டில் எதையாவது உடைத்துவிட்டால், உடனே அந்தக் குழந்தையை நாம் வெளியே துரத்தி விடுவதில்லை. அப்படிச் செய்யக் கூடாது என்று அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்ல முயல்கிறோம். இது குடும்ப விவகாரம். என் கலையை எதிர்ப்பவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை, அல்லது அதை அவர்கள் பார்க்கவில்லை.

நீங்கள் ஏன் இந்தியாவுக்குத் திரும்பி வந்து போராடக் கூடாது?

இப்போதுள்ள நிலையில் நான் திரும்பிவர இயலாது. யாரும் என்னை வெளியேற்றவில்லை. நான் வயது முதிர்ந்தவன், உடல்ரீதியான அபாயத்திற்கு எளிதில் இலக்காகிவிடக்கூடியவன் என்பதால் நான் வெளியே வந்துவிட்டேன்.

அவர்கள் உருவாக்கிவைத்திருக்கும் மனநிலையில் இப்போது நான் திரும்பி வந்தால் சாலையில் போகும்போது யாரேனும் என்னைத் தாக்கிவிடக் கூடும். என்னால் என்னைத் தற்காத்துக்கொள்ள முடியாது.

ஒருவேளை பாஜக அல்லது மாயாவதி ஆட்சிக்கு வந்தால் நான் திரும்பி வரலாம். இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. வெளிப்படையாகப் பேசினாலோ நடவடிக்கை எடுத்தாலோ குஷிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுவோமோ என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆட்சியில் இல்லாதபோது, தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக இது போன்ற பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆட்சியில் இருந்தால் தனது தீவிரவாதப் படையினர் மரியாதைக்குரியவர்களாக, மதச்சார்பற்றவர்களாகத் தோற்றமளிக்கும் வகையில் கட்சி அவர்களைக் கட்டுப்படுத்திவைக்கும் .

இதுதான் இந்தியாவின் வேடிக்கையான முரண்பாடு. உண்மையில் நீதிமன்றங்கள்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். என்னுடைய படைப்பு ஆபாசமாக இருக்கிறது, அது சமய உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்பதெல்லாம் நீதிமன்றத்தில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. இதற்கு எதிராக ஒரு பொதுநல வழக்கை யாராவது தாக்கல் செய்தால் நன்றாக இருக்கும். அதை நான் செய்ய முடியாது. அது எனது களம் அல்ல.

உங்கள் கலைக்காக நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்டீர்கள்? இந்துச் சிற்பக் கலை பற்றியும் சாஸ்திரங்கள் பற்றியும் உங்கள் படைப்புகளைச் சிதைத்த குண்டர்களைவிட
உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா?


இல்லை. நான் மன்னிப்புக் கேட்கவேயில்லை. என் படைப்புகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நான் என்ன சொன்னேன் என்றால், என் படங்களை - கடவுளர் உருவங்கள் உள்பட - நான் ஆழமான அன்புடனும் ஈடுபாட்டுடனும் அவற்றைக் கொண்டாடும் விதமாகவும் வரைந்திருக்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினேன். அவ்வளவுதான். கலையை நான் குறைவாகக் காதலிக்கிறேன் என்பதல்ல. மனித இனத்தை அதிகமாகக் காதலிக்கிறேன்.

இந்தியா முற்றிலும் அலாதியானதொரு நாடு. தாராளப்போக்கும் பன்முகத்தன்மையும் கொண்டது. உலகில் இது போல ஒரு நாடு இல்லை. நாட்டில் தற்போது நிலவும் இந்த மனநிலை வரலாற்றுரீதியான ஒரு நிகழ்முறை. என்னைப் பொறுத்தவரை இந்தியா என்பது வாழ்வின் கொண்டாட்டம். உலகில் வேறு எங்கும் இது போன்ற தன்மையைக் காண இயலாது.

இந்துச் சிற்பக் கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான உங்கள் ஆர்வமும் அறிதலும் எப்படித் தொடங்கின என்று சொல்ல முடியுமா?

குழந்தையாக இருந்தபோது பந்தார்பூரிலும் பிறகு இந்தூரிலும் நான் ராம லீலாக் கொண்டாட்டங்களால் கவரப்பட்டிருக்கிறேன். என் நண்பன் மங்கேஷ்வரும் நானும் ராம லீலா நாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருப்போம்.

டாக்டர் ராஜகோபாலாச்சாரி சொல்வதுபோல, ராமாயணம் என்னும் பௌராணிகப் புனைவு ஒரு யதார்த்தமாகவே மாறிவிட்டது. அந்த அளவுக்கு ராமாயணக் கதை வலுவானதும் வளமானதும் ஆகும். 19 வயது ஆனபோது ஆன்மீக நூல்களைப் படித்தேன். 14-15 வயதில் நான் என் தாயை இழந்தேன். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.

இரவில் கொடும் கனவுகள் கண்டு விழித்துக்கொள்வேன். 19 வயதாகும் போது இவையெல்லாம் நின்றுவிட்டன. முகம்மது இஷாக் என்னும் குரு எனக்குக் கிடைத்தார். இரண்டு ஆண்டுகள் அவருடன் இருந்து புனித நூல்களைப் படித்தேன். கீதை, உபநிஷதங்கள், புராணங்களையும் படித்து மங்கேஷ்வருடன் அவை குறித்து விவாதிப்பேன். அவன் அப்போது ஒரு துறவியாகியிருந்தான். அவன் இமயமலையை விட்டுச் சென்ற பிறகு நான் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இவை எல்லாம் என்னை மிகவும் அமைதிப்படுத்தின.

அதன் பிறகு கொடுங்கனவுகள் எனக்கு வந்ததில்லை. 1968இல் ஹைத ராபாதில், டாக்டர் ராம் மனோஹர் லோஹியா, ராமாயணத்தைச் சித்திரமாகத் தீட்டும்படி என்னிடம் சொன்னார். என்னிடம் அப்போது சுத்தமாகப் பணமே இல்லை. ஆனாலும் நான் 150 கேன்வாஸ்களை எட்டு ஆண்டுகளில் தீட்டினேன். வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம் இரண்டையும் படித்திருக்கிறேன் (முன்னது மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடியது). ராமாயணத்தில் உள்ள நுட்பங்களை பனாரஸின் புரோகிதர்களுடன் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

இதையெல்லாம் நான் செய்யும்போது நீ ஏன் இஸ்லாமியக் கருத்துகளைச் சித்திரமாகத் தீட்டக் கூடாது என்று இஸ்லாமியப் பழமைவாதிகள் சிலர் என்னிடம் கேட்டார்கள். இந்து மதத்தில் இருப்பது போன்ற சகிப்புத்தன்மை இஸ்லாத்தில் இருக்கிறதா என்று நான் கேட்டேன்.

திருமறையின் எழுத்துகளைத் தவறாக எழுதினாலே ஓவியம் வரையும் திரைச்சீலையைக் கிழித்துவிடுவார்கள். என் வாழ்நாளில் நூற்றுக் கணக்கில் பிள்ளையார் உருவங்களை வரைந்திருக்கிறேன். பிள்ளையார் உருவம் மிகவும் அற்புதமானது. பெரிய படைப்பு எதையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் பிள்ளையாரைத்தான் வரைவேன்.

சிவனின் சிலை வடிவமும் எனக்கு மிகவும் பிடிக்கும். நடராஜர் சிலை உலகின் மிகச் சிக்கலான வடிவங்களில் ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணமித்துவந்திருக்கும் வடிவம் அது. பிரபஞ்ச இயற்கை பற்றியும் பொருண்மை சார்ந்த உலகம் பற்றியுமான ஆழமான தத்துவம் மற்றும் கணிதச் சமன்பாடுகளின் விளைவு அது. கிட்டத்தட்ட ஐன்ஸ்டீனின் சூத்திரத்தைப் போல.

என் மகள் ராயிசா திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது அவள் எந்தச் சடங்கையும் விரும்பவில்லை. நான் ஒரு அட்டையில் அவள் திருமணம் பற்றிய செய்தியுடன் ஒரு படம் வரைந்து அதை அச்சிட்டு உலகம் முழுவதும் உள்ள என் உறவினர்களுக்கு அனுப்பினேன். அதில் பார்வதி சிவனின் மடியில் அமர்ந்திருப்பாள். சிவனின் கை பார்வதியின் முலையைப் பற்றியிருக்கும்.

பிரபஞ்சத்தின் முதல் திருமணம் அது. இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம். நான் மிகவும் நெருக்கமாக உணரும் ஒரு விஷயத்தை நான் இழிவுபடுத்துவேனா?

நான் ஷியா பிரிவின் உட்பிரிவான சுலைமணி என்னும் சமூகத்தில் பிறந்தவன். இந்துக்களுடன் எங்களுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. மறு ஜென்மம் உள்படப் பல நம்பிக்கைகள் பொதுவானவை. பண்பாடு என்ற முறையில் யூதம், கிறிஸ்தவம் ஆகியவைதான் உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் விலகியிருக்கின்றன.

என்னை எதிர்ப்பவர்களுடன் இதையெல்லாம் நான் விவாதிக்க முடியாது. கஜுராஹோ பற்றி அவர்களிடம் பேசிப்பாருங்கள். அதன் சிற்பங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் அவற்றின் நோக்கங்கள் தமது எல்லையைக் கடந்துவிட்டன என்றும் சொல்வார்கள். கிராமத்து மக்கள்தான் இந்துக் கடவுள்களின் கிளர்ச்சியூட்டக்கூடிய, உயிர்ப்புள்ள, காலந்தோறும் பரிணாம வளர்ச்சி கொள்கிற இயல்பைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒரு பாறையின் மேல் ஆரஞ்சு வண்ணத்தைப் பூசுகிறார்கள். பிறகு அது ஹனுமானாகக் கருதப்படுகிறது.

இந்தியக் கலாச்சாரத்திலும் மரபிலும் பல சாதனைகள் புரியப்பட்டுள்ளன. இருந்தும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் ஓவியக் கலை மாணவர்கள் கிரேக்கக் கலை வடி வங்களைப் பார்த்துத்தான் உடலின் தன்மையைக் கற்கிறார்கள்.

டாக்டர் குமாரசாமியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கல்லூரிகளில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்கிறீர்கள். காளிதாசனைப் பற்றிப் பேச்சே இல்லை. இதனால்தான் இந்தியாவில் இந்தியத் தன்மைக்கு அங்கீகாரம் இல்லை. இங்கே பல விஷயங்கள் போலித்தனமாக இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜே.ஆர்.டி. டாடா, அன்னை தெரசா, ஆகியோருடன் என்னையும் கௌரவித்தபோது எங்களுக்குச் சிவப்புத் தொப்பியும் அங்கிகளும் (ஐரோப்பிய பாணியிலான பட்டமளிப்பு) வழங்கப்பட்டன .

இந்துக் கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கான மையம் இது. பாரதீயப் பண்பாட்டைக் காக்கும் மையம்! உலகில் ஆபாசம் என்ற ஒன்று இருக்கிறதா? மோசமான நடத்தைதான் ஆபாசமானது. அவ்வளவுதான்.

-எம்.எப்.ஹுசைன்.

(நன்றி : காலச்சுவடு பதிப்பகம்)
(பதிவில், திரு.ஹுசைன் வரைந்த சில ஓவியங்கள்)

Monday, May 23, 2011

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் - "மர்மத்தின்" பின்னணி


திருச்சி மேற்கு தொகுதி - இன்று தலைப்பு செய்திகளில் அடிபட்டு கொண்டு இருக்கும் பகுதி. இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுலாதுறை அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட மரியம் பிச்சை இன்று காலை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

கார் ஒரு லாரியின் மீது மோதிவிட, அப்போது முன் இருக்கையில் இருந்த அமைச்சர் மரியம் பிச்சை சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியாகிவிட்டார். ஆனால், டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பி இருக்கின்றனர்.

"இந்த சாவில் மர்மம் உள்ளது. இவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த விபத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்படும் " என்று அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

அவர் குறிப்பிட்டுள்ள...அந்த "மர்மத்தின்" பெயர்...கே.என்.நேரு.

தொடர்ந்து இந்த தொகுதியை கையில் வைத்து இருந்த நேருவின் குற்ற பின்னணி.

திமுக அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவின் அசைக்க முடியாத கோட்டைதான் மரியம் பிச்சை தேர்ந்து எடுக்கப்பட்ட திருச்சி மேற்கு.

அவரும், அவரது மருமகனும் நடிகருமான நெப்போலியனும் திருச்சியில் பெரும் கோடிஸ்வரர்கள்.

அரசியலில் நுழைந்த ஆரம்பம் தொட்டே, கட்டப்பஞ்சாயத்து,ரவுடியிசம் என வாழ்ந்தவர்தான் நேரு. இவரை எதிர்த்த ஒரு சிலரை 'அட்ரஸ்' இல்லாமல் செய்து இருக்கிறார் நேரு.

திருச்சியில் இவர் வளைக்காத இடங்களே இல்லை. இவரது பினாமி பெயரில் ஏராளமான நிலங்கள்,வர்த்தக நிறுவனங்கள், அப்பார்ட்ட்மேன்ட்டுகள் உள்ளன.

உதாரணதிற்கு அவர் அமைச்சர் ஆன பின்பும் கட்டப்பஞ்சாயத்துக்களை அவர் கைவிடவில்லை என்று கூறும் ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்தது.

திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் வசிக்கும் ஒரு 'பெரிய' குடும்பத்தில் ஒரு குடும்ப தகராறு நடந்தது. அதில் தலையிட்ட கே.என்.நேரு , தவறு என்றும் தேர்ந்தும் தவறு செய்தவருக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னார். தனது அடியாட்களுடன் சென்று எதிர்த்தரப்பை மிரட்டினார்.

எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் சமயோகிதமாக அந்த தருணத்தில் மதுரையில் இருந்த அழகிரியை நேரடியாக தொடர்புகொண்டு விவரத்தை கூற, அவரின் தலையிட்டால் , மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான நேரு அந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கவேண்டி வந்தது.

சமிபத்தில் நடந்த தேர்தலுக்கு, சில நாட்கள் முன்பாக திருச்சி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மினி பஸ் ஒன்றின் மேல், ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஐந்து கோடி ருபாய் பணம், ஐந்து மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்தது தேர்தல் ஆணையத்தையே உலுக்கியது.

அந்த பேருந்தின் உரிமையாளர் கே.என்.நேருவின் உறவினர்.

"அந்த ஐந்து கோடி ருபாய் என்னுடையதுதான். ஆனால் கணக்கு இல்லை" என்று தெரிவித்து இருக்கிறார் அந்த ஆசாமி.

ஐந்து கோடி ருபாய் பணத்தை சாக்கு மூட்டையில் கட்டி, அதை தேவை இல்லை என்று தூக்கி போடும் நேரு வகையாறாக்கள் வேறு எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதே முதல்வர் சொன்ன "மர்மத்தின்" பின்னணி.

அமைச்சர் மரியம்பிச்சை அவர்களின் மரணத்தின் "மர்மம்" இன்னமும் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம், அவர் கார் மீது மோதிய லாரி டிரைவரையும் காணவில்லை. அந்த லாரியையும் காணவில்லை.

எஸ்கார்ட் போலிஸ் இருந்தும், மாவட்ட காவல்துறை உஷார்படுத்தப்பட்டும் எப்படி இதுவரை அந்த லாரி ஓட்டுனர் சிக்கவில்லை??

பொதுவாக வேண்டுமென்றே செய்தாலும், சாலை விபத்துக்களில் சரியான ஆதாரங்களை திரட்டமுடியாது. ஆகவே, இந்த மரணத்திற்கு காரணமான அந்த லாரி ஓட்டுனரை கைது செய்து, அவரின் பின்னணி மற்றும் அந்த லாரியின் ஆவணங்களை தீவிரமாக அலசினால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

இந்த தொகுதியில் இடைதேர்தல் நடந்தால், கே.என்.நேரு மட்டுமே திமுகவின் வேட்ப்பாளராக இருப்பார் என்பது நூறு சதம் உண்மை.

இந்த சாவின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இருக்கலாம் என்று திருச்சி மக்களிடையே சந்தேகம் உலவி வருகிறது. மரியம் பிச்சை மரணத்தை தொடர்ந்து திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிரித்தமுகத்தோடு திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பதவி ஏற்க சென்ற மரியம் பிச்சை, சில மணிகளில் திருச்சி அருகே பிணமான துயரம் அதிர்ச்சிகரமானது.

ஆகவேதான், ஜெயலலிதா அவர்கள் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார்.

இது நிஜமாகவே சாலை விபத்தா? இல்லை திட்டமிடப்பட்ட கொலையா?

அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தின் பின்னணியில் இருக்கும்,முதல்வர் சொன்ன "மர்மம்" எப்போது விடுபடும்???

-இன்பா

Sunday, May 22, 2011

கனிமொழியின் அழுகையும்,கருணாநிதியின் புலம்பலும்


கனிமொழி கைது செய்யப்பட்ட உடனே, பலரும் நோக்கிய ஒரு செய்தி கனிமொழி அப்போது அழுதாரா இல்லையா என்பதுதான். அவர் கைது செய்யப்பட்ட மறுநாளே, ராஜாத்தி அம்மையார் அவரை சந்தித்தபோது, இருவரும் கட்டிபிடித்து, ஒப்பாரி வைத்தனர்.

பெண்களுக்கு எங்கே இருந்துதான் அழுகை வருமோ என்று தெரியவில்லை. அழுகை மட்டுமே வருகிறது கடைசி வரைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த உண்மைகள் வருமா என்று தெரியவில்லை.

வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் என்று சொன்ன சன் டிவி, கனிமொழியின் கைது பற்றி ஒரு வரி சொல்லவில்லை.

நல்லவேளை, கனிமொழியின் அழுகையை அவரது குடும்ப தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி, அனுதாபம் தேடாமல் போனார்களே என்று நாம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.

என்னோமோ சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தியாகிகள் போல இவர்கள் தரும் பில்ட் அப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு தேச விரோத வழக்ககாக அறிவித்து, அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தேச துரோகிகளாக அறிவிக்க வேண்டும்.

ராசா தலித் என்பதாலே ஆரியர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்று முன்பு சொன்ன கருணாநிதி, தற்சமயம் மீண்டும் ஆரியர்கள் என்று பினாத்த ஆரம்பித்து இருக்கிறார்.

"என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்."

தர்ப்பைபுல் ஆசாமிகள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் இவருக்கு எதிராக சதி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.

கட்சியின் மூத்த அமைச்சர் ராசா மற்றும் தனது மகள் கனிமொழி ஆகியோர் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால்,இந்த ஊழலின் சூத்திரதாரி கருணாநிதி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது.

அவருக்கு தெரியாமல், அவரது அனுமதி இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பே இல்லை.

ஆகவே, கருணாநிதி இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளியாக அதுவும் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும்.

அப்போதுதான்,ஊழலில் திருடிய கோடிகள் குறித்த முழு உண்மைகளும் வெளிவரும்.

இந்தி எதிர்ப்பு என்று கூறி ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் பேரன்கள் மற்றும் கனிமொழி அனைவருக்கும் இந்தி தெரியும் என்கிற அயோக்கியத்தனம் பற்றி என்னவென்று எழுதுவது?

இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டு, கருணாநிதி ஆரியம்,திராவிடம் என்று பழைய பாணியில் உளற ஆரம்பித்து இருக்கிறார்.

அவரது பாணியில் சொல்வதானால், சட்டமன்ற தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு நல்ல ஓய்வு வழங்கி இருக்கிறார்கள்.

அவரது மகள் கனிமொழிக்கு, சிபிஐ ஓய்வு(!) தந்து இருக்கிறது.


நியாயப்படி பார்த்தால், கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் "ஓய்வெடுக்க" அனுப்பவேண்டும்.


-இன்பா

Saturday, May 21, 2011

"விளையாடு மங்காத்தா" பாடல் எப்படி?


உன்னை போல் ஒருவன் படத்தில்தான் முதன்முதலாக, படத்தின் ஒரே ஒரு பாடலை PROMO Song என்று அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். வானம் எல்லை என்று தொடங்கும், சுருதிஹாசன் இசையமைத்து,பாடிய அந்த பாடல் ஹிட்டானது. படத்திற்கும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதன்பிறகு, "வானம்" படத்தில் நடிகர் சிம்புவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து "எவண்டி உன்னை பெத்தான்" என்று ஒரே ஒரு பாடலை முதலில் வெளியிட, அதுவும் ஹிட்டாகி விட்டது.

ஆனால், இவை இரண்டையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் கலக்கி கொண்டிருக்கிறது..."மங்காத்தா" படத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட "விளையாடு மங்காத்தா" என்ற படத்தின் PROMO Song.

ஜூன் மாதம் படத்தின் மற்ற பாடல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

மங்காத்தா படத்தின் தீம் இசையுடன் "விளையாடு மங்காத்தா" பாடல் இடம் பெற்று உள்ளது. இந்த சிடியில் போனஸ் ஆக கோவா,தீராத விளையாட்டு பிள்ளை,யோகி போன்ற படங்களில் இருந்து தலா ஒரு பாடல் இடம்பெற்று உள்ளது.

எப்படி இருக்கிறது "விளையாடு மங்காத்தா" பாடல்?

தமிழ்,இந்தி மற்றும் ஆங்கில வரிகள் கொண்ட பாடல் இது. பாங்காங்கில் படமாக்கபட்டுள்ளது. பாடலுக்கு நடனம் கல்யாண்.

தமிழ் வரிகளை கங்கை அமரனும், ஆங்கில வரிகளை யுவன் சங்கர் ராஜாவும், இந்தி வரிகளை பின்னணி பாடகி சுசித்ராவும் எழுதி இருக்கிறார்கள்.

பாடலை பாடியவர்கள் : அனிதா, பிரேம்ஜி அமரன் , ரஞ்சித் , சுசித்ரா , யுவன் ஷங்கர் ராஜா.

அனிதாவின் குரலில் "ஆடவா..அரங்கேற்றி பாடவா" என்று தொடங்குகிறது பாடல். பில்லா படத்தில் வரும் "செய்" பாடலின் சாயல் தெரிகிறது.
பின்னர் ரஞ்சித்தின் கண்ணீர் குரலில் ஒலிக்கிறது.

இளையராஜாவின் இசையில் உருவான "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா" பாடலுக்கு பின்னர் ஒரு சிறந்த வரிகளை தந்து இருக்கிறார் பாடலாசிரியர் கங்கை அமரன்.

புத்தி என்பது சக்தி என்பதை
கற்றுக்கொள்ளடா என் நண்பா..

பக்தி என்பதை தொழிலில் வைத்துவா
நித்தம் வெற்றிதான் நண்பா..

இது புதுக்குரல் திருக்குறள் தானே

இதை புரிந்தபின் கரையேற்றும் முன்னே
நீ பொறுப்பினை ஏற்று..புதுப்பணி ஆற்று.

விஜய் படங்களை போல அஜித் படங்களில் பாடல்கள் மிகசிறப்பாக அமைந்தது இல்லை. மேலும், ரஜினி படங்களுக்கு மட்டுமே படத்தின் ஆடியோ வெளிவரும் தினத்தில் கடைகளில் கூட்டம் அதை வாங்க அலைமோதும். செய்திதாள்களில் இடம்பிடிக்கும்.

ஆனால், மங்காத்தா படத்தின் ஒரே ஒரு பாடலை கொண்ட சிடி வாங்க, கடைகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதையும், பரபரப்பாக செய்திகளில் அடிபட்டதையும் பார்க்கும் போது, குறிப்பாக ரசிகர் மன்றங்களை கலைத்துவிடுங்கள் என்று அஜித் அறிவித்தபின்னும், அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் நம்மை வியப்படைய வைக்கிறது. (ரசிகர்களை எப்படித்தான் திருத்துவதோ?)

இனிவரும் படங்களில்,படத்தின் ஆடியோ வெளியிட்டுக்கு முன்பே, ஒரு பாடல் மட்டுமே கொண்ட Single PROMO Song CD வெளியிடவேண்டியது அவசியம் என்று ஒரு புதிய டிரண்டை தமிழ் சினிமாவில் செட் செய்து இருக்கிறது "விளையாடு மங்காத்தா" பாடலுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பு.

Thursday, May 19, 2011

'பைக் புயலாய்' அஜித் - "மங்காத்தா" ஷூட்டிங் ஸ்பாட்



"மங்காத்தா" படபிடிப்பில் ஒரு காட்சி.

அஜித் அவர்கள் பைக்கில் பறக்கவேண்டும். அதற்காக படத்தின் இயக்குனர் நிர்ணயித்து இருந்த வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர்.

இதற்காக, வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்த பகுதி....பெங்களூர் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை.

ஒரு சிறந்த பைக் ரேஸ் வீரரான அஜித்துக்கு இதைவிடவும் ஒரு விருந்து வேண்டுமா என்ன?

பைக்கின் பின்புறம் இயக்குனர் வெங்கட் பிரபுவும் அமர்ந்து ரிகர்சல் செய்வதாக முதலில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பைக்கின் பெவிலியனில் அவருடன் பயணம் செய்தார் வெங்கட் பிரபு.

"ஒரு மனதிற்குள் பயந்துவிட்டேன். அந்த நிமிடத்தில் என்ன நடந்தது என்றே புரியவில்லை.ஆனால், அஜித் மிகவும் கூலாகவே இருந்தார்" என்று அந்த திரில் அனுபவம் குறித்து கூறுகிறார் வெங்கட்.

அதன்பிறகு, இரண்டாவது சுற்று. நேரடியாகவே படமாக்கப்பட்டது.

அப்போது தலையில் ஹெல்மெட் இல்லாமல் 'தல' பைக் ஒட்டிய வேகம்..மணிக்கு 220 கிலோமீட்டர்.

அந்த புயல் வேக காட்சி இங்கே..

Wednesday, May 18, 2011

யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய குறும்படம்



ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர்.

அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். அதிலுள்ள பொருள்கள் சுமார் 97,000 புத்தகங்கள்.

சில மணி நேரங்களில் இரண்டுமே தீக்கிரையாகின்றன. அன்று காலை கண் விழித்த உலகம் இக் காட்டுமிராண்டித்தனமான செயலால் அதிர்ந்துபோனது.

ஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் ஒரு பெரும் நூலகம் மனிதகுல நாகரிகத்தின் கருவூலம். சிங்களவர்களாகிய தங்கள்மீது தமிழர்கள் அறிவாதிக்கம் கொண்டிருப்பதாக நினைத்து அதனை அழிக்க வேண்டித் தமிழர்களின் தொன்மை, இலக்கியம் ஆகியவற்றின் பாசறை யாழ் நூலகம் என்ற எண்ணத்தில் அதை எரித்ததன் வாயிலாக, சிங்களவர்கள் தங்களையும் சேர்த்து அழித்துக்கொண்டார்கள்.

அந்நூலகத்தில் இருந்தவை தமிழர்களின் உடமைகள் மட்டுமே என்று அவர்களால் எவ்வாறு எண்ண முடிந்தது? ஸ்ரீலங்காவின் மொத்த சரித்திரமும் அங்குதானே குடிகொண்டிருக்கும்? பேதமைக்கு இதைவிடவும் வேறொரு உதாரணம் கூற முடியுமா?

ஆனால், இது பேதமையன்று; இனப்போருக்குக் கிடைத்த வெற்றி என்ற ஸ்ரீலங்கா அரசின் அரசியல் பார்வையைத் தமிழர்கள் எவ்வாறு பாவித்தனர் என்பதைப் பற்றிய 49 நிமிட நேர டாகுமெண்டரி படம் எரியும் நினைவுகள்.

இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த திரு.சோமிதரன்.

இனப்போர் பற்றிய பெரும் வரைவுகளுக்குச் செல்லாது படம் யாழ்ப்பாண நூலகம் என்னும் மையத்திற்கு உடனே சென்றுவிடுகிறது.

1933இல் யாழ்ப்பாணத்தில் கே. எம். செல்லப்பா என்னும் ஒரு நூல் ஆர்வலரின் முயற்சியால் ஒரு சிறு நூல்நிலையம் தொடங்கப்பட்டது. பொதுமக்களின் கொடையாகப் பெறப்பட்ட 844 நூல்களுடன் அது 1935இல் யாழ்ப்பாண நகரசபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டது. பெரிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூலக விஞ்ஞானி எஸ். ஆர். ரங்கநாதன் அழைக்கப்பட்டார்.

கட்டடக் கலைஞர் நரசிம்மன் வரைபடம் தந்தார். இருவரும் இந்தியர்கள். 1954இல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகக் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு 1959இல் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த அமெரிக்க நூலகம் அதனுடன் இணைந்ததால் நூல்களின் எண்ணிக்கை பெருகியது. பயன்பெறுபவர்களும் அதிகமாயினர். ஆனால், இந்தச் சரித்திரம் மே 31, 1981 அன்று முடிவிற்குவந்தது.

அன்றைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா. விஸ்வநாதன் யாழ் நூலக எரிப்பு, அதைத் தொடர்ந்து கடைகள், ஈழ நாடு பத்திரிகை அலுவலக நாசங்கள் ஆகியவற்றினால் மொத்த இழப்பு 100 மில்லியன் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடுகிறார்.

சமன் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகப் புனருத்தாரணம் மேற்கொள்ளப்பட்டது. 1984இல், எரிக்கப்பட்ட நூலகத்தின் மூன்றாமாண்டு நினைவாகப் புதிய நூலகக் கட்டடம் பழைய கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சிறிய அளவில் திறந்து வைக்கப்பட்டது. மே 1985இல் மீண்டும் அங்கே குண்டுகள் வெடித்தன.

அது யுத்த களமாக மாறியது. வட பகுதியில் மூண்ட போரில் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்ச மக்கள் ஒரே நாளில் வெளியேறினர். சிங்களவர்களை எதிர்க்கவோ ராணுவத்தினருக்குப் பதிலடி கொடுக்கவோ தமிழர்களால் இயலாத நேரம் அது. ஆனால், நிலைமை விரைவில் மாறியது. ஆயுதம் ஏந்திய தமிழ்ப் போராளிகளின் தாக்குதல், தமிழீழம் என்னும் கோரிக்கை ஆகியவற்றால் நிலைகுலைந்த அரசு சமாதானப் பேச்சிற்கு இணங்கிற்று. சந்திரிகா குமாரதுங்கா அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யக்கூடியவராகக் கருதப்பட்டவராதலால் அவர் 1994இல் அதிபரானார்.

நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பொதுசன ஐக்கிய முன்னணி, நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டது. புத்தகமும் செங்கல்லும் திரட்டும் பணியில் ஈடுபட்டது. அதாவது பள்ளிக் குழந்தைகளும் கிராம மக்களும் ஒவ்வொருவரும் நூலகத்திற்கு ஒரு புத்தகமோ செங்கல்லையோ அளிக்கும்படி வேண்டப்பட்டது.

அத்திட்டம் பெரும் வெற்றி பெற்றது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டாது நூலகத்தை மீண்டும் எழுப்புவது என்னும் அடையாளச் செயல்பாட்டை மோசமான அரசியலாகத் தமிழர்கள் பார்த்தார்கள். சாம்பலாக்கப்பட்ட நூலகம் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனையிட்டனர்.

ஆனால், ஸ்ரீலங்கா அரசினர் அதை நிராகரித்துவிட்டு அதே இடத்தில் புதிய நூலகத்தை எழுப்பியுள்ளனர். அதன் திறப்பு விழாவிற்குத் தமிழர்கள் எதிர்ப்பினைக் காட்டவே, அந்த விழாவை நடத்தாமலேயே நூலகம் 2003இல் இயங்கத் தொடங்கியது. நூலகப் பகுதி ராணுவத்தின் உச்ச பாதுகாப்பு வளையத்தினுள் இருப்பதால் அது இன்று ஒரு சிறையாகக் காட்சியளிக்கிறது.

யாழ் நூலகம் ஒரு எரிகிற பிரச்சினையாகத் தொடர்கிறது.

இதுவரை எவரும் தொட்டிராத ஒரு நிகழ்வினை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இயக்குநர் சோமிதரன் திறம்படக் கையாண்டிருக்கிறார். இம்மாதிரிக் கடந்த காலமொன்றைப் படம்பிடிக்கும்பொழுது தகுந்த ஆவணங்கள் தேவை. இனப்போரில் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஆவணங்கள் அங்கிருந்து கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல.

சோமிதரன் அந்தக் குறைபாட்டினைப் பார்வையாளர்கள் அதிகம் உணராத வண்ணம் நேர்காணல்கள் வாயிலாகவே படத்தை எடுத்துச்செல்கிறார். ராணுவம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள யாழ் நூலகத்தைப் படம்பிடிப்பது சற்றும் எளிதானதல்ல.

அவர் மிகுந்த லாவகத்துடன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். மினி டிவி, ஹேண்டிகேம் என்று கிடைத்த உபகரணங்களைக் கொண்டு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்திற்குத் தன்னை அழைத்துச் சென்ற கார் டிரைவரை வைத்தே சொற்ப வசதிகளுடன் அவர் துணிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். படத்திற்கான ஆய்வினையும் அவரே மேற்கொண்டுள்ளார். லயோலா கல்லூரி விஷ§வல் கம்யூனிகேஷன் மாணவரான அவர், 'நிகரி' என்கிற அமைப்பினூடாகத் தொழில் திறன் மிகுந்த இப் படத்தைத் தயாரித்துள்ளார்.

நூலக எரிப்பு உணர்வுபூர்வமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நூலக இழப்பு விஞ்ஞானப் பார்வையுடன் அணுகப்பட்டிருக்க வேண்டும். 97,000 நூல்கள் தீயில் கருகின என்பதை அடிக்கடி சொல்லும்பொழுது அவற்றில் இருந்த அரிதான நூல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நூலகத்தின் சிறப்புப் பயன்பெற்றவர்களின் நேர்காணல்களைச் சேர்த்திருக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழ்கிற ஸ்ரீலங்காத் தமிழர்களையும் இதன் பொருட்டு நாடியிருக்கலாம். அப்போதுதான் நாம் எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர முடியும். பேராசிரியர் கா. சிவத்தம்பி அணுகப்பட்டிருந்தும் அவரிடமிருந்து அடர்த்தியான விஷயங்கள் எதுவும் திரளாதது ஏமாற்றம்தான். நூலகம் பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகள். ஆனால், இது வீடியோ படம் என்பதால் அடுத்த பதிப்பிலேயே இக்குறைகளை நேர் செய்துகொள்ள முடியும்.

சூடான அரசியல் விவாதங்களை வெளிப்படையாக எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கக்கூடும். ஆனால், பல்வேறு விவாதங்களுக்கும் படத்தில் இடம் உண்டு. இன்று நிலவும் அரசியல் நிலைமை குறித்த கவனத்துடன் ஒரு சுய தணிக்கையை மேற்கொண்டு சோமிதரன் படத்தை எடுத்திருக்கிறார்.

மிதவாதிகளே நேர்காணல்களில் இடம்பெற்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் இப்படம் சிக்கல்களின்றி எங்கும் உறுதியாகத் திரையிடப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இருபத்தியேழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பேரழிவு ஏதோ நேற்று நடந்தது போன்ற அண்மை உணர்வு கொள்ளும் வகையில் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு.

(நன்றி : பிரபல குறும்பட இயக்குனர் திரு.அம்ஷன்குமார்,காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

source : http://www.burningmemories.org/

Monday, May 16, 2011

என்றும் உன் நினைவுகளில்....


கவிதையின் விதை:
காதலன் : Zhuang Huagui (வயது 26 ) காதலி : Hu Zhao (வயது 21 )

சீனாவை சேர்ந்த இந்த இளம் காதலர்கள் ஆயுள் முழுவதும் கரம்பிடித்து நடக்க முடிவெடுத்தார்கள். திருமணம் நடைபெற ஒரு வாரமே இருந்த நிலையில், மணமகளாய் இருக்கவேண்டியவள் மரணதேவனால் களவாடப்பட்டாள்.

சில சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டாள் அந்த தேவதை. ஆனாலும், காதலன் நிச்சயித்த அதே தேதியில் அவளை திருமணம் செய்தான்.

ஆம்,அவளது இறந்த உடலுக்கு மோதிரம் அணிவித்து,தனது அன்பு மனைவியாய் ஏற்றுக்கொண்டான்.

இறப்பு என்பது உடலுக்குதானே. காதலுக்கு.....?

சில மாதங்களுக்கு முன் சீன காதலர்களை உலுக்கிய இந்த செய்தி... இங்கே அந்த காதலனின் மனதாய்...


ரோஜா
செடியில் இருந்தால் என்ன?
பூஜையில் இருந்தால் என்ன?

அதுபோலவே
நீயும்...
உயிரோடு இருந்தபோதும்
இல்லாதபோதும்.



இந்த
சவப்பெட்டியில் குவிந்துகிடக்கும்
மலர்கொத்துக்களில்
நீ மட்டுமே
உயிர்ப்பாய் இருக்கிறாய்.

மரணதேவன் திறக்கவேமுடியாமல்
பூட்டிய
உன் விழிச்சிறைகளில்
சிக்கி படபடக்கின்றன
நம் காதல் பறவைகள்.

காதலுக்கு கண்ணில்லை
எவ்வளவு பெரிய பொய்.

இங்கேயே சுற்றிகொண்டிருக்கும்
உன்
ஜீவனை
காண்கின்றன என் கண்கள்

உடல் பாதி
உயிர் பாதி
பகிரல்கள்
எல்லா திருமணங்களிலும்.

முழுவதுமாய்
உயிர்களின் பகிரல்
நம் திருமணத்தில் மட்டும்.

'பிரியும்' விடை தருகிறேன்
உன் உடலுக்கு.

பத்திரமாய் வைத்திரு.
இன்று நான்
சூட்டும் திருமண மோதிரத்தை.

அதுவே...
நாளை
சொர்க்கவாசல் தேடி
உனக்காக வரும்
என் ஆன்மாவுக்கான திறவுகோல்.

நீ
இல்லாதபோதும்
இருப்பதாய்
நினைத்துகொண்டிருந்தவனுக்கு...

நீ
இப்போது இல்லாமலே போய்விட்டது
ஒரு குறையா என்ன?

ஓயாது உன் நினைவுகள்
அடிக்கும்
என் இதயக்கடற்கரை.

அங்கு
சங்குகளாய்...
சிதறிக்கிடக்கின்றன
நாம்
காதலித்த நொடிகள் ஒவ்வொன்றும்.

தேடித்தேடியே
இனி தீரும்
என் ஆயுள்.

காதல் போயின்
சாதல் என்றானே பாரதி
இதோ..
இங்கே..
சாதலுக்கு பின்னும்
வாழும் உண்மைக்காதல்.




கவிதை : இன்பா

Saturday, May 14, 2011

தன்மான தமிழன் - தினமணி தலையங்கம்


தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.

1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.

மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?

கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?

அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.

தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.

யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?

முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.


பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.

பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!

ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...

கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...

தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.

""தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ""தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!

(நன்றி : தினமணி)

Thursday, May 12, 2011

Bucket List - திரைவிமர்சனம்


சிறு நகரங்களின் ரயில் நிலையங்கள்,மாலை வெளிகளில் கோவில்களின் வெளிப்ரகாரங்கள்,சர்ச்சின் வாசல்கள், பள்ளிவாசலின் தனியிடங்கள், பார்க்குகள், பீச் இங்கெல்லாம்,,,, முதுமையில் மனம்விட்டு தங்களின் பழைய நினைவுகளை அசைபோடும் முதுமையான நண்பர்களை நீங்கள் கவனித்து இருக்கீர்களா?

Bucket list அது போன்று இரண்டு நண்பர்களை பற்றிய படம். திரு.ஜகதீஷ்குமார் எழுதிய படத்தின் திரைவிமர்சனம் இங்கே..


"வயோதிகத்தின் விளிம்பிலிருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் தங்களது நாட்கள் எண்ணப்படுவது பற்றிய விழிப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒரு பரிசுப்பொருள் போலத் துலங்குகிறது" என்கிறார் சுஜாதா.

தன் தேக ஆரோக்கியம் இப்போதுபோல் முன்னெப்போதும் மேன்மையாக இருந்ததில்லை என்று தன் கடைசி நாட்களில் சுந்தர ராமசாமி எழுதுகிறார். குழந்தைப் பருவத்தில் நம்மை விட்டுத் தொலைந்துபோன தெய்வீகத்தின் பிரசன்னம் முதுமையின் இறுதிநாட்களில் குடியேறிவிடுகிறது. வாக்கியங்கள் நிதானமாகவும், எளிமையாகவும் வெளிப்படுகின்றன. வாழ்வை அணுகும் முறை நேர்த்தியாகின்றது. சொற்படி கேட்க மறுக்கின்ற இரைப்பைக்கும், இருதயத்துக்கும் ஏற்றாற்போல் அன்றாட நடவடிக்கைகள் மென்மையாகின்றன.

செத்துப் போவதற்குமுன் என்னென்ன செய்துவிட வேண்டுமென்ற ஆசைகளின் பட்டியல் எல்லோரிடமும் இருக்கிறது. ஒரு நாவல் எழுதிவிட வேண்டும்; எகிப்து பிரமிடை, சீனப் பெருஞ்சுவரை, தாஜ்மஹாலைப் பார்த்துவிட வேண்டும். நகரத்தின் எல்லையிலாவது ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பன போன்று.

நம் வீட்டுக் கிழவிகள் கூட கொள்ளுப் பேத்தியின் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுத்தான் மண்டையைப் போட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். எல்லாருக்குமே அந்தக் கடைசித் தருணத்தில் நுழைவதற்குள் முடித்துவிட வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.

திடீரென்று ஒருநாள் உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் வாய்தா என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? மத்திம வயதிலிருக்கிறவர்களுக்கு ஏற்படக் கூடிய பதற்றமும், நடுக்கமும், விரக்தியும் குறித்து வேறெப்போதாவது பேசிக்கொள்ளலாம். ஆனால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற, மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்படவேண்டிய நிலையிலிருக்கிற, முதுமையின் விளிம்பிலிருக்கிற மனிதர்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

ஜாக் நிக்கல்சன், மார்கன் ஃப்ரீமன் இணைந்து நடித்துள்ள ‘பக்கெட் லிஸ்ட்’ திரைப்படத்தில் இருவருக்கும் இதுதான் பிரச்சினை. கார் மெக்கானிக்காகப் பணிபுரியும் கார்ட்டருக்கு (மார்கன் ஃப்ரீமன்) இன்னும் மூன்று மாதங்கள்தான் என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் உரிமையாளர் கோடீஸ்வரர் எட்வர்ட் கோல் (ஜாக் நிக்கல்சன்). அறிமுகக் காட்சியிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று காட்டிவிடுகிறார்கள்.

தன் மருத்துவமனையில் ஒரு அறைக்கு இரு நோயாளிகளை அனுமதித்து அவர்கள் தனிமையைப் பாதிக்கிறார் என்று அவர் மீது வழக்கொன்று நீதிமன்றத்தில் வருகிறது. தனக்கு விருப்பமான ஃபில்டர் காபியை அருந்தியவாறே (தங்கநிற ஃபில்டரிலிருந்து நேரடியாக இறக்கிக் குடிக்கிறார்). தன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று வாதாடிக் கொண்டிருக்கும்போதே இருமி ரத்தவாந்தி எடுக்கிறார். அவரது மருத்துவமனையிலேயே அவரை அனுமதிக்கிறார்கள். அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் கார்ட்டர்.தன்னைத் தனி அறைக்குக் கொண்டுசெல்ல அவர் நிர்ப்பந்திக்கும்போது, நீதிமன்றத்தில் வாதாடியது நீங்கள்தான்; இங்கேயே இருங்கள், இல்லையெனில் தீர்ப்பு பாதகமாகிவிடும் என்கிறார்கள்.

எட்வர்டுக்கு மூளை அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிகிச்சையின் முடிவில் அவருக்கும் நாள்குறித்து விட்டது தெரியவருகிறது. இருப்பினும் அவர் கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. வகைவகையான உணவுகளை உண்டுவிட்டு நாள்பூரா வாந்தி எடுக்கிறார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிற மருத்துவருக்கு நடுவிரலைக் காட்டுகிறார். இன்னமும் தன் மேலாளரைப் பெயர் மாற்றி தாமஸ் என்றுதான் அழைக்கிறார்.

இறந்து போவதற்கு ஆங்கிலத்தில் ‘வாளியை உதைத்தல் ‘(kicking the bucket) என்று ஒரு மரபுத்தொடர் உண்டு. ஒருநாள் பக்கத்துப் படுக்கையிலிருக்கும் கார்ட்டர் ‘பக்கெட்லிஸ்ட்’ என்று தலைப்பிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் எட்வர்ட். என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்கிறார். சாவதற்கு முன்னால் அவர் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் அது என்று தெரியவருகிறது. "இங்கபார், எங்கிட்ட பணம் இருக்கு, சாவதற்கு முன்னால் செய்து பார்க்க நினைக்கும் விஷயங்களை நாம் ஏன் செய்து பார்க்கக் கூடாது" என்கிறார் கண்ணைச் சிமிட்டியபடியே.

முதலில் தயங்கும் கார்ட்டர் பின்பு ஒப்புக்கொள்கிறார். மனைவியின் அழுகையையும், அரற்றலையும் மீறி எட்வர்டுடன் புறப்படுகிறார் கார்ட்டர். இருவரும் சேர்ந்து பல ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலிருந்து குதிக்கிறார்கள்; சீனப்பெருஞ்சுவரில் புல்லட் ஓட்டுகிறார்கள்; பிரமிடின் உச்சியில் அமர்ந்து வியர்க்கிறார்கள்; தாஜ்மஹாலின் வராந்தாக்களில் உலாவியபடி, தங்களை எரித்தால் அந்தச் சாம்பலை என்ன செய்வது என்று விவாதிக்கிறார்கள். (இந்தியாவில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிற இந்தியக் குழந்தைகளையும், அவர்களுக்கு எட்வர்ட் வீசி எறிகிற காசுகளையும் காட்டியபோது எரிச்சலாக இருந்தது.) இமயமலை மீதுள்ள புத்தவிஹாரத்தில் வழிபடுகிறார்கள். ஏதோ ஒரு மலைச்சிகரத்தில் ஏற முயற்சித்து, காலநிலை காரணமாகக் கைவிட்டுவிடுகிறார்கள்.

ஆடம்பரமான சொகுசு ஓட்டலில் தங்கியிருக்கும்போது, (உங்கிட்ட எவ்வளவுதான் பணம் இருக்கு? – கார்ட்டர்) கார்ட்டரின் மனைவி எட்வர்டை தொலைபேசியில் அழைத்து, என் கணவனை என்னிடம் திருப்பிக் கொடு என்கிறாள். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரே பெண்ணுடன் வாழ்கிற, வேறு பெண்ணுடன் தொடர்பே கொள்ளாத கார்ட்டரைப் பார்த்து (நிச்சயமா இதுவும் லிஸ்ட்டில் இருக்கணும்) வரிசையாய் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாய் வாழும் எட்வர்ட் வியக்கிறார்.

அவர் ரகசியமாய் ஒரு பெண்ணை கார்ட்டரிடம் அனுப்பி வைக்க, அவருக்கு மனைவிக் குழந்தைகளின் ஞாபகம் வந்து விடுகிறது. இறக்கும்போது நமக்குப் பிரியமானவர்கள் மத்தியில் இருப்பதைவிட வேறெதுவும் தேவையில்லை என்று கார்ட்டர் உணர்கிறார். உடனே ஊர் திரும்ப வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார்.

அமெரிக்கா வந்ததும் கார்ட்டர் எட்வர்டுக்குத் தெரியாமல் காரை அவர் மகள் வீட்டுக்குச் செலுத்தச் செய்கிறார். எட்வர்ட்மீது கோபம் கொண்டு அவரைப் பிரிந்து நீண்ட நாட்களாய் வாழ்கிறாள் அவர் மகள். தன்னைப் போலவே மரணத்துக்கு முன் எட்வர்ட் தன் மகளுடன் வாழவேண்டுமென்று நினைக்கிறார் கார்ட்டர்.

ஆனால் எட்வர்ட் மறுத்து, கோபமடைந்து போய்விடுகிறார். கார்ட்டர் வீடு திரும்பிக் குடும்பத்தோடு இணைகிறார். அவர்களோடு உண்டு மகிழ்கிறார். எட்வர்ட் தனிமையில் புழுங்குகிறார். அடுத்த நாளே தீவிரமாய் உடல் நலம் குன்றி கார்ட்டருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கிறது. அவர் எட்வர்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தன் மகளோடு சேர வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிடுகிறார் கார்ட்டர். தனிமையின் கொடுமையைத் தீவிரமாய் உணர்ந்திருக்கும் எட்வர்ட் நண்பனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மகளோடு சேருகிறார். சிகிச்சை பலனின்றி கார்ட்டர் இறக்கிறார்.

இறுதிச்சடங்கில் கார்ட்டரின் இறுதிமாதங்கள் தன் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் என்று நினைவுகூறுகிறார் எட்வர்ட். அவர் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் தூய்மையான நட்பு வழிகிறது.

ஜாக் நிக்கல்சனும், மார்கன் ஃப்ரீமனும் இணைந்து ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். முதியவர்கள் உலகிற்குள் புகுந்து பார்த்ததுபோல் இருக்கிறது. மரணத்தை வெகுமென்மையாய் எதிர்கொள்ளும் இருவரின் மனமுதிர்ச்சியும் நமக்கும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.



(கட்டுரை : ஜெகதீஷ் குமார்)

Tuesday, May 10, 2011

பிகினி உடையில் 'திருமகள்' உருவம்


ஒரு மதத்தின் கடவுள்களை தங்களின் வியாபார நோக்கத்திற்கு அல்லது பிரபலமாவதற்கு பயன்படுத்துவது தற்போது ஒரு பேஷனாகி விட்டது.

நமது இந்தியாவை எடுத்துக்கொள்வோம்.

தற்போது கட்டார் நாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், பிரபலமானதற்கு முக்கிய காரணம் அவர் சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து கடவுள்களை நிர்வாண ஓவியமாக வரைந்ததுதான்.

சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் காலில் அணியும் காலணிகளில் சரஸ்வதி மற்றும் விநாயகர் உருவங்கள் பதிக்கபட்டு வெளிவந்தன. இது அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை போன்று, ஐரோப்பாவில், உருவமே இல்லாத நபிகள் நாயகம் அவர்களின் உருவத்தை ஒசாமா பின்லேடன் பாணியில் ஒரு தீவிரவாதி போன்று ஒரு படம் வெளியிடப்பட்டது. அது முஸ்லிம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்ப்படுத்தியது.

தற்போது, சமிபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Sydney Fashion week நிகழ்ச்சியில் ஒரு மாடல் "பிகினி" உடை அணிந்து வந்தார்.

அந்த உடையில், இந்து கடவுளான லட்சுமியின் உருவம் இருந்தது.
(பார்க்க படம்)

இந்த உடையை வடிவமைத்தவர் லிசா ப்ளூ என்ற குழுவினர்(Lisa Blue Fashion House).

பிரட் கல்வின் என்கிற லிசா ப்ளூ பாஷன் ஹௌஸை சேர்ந்த டிசைனர், "இந்தியாவின் கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த உடையை வடிவமைத்தோம்" என்கிறார்.

ஆஸ்திரேலியாவாழ் இந்துக்கள் மட்டுமலாமல், இந்தியாவிலும் இதற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.


நமது மதஉணர்வுகளை தூண்டுவதை மேலைநாட்டினர் எதோ பொழுதுபோக்கை போன்று செய்துவருகிறார்கள்.

"நாங்கள் மத உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்கள். பல நாட்டு கலாச்சாரங்களை கொண்டாடுவதோடு, எங்கள் 'பிராண்ட்' மூலமாக அதை அனைவருக்கும் பகிரவே இப்படி வடிவமைத்தோம்" - இதுதான் இந்த ஆடைவடிவமைப்பு குறித்து Lisa Blue தந்திருக்கும் தரும் விளக்கம்.

இந்த விவகாரமோ, முன்னதாக சொன்ன நபிகள் நாயகம் விவகாரமோ, இதை போன்று மத கடவுள்களை இழிவு படுத்துவதை வேண்டுமென்றே தெரிந்து செய்கிறார்களா அல்லது இதன் பாதிப்புகள் பற்றி தெரியாமல் செய்கிறார்களா?


-இன்பா

Monday, May 9, 2011

"டிராபிக்" - கமலின் அடுத்த படம்



"என்னுடைய சிந்தனையை விரிவுபடுத்தியது மலையாள திரைப்படங்கள்தான்" என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் கமல்ஹாசன்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது இந்திய சினிமா உலகிலும் முன்னோடியாக இருந்தது மலையாள திரைப்படங்கள்.

சிறந்த நடிகர்,சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் போன்ற தேசிய விருதுகள் அந்த காலகட்டத்தில் மலையாள திரையுலகிற்கு மட்டும்தான் செல்லும்.

அமரம்,பரதம்,மணிசித்திரதாழ், பூதகண்ணாடி,தாளவட்டம்,தனியாவர்த்தனம் உட்பட பல அற்புத,உலக தரமான திரைப்படங்களின் களமாக இருந்தது கேரளா.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில், சிறந்த தொழிநுட்பம், இசை, பிரம்மாண்டம் போன்ற அம்சங்களால் தமிழ்சினிமா கேரளாவில் பெரும் வளர்ச்சி பெற்றது.

அதே சமயம், தெலுங்கு படங்களின் மசாலாத்தனங்களும் அங்கு வரவேற்ப்பு பெற, கேரள திரையுலகம் தனக்கே உரித்தான யதார்த்த பாதையில் இருந்து விலகி, கலையம்சமும் இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் 'மொக்கை' படங்களின் உலகமாகி போய்விட்டது. மலையாள சினிமா புதிய இளைஞ்ர்களின் வருகை இல்லாமல் ,தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாமல் பின்னடைவை சந்தித்து விட்டது.

இத்தகைய சுழலில், கேரளாவில் நல்ல தரமான படங்களின் வருகைக்கு மீண்டும் நம்பிக்கை தந்து இருக்கிறது ஒரு படம். பல வருடங்களுக்கு பிறகு அழுத்தமான கதையுடன் அழகியல் யதார்த்த சினிமா ஒன்று பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

அந்த படம்தான்....."டிராபிக்".

படத்தின் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை என்ற இளைஞர். மீண்டும், இந்த படத்தின் மூலம் ஒரு புதிய வெளிச்சத்தை தந்து இருக்கிறார்.


படத்தில் பிரதான வேடத்தில் நடித்து என்று சொன்னால் அது தவறு. வாழ்ந்து இருப்பவர்..சீனிவாசன்.

சீனிவாசன்...எத்தனை அற்புதமான கலைஞர். நடிகர்,எழுத்தாளர்,இயக்குனர் என்று பல முகங்களை கொண்டவர்.இந்தியாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக போற்றபடவேண்டியவர் சீனிவாசன். ஏற்று கொண்ட கதாபாத்திரதிற்கு இவ்வளவு அளவான,பொருத்தமான நடிப்பை வேறு யாராலும் தர இயலுமா?

"டிராபிக்" - ஒரு டிராபிக் சிக்னலில் சந்திக்கும் பலவிதமான மனிதர்களை, அவர்களது கதைகளை பற்றி பேசுகிறது.

"relation between the series of events " என்று கமல் அவர்கள் 'தசாவதாரம்' படத்தில் மூக்கை தொட்டு சொன்னதை, ஒரு எளிமையான கதை மூலம் பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லி இருக்கிறார் ராஜேஷ் பிள்ளை.

சில வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற, பாதுகாக்கப்பட்ட இதயம் மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டது. காவல்துறை ஒத்துழைப்போடு, குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு உள்ளாக அந்த இதயத்தை கொண்டுவந்து சேர்த்து சாதனை படைத்தனர்.

அந்த சாதனையே..இப்படத்தின் கதைக்கரு.

"டிராபிக்" படத்தில் பல கதாபாத்திரங்கள். ஆனால், அனைவருக்கும் பங்கு உள்ள கதை.

இதில், நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்.

சுதேவன் என்ற லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட டிராபிக் போலீஸ்காரர்(சீனுவாசன்), சித்தார்த் என்ற நிஜவாழ்விலும் போலித்தன பகட்டு முகமூடியோடு வாழும் முன்னணி நடிகர்(ரகுமான்), ரீஹான் என்கிற இளம் பத்திரிக்கை நிருபர், ஏபெல் என்கிற இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.

இந்த நான்கு கதாபாத்திரங்களையும் ஒரு டிராபிக் சிக்னலில் நடக்கும் விபத்து எப்படி இணைக்கிறது என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்கள்.அதே சமயம், விறுவிறுப்புடனும்.

சுதேவனுக்கு ஒரு அமைச்சரின் சிபாரிசு மூலமாக மீண்டும் காவல்துறையில் வேலை கிடைக்கிறது. அவசரகதியில் நடிகர் சித்தார்த்தை பேட்டி காண செல்லும் ரீஹான், ஒரு சிக்னலை கடக்கும்போது அவசரகதியில் வரும் காரில் அடிபட்டு உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தனது மனைவிக்கும், நண்பனுக்கும் உள்ள கள்ளதொடர்பை அறிந்து, அவள் மீது காரை ஏற்றிவிடுகிறார் டாக்டர் ஏபெல்.

இந்த சூழ்நிலையில், பாலக்காட்டில் இருக்கும் நடிகர் சித்தார்த்தின் பதிமூன்று வயது மகளுக்கு அவசரமாக இதய மாற்று சிகிச்சை செய்ய இதயம் தேவைப்படுகிறது. ரீகானின் இதயத்தை தர, அவனது பெற்றோர்கள் சம்மதிக்க, அந்த இதயத்தை பாலக்காட்டுக்கு கொண்டு செல்லவேண்டும்.

எர்ணகுளத்தில் இருந்து பாலக்காடு 180 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும். விதிக்கப்பட்ட காலக்கெடு...இரண்டு மணிநேரம் மட்டுமே. வழியில் உள்ள டிராபிக் சிக்னலில் காவல்துறையினர் ஒத்துழைப்பு தர, வழியில் எங்கும் நிற்காமல் நூறு கிலோமீட்டர்க்கும் மேலான வேகத்தில் சென்றால் மட்டுமே இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் அடையமுடியும் என்று பெரும் சவாலான நிபந்தனை.

தன் மீது உள்ள லஞ்ச களங்கத்தை துடைக்க சுதேவன் அந்த பொறுப்பை ஏற்க, கூடவே தனது மனைவி மீது கோபத்தில் கார் ஏற்றிவிட்டு அவளை கொன்று விட்டதாக தவிக்கும் டாக்டர் ஏபெல்,அந்த பயணத்தில் இணைக்கபடுகிறார்.

சுதேவன் சாதித்தாரா? டாக்டர் ஏபெல் என்னவானார்? நடிகர் சித்தார்த்தின் மகளுக்கு சரியான நேரத்தில் இதயமாற்று சிகிச்சை நடந்ததா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள்தான், படத்தில் இடைவேளைக்கு பின் வரும் இரண்டாம் பகுதி.

கோபம்,காமம்,காதல்,ஏமாற்றம்,போலித்தனம், பாசம்,நட்பு,துரோகம் என்று எல்லாவித மனிதர்களின் உணர்ச்சிகளின் குவியலும் அழகியலோடு படத்தில்,இந்த இரண்டு மணிநேரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

படம் முழுவதும் அடிநாதமாய் இழையோடுகிறது மனிதநேயம். இயக்குனர் ராஜேஷ்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

படத்தில் ஹைலைட்டான பகுதி, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு இடையே உள்ள வழிநெடுக இருக்கும் தடங்கல்களை சுட்டிக்காட்டி,காவல்துறை அதிகாரி ஒருவர் ரீஹானின் இதயத்தை, இரண்டு மணிநேரத்திற்குள் கொண்டு சேர்க்க உத்திரவாதம் தர இயலாமல் மறுக்கிறார்.அவரிடம் தொடர்பு கொள்ளும்,பாலக்காடு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேசும் ஒரு வசனம்....

"நீங்கள் மறுத்தால், ஒன்றும் நடக்கபோவதில்லை.இந்த நாளும் ஒரு சாதாரண நாளாக கடந்து போகும். ஆனால், இந்த பொறுப்புக்கு நீங்கள் ஆமாம் என்று சொன்னால், இந்த நாள் சரித்திரத்தில் இடம் பெறும்".

'டிராபிக்' படமும் மலையாள சினிமா சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது.


நம் தமிழிலும் இந்த சிறந்த படைப்பு வெளிவரப்போகிறது. இந்த படம் பார்த்த, கமலஹாசன் படத்தின் உரிமையை வாங்கிவிட்டார்.'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்கு பின் அவர் செய்யப்போகும் ரீமேக் இது.

"டிராபிக்" - கமலின் அடுத்த படம்.

கமலின் கைவண்ணத்தில் மூலத்தை விட மேலும் மெருகேறி, இப்படம்
நம் தமிழ் சினிமா சரித்திரத்திலும் நீங்கா இடம்பெறும் என்று எதிர்பார்ப்போம்.

-இன்பா

Sunday, May 8, 2011

தண்ணீர் வியாபாரம்



உயிர்மை பதிப்பில், திரு.கிருஷ்ணன் ரஞ்சனா எழுதிய ஒரு சிறந்த கட்டுரை இங்கே..

ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளுக்கு அவசரமாக ஒருர சுற்றறிக்கை விட்டுள்ளது. அதில் பழைய, தூர்ந்துபோன, பண்டையகால நீராதாரங்களை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்து , புதுப்பித்துக் கொள்ளுமாறும் ,அதற்கு ஆகும் செலவினத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஐ. நா. நிதியகம் மூலம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. எத்தனை நாடுகள் இவ்வறிக்கையைப் படித்து விட்டு கசக்கிப் போட்டனவோ தெரியவில்லை. இந்தியாவில் பல மாநிலங்கள், தெளிவாகக் கசக்கிப் போட்டுவிட்டன.

தமிழக அரசு ,அரைகுறை மனதுடன் செயற்பாட்டில் களமிறங்கி உள்ளது. முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டர் மனது வைத்து செயல்படவேண்டும்! "மேலேயிருந்து " மிகப் பெரிய அழுத்தங்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. ஆனால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ,சிரமேற்கொண்டு ,இப்பணிகளை தனது மாவட்டத்தில் துவங்கியுள்ளார். செயற்கைக்கோள் உதவியுடன் 10 நீராதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதைப் புதுப்பிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பண உற்பத்திக் களஞ்சியமாகத் தண்ணீர் வியாபாரம் தலை தூக்கி உள்ளது. இதை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் அதற்கு " நீலத் தங்கம் " எனப் பெயரும் சூட்டியுள்ளன.

உண்மையில் நீர் வியாபாரம் கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே ஏற்றுமதி -இறக்குமதி தளத்தில் துவங்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்காவிற்கும் ,கனடாவிற்கும் இடையே முதன் முதலில் துவங்கியது. வேறு சில நாடுகளும் தங்களது ராஜ்ஜியத்தில் ,உறவுகளை வலுப்படுத்தும் நோக்கோடு " தண்ணீர் பரிவர்த்தனையில் " கை குலுக்கிக் கொண்டன. உதாரணமாக, சிங்கப்பூர் , மலேசியாவிடமிருந்து தண்ணீர் பெறுகிறது. ஒரு நாடு ,தண்ணீரில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே இவ்வாறான செயலில் இறங்க முடியும். ஆனால் தற்போது இத்தகைய கருத்துகள் உடைக்கப்பட்டு ,சொந்த நாட்டு மக்களை வஞ்சித்து ,அயல் நாடுகளுக்கு " தண்ணீர் ஏற்றுமதி" செய்ய ராணுவ அரசுகள் வந்து விட்டன.

உலகின் எந்த மூலையில் யார் வாழ்ந்தாலும் ,தண்ணீரைப் பற்றிய விழிப்புணர்வும், கவனமும் தேவைப்படுகிறது. உண்மையில் அதற்காக நேரத்தை நாம் ஒதுக்குவதே இல்லை. அப்படி ஒரு விஷயம் இருப்பதையே மறந்து விடுகிறோம். தண்ணீரை நம் உண்மையான தேவையை விட ஆடம்பரத்திற்கும் ,கழிவு நீராக்குவதிலும் அதிகம் செலவிடுகிறோம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

தண்ணீர் பஞ்சமாகிப் போய் ,உலகளாவிய பிரச்சினையாக உருமாறத் துவங்கிவிட்ட நேரத்தில் , தூந்திரப் பிரதேசப் பனிக் கட்டிகளைக் கை வைக்க யோசனை தோன்றத் துவங்கி உள்ளது. அதே போல் எங்கெல்லாம் ஊற்றுகளும் ,அருவிகளும் இருக்கின்றனவோ ,அவையும் இப்போது ஆக்கிரமிப்புக்கு ஆளாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தாங்கள் அலெஸ்காவில் உள்ள ஐஸ்கட்டிகளை உடைத்து தண்ணீராக்கி குழாய் மூலம் தரைப் பிரதேசத்திற்குக் கடத்தி ,அவைகளை இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. அதற்கு இசைவது போல, அலெஸ்காவின் தென் பகுதி மக்கள், தங்கள் இயற்கை வளத்தை விற்கவும் சம்மதித்துள்ளனர்.

(S2C) குளோபல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ,தனது தண்ணீரை வாங்குவோருக்கு 50 சதவீதம் தள்ளுபடி தருவதாகக் கூறியுள்ளது. அலெஸ்கா ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் தனது கப்பலில் பில்லியன் கேலன் நன்னீரை அங்குள்ள நீல ஏரியிலிருந்து உறிஞ்சி, இந்தியாவிற்கு அனுப்பும். இங்கிருந்து அரேபியா போன்ற நாடுகளுக்கும், நம் நாட்டின் வறண்ட பகுதிகளிலும் இந்நீர் விற்கப்படும். இந்தியாவில் ராட்சசத் தொட்டிகள் கட்டி ,அதில் தண்ணீர் சேமிக்கப்பட்டு ,தண்ணீரின் தரம் பாதுகாக்கப்படும். உப்பு நீரை நன்னீராக்குவதற்குப் பதிலாக இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என்கின்றனர் "கம்பெனி முதலாளிகள்".

தூந்திரப் பிரதேசத்தில் ஐஸ் கட்டிகளை உடைத்து எடுக்கும்போது ,அங்கு புதைந்துள்ள பிற படிமங்கள் ,கனிமங்களின் மூலக்கூறுகளும் விற்கப்படும். கனிம ,கரிம வளமும் குன்றும் என்பது எதிர்ப்பாளர்கள் கருத்து. மூலாதாரத்திலேயே கைவைப்பது பெரும் விபத்தை ,அழிவை ஏற்படுத்தும். நாளைய தினத்தை நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் ரோஜர் சாசர். இவர் எதிர்ப்புக் குழுவின் தலைவராவார். கப்பல்களும் ,தங்கள் போக்குவரத்தால் ஐஸ் பாலங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன. அதே சமயத்தில் ,தங்கள் இயற்கை வளம் சுரண்டப்படுவதை அறியாத அலெஸ்கா மக்கள், தங்களுக்குக் கூடுதலாக விலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவாறு உள்ளனர். "கொடுத்தால் போச்சு" என்று சமாளிக்கின்றனர் நிறுவனத்தார்.

பீடபூமி, சமதளம், பள்ளத்தாக்கு போன்றவை தூர்ந்துவிட்டன. தூந்திரப் பிரதேசத்தில் மட்டுமே தற்போது நன்னீர் உள்ளது. மக்களின் எண்ணிக்கையும் தினம்தினம் கூடி வரும் நிலையில் ,இன்னும் 50 வருடத்தில் பூமிக் கோளத்தில் தண்ணீரே இல்லாமல் போகலாம். இப்போதும் இப்பூவுலகில் 1 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட தண்ணீரே இல்லாமல் உள்ளனர். 6ல் 1மனிதர் ஒரு குவளை தண்ணீர் கூட இல்லாமல் இறந்தவாறு உள்ளனர். நிமிடத்திற்கு 4000 குழந்தைகள் அசுத்தமான தண்ணீரை அருந்துவதால் வியாதிகளுக்கு உள்ளாகி, நிமிடத்திற்கு 6 குழந்தைகள் வீதம் இறந்துவிடுகின்றன.பருவம் தப்பிய மழையும், பருவகால மாறுபாடுகளும் ,ஆசிய நாடுகளைத் தண்ணீர் பற்றாக்குறைக்குத் தள்ளி கவலை கொள்ளச் செய்து வருகிறது.

இண்டர்நேஷனல் வாட்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட் (IWMI) பெரிய அணைகளில் தேக்கப்பட்டுள்ள தண்ணீர் ,தேக்கங்கள் அமைத்து பாதுகாக்கப்படும் தண்ணீரைத் தூய்மைப்படுத்தி ,மிகக் கவனத்துடன் குடிநீராகப் பராமரித்து விநியோகிக்க பரிந்துரை கூறுகிறது. ஆனால் விவசாயத்திற்கான நீர் தேவை குறித்து அது கவலைப்படவில்லை. உலகம் முழுவதும் 50,000 பெரும் அணைகள் உள்ளன.

1950லிருந்து இன்று வரை கணக்கிட்டால் இதுவரை 80 மில்லியன் மக்கள் இதனால் தங்கள் நிலத்தை ,வீட்டை இழந்து அனாதையாகி தெருவில் அலைகின்றனர். 470 மில்லியன் மக்கள் அணையின் தேக்கப்பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர். அவர்களின் "முங்கிப் போகும்" நிலையை அறிந்த (IWMI) அவர்களைச் சமாதானப்படுத்தி, கிராமங்களில் வாழ்வாதார மையங்களை அமைத்து, வாழ்வதற்கு உதவுமாறு நாடுகளை வேண்டுகிறது.

குறிப்பாக, கிராமத்து மக்கள் தங்கள் நீர்தேவையைப் பூர்த்தி செய்ய "மழைநீர் அறுவடை" செய்ய சிறிய ,பெரிய திட்டங்களையும், தொட்டி ,ஏரி, குளம் போன்ற ஆதாரங்களை அமைக்கவும் உதவ முடிவு செய்துள்ளது. இவ்வாறான செயல்பாடுகளை முனைப்புடன் எந்த அரசியல் கலாச்சாரக் கலப்பின்றி செயல்படுத்துவதன் மூலமே ,நிச்சயமற்ற தன்மையில் வாடும் விவசாயத்தை நாம் காப்பாற்ற முடியும் என்கிறார் மேத்யூ மெக்கார்த்தி. சிறந்த நீரியல் மற்றும் புவியியல் வல்லுனரான இவர் IWMI யின் ஆலோசகர். இவர் மேலும் கூறுகையில் ,மில்லியன் மக்கள் ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களில் பயன் பெறுவர். மழைநீர் சேகரிப்பை உள்ளூர் நகராட்சி ,பஞ்சாயத்து மூலமும், மிகச் சிறிய இலகுவாக கிடைக்கக் கூடிய உபகரணங்கள் பயன்படுத்தி ,நீர் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்கிறார்.

பிரம்மாண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து ,பல அடி தொலைவிற்குக் கீழே உள்ள நீரை உறிஞ்சுவதன் மூலம் கனிம ,கரிம வளம் இழந்த நிலையில் பூமியும் ,அதைச் சார்ந்த மனிதன் தொலைத்த வாழ்வும் இன்றும் கல்வியாளர்களிடையே நீரைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டாதது யாருடைய தவறோ தெரியவில்லை.

இதைத்தான் எங்கள் ஊர் பெரியவர் பெரியசாமி "நிலத்திற்குக் கீழே உள்ள தண்ணீரை ஓட்ட போட்டு உறிஞ்சி மேலே கொண்டாந்தா ,விவசாயமும் அடியாகும், நாமளும் அடியாவோம்" என்பார். தீர்க்க தரிசனமாய் அன்று அவர் கூறிய வரிகள் ஏளனமாய் ,நகைத்து விட்டுப் புறந்தள்ளப்பட்டன.

"குடிநீர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை " என தற்போது ஐ.நா. அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பும் பல போராட்டத்திற்குப் பிறகே கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் நீரின் முக்கியத்துவம் பற்றி இன்றைய தலைமுறைக்கு கல்வியின் மூலமும், தினப்படி செயல்பாடுகள் மூலமும் புரிய வைப்பதிலேயே அவர்களின் "தலைவிதி" தீர்மானிக்கப்படும்.

அதற்கு மேல் இயற்கையின் கருணை மிகமிக அவசியம்!!


(கட்டுரை : கிருஷ்ணன் ரஞ்சனா)

 
Follow @kadaitheru