Wednesday, April 27, 2011

"அப்பா சொன்னாரென" ஊழலும் செய்தீர்களா?



" கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு,

"பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று கூறி இருக்கிறார் முதல்வர்.

ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தையாக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப்பத்திரிகை.

உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும்! இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட்பட்டவர்கள் அல்லர்! முதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக கனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. "அப்பா சொன்னாரென...'"

-இது ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்பட்டது குறித்து தினமணி பத்திரிக்கையின் தலையங்கம்.

கனிமொழி அவர்கள் கருணாநிதியால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்டு, தற்போது பல்லாயிரம் கோடி ருபாய் ஊழலில் அவர் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கனிமொழி என்னும் ஒரு நல்ல பெண் கவிஞரை, தான் விழுந்த அதே அரசியல் சாக்கடையில் தள்ளிவிட்டு இருக்கிறார் கருணாநிதி.

இதோ, தினமணி குறிப்பிட்டுள்ள, கவிஞர் கனிமொழி எழுதிய "அப்பா சொன்னாரென" கவிதை வரிகள்....

அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று

(கருவறை வாசனை, ப. 17)

அப்பா சொன்னாரென ஊழலும் செய்தீர்களா?



"வளர்கின்ற பருவத்தில் ஆண்களைப் போலவே,பெண்களும் தங்களின் ஆளுமையை,தனித்தன்மையை நிருபித்து கொள்ள ஆர்வமாயிருக்கிறார்கள்.
ஆனால், உடல் கூறு வளர்ச்சி ஒன்ற போதும். சமுகத்தின் அத்தனை வக்கிரங்களையும் அவளுக்கு உணர்த்தி அவளை தேங்க செய்துவிடுகிறது. அவள்,வெறும் உடல் பாரமாய் தேங்கி விடுகிறாள்" - கவிஞர் கனிமொழி.

கனிமொழி, அரசியலில் வளர்கின்ற பருவத்தில் உங்கள் ஆளுமையை, தனித்தன்மையை நிரூபிக்க இத்தனை பெரிய ஊழலா செய்யவேண்டும்??

கனிமொழி,ஊழல் உங்களுக்கு "கருவறை வாசனையா"??
-இன்பா

1 comments:

virutcham said...

வழிபட்டேன்???

//காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று//

அவர் தான் என் முறை வருமென்று காத்திருக்கிறேன் என்று சொல்லி விட்டாரே. அப்புறம் அரசியல் சாக்கடையில் தள்ளி விட்டதாக கலைஞரை எதற்கு குற்றம் சொல்ல வேண்டும்?

 
Follow @kadaitheru