Monday, April 4, 2011

நந்தலாலா,காவலன்,ஆடுகளம்,மைனா - சாரு நிவதிதா விமர்சனம்



தமிழ் சினிமா பல புரட்சிகரமான மாற்றங்களைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. ‘எந்திரன்’, ‘காவலன்’ போன்ற குப்பைகள், ‘மன்மதன் அம்பு’ போன்ற அரைவேக்காடுகள் தரும் கலாச்சார நெருக்கடிகளிலிருந்தும், கதை சொல்லும் அமைப்பிலிருந்தும் விடுவித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ‘பருத்தி வீர’னைக் கொண்டாடினோம். ஆனால் அதிலும் வெகுஜன மசாலா சினிமாவின் உள்கட்டமைப்பிலிருந்து விலக முடியவில்லை. ‘போதும் நல்ல சினிமா’ என்று அடுத்த படத்துக்கு ஆஃப்ரிக்காவுக்குச் சென்று விட்டார் அமீர்.

மசாலா சினிமாவிலேயே சற்று வித்தியாசங்களைக் காட்டிய மிஷ்கின் முழுக்க முழுக்க ஜப்பானிய மொழிபெயர்ப்பை செய்து கொண்டிருக்கிறார். ‘நந்தலாலா’ ‘கிக்குஜிரோ’வின் அப்பட்டமான காப்பி என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்த போது அதை நான் வெகுவாக சிலாகித்ததன் காரணம், அது ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த சினிமா அனுபவத்தைக் கொடுத்தது என்பதால்தான். ஆனால் அதன் இயக்குனர் ‘கிக்குஜிரோ’விலிருந்து நான்கு சம்பவங்களை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். படத்தில் இருப்பதே எட்டு சம்பவங்கள்தான். ‘நந்தலாலா’வின் அந்நியத்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் தமிழ்ப் பார்வையாளர்கள் அந்தப் படத்தை நிராகரித்து விட்டார்கள்.

அந்த மொழிபெயர்ப்பு ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது இந்த மண்ணையும் அதன் சாரத்தையும் செரித்துக் கொள்ளவில்லை. பிடுங்கி நட்ட செடியாக, மண்ணின் உள்ளே செல்ல வழியின்றி செத்துவிட்டது (உதாரணமாக, ‘நந்தலாலா’வில் மோட்டார்பைக்கில் வரும் இரண்டு குண்டர்கள். அந்த உருவமோ, அவர்கள் பேசும் மொழியோ, அங்க அசைவுகளோ தமிழ் மண்ணுக்கு உரியதல்ல).

‘மக்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை; மக்கள் முட்டாள்கள்’ என்று மேடைதோறும் முழங்கிப் பயனில்லை. ‘காட்ஃபாத’ரிலிருந்து எடுத்த ‘நாயக’னை மக்கள் ரசித்தார்கள். அது மட்டுமல்ல; உலகின் சிறந்த நூறு படங்கள் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ பட்டியலிட்ட போது அதில் ‘காட்ஃபாத’ரும் இருந்தது; ‘நாயக’னும் இருந்தது. இதுதான் பாதிப்பினால் எடுப்பது. ஆனால் அதே மணிரத்னத்தின் மற்றொரு இறக்குமதியான ‘ஆய்த எழுத்’தை (‘அமோரெஸ் பெர்ரோஸ்’) மக்கள் புறந்தள்ளி விட்டார்கள். காரணம், பாதிப்பு மட்டும் போதாது; புதிதாக நம் மண்ணுக்கேற்றபடி அதை சிருஷ்டிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மணிரத்னத்தின் முதுமை காரணமாகவோ (வயதைச் சொல்லவில்லை) அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ நம் அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தையே அவரால் மறுஆக்கம் செய்ய முடியவில்லை என்பதை ‘ராவண’னில் கண்டோம்.

இப்போது சொன்னால் மிஷ்கினோடு சண்டை வந்து விட்டதால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் ஒருவரோடு எனக்குள்ள நட்போ, நட்பின்மையோ அவரது ஆக்கங்களை மதிப்பீடு செய்வதில் குறுக்கிடுவதே இல்லை. மிஷ்கின் மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகள் ‘வம்சி’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்திலும் மிஷ்கின் தன் சினிமா வேலையையேகாட்டியிருக்கிறார். ‘நந்தலாலா’வில் ‘கிக்குஜிரோ’வின் இயக்குனர் பெயர் இல்லாதது போலவே இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளில் அதை எழுதிய ஒருவர் பெயர் கூட இல்லை. ஒரு கவிஞர் அல்ல; அந்த ஹைக்கூ கவிதைகளைப் பல கவிஞர்கள் எழுதியிருப்பார்கள்.

அதாவது, திருவள்ளுவரிலிருந்து பாரதி வரை ஒரு 50 கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதில் அந்தக் கவிஞர்கள் ஒருவரது பெயர் கூட இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மிஷ்கினின் மொழிபெயர்ப்பு நூல். சினிமாவில் காப்பி அடிப்பது, உருவுவது, அப்படியே மறுஆக்கம் செய்து நம்முடைய பெயரைப் போட்டுக் கொள்வது என்பதெல்லாம் கோடம்பாக்கத்து மரபாக இருக்கலாம்; ஆனால் இலக்கியம் நெருப்பு. இதில் அந்த சினிமா ஜிகினா எல்லாம் செல்லாது. மேலும், அந்த மொழி பெயர்ப்பில் உள்ள ஹைக்கூ கவிதைகள் எல்லாமே சராசரியானவை. இதை நாம் ‘உயிர்மை’ வெளியீடாக அபிலாஷின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஹைக்கூ கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 15 ஆண்டுக் காலம் உதவி இயக்குனராக இருந்து படாத பாடுபட்டு ஒரு நல்ல சினிமாவை எடுத்து விடும் ஒரு இயக்குனர், அடுத்த நாளே தன்னை ஒரு சமூகவியல் அறிஞனாக, தத்துவவாதியாக, இலக்கியவாதியாக, கவிஞனாக, புரட்சியாளனாக கற்பித்துக் கொள்கிறார். எல்லாவற்றுக்கும் என்னால் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவர்களெல்லாம் என் நண்பர்கள் என்பதால் கோபித்துக் கொள்வார்கள். ஒரு படம் வெற்றி அடைந்ததுமே இலங்கைப் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். முதலமைச்சரோடு விவாதிக்கிறார்கள். சிறைக்குச் செல்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு சேகுவேரா அளவுக்கு, அமர்த்யா சென் அளவுக்கு, ஓரான் பாமுக் அளவுக்கு அவர்களின் அந்தஸ்து உயர்ந்து விடுகிறது. இதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். மிஷ்கினின் மொழிபெயர்ப்பு பற்றி பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. அடைப்புக் குறிக்குள் ‘சாருநிவேதிதா படித்தாரா?’ என்று கேள்வி. அந்தக் கேள்வியால்தான் படித்தேன். ஜப்பானிய மூலத்தில் எழுதிய கவிஞர்களின் பெயர்களையே இருட்டடிப்பு செய்து விட்டு ஒரு புத்தகமா? சினிமாவில் என்ன வேண்டுமானாலும் அக்கிரமம் செய்து கொள்ளுங்கள். அங்கே அதைத் தட்டிக் கேட்க நாதியில்லை. ஆனால் இலக்கிய உலகம் அப்படி இல்லையே?

ஊடகங்கள் சினிமாக்காரர்களுக்குக் கொடுக்கும் அளவிட முடியாத முக்கியத்துவத்தின் காரணமாகவே இவர்களுக்கு இந்தப் பூதாகாரமான பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் லிங்குசாமியும் மிஷ்கினும் ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சை இங்கே உதாரணம் காட்ட விரும்புகிறேன். லிங்குசாமி சொல்கிறார்: “நல்ல கதை இருந்தால் என்னிடம் வாருங்கள்; என் கதவுகள் திறந்தே இருக்கும். வேண்டுமெனில் நானே கூட அவர்களைத் தேடிச் செல்வேன்.” மேடையில் பேசி கைதட்டல் பெறுவதற்கு மட்டும்தான் இது போன்ற பேச்சுக்கள் உதவுமே தவிர, இதில் கொஞ்சமும் உண்மை இல்லை.

இதற்கு எஸ். ராமகிருஷ்ணன் அந்தக் கூட்டத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். சினிமாவாக எடுப்பதற்கு புதுமைப்பித்தன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், அசோகமித்திரன் தொடங்கி இன்றைய எஸ். ராமகிருஷ்ணன் வரை ஐம்பது எழுத்தாளர்களின் 100 கதைகள் தமிழில் இருக்கின்றன. இதுகூட குறைந்தபட்ச கணக்குதான். ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யைப் படமாக எடுத்தால் உலகம் பூராவும் திரும்பிப் பார்க்கும்; ‘ஆஸ்கர்’ பரிசும் நிச்சயம். அதில் பாண்டியனாக நடிப்பவர் உண்மையிலேயே உலக நாயகனாகக் கொண்டாடப்படுவார். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’, சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ என்ற இரண்டு நாவல்களையும் சினிமாவாக எடுத்தால் தமிழ் சினிமா பற்றிய சினிமாவாக அது இருக்கும். வசூல் பிய்த்துக் கொண்டு போகும். இந்தியில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் பிரச்சினை என்னவென்றால், இங்கே இயக்குனர்களுக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய பரிச்சயமோ வாசிப்போ இல்லை. இல்லாதது கூடப் பரவாயில்லை. இலக்கியம் தெரியாதது ஒரு குற்றம் அல்ல; ஆனால் அந்த அறியாமையையே ஒருவர் எப்படி பெருமையாகவும், கௌரவமாகவும் கொள்ள முடியும்?

அந்தப் பரிகாசத்துக்குரிய விஷயம்தான் தமிழ்ச் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் இயக்குனர்கள் மேடை ஏறியதுமே பார்வையாளர்கள் பரிகாசமாகச் சிரிக்கிறார்கள். அதன் அர்த்தம் புரியாத இயக்குனர்களும் “நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை; எந்தப் புத்தகமும் படிப்பதில்லை; படித்தால் கண்ணில் பூச்சி பூச்சியாகப் பறக்கிறது” என்று ஆரம்பித்து மேலும் பரிகாசச் சிரிப்பு அலைகளைக் கிளப்பி விடுகிறார்கள்.

தமிழில் குறைந்த பட்சம் நூறு கதைகளை வைத்துக்கொண்டு கதை இல்லை என்பது இயக்குனர்களின் அறியாமையைத்தானே காட்டுகிறது? நூற்றுக்கணக்கான கதைகள் இங்கே புத்தகங்களாக இருக்கும் போது ‘கதையோடு என் அலுவலகம் வாருங்கள்’ என்றால் என்ன அர்த்தம்? ‘அறியாமையில்தான் உழல்வோம்; மாறவே மாட்டோம்’ என்பதைத்தான் இந்த இயக்குனர்கள் சூசகமாகத் தெரிவிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சுஜாதா எவ்வளவோ கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய கதைகள் சினிமாவில் வன் கொடுமைக்கு ஆளானதையே கண்டோம். பிறகு அவர் வெறும் வசன கர்த்தாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். இதெல்லாம் தமிழ் சினிமாவின் அவலங்களில் ஒன்று (கேரளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகள் முப்பதுக்கும் மேல் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 60 படங்களுக்கு திரைக்கதை- வசனம் எழுதியிருக்கிறார்).

இன்னொரு அவலம் ‘காவலன்’ போன்ற படங்களால் ஏற்படும் மிக மோசமான கலாச்சார, அரசியல் விளைவுகள். மனிதனின் சுரணையுணர்வைக் காயடிக்கும் இம்மாதிரி படங்களில் ஹீரோ வேஷம் போடுபவர்கள்தான் தமிழக அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம். இந்தப் படத்தின் வெளியீட்டைத் தடுக்க நினைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக இயங்கும் ஹீரோ ஆகிய இரு சாராருமே தமிழ்க் கலாச்சார சீரழிவின் இரண்டு பக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.

ஹீரோ விஜய் இந்தப் படத்தை வெளியிடுவதில் இருந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத் தன் சொந்தப் பணத்திலிருந்து மூன்று கோடி ரூபாயை இழந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘இவ்வளவு பெரிய தியாகியா?’ என்று முதலில் பயந்து விட்டேன். பிறகுதான் தெரிந்தது, அவர் இந்தப்படத்துக்கு வாங்கிய 18 கோடி ரூபாய் சம்பளத்திலிருந்து மூன்று கோடியைத் தான் திருப்பிக் கொடுத்தார்; அதுவும் அவருடைய தந்தை அன்றைய தினம் அடைந்த கோபமும் மன வேதனையும் சொல்லி மாளாதது (முதல் மந்திரி ஆவதற்காக).

செங்கல் செங்கல்லாக வைத்து செதுக்கிக் கொண்டிருக்கும் மகனின் எதிர்காலத்துக்கு எதிராக ஒரு கூட்டமே சதி செய்கிறதே; ஒரு நல்ல தந்தையான அவர்தான் என்ன செய்வார்? இப்படிப்பட்டவர்கள்தான் இந்த தேசத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்! முதல் மந்திரி நாற்காலியைப் பற்றிய கனவில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் யாவருக்கும் அந்த வேலை சினிமாவில் நூறு அடியாட்களைத் தூக்கிப் பந்தாடுவதைப் போன்ற காரியமாகவே தோன்றுகிறது. அப்படிப் பந்தாடுவது ஒரு பொய் என்பதை மறந்து அவர்களே அதை நிஜம் என்று நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் நம்பினால் பரவாயில்லை; மக்கள் கூட்டமும் நம்புகிறது என்பது அரங்கத்தில் கிளம்பும் விசில் சத்தங்களிலிருந்து தெரிகிறது.

இந்தக் கொடுமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி, நல்ல சினிமாவின் பக்கம் திரும்புவதுதான். சமீபத்தில் அப்படிப்பட்ட இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, ‘ஆடுகளம்’.இரண்டாவது, ‘மைனா’. ஆனால் இந்த இரண்டு படங்களும் கூட கலாச்சார சீரழிவில் முன்னணியில் நிற்கும் நிறுவனங்கள்தான் என்பது யாருமே புரிந்துகொள்ள முடியாத பின்நவீனத்துவ சிக்கல்! ‘ஆடுகளம்’ ஒரு அசலான சினிமா. தனுஷின் சினிமா வாழ்வில் இது அவருக்கு ஒரு சாதனைப் படமாகத் திகழும். பேட்டைக்காரனாக நடித்திருக்கும் என் நண்பனும் கவிஞனுமான வ.ஐ.ச.ஜெயபாலனைப் பற்றிச் சொல்ல வேண்டும். “மச்சான், எப்படி நடிச்சிருக்கேன்?” என்று படத்தின் இடையிலேயே அவனிடமிருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

சிவாஜிக்குப் பிறகு நீதான் என்று பதில் அனுப்பியதை அவனால் நம்ப முடிந்திருக்காது. ஆனால் அது பகடி அல்ல; உண்மை. நடிப்பு என்பது பிறவியிலேயே அமையும் ஒரு பரிசு என்று அடிக்கடி சொல்லுவார் பாலு மகேந்திரா. அதுதான் ஜெயபாலனை அந்த வெள்ளைத்திரையில் பார்த்த போது ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. ஜெயபாலனிடம் “உனக்கு நடிப்பில் அனுபவம் இருக்கிறதா? இந்தப் போடு போடுகிறாயே?” என்று கேட்டேன். அதற்கு “நீ வேற மச்சான்; என் மனைவிக்கு எதிரில் தவிர வேறு எங்கேயும் நடித்ததில்லை; பள்ளி நாடகத்தில் கூடத் தலை காட்டியதில்லை” என்றான். அவன் திரையில் நடிக்கவே வேண்டாம் போலிருக்கிறது; அவன் வந்து நின்றாலே அப்படி ஒரு மலைப்பு ஏற்படுகிறது நமக்கு. அவனுடைய கண்களும், ஆகிருதியும், அந்த மீசையும், பழுப்பு நிறத் தோலும் ஒரு தேர்ந்த நடிகனுக்கென்றே படைக்கப் பட்டதாகத் தோன்றியது.




பொதுவாக நான் எந்தப் படத்தையும் ஒரு அவசியம் ஏற்பட்டால் ஒழியப் போய் பார்க்க மாட்டேன். ‘கலா கௌமுதி’ ஆசிரியர் “இங்கே கேரளத்தில் ‘மைனா’ என்ற ஒரு படம் இதுவரை இல்லாத அளவுக்கு சக்கைப் போடு போடுகிறது; ஊரெங்கும் இதுபற்றியே பேச்சாகக் கிடக்கிறது. அதுபற்றி எழுதுங்கள்” என்று இரண்டு மாதமாக என்னிடம் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டார். ஆனால் போய்ப் பார்க்கவில்லை (அது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்த பிறகு தெரிந்தது; அதற்குப் பின்னால் வருகிறேன்). அப்படிப்பட்ட நான் வெற்றிமாறனின் ‘ஆடுகள’த்தை முதல் காட்சியே போய்ப் பார்த்தேன்.

அவருடைய ‘பொல்லாதவன்’ அத்தகைய எதிர்பார்ப்பை என்னுள் ஏற்படுத்தியிருந்தது. மதுரை பற்றி வந்த படங்களில் மிக முக்கியமான படம் ‘ஆடுகளம்’. இதில் வரும் காதலை மட்டும் எடுத்து விட்டால் இதை சர்வதேசத் தரம் வாய்ந்த படம் என்று சொல்லி விடலாம். தான் என்ற ஆணவம் ஒரு மனிதனின் சீரழிவுக்கு எப்படிக் காரணமாக அமைகிறது என்பதே படத்தின் களம். பெருந்தச்சனில் வரும் சிற்பிதன் மகன் தன்னை விட சிறந்தவனாக ஆகும்போது மகனைக் கொன்று விடுகிறான். அதேபோல் பேட்டைக்காரனும் (ஜெயபாலன்) தன் சீடன் சேவல் சண்டையில் தன்னை விட வித்தைக்காரனாக மாறும்போது அவனை அழிக்கத் துடிக்கிறான். இந்த நாடகக் கருவை அற்புதமான சினிமாவாக சிருஷ்டித்திருக்கிறார் வெற்றிமாறன். ‘மதராசப் பட்டண’த்துக்கு எழுதிய மதிப்புரையில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை பற்றிக் குறிப்பிட்டு இன்னும் இரண்டு படங்களுக்கு இதே போல் இசையமைத்தால் நான் அவரது ரசிகனாகி விடுவேன் என்று எழுதியிருந்தேன். இரண்டு வேண்டாம்; இந்தப் படமே போதும். கதைக்களனுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான இசை.

‘மைனா’வை இத்தனை தினங்கள் பார்க்காமல் விட்டது பற்றி வருந்துகிறேன். இப்படி ஒரு படத்தை தமிழில் இதுவரை பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ் சமூகத்தில் இதுகாறும் சொல்லப்பட்டு வந்த ஒரு பொய்யை இந்தப் படம் அடித்து நொறுக்கியிருக்கிறது. அந்தப் பொய்யை நம்பித்தான் தமிழ் சினிமாவே கொஞ்ச காலம் பிழைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பொய், தாய். ‘மைனா’வில் வரும் தாய் நாம் தமிழ் சமூகத்தில் நிஜமாகப் பார்க்கும் தாய். காதலனுக்காகத் தன் பிள்ளையைக் கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் எத்தனை தாய்மார்களைத் தினசரிகளில் பார்க்கிறோம்? அப்படிப்பட்ட தாய்தான் மைனா என்ற பெண்ணின் அம்மா. மைனாவின் காதலை எதிர்க்கும் அவள், மைனா தன் காதலன் சுருளியோடு ஊரை விட்டுப் புறப்படும்போது “இருவரும் அழிந்து போவீர்கள்” என்று மண்ணை வாரித் தூற்றுகிறாள். இவ்வளவுக்கும் அவளையும் மைனாவையும் பல வருடங்களாக சோறு போட்டுக் காப்பாற்றியவன் சுருளி.

நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் கருத்தியல்களான தாய்மை, பாசம், அன்பு, குடும்பம் போன்றவற்றின் போலித்தன்மையை மிகக் காட்டமாகக் கிழித்துப் போடுகிறார் ‘மைனா’வின் இயக்குனர் பிரபுசாலமன். தமிழ் சினிமாவில் முதல்முதலாக நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம் இது. ஒரு காட்சியில் ஒரு ஆள் தன் கைத்தொலைபேசியில் “இப்போது நீ ஆறு பேரை வைத்திருக்கிறாய்; இன்னொருவனையும் வைத்துக் கொள்வேன் என்றால் என் மானம் மரியாதை என்ன ஆவது?” என்று தன் மனைவியிடம் சொல்லி முத்தம் கொடுக்கிறான். சில மாதங்களுக்கு முன்னால் தினசரியில் வந்த செய்தி ஒன்று ஞாபகம் வருகிறது. திருமணமான ஒரு பெண் தன் கணவனைத் தவிர்த்து இன்னொருவனைக் காதலிக்கிறாள். அவனோ அவளுடன் கொஞ்ச நாள் கூடி சுகித்து விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். உடனே இந்தக் குடும்பவதி தன் கணவனிடம் சொல்லி அவனைக் கொல்லச் செய்கிறாள். கணவனும் தன் காதல் மனைவிக்காக அவளுடைய காதலனின் தலையைக் கொய்து வந்து தன் மனைவியின் காலில் போடுகிறான்.

‘இந்தப் படத்தின் இசை (இமான்) மற்றும் வசனம் மிகுந்த பாராட்டுக்குரியவை. அதிலும் அந்தத் துணை அதிகாரியாக வருபவனின் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. அடுத்து சிலாகித்து சொல்ல வேண்டியது, இதில் பங்கேற்று நடித்திருப்பவர்களின் மிகத் தேர்ச்சியான நடிப்பு. இவ்வளவுக்கும் யாருடைய முகமும் பார்த்த முகமாக இல்லை. ஒளிப்பதிவு மற்றொரு சிறப்பு அம்சம். பெரியகுளம், மூணாறு, குரங்கணி என்று அடர்ந்த காடுகளில் செயற்கை வெளிச்சம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் சுகுமார்.




ஆங்கிலத்தில் ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு திரைப்படமும், இலக்கியப் பிரதியும் முடிவடையும். ஆனால் அந்த வசதியெல்லாம் அடித்தட்டு மக்களுக்குக் கிடையாது என்று முடிகிறது ‘மைனா’. எல்லையற்ற துயரம் மட்டுமே மிஞ்சும் ஒரு முடிவு. பொதுவாக கெட்டவர்களின் சாபம் பலிக்காது என்பதே கவிதையின் நியாயம். அதுகூட இந்தப் படத்தில் நடக்காதது பிரபுசாலமனின் துணிச்சலையும், புரட்சிகரச் சிந்தனையையும் காட்டுகிறது.

ஆனால், ‘பருத்தி வீர’னை அடிக்கடி ஞாபகப்படுத்துவதை ‘மைனா’வின் முக்கியமான குறை என்று சொல்ல வேண்டும். சுருளியின் பாவனைகள் அனைத்தும் ‘பருத்தி வீரன்’ கார்த்தியைப் போல் இருக்கிறது. சுருளியின் தோழனான சின்னப் பையன் பெரியவர்களைப் போல் பேசுகிறான். இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். இருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பல சங்கதிகள் ‘மைனா’வில் உண்டு.

(எழுத்தாளர் சாரு நிவேதிதா,நன்றி : உயிர்மை பதிப்பகம்)

0 comments:

 
Follow @kadaitheru