Tuesday, April 12, 2011

இந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்



இதுவரை தீவிரவாதம் என்றாலே, அது இஸ்லாமியர்களுக்கான ஒன்று என்று நாம் நினைத்து கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை என்பது சுவாமி அசிமானந்தா அவர்களின் வாக்குமூலத்தில் இருந்து விளங்கும்.

"120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு " என்று முதல் முறையாக இந்து தீவிரவாதம் பற்றி வெளிப்படையாக அறிவித்தவர் சங்க பரிவாரை சேர்ந்த அஸீமானந்தர். கலீம் என்கிற முஸ்லிம் நண்பரே தனது மனமாற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறியிருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்று உள்ளது.

இது தொடர்பான காலச்சுவடு, "த கேரவான்" இதழில் இருந்து மொழிபெயர்த்து உள்ள ஒரு கட்டுரை....

முஸ்லிம்கள் குறித்த வகைமாதிரி பிம்பங்களில் வலுவானது, அவர்கள் இயல்பிலேயே ஆவேசமானவர்கள் என்பது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சையத் அஹமது பரேல்வியின் தலைமையில் நடை பெற்ற ஜிஹாத் இயக்கம்; தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ள எப்படிப் போராட வேண்டுமென முஸ்லிம்களுக்குத் தெரியும் என்று சொன்னபோது சையத் அஹமதுகானின் குரலில் ஒலித்த அச்சுறுத்தும் தொனி; கிலாஃபத் இயக்கமும் மாப்ளா கலவரமும்; 1946ஆம் ஆண்டின் ‘நேரடி நடவடிக்கை’ தினம் - இவை அனைத்தும் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்னும் படிமத்தையே மீட்டுறுதி செய்தன. பலவீனர்கள் என்று இல்லாவிட்டாலும் அமைதியை விரும்புபவர்கள் என்று இந்துக்களைப் பற்றியுள்ள பிம்பத்துக்கு நேரெதிரானதாக இது அமைந்தது.

மகாத்மா காந்தியின் கூற்றை அடியொற்றி இந்த எதிரெதிர் பிம்பங்கள் துல்லியப்பட்டன. கிலாஃபத் இயக்கத்தின்போது நடந்த கலவரங்களுக்குப் பிறகு அவர், இந்து இயல்பாகவே கோழை என்றும் முஸ்லிம் இயல்பாகவே ரவுடி என்றும் கூறினார்.

காந்தியின் அகிம்சை இந்துயிசத்தோடு தொடர்புகொண்ட பகவத் கீதையிலிருந்தும் இந்துயிசத்துடன் நெருங்கிய உறவு கொண்ட சமணத்திலிருந்தும் பெறப்பட்டது.

1920களின் தொடக்கத்தில் ‘எல்லை காந்தி’ அப்துல் கஃபார் கான் செஞ்சட்டை இயக்கத்தை வட கிழக்கு மாகாணத்தில் தொடங்கியபோதிலிருந்தே முஸ்லிம் சத்யாக்கிரகிகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனாலும் இந்துக்களை அகிம்சையோடும் முஸ்லிம்களை வன்முறையோடும் அடையாளப்படுத்தும் போக்கு தொடர்ந்தது. சைவ உணவுக்கும் அசைவ உணவுக்கும் இடையே உள்ள முரண்பாட்டுக்கும் இதற்கும் நிறையவே தொடர்பு இருந்தது.

கடந்த மாதம் ஸ்வாமி அஸீமானந்தர் அளித்த வாக்குமூலம் இந்த வகைமாதிரி பிம்பங்களைப் புரட்டிப்போட்டது. 120க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் பலி வாங்கிய ஆறு குண்டுவெடிப்புகளுக்கு இந்து தேசியவாதிகள்தாம் பொறுப்பு என்று காவி உடை தரித்த இந்தச் சங்கப் பரிவாரத் தலைவர் ஒப்புக்கொண்டார்.

இந்தத் தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகளுக்குப் பதிலடி என்று சொல்லப்பட்டாலும் இந்தத் தீவிரவாதக் குழுவின் முக்கியப் புள்ளியான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகச் சங்கத்தின் பிரச்சாரக் (முழுநேர ஊழியர்) சுனில் ஜோஷி, 1999-2000ஆம் ஆண்டுகளிலேயே - 2001இல் இஸ்லாமியர்களின் தொடர் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே - வெடி குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

தவிர, இஸ்லாமிய குண்டு வெடிப்புகளில் பலியான இந்துக்களின் மரணத்துக்குப் பழிவாங்குவதற்காக அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஹைதராபாதின் மெக்கா மசூதி, அஜ்மீர் ஷரீஃப் தர்க்கா ஆகிய இலக்குகளைத்தான் தேர்வு செய்ததாக ஸ்வாமி அஸீமானந்தர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ‘குண்டுக்கு குண்டு’ என்னும் அவரது தத்துவம் காந்தியக் கொள்கைக்கு நேர் எதிரானது. அன்பு, பரிவு ஆகியவற்றின் மூலம் வன்முறையை அகிம்சையாக மாற்ற வேண்டும் என்றே காந்தி எப்போதும் கூறிவந்தார்.



வன்முறைக்குக் காரணமானவர்கள் - தான் உள்பட - இந்துக்கள் என்பது மட்டுமல்ல, தன் மனமாற்றத்துக்குக் காரணமானவர் ஒரு முஸ்லிம் என்பதையும் ஸ்வாமி அஸீமானந்தர் தனது வியப்பூட்டும் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அவரது வாக்குமூலத்தின் அற்புதமான முன்னுரை இவ்வாறு கூறுகிறது:

“நான் ஹைதராபாத் சஞ்சல்குடா மாவட்டச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது என்னுடன் இருந்த கைதிகளில் ஒருவரான கலீம் என்பவரால்தான் நான் இந்த வாக்கு மூலத்தை அளிக்கிறேன். கலீமிடம் நான் பேசியபோது அவர் இதே மக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாகக் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தது. அவர் இந்த வழக்குக்காக ஒன்றரை ஆண்டுக்காலம் சிறையில் இருந்திருக்கிறார். சிறையில் கலீம் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். எனக்கு உணவும் தண்ணீரும் எடுத்து வந்து தருவார். அவருடைய நன்னடத்தை என் மனத்தைத் தொட்டது. செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்; இந்த வழக்கில் நிரபராதிகள் பாதிக்கப்படாமல், உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளி என்று என் மனசாட்சி என்னிடம் சொன்னது”.

உளவியல்ரீதியான இந்த மாற்றம், ஆன்ம சக்தியால் மாற்றத்தை ஏற்படுத்துவது என்று காந்தி குறிப்பிட்டதைப் பிரதிபலிக்கிறது.

அதிகாரத்தின் மூலமாகவோ அச்சுறுத்தலின் மூலமாகவோ அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஆழமான மாற்றத்தை ஏற்படச் செய்வதன் மூலம் தன் எதிராளிகளின் போக்கை மாற்ற வேண்டுமென அவர் விரும்பினார். தன் உரிமைகளைப் பிறரை மதிக்கவைக்கத் தன் உடல்பலத்தைக் கலீமால் பயன்படுத்த முடியாத நிலையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்று வாதிடலாம்.

ஆனால் காந்தியின் அகிம்சையை இந்தியா ஏற்றுக்கொண்டதும் அப்படித்தான். ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை விரட்ட முடியாத நிலையில்தான் இந்தியா இருந்தது. ஆங்கிலேயர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதற்கான உத்தியாகவே அகிம்சை இருந்தது என்று நேரு சுதந்திரத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்.

குண்டுவெடிப்புகளால் எந்த நன்மையும் விளையாது; மாறாக மேலதிகப் பாரபட்சங்களுக்கும் துயரங்களுக்கும் அவை வழிவகுக்கும் என்று கருதும் முஸ்லிம்கள், தங்களது பாதுகாப்பு, மரியாதை ஆகிய அதே காரணங்களுக்காக அகிம்சையை நோக்கித் திரும்பலாம். கடந்த சில வாரங்களில் கலீம், முஸ்லிம்களின் சில பிரிவினரால் மகத்தான மனிதராக ஆராதிக்கப்பட்டார்.

குவாமி அவாஸ் இதழின் முன்னாள் ஆசிரியரும் சிவில் உரிமைக்கான மையத்தின் பொதுச் செயலாளருமான சயீது மன்சூர் ஆக்ரா, மோடியைப் புகழ்ந்து மௌலானா குலாம் முகம்மது வஸ்தான்வி பேசியதை ஆதரித்து இவ்வாறு எழுதினார்:

“மோடி விஷயத்தில் பெரிய நம்பிக்கை ஏதும் எங்களுக்கு இல்லை. இருக்கவும் கூடாது. அதே சமயத்தில், அல்லாவின் கருணையையும் ஞானத்தையும் தவறாகப் புரிந்துகொள்வது இஸ்லாத்துக்குப் புறம்பானவர்களின் (காஃபிர்) போக்குக்கு இணையானது. அல்லாவின் கருணை வற்றிவிடவில்லை என்பதை நாம் தீவிரமாக நம்புகிறோம்.

ஸ்வாமி அஸீமானந்தரின் மன சாட்சியை அல்லா விழிப்படையச் செய்த விதத்தை நாம் பார்த்தோம். அஸீமானந்தர் செய்த தவறுகளை நன்கு அறிந்திருந்தபோதிலும் கலீம் அவரிடம் நடந்துகொண்ட விதம் பின்பற்றத்தகுந்த ஒரு சிறப்பான முன்னுதாரணம். அதேபோல மோடி மற்றும் அவரது தோழர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பக்கூடிய இன்னொரு கலீமை அனுப்பும்படி நாம் அல்லாவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்”.

கருணை உள்ளம்கொண்ட முஸ்லிம்களால் மோடியின் மனத்தை மாற்றிவிட முடியும் என்று நம்புவது அணுகுண்டைத் தாங்கிச் செல்லும் விமான ஓட்டியின் மனத்தைத் தன்னால் மாற்றிவிட முடியுமென்ற காந்தியின் நம்பிக்கையைப் போலவே ஒரு லட்சியக் கனவுதான்.

ஜே. எஸ். பண்டூக்வாலா என்னும் குஜராத் முஸ்லிம்தான் இத்தகைய வாதத்தை முதன்முதலில் முன்வைத்தார். இவர் குஜராத் மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். 2002இல் பரோடாவில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் மயிரிழையில் பிழைத்தவர். ஹர்ஷ் மந்தர் எழுதிய ஃபியர் அண்ட் ஃபர்கிவ் னெஸ் (அச்சமும் மன்னிப்பும்) என்னும் நூலுக்கு அவுட்லுக் இதழில் 2009இல் அவர் எழுதிய மதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “மன்னிப்பு, 2002இல் நடந்த மாபெரும் சோகத்தால் இந்துயிசத்திற்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து குஜராத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள இந்துக்களின் மனசாட்சியையும் விழிப்புறச் செய்யலாம்.”

ஆதிக்கம் செய்பவர் குற்றவுணர்ச்சி கொள்ளக்கூடியவராக இருக்கும்போதுதான் அகிம்சைக்குப் பலன் இருக்கும். ஆங்கிலேயர்களும் சரி, தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் யுகத்தைச் சேர்ந்தவரும் மேற்கத்திய மனிதாபிமானக் கோட்பாடுகளிலிருந்து சில அம்சங்களை வரித்துக்கொண்ட அதிபர் ஃப்ரெட்ரிக் மில்லியம் டெ கிளர்க்கும் சரி, செய்த தவறுக்கு வருந்தும் இயல்பைக்கொண்டிருந்தனர்.

தலாய்லாமா விஷயத்தில் சீன அரசுக்கு அப்படிப்பட்ட உணர்வு எதுவும் இல்லை. கருத்தியல்ரீதியான ‘நல்ல’ காரணங்களின் அடிப்படையில் திபெத்தியர்களுக் கெதிரான தங்கள் வன்முறையை அவர்களால் நியாயப்படுத்த முடியுமென்பது காரணமாக இருக்கலாம்.

இந்தியா விஷயத்தில் எப்படி? அகிம்சைக் கோட்பாடு முஸ்லிம்களின் நடத்தையில் முக்கிய இடம்பிடித்தால் அதற்கு இந்து தேசியவாதிகள் - அல்லது தீவிரப் போக்கற்ற இந்துக்கள் - இணக்கமான முறையில் எதிர்வினை ஆற்றுவார்களா? முஸ்லிம்களுடன் சண்டையிடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு (கருத்தியல்ரீதியான) ‘நல்ல’ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் வெறுப்பு அரசியல், முஸ்லிம் பண்பாடு குறித்த எல்லா விதமான மரியாதையையும் - ஏன் அதன் இருப்பையும்கூட - சாத்தியமற்ற தாக்கிவிடுமா? காலம் பதில் சொல்லும்.

நன்றி: காலச்சுவடு மற்றும் The caravan.

0 comments:

 
Follow @kadaitheru