‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
யார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
வ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போட்டியிட்டு மாணவர் ஒன்றியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜெயபாலன் அன்றைய நாட்கள் முதல் துடிப்பாகச் செயற்பட்டு வருகிறார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் அதாவது எழுபதுகளில், ஈழத்தில் ஏற்பட்ட எழுச்சிகளில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் ஜெயபாலன் பங்கு வகித்திருந்தார்.
இலக்கிய உலகமும் தமிழகமும் ஜெயபாலனை ஈழத்தின் சிறந்த கவிஞனாகவே அறிந்திருந்தது. 1969ஆம் ஆண்டு ஜெயபாலன் எழுதிய ‘பாலி ஆறு நகர்கிறது’ என்ற கவிதை, மொழியிலும் உள்ளடக்கத்திலும் ஆழமானது.
ஈழத்தில் ஏற்பட்ட எழுச்சியை முன்கூட்டியே பாலி ஆறு கவிதை பதிவாக்கியிருந்தது. வன்னி மண்ணின் வாசனையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய அந்தக் கவிதை ஜெயபாலனின் முதலாவது கவிதை. தொடர்ச்சியாய் இன்றுவரை ஜெயபாலன் கவிதைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார். சூரியனோடு பேசுதல் (1986), நமக்கென்றொரு புல்வெளி (1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987), ஒரு அகதியின் பாடல் (1991), வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002) முதலிய நூல்களை ஜெயபாலன் எழுதியிருக்கிறார்.
கடந்த 2009இல் ஜெயபாலனின் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ என்ற புத்தகத்தை ‘ஆழி’ பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முதிர்ச்சியடைந்த ஜெயபாலன் அந்தப் புத்தகத்திற்கு என்னையே முன்னுரை எழுதும்படி கேட்டிருந்தார். ஈழத்தவர்களின் இன்றைய கவிதை நிலவரங்கள் பார்வைகளுக்கு ஜெயபாலன் முன்னிடம் கொடுப்பதுடன் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஈடுபாடு காட்டுவார். அவருக்கு நான் எழுதிய முன்னுரையிலும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளைப் பதிவாக்க வேண்டும் என்று விரும்பினார். வாழ்க்கையில் நம்பிக்கை தருவதிலும் இலக்கியத்தில் உற்சாகம் காட்டுவதிலும் ஜெயபாலன் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். இளையவர்களைத் தேடித் தேடி ஆர்வப்படுத்துபவர்.
ஜெயபாலனின் கவிதைகளில், ‘இலையுதிர்கால நினைவுகள்’ மற்றும் ‘நெடுந்தீவு ஆச்சி’ போன்ற கவிதைகள் முக்கிமானவை. பரந்த வாசிப்புக்கும் ஆழமான கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. நிலத்திற்கும் புலத்திற்குமான அவலத்தையும் உணர்ச்சிச் செறிவையும் ஜெயபாலனின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. நிலம் சார்ந்த நெருக்கமான கவிதைகளும் புலம் பெயர் வாழ்வு அவலம் செறிந்த கவிதைகளிலும் ஜெயபாலன் முக்கிய பதிவுகளைச் செய்திருக்கிறார். இந்தக் கவிதைத் தரம் எட்டு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஓஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?"
இந்தக் கவிதை ‘இலையுதிர்கால நினைவுகள்’ என்ற நீண்ட கவிதையின் சில வரிகள். ‘ஆடுகளம்’ படத்தின் உதவி இயக்குனர் ஹஸீன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபொழுது இந்தப் படத்தையும் ஜெயபாலனின் பாத்திரத்தையும் குறித்து சில விடயங்களை மட்டும் சொன்னார்.
ஜெயபாலன் ஒரு பிரமாண்டமான பாத்திரமாக ‘ஆடுகள’த்தில் வருகிறார் என்றார் ஹஸீன். இந்தப் பாத்திரம் இதுவரையில் தமிழ் சினிமாவில் பார்த்திருக்காத ஒரு பாத்திரமாக இருக்கும் என்றும் ‘ஆடுகள’த்தில் அவர் முக்கியமான பாத்திரமாக வருகிறார் என்றும் அவர்தான் அதற்குப் பொருத்தமானவர் என்றும் ஹஸீன் அப்பொழுது சொன்னார்.
ஜெயபாலன் உணர்ச்சிகள் நிறைந்த ஆள். அன்பு, கோபம், கழிவிரக்கம், போர்க்குணம், காதல் என்று உணர்ச்சிகள் நிறைந்த மனிதன். ஜெயபாலனின் கவிதைகளில் இந்த உணர்ச்சிகள்தான் நிறைந்து கிடக்கின்றன.
அவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபொழுது துடிப்பான மாணவராக நின்று செயற்பாடுகளில் ஈடுபட்டவர். ‘ஆடுகள’த்தில் உணர்ச்சிகள் நிறைந்த பிரமாண்டமான பாத்திரமாக வருகிறார்.
மதுரையில் அந்த நிலத்தின் வாசனையுடன் வாழ்க்கைக் கோலங்களுடன் ‘ஆடுகளம்’ படமாக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ என்ற தனுஷ் நடித்த படத்தையும் முன்னர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலனை எவ்வளவு பொருத்தமாக வெற்றிமாறன் தெரிவு செய்தாரோ அவ்வளவு பொருத்தமாக கறுப்பாக தனுஷைத் தெரிவு செய்திருக்கிறார்.
பேட்டைக்காரன் மதுரையில் சேவல்களை வளர்த்து சண்டைக்கு விடுபவன். பேட்டைக்காரனுடன் கறுப்பும் துரையும் சேர்ந்து சேவல்களைச் சண்டைக்காக வளர்க்கிறார்கள். பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து அவை சண்டைக்கு ஏற்ற சேவல்களாக்குவது, வித்தைகளைக் கற்றுக்கொள்வது போன்றவை இவர்களின் வாழ்க்கை. தனுஷ், கிஷோர் போன்றவர்கள் இப்படித்தான் பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் இது ஒரு பெரிய வேலையாக அல்லது பொழுதுபோக்காக அல்லது போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாக பேட்டைக்காரனின் சேவல்களைத் தோற்கடிக்க முடியாது இருக்கிறது. சண்டைக்காக சேவல் வளர்ப்பதில் பேட்டைக்காரன் கைதேர்ந்த ஆளாக இருக்கிறான். பேட்டைக்காரனின் இந்த வித்தைகளைக் கற்றுக்கொண்டு எப்படியாவது சேவல் சண்டையில் வெல்ல வேண்டும் என்பது கறுப்பின் ஒரே இலட்சியமாகிறது.
சண்டைக்கு ஏற்றதல்ல என்று அறுக்கச் சொன்ன சேவலை கறுப்பு வளர்த்து சண்டைக்களத்தில் இறக்குவதிலிருந்து பேட்டைக்காரனுக்கும் கறுப்புக்கும் முறிவு ஏற்படுகிறது. பேட்டைக்காரனாகவும் சேவல் சண்டைக்காரனாகவும் வாழந்தால்தான் வாழலாம் என்கிற சூழ்நிலையினால்தான் பேட்டைக்காரன் குமுறுகிறான். பேட்டைக்காரன் என்கிற பாத்திரத்தில் வரும் ஈகோத்தனமும் கோபமும் தொடர்ந்து படத்தை நகர்த்திச் செல்கிறது. சேவல் சண்டை ஆள் சண்டையாக மாறுகிறது. இரண்டு சேவல்களைப் போல கறுப்பும் துரையும் மோதிக் கொள்கிறார்கள். கறுப்பு அனுபவிக்கும் நெருக்கடிகளைப் பேட்டைக்காரனின் ஏகோத்தனமே உருவாக்குகிறான். இறுதியில் பேட்டைக்காரனின் பொறாமைத்தனம் பற்றி கறுப்பு அறியும் உண்மைளைத் தனக்குள் இரகசியமாக்கி பேட்டைக்காரனைக் கௌரவப்படுத்துகிறான்.
கறுப்பு என்கிற இளைஞன் ‘ஆடுகள’த்தில் மதுரையின் முக்கிய குறியீடு. சேவல் சண்டை என்று அதிலேயே கவனம் செலுத்தி அதற்காகவே வாழ்கிறான். அதற்காகவே எல்லா துரயங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கிறான். தனுஷ் முக்கியமான அடையாளப்படுத்தக்கூடிய, பேசக்கூடிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பேட்டைக்காரனாக ஜெயபாலன் சகல உணர்ச்சிகளையும் காட்டியிருக்கிறார். வாசனையுடன் படத்தில் மதுரைக் காட்சிகள் வருகின்றன. சாராயக்கடை, பேட்டைக்காரனின் வீடு, தெருக்கள், கறுப்பின் வீடு, சண்டையிடும் வெளிகள, கோழிச் சண்டைக்களம் போன்ற பல காட்சிகள் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் இசையும் பாடல்களின் இசையும் பார்வையையும் கவனத்தையும் ஈர்த்து படத்தின் வெளியில் ஆர்வமாகக் கொண்டு செல்கிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஜெயபாலனுக்கு ராதாரவியின் பின்னணிக் குரல் முழுமையாகப் பொருந்தியிருக்கிறது. உணர்ச்சிகளின் போராட்டம் மிக்க பாத்திரத்தை ஜெயபாலன் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ‘ஆடுகள’த்தில் வெற்றிமாறன் கவிஞர் ஜெயபாலனை ஒரு பிரமாண்டமான பாத்திரமாக உருவாக்கியிருக்கிறார்.
மதுரையின் கிராம வாழ்க்கைச் சூழலைப் பதிவாக்கியிருக்கிறார். பேட்டைக்காரன் என்ற பாத்திரத்தின் மூலம், கறுப்பு என்ற பாத்திரத்தின் மூலம் இரண்டு பாத்திரங்களின் இடையிலான இரண்டு தலைமுறைகளின் உறவையும் முரண்பாடுகளையும் சித்தரித்திருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் மிகவும் ஆழமும் நேர்த்தியும் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்படவேண்டிய காட்சிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மனவெளி முரண்பாடுகளையும் வெற்றிமாறன் ‘ஆடுகள’த்தில் பதிவாக்கியிருக்கிறார்.
(நன்றி : உயிர்மை பதிப்பகம்)
Sunday, April 17, 2011
'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்
Posted by கடை(த்)தெரு at 9:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment