Thursday, April 28, 2011

நீராடும் இளம் பெண்கள் - ஒரு இலக்கிய பார்வை



ஆறு, குளம், கடல் இவற்றில் குளிப்பது மக்களிடத்தில் இருந்து வரும் வழக்கம். இந்த மூன்றில் கடலில் குளிப்பது தூய்மைக்காக அல்ல. புறத் தூய்மை நீரால் அமையும் என்பது ஒரு பழைய வாக்கு. அகத் தூய்மை என்பதும் ஒன்றுண்டு. குளியல் இரண்டு தூய்மைக்கும் பொதுவானதுதான். கடலில் குளிப்பது சமயச் சார்பான சடங்கை நிறைவேற்ற. ஆற்றில் குளிப்பது அகப்புறத் தூய்மை இரண்டுக்குமாக. பெரியஅளவில் நாட்டில் கோயில்கள் அமைந்த பிறகு திருக் குளம் என்று பெயரிடப்பட்ட குளங்களும் மக்களின் அகப்புறத்தூய்மைக்குத் தேவையான நீர்நிலைகளாயின. சுனைகள், ஓடைகள் மற்றும் அருவிகள் இவற்றிலேயும் மக்கள் குளித்தார்கள்.

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளான வைகையும் காவிரியும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குளித்தல் என்பது மகிழ்ச்சியான செயல்தான். ஆண் குளித்தால் பெண்ணுக்கும் பெண் குளித்தால் ஆணுக்கும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியான செயலாகத்தான் இலக்கியம் குளிப்பதைக் கணித்து இருக்கிறது. ஏன்? இருபாலரது உடல்களும் நிர்ப்பந்தம் இல்லாமல் பார் வைக்குக் கிடைக்கிறது. ஒரு நீர்நிலையை தனக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டுவதற்குத்தான் மனிதன் குளியலைக் கண்டுபிடித்தான் போலும். தன் உடலை முழுமையாகத் தண்ணீரில் மனிதன் அமிழ்த்திக் கொள்கிறான். தண்ணீரோடு ஆழ்ந்த தொடர்பு கொள்ளும் அந்த உடம்பு பாராட்டுப் பெறுகிறது. இதற்கு எதிரான குளிப்பு தீக்குளிப்பு.

தமிழிலக்கியம் பரிபாடல் என்ற ஒரு தொகுப்பைப் பெற்றுள்ளது. நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழ வந்ததைக் கூறுகிறது பரிபாடல் . புனல் விளையாட்டு என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பரிபாடல்தான் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்கிறது. அடுத்துவந்த நூல்களை சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம் முதலியவற்றிலும் இந்தப் புனல் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. வடமொழியிலும் புனல் விளையாட்டு என்பது ஜலக்கிரீடை என்று பெயர் பெற்றுள்ளது:

பரி பாடல், வைகை நதியில் மக்கள் புதுவெள்ளத்தில் கொட்டம் அடிப்பதைக் காட்டுகிறது. மக்களுக்குப் புனல் விளையாட்டின்போது மான அவமானம், கூச்சம் போன்ற பிரச்சினைகள் எழுவதில்லை. இல்வாழ்க்கைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்பட்ட பரத்தையர்களின் நடத்தை பற்றியும் பரிபாடல் குறிப்பிட்டிருக்கிறது.

பரத்தையர்களின் நடத்தை பற்றிக் குறிப்பிடும்போது பரிபாடல் புறநூல்களில் ஒருவரான நல்லழிசியார் தயக்கம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். வைகையின் கரை புதுவெள்ளம் நிறைந்தபோது இருந்த நிலையை நாடக அரங்குபோல் இருந்தது என்கிறார் நல்லழிசியார். நாடக அரங்கு என்றதால் சொல்லப்பட்ட விஷயம் நாடக வழக்கு சம்பந்தப்பட்டது என்று பொருளில்லை. ஆனால் ஓர்அசாதாரணத் தன்மையை, இந்த நிகழ்வு குறிக்கவே செய்கிறது. அரங்கு-நிகழ்வின் வெளி-நாடகத்தை நினைவூட்டுகிறதே தவிர, சொல்லப்பட்ட நிகழ்வு அல்ல. ஆனால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் என்ற அர்த்தமும் இந்த நாடகம் என்ற சொல்லாட்சியில் தொக்கி நிற்கவே செய்கிறது.

கவிதையில் அர்த்தம் உத்தேசிக்கப்பட்டதும் உத்தேசிக்கப்படாததுமாகத் தானே அமைகிறது.

நல்லழிசியார் வைகையைப் பற்றிய பரிபாடலில் (16 ஆம் பாட்டு) குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

பரத்தையின் தோழிகள் மூங்கில் குழாய் மூலமாக அரக்கு நிறத்தில் உள்ள தண்ணீரைக் காதல் பரத்தை மேல் பீச்சினார்கள். அவளுடைய குரும்பைப் போன்ற முலையில் அந்த செந்நீர் தங்கி இருக்க, அவள் அதைத் துடைக்காமல் இருந்தாள். அப்போது தலைவன் அங்கே வருவதைப் பார்த்த அவளது தோழிகள் ‘அவளைச் சேராதே. அவள் பூத்திருக்கிறாள்’ என்றார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தலைவனுக்குத் தெரியும். அது செஞ்சாந்தின் குழம்பு என்பதும் அவன் அறிவான். உடனே வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து அவளது குருதி பொறும் பூ நீரைத் துடைத்து மருவினான். இவள் பூத்தனள் என்று அவன் சொல்ல, அவள் நாணினாள். (பரிபாடல் 16-வரி 20-30)

இந்தப் பாட்டின் கடைசியில் பரத்தை வெட்கப்பட்டாள் என்று தோழி கூறுகிறாள். பரத்தை வெட்கப்பட்டது தலைவன் செய்த கேலிக்காகத்தானே தவிர, தோழிகள் சொன்னதற்கோ அல்லது பூப்பு பற்றிய செய்திக்கோ இல்லை. வைகை ஆற்றின் புது வெள்ளம், மூங்கில் குழாய்களால் பெண்கள் பீய்ச்சும் செந்நிறத் தண்ணீர்; செஞ்சாந்துக் குழம்பு- அதாவது திரவ நிலை- ஆக மூன்றும் சேர்ந்து ஒரு நீர்மையைக் கூச்ச நாச்சமின்றி பாடலில் நிலைநாட்டுகின்றன. ஆனால் இந்தத் தலைவனை அவனது முறையான மனைவி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். தடையற்றதும் தடை உடையதுமாக இரண்டு விஷயங்களை வைத்து நல்லழிசியார் இப்பாட்டை அமைக்கிறார். பரத்தையின் நடத்தையையும், தலைவன் நடத்தையையும் தலைவி நிராகரிப்பதன் மூலம் ‘பொதுக்குளியல்’ பற்றி ஒரு கருத்துக்கு அழிவிலார் பரிபாடல் வித்திடுகிறது. ஆனால் பெண் தான் குளிக்கப்போகும் நிலையில் இருக்கும்போது ஆணால் பார்க்கப்படுகிறோம் என்ற பயத்தை அனுபவிக்கவில்லை. பரத்தை என்பதால் அப்படி ஒரு மனநிலை உடையவள் என்று சொல்லி விட முடியுமா?

பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது. அழகிய சிறிய நூலான திருப்பாவையில் ஆண்டாள் பழைய நீராடல் ஒன்றைப் புதுப்பிக்கிறாள். ஆனால் ஆண்டாளின் நீராடலில் ரகசியம் நுழைகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் எழுப்பப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடைபெறுகிறது. பரிபாடலில் குளியல் ஒரு புனல் விளையாட்டு.



ஆண்டாளின் நீராடல் ஒரு நோன்பு. பரிபாடலில் தோழிகள் பொய் சொல்கிறார்கள். அது கண்டனத்துக்குரியதாக காட்டப்படவில்லை. ஆனால் ஆண்டாளின் நீராடல் பொய் சொன்ன பாவம் நீங்கவும் பயன்படுகிறது. பரிபாடலின் தோழியர்கள் பரத்தையின் சகவாசிகள். ஆண்டாளின் தோழிகள் பக்தைகள், நீராடல் பற்றி ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைக் காட்டிலும் அவர் இயற்றிய ‘கண்ணனிடம் புடவைகளைத் திரும்பக் கேட்டல்’ என்பது பற்றிய பாசுரங்கள்தாம் நம்மைக் கவர்கின்றன ஆண்டாளின் பாட்டு.

கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான் போந்தோம்

என்று தொடங்குகிறது. முதல் அடியே பெண்கள் குளிக்கப்போகும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. கோழி கூவும்முன்- அதாவது இன்னும் இருள் பிரியாத நேரம். ஆண்டாளின் ‘கோபிகைகள்’ தாமரைப் பொய்கைக்குப் போகிறார்கள். அது அவர்களுடைய ஊருக்குக்குத் தொலைவில்தான் இருக்கிறது. ‘கங்குல் கனைசுடர் கால் கீயாடுன்’ என்று இளங்கோவடிகள் வருணித்த ஒரு பொழுதில் புறப்பட்டுப் போய் நன்றாகப் புலர்வதற்கு முன் ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் கோபிகையும் அவளது தோழிகளும் புறப்படுகிறார்கள். இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.

கோபிகை பயந்தது போலவே இவளுக்கு முன்பாக அங்கே கண்ணன் போய்விட்டான். தங்கள் சேலைகளைக் கழற்றி வைத்துவிட்டுத் தண்ணீரில் குளித்துத் துறையேறிய பின்புதான் கோபிகைகள் தங்களது சேலைகள் காணாமல் போய்விட்டதைத் தெரிந்து கொள்கிறார்கள். அந்தச் சேலைகளைக் குருந்த மரத்துக் கிளைகளில் மறைத்து விட்டுக் கண்ணனும் அங்கே இருக்கிறான் என்பதையும் கோபிகையர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கண்ணனிடம் சேலைகளைத் தந்துவிடச் சொல்லிக் கெஞ்சும் கோபிகையின் கூற்றில் சில வதந்திகளை ஆண்டாள் கூறுகிறார். பொய்கை ஆணுக்கே உரியது போன்ற நிலைமை உள்ளதை இந்த வதந்தி சொல்கிறது.

‘இனி என்றும் பொய்கைக்கு வாரோம்’ என்கிறாள் கோபிகை. தோழியும் நானும் வாரோம் என்று வாக்குறுதி செய்கிறாள். இனி வரமாட்டோம் என்பதால் வந்தது தவறென்று ஒப்புக்கொள்கிறாள். இப்பொய் கைக்கு எவ்வாறு வந்தாய் என்று கேட்கிறாள். என்னுடைய தாய் முதலியவர்கள் எங்களை இப்படிக் கண்டால் தாங்க மாட்டார்கள் என்கிறாள். ‘நீ கேட்டதையெல்லாம் தருவோம்’ என்று சொல்கிறாள். ‘யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறோம்’ என்கிறாள். ஒரு கட்டத்தில் கண்ணனைக் ‘குரங்கு’ என்றும் திட்டுகிறாள். மகிமை இல்லாதவன் என்றும் திட்டுகிறாள்.

கோபிகையர் கெஞ்சுதல்களின் இடையே ‘நீ வேண்டியதெல்லாம் தருவோம்’ என்னும் வாக்கு திடுக்கிட வைக்கிறது. ஆணுக்கே உரிமை உடையது போன்ற நீர்நிலையில் அவனது அனுமதியில்லாமல் பெண் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது போல் ஆண்டாள் பாசுரத்தில் தொனிக்கிறது. எனவே பெண் ஆணுக்குத் தெரியாமல் குளிக்க வேண்டியுள்ளது போலும். பெண்ணின் குளியல் ஒரு கள்ளக்குளியல். எனவே பயப்படுகிறாள். இதை மறைக்கும் முயற்சியாகப் பெண் தன் குளியலைப் பிறர் பார்த்தால் தன் மானம் போய்விடும் என்ற குரலை எழுப்புகிறாள். பெண் ஏற்படுத்திக்கொண்ட சிக்கலை விடுவிக்க முடியவில்லை. அவள் மானமும் கள்ளத்தின் வெளிப்பாடும் கலந்துவிட்டன.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
பலர்குடைந்தாடும் சுனையில்

என்கிறாள் கோபிகை. இந்த வரிகளில் ஆண்டாள் ஒரு பொருள் மயக்கத்தை அல்லது தெளிவின்மையை ஒரு யுக்தியாகச் செய்கிறார் என்று தோன்றுகிறது. ‘பலர்’ என்பதற்குப் பல ஸ்திரீகள் என்று வைணவ உரையாசிரியரான பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியிருக்கிறார். பலரோடு வந்ததால் கோபிகை பலர் என்று குறிப்பிட்டது தோழிகளைத்தான். எனவே பலர் எனப்பட்டவர் பெண்கள்தான் என்பது தெளிவாகிறது. ஆனால் ‘பலர்’ என்ற பன்மை ஒரு நொடியில் பால்பாகுபாட்டை விட்டுவிட்டு ஆண்களையும் காட்டி மறைகிறது. முன்னமே கண்ணன் என்ற ஆணால் பார்க்கப்பட்டு விட்டார்கள் அல்லவா? ஒரு ஆணாலும் பார்க்கப்படாத பெண் ஒரு ஆணால் பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்டிராமை என்ற நிலையிலிருந்து விலக்கப்பட்டவள் தானே! இதற்கு அடுத்து இந்த வரியில் இடம்பெறும் ‘சுனை’ என்ற சொல்.

‘சுனை’ என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது குன்றுகளில் காணப்படும் நீர்நிலைதான். ஆனால் இங்கே ஆண்டாள் கோபிகை குளிக்க வந்த தாமரைப் பொய்கையை சுனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலத்தில் சுனை இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது போலும். ஆனால் பெரியவாச்சான் பிள்ளை ஒரு விஷயத்தை சுனை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘தமிழர் கலவியை சுனையாடல் என்று பேரிட்டுப் போருவார்கள் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இந்தப் பொருளை இந்தப் பாடலின்போது நினைவு கூரவில்லை. அர்த்தப்படுவதும் அப்படி ஒரு விபத்து ஏற்படுவதைக் கவிதை காட்டுகிறது. நீராடல் விஷயமாக ஆண்டாள் இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியிருக்கும் பயம் நியாயமானது. தண்ணீரில் மூழ்கிவிட்ட பெண்ணுக்கு எப்படிப்பட்ட முதலுதவியை ஆண்கள் செய்கிறார்கள் என்பதைத் தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவதும் இங்கு நினைவுக்கு வருகிறது.



ஆண்டாள் பாடலில் சுட்டிக்காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.

‘இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்’ என்ற மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பில் ‘பிரக்ஞை’ என்ற கவிதை திணை இலக்கியம், பக்தி இலக்கியத்தைத் தொடர்ந்து, குளிக்கும் பெண்ணையும் பற்றி எழுதுகிறது. கவிதைக்கு ‘பிரக்ஞை’ என்ற தலைப்பு தவிர்க்க முடியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். முன்னே சொன்ன பரிபாடல், ஆண்டாள் பாடல் இரண்டிலும் விழிப்புணர்வு இருக்கிறது. மனுஷ்ய புத்திரன் கவிதையில் விழிப்புணர்வுக்குப் பிரக்ஞை என்று பெயர். பரிபாடல் கவிதையில் நாடகம் நினைவுகூரப்படுவதால் ஆசைக் கனவாகவும் கொள்ளலாம். ஆண்டாள் கவிதையில் கனவுப் பண்பு இல்லையென்றாலும் அந்தக் கோபிகையின் மனம் பயத்தில் பிறழ்கிறது என்பதை அவளது நினைவு கூரலைக் கொண்டு சொல்லலாம். மனுஷ்ய புத்திரன் கவிதையில் இறுதியில் துர்க்கனவு வெளியிடப்படுகிறது.

இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

என்று கவிதையின் இறுதி வரிகள் சொல்லும்போது கதை கண்டவளின் பதற்றத்தை வாசகன் உணர முடிகிறது.

பாதுகாப்பான வீடுகளின்
தாழிடப்பட்ட குளியலறை
சாவித் துவாரங்களில்
தன்னை உற்றுநோக்கும்
கண்களைப் பற்றி
இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

உற்றுப் பார்ப்பவனின் கண்கள்; அவற்றைத் தன்னுடைய கனவில் கண்டு விழித்தெழுந்த கண்கள் இவற்றை இக்கவிதை படம்பிடிக்கிறது. ஆண்டாளின் கவிதையில் வரும் கோபிகை ஒரு அசம்பாவிதத்தைக் கற்பனையாக எதிர்பார்த்துப் பயப்படுகிறாள். இதைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பு மொழியால் சொல்கிறார். தமிழர் கலவியை சுனையாடல் என்று பெயரிடுவார்கள் என்னும் அவரது தகவல் இந்த அசம்பாவிதக் கற்பனையைக் கிளறுகிறது. பரிபாடல், ஆண்டாள் கவிதைகளில் பெண்கள் இரு வகைப்பட்டவராகின்றனர். பரிபாடலின் பரத்தையை ஆண்டாள் கவிதையும் மனுஷ்ய புத்திரன் கவிதையும் விலக்கிவிடுகிறது. பரிபாடலிலேயே அதன் முற் பகுதியில் கனவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் வரும் பெண்ணையே ஆண்டாள் தன் கவிதையில் உருவாக்குகிறாள்.

ஆண்டாள் கவிதையில் குடும்பம், அந்தக் குடும்பம் பின்பற்றும் சம்பிரதாயம், கடவுள், அதன் புராணம் எல்லாம் பேசப்படுகின்றன. மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் குடும்பம்தான் களமாக இருக்கிறது. ஆனால் அது துர்ப்பாக்கியமாக அமைந்துள்ளது. ஆண்டாளின் கவிதையில் வீட்டுக்கு வெளியே நடக்குமென பயந்த ஒன்று மனுஷ்ய புத்திரன் கவிதையில் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. இந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியை ஒரு நிதானமான வாசிப்புக்கு உட்படுத்தினால் வாசகனின் மனம் குழம்பக் கூடும்.

குளியலறையைக் குறிப்பிடும்போது அது பூட்டப்படும் வசதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாவித்துவாரம் உள்ள கதவு. எனவே குளியலறை கூட ஒரு வகையான சிறைதான். உள்ளே, வெளியே தாழ்ப்பாள் இருந்தால் போதாதோ? மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்தது. நவீன காலத்தில்தான் வீடுகளுக்குக் குளியலறை என்பது உருவாக்கப்படுகிறது. கூடம், தாழ்வாரம், முற்றம், பூசை அறை, சமையல் அறை, பாடசாலை (படிக்கும் இடம்) உண்டே தவிர, படுக்கை அறை, குளியலறை என்பவை நவீன காலத்து உருவாக்கங்கள். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வீட்டின் அறைகளில் ஒன்றைக் காமிரா அறை என்றார்கள். இது பிரெஞ்சு மொழியில் தோழமையைக் குறிக்கும் ‘காம்ரேட்’ என்ற சொல்லில் உருவாகி நண்பர்கள் சந்திக்கும் அறையைக் குறித்ததாம். கிணற்றடியில் பெண்கள் குளிக்கும் வீடுகளைத்தான் பாரதியாரும் அறிந்திருப்பார். ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும்’ என்று எழுதும்போது பாரதியார் பூட்டும் வசதியுள்ள குளியலறை வீடுகளை அறிந்திருக்க மாட்டார். படுக்கை அறைகளின் எண்ணக்கை கொண்டு வீட்டைக் கணிப்பதும் நவீன காலத்து முறைதானே

மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்துக் கவிதையின் குறியீடுகளைக் கொண்டுள்ளது. பிரக்ஞை என்ற சொல்லே 1970க்குப் பிறகு பொருட் செறிவுடன் உலா தொடங்கிய சொல்லாகும். ‘மனப் பிறழ்வு’ என்ற பெயரிடுகையும் நவீன காலத்தை உணர்த்துவதே. இக்கவிதையின் முதல் பகுதியும் அப்படியே. நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு. ‘பிரக்ஞை’ கவிதையில் மனுஷ்ய புத்திரனிடம் இப்பண்பு காணப்படுகிறது. கவிதையின் முதல் பகுதி இது.

நதிகள்
குளங்கள்
ஓடைகளோரப் பயணங்களில்
நூறு நூறு
கண்பட்டு விலகும்
குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமற்று
வெட்டவெளிகளில்
சுடர்ந்து கடக்கின்றன

குளிக்கும் கோபியர்கள்! குளிக்கும் பெண்கள் கோபியர்களாகி விடுகிறார்கள். கோபியர்களைக் குளிக்கும் பெண்களாக மட்டுமே காட்டப்பட்டது தமிழ்நாட்டில்தான். வேறொரு நவீன கவிஞரின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. குளத்திலேயே அவர்கள் இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கோபியர்களை நினைவு கூர்கிறது. அவர்களது ‘ஈர உடல்கள் அச்சமற்று கூச்சமற்று’ உள்ளன என்கிறது கவிதை. இந்த ஈர உடல்கள் நதிகள், குளங்கள், ஓடைகளோரப் பயணங்களில் தென்படுகின்றன. ‘ஓடைகளோரப் பயணங்களில்’ என்ற அமைப்பு உரைநடையை விலக்கிக்கொண்டு கவிதை நடையில் சிக்கனப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

இப்பகுதியில் அச்சம், கூச்சம் இரண்டையும் இணைத்திருப்பது கவனிப்புக்குரியது. அச்சம், நாணம் இரண்டும் பெண்ணியல்புகளாகப் பேசப்பட்டு வருகின்றன. அச்சம் இல்லாத சமயத்திலும் கூச்சம் இருக்கும் அல்லவா. மறுபடியும் பரிபாடல் பக்கம் போகலாம். இந்தப் பரிபாடல் நல்லழிசியாரால் எழுதப்பட்டது. இதுவும் வைகையில் புனலாடல் பற்றிதான்.

நீர்த்துறையில் வரிசையாக நின்றவர்களுடைய மொழிகள் ஒன்றை உணர்ந்து ஒவ்வாமற் பலவாக ஒரே காலத்தில் எழுந்தன. புல்லாங்குழலின் இசை எழ முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுனி ஆகிய இவற்றின் தாளத்தை ஆடல் மகளிர் தன் கையால் அளந்து நிற்ப உண்டாகும் ஓசையே அங்ஙனம் கேளாமைக்குக் காரணம். ஆயினும் யாம் கேட்டன சில:

‘பலர் கூடியிருக்கிற இடத்திலே நின்று
அப்பூங்கொம்பு போன்றவருடைய நகங்களை
ஒருவன் நோக்கினான். அவன் இளநெஞ்சன்.
திண்மை அற்றவன் என்றார் சிலர்’

‘அவன் இப்பெண் பூண்ட முத்துமாலையின்
அழகைப் பார்த்து இதற்குப் பொருத்த
மாயிருக்கின்றன இவள் நகங்கள் என்று
அவற்றைப் பார்த்தான். இதற்கு அவள்
நாணமடையவில்லை’ என்றனர் சிலர்.



இந்தப் பகுதியில் உடல் திறக்க பெண் இருப்பதும், அந்த உடல் பார்க்கப்படும்போது பயமும் வெட்கமும் இல்லாதிருப்பதும் கண்டிக்கப்படுகிறது. சமுதாய விதிகளுக்கு வெளியே வைக்கப்பட்ட மக்களின் பண்பாடு வேறாகக் காட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் நீராடலில் ஒரே துறையில் எதிர்ப்படுகிறார்கள். பயப்படாதவர்கள், வெட்கப்படாதவர்கள் என்பதை நினைவில் கொண்டு மனுஷ்ய புத்திரனின் பிரக்ஞை கவிதையில்

குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமுற்று

இருப்பதை ஆராய்ந்தால் இவர்கள் குலப் பெண்கள்தாம் என்பதும் ‘பொதுமகளிர்’ அல்லர் என்பதும் தெரியவருகிறது. ஏனெனில் அவர்கள் கோபிகையர்கள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது கவசம்போல் அமைகிறது. ஆண்டாள் பாட்டில் கோபிகையர்களுக்கு இருந்த பயம் கூட அவர்களிடம் இல்லை. இவர்கள் குளிக்கும்போது இவர்களைப் பார்க்கும் ‘நூறுநூறு கண்களில்’ இவர்கள் எவ்வளவு விரைவாக மறைந்து விடுவார்களோ அவ்வளவு விரைவாக அவர்களது நிர்வாண பிம்பமும் மாறாது விடுகிறது. அவர்களை யாரும் உண்மையில் பார்க்கவில்லை. பயமில்லை. வெட்கமில்லை.

பரிபாடல் கவிதையிலும், ஆண்டாள் கவிதையிலும், மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் புராணம் இடம்பெறுகிறது. முன் இரண்டு பேர் கவிதைகளில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். மனுஷ்ய புத்திரன் கவிதையின் முதல் பகுதியில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். இரண்டாம் பகுதியில் பெண் வீட்டில்தான் குளிக்கிறாள். வீட்டுக் குளியலிலும் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்ற செய்தியை மனுஷ்ய புத்திரன் கவிதை பதிவு செய்கிறது. மனுஷ்ய புத்திரனின் மற்றொரு கவிதையான ‘யாரோ கவனிக்கும் போதில்’ மீண்டும் மனப் பிறழ்வு கொண்ட மங்கையைப் பார்க்கிறோம்.

மனப் பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

பிரக்ஞையில் சொல்லப்பட்ட பெண் ‘மங்கை’ என்று சுட்டப்பட்டாள். இங்கே அவள் வெறுமனே ஒருத்திதான். இவள் எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள். இவள் நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது. நூறு நூறு கண்களால் இல்லாத பயம் இரண்டே கண்களில் ஏற்படும் என்பதை அவள் அறிந்துகொண்டுவிட்டாள்.

பழைய தமிழ்நாடு, இடைக்காலத் தமிழ் நாடு, நவீனகால தமிழ்நாடு ஆகிய மூன்றிலும் ஒரு பெண் உடம்பு தோற்றப்படுவதைப் பார்த்தோம்.



குறிப்புகள்

1. பழங்காலத்தில் நீர் நிலைக்குக் காவல் போடப்பட்டிருந்தது கரை காவலர்கள் அடிக்கும் பறையின் ஓசையைப் பரி பாடல் குறிப்பிடுகிறது. ஒரு நீர் நிலைக்குக் காவலனாக ஒரு யட்சன் இருந்ததை மகாபாரதம் சொல்கிறது. குளிக்கவும் குடிக்கவும் விலங்குகளைக் கழுவவும் தனித்தனி நீர்நிலைகள் இருந்தன. பெண்கள் எதற்காகக் குளிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படாவிட்டாலும், அவர்களது மனசாட்சிக்கு விடப்பட்டது.

2. நீர்நிலைகளில் யதார்த்தமாகக் கண்ணில்படும் பெண் உடல்களை வெறிப்பவர்களை ‘ஓட்டை மனதினர்’ என்கிறது பரிபாடல்.

கோட்டியு கொம்பர்
குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரமிலி.

3. ஆண்டாளின் கன்னிமார் நீராடல் பற்றிய பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை எழுதியுள்ள உரை கவிதைக்குப் பொருள் கொள்ளும் முறையொன்றைக் காட்டுகிறது.

4. ஆண்டாளின் கோபிகைகள் கன்னிப் பெண்கள். பரிபாடல், மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் பெண்கள் பற்றி விவரம் சொல்ல முடியவில்லை. மூன்று கவிதைகளும் தங்கள் தங்கள் வகையில் ஓவியம் வரைகின்றன. ‘பெண்கள் பால் வைத்த நேயம்’ கம்பரின் வாக்கு. ‘பிழைப்பரோ சிறியர் பெற்றால்’ என்பவை மற்ற சீர்கள்.

5. குளியல் பெண்களின் பரிபாஷையில் கர்ப்பம் தரிப்பதைக் குறிப்பிடுகிறது.


(கட்டுரை : கவிஞர் ஞானக்கூத்தன், உயிர்மை பதிப்பகம்)

(Oil Paintings : Sri Ravi Varma)

0 comments:

 
Follow @kadaitheru