Thursday, March 31, 2011

கருணாநிதி ஒரு மானமுள்ள கணவரா??


தமிழகத்தைக் கட்டிக்காக்கும் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் சொந்தக்காரர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ""அண்ணா அறிவாலயத்தில்'' கருணாநிதி தலைமையில் 5.3.2011-அன்று தி.மு.க.வின் உயர்மட்டக்குழு கூடி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி குறித்து மிகத் தெளிவான முடிவொன்றை எடுத்தார்கள்.


அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும். காங்கிரஸ் கேட்பதுபோல 63 இடங்கள் ஒதுக்குவது என்பது இயலாத ஒன்று. இதனைக் காங்கிரஸ் ஏற்காவிட்டால் 7.3.2011 அன்று தி.மு.க.வின் தன்மானப் படைவீரர்களான கட்சியின் மத்திய அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பார்கள். பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பார்கள். மத்திய கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது போன்ற திட்டவட்டமான வழிகாட்டுதலோடு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

தில்லி சென்றவர்கள் 7.3.2011 அன்று காலை 11 மணிக்குப் பிரதமரைச் சந்திப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் காத்திருந்து சந்தித்தார். நிதித்துறை இணையமைச்சர் பழநி மாணிக்கம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டுவிடாமல் இருக்கத் தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டார்.


தி.மு.க.வின் குடும்பத் தொலைக்காட்சி நிருபர்கள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. முடிவு பற்றிக் கேள்வி எழுப்பினர். ""அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' பாணியில் அவரும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு சுமுக முடிவு ஏற்படும் என்று பதிலளித்த பிறகுதான் முதல்வர் கருணாநிதிக்குப் போன உயிர் திரும்பி வந்தது. அன்றைய தினம் மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்கள். இதற்குள் பதவி விலகல் 7-ம் தேதியிலிருந்து 8-ம் தேதிக்கு ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பரவி விரவி நிற்கின்ற தமிழர்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரராகத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் ""மானமிகு வீரமணி'', ""தி.மு.க.வுக்கு காங்கிரஸடு உள்ள உறவை உதறித்தள்ளுவதை நாங்கள் பாராட்டுகிறோம்'' என்று ஆர்ப்பரித்தார்.


இலங்கைத் தமிழர்களின் காப்பாளர் ""தன்மானச் செம்மல்'' தொல். திருமாவளவன், ""காங்கிரஸ் என்ற பயனற்ற மூட்டையை நாம் ஏன் சுமக்க வேண்டும்'' என்று கொக்கரித்தார். ""காங்கிரஸக் கூட்டணியிலிருந்து விலக்கியதற்கு எனது பாராட்டுகள்'' என்றார் சுப. வீரபாண்டியன்.


""கூட்டணியில் காங்கிரஸ் இல்லாவிட்டால் குடியொன்றும் முழுகிவிடாது'' என்றும், ""தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைப் பாதிக்காது'' என்றும் பேட்டியே கொடுத்தார் சட்ட அமைச்சர் துரை. முருகன்.


இதற்கிடையே 7.3.2011 அன்று இரவு 8 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் "தென்மண்டலக் காப்பாளரும்' மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியும், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சோனியா காந்தியைச் சந்தித்து, ""நீங்கள் எங்கள் கூட்டணியில் (காங்கிரஸ்) இருந்தாக வேண்டும், எங்களை விட்டுப் போக வேண்டாம். நீங்கள் கேட்கும் 63 தொகுதிகளை நிச்சயம் தருகிறோம். இதுதொடர்பாக நீங்கள் கருணாநிதியோடு பேசத் தேவையில்லை மற்றவர்கள் பேசினாலே போதும்'' எனக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக் கொடியை இந்தியாவின் தலைநகரில் தலைகீழாக ஏற்றி வைத்தார்கள்.


கடந்த மூன்று ஆண்டுகளாக சோனியா காந்தியைச் சந்திப்பதற்குத் தவறாமல் தி.மு.க. குழுவில் இடம்பெற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை ஏன் தூது அனுப்பவில்லை? பிரச்னையே கனிமொழிதான் என்பதாலா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜனநாயகப் பாசறை கூடி முடிவெடுத்த தீர்மானத்தை அந்தப் பாசறையோடு கலந்து பேசாமல் முதலமைச்சர் கருணாநிதி தன்னிச்சையாக காங்கிரஸýக்கு 63 தொகுதிகளைத் தருவதென ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டது.


தி.மு.க.வின் வழி வழி ஜனநாயகம் கருணாநிதியால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதை மானமிகுக்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இதெல்லாம் குடும்பத்துக்காகத்தானே? கழகம் ஒரு குடும்பம் என்பதன் அர்த்தத்தை இப்போதாவது தி.மு.க.வினர் புரிந்துகொண்டால் சரி. ""மூன்று தொகுதிகள் அதிகம் கேட்பது அல்ல அவர்கள் பிரச்னை.


தேர்தல் முடியும்வரை தமிழகத்தின் முதல் குடும்பமான கருணாநிதியின் குடும்பத்தைச் சார்ந்த அவரது மகள் கனிமொழியையோ மனைவி தயாளு அம்மாவையோ புலனாய்வுத்துறை கைது செய்வதைத் தள்ளிப்போடுங்கள் என்பதுதான், சோனியா காந்தியிடம் மண்டியிட்டு வைக்கப்பட்ட வேண்டுகோள்'' என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகள் தரப்பட்டு விட்டன. காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. காங்கிரஸின் இன்னொரு கோரிக்கையான கூட்டணி ஆட்சியை, வெறும் 119 தொகுதிகளில் மட்டுமே போட்டி போடுவதன் மூலம் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறது தி.மு.க. இத்தனைக்குப் பிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீராவேசம் பேசுகிறார்களே, அதுதான் கருணாநிதியின் சாமர்த்தியம்.


கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் ""கைது செய்யப்பட்டால் குற்றவாளியா?'' என்று கேட்ட கருணாநிதி, இந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய விசாரணை ""தம் மகளிடமும், மனைவியிடமும்'' நடைபெறுவதற்கு என்ன சொல்லப்போகிறார்?


வீட்டுக்கு வந்த ஒருவர் கதவைத் தட்ட, அந்த வீட்டில் இருந்த குழந்தை கதவைத் திறந்தது. வந்தவர் ஏதோ சொல்ல அந்தக் குழந்தை வெட்கத்தில் தன்னுடைய கவுனை எடுத்து முகத்தை மூடிக்கொண்டது. பிறகுதான் தெரிந்தது அந்தக் குழந்தைக்கு ஜட்டி போடும் பழக்கம் இல்லை என்பது!


63 இடங்கள் தர முடியாது என்பதுதானே பிரச்னை. அதற்காகத்தானே ராஜிநாமா அறிவிப்பு செய்யப்பட்டது? பிறகு அதே 63 இடங்களைக் காங்கிரஸக்கு அளித்து சமரசம் செய்து கொள்வானேன்? ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள், காங்கிரஸ் கேட்ட தொகுதிகளைக் கொடுத்து சமரசம் செய்து கொண்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாளு அம்மாவையும், கனிமொழியையும் சி.பி.ஐ. விசாரித்ததற்கும் தொடர்பு கிடையாது என்று சொல்வதற்கும், பனைமரத்தடியில் அமர்ந்து பால் குடித்தேன் என்பதற்கும் வேறுபாடு இருக்க வழியில்லை.


மத்தியப் புலனாய்வுத் துறையினர் தயாளு அம்மாவையும், கனிமொழியையும் அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றல்லவா விசாரித்திருக்க வேண்டும்? ஆ. ராசாவை அப்படித்தானே விசாரித்தார்கள்? இல்லையென்றால், அவர்கள் வீட்டிலாவது விசாரித்திருக்க வேண்டும். இரண்டும் முதல்வரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் என்பதால் விசாரிக்க முடியவில்லையா, இல்லை அதைத் தவிர்க்க சி.பி.ஐ. நிர்பந்திக்கப்பட்டதா?

கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் விசாரித்தார்களா இல்லை அண்ணா அறிவாலய நூலகத்தில் விசாரித்தார்களா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்துக்குள் மத்தியப் புலனாய்வுத் துறையினர் வந்தனர். விசாரித்தனர் என்பது தெரியும்.


ஒருபுறம், தி.மு.க. தலைவர் வேட்பாளர் தேர்வு நடத்துகிறார். இன்னொருபுறம், காங்கிரஸ் தேர்வுக்குழு தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதே அண்ணா அறிவாலயத்தில், அதேநேரத்தில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மனைவியிடமும், மகளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது.


இதைவிட வெட்கக்கேடான ஒன்று நடக்குமா? வேறு ஒரு மானமுள்ள கணவரால் இதைச் சகித்துக்கொள்ள முடியுமா?


இதற்குத்தான் "இனமானம்' என்று பெயரோ என்னவோ? மானமாம், சுயமரியாதையாம், இன உணர்வாம்... ஆஷாடபூதிகள்...!


-திண்டிவனம் ராமமூர்த்தி (நன்றி : தினமணி)

Saturday, March 26, 2011

தங்கரின் "களவாடிய பொழுதுகள்" - சினிமா பார்வை


கிராமத்து படம் என்றாலே அதன் களம் மதுரை பக்கம் இருக்கும் கிராமமாகத்தான் இருக்கவேண்டும் என்று இயங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவில், வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, கிராமங்களை மண்வாசனையோடு சொன்னவர்/சொல்லிவருபவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

அவரது 'அழகி' ஒரு சர்வதேச தரம் வாய்ந்த, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலை படைப்பு. சொல்ல மறந்த கதை, ஒன்பது ருபாய் நோட்டு போன்ற படங்கள் வாழ்க்கையை பேசுபவை.

களவாடிய பொழுதுகள் - தங்கரின் அடுத்த படம்.

லண்டன் அய்ங்கரன் தயாரிப்பில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா, இன்பநிலா இவர்களுடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ்.

இதில் இன்பநிலா, கேரளா இறக்குமதி நடிகைகளுக்கு இடையே நம்ம தமிழ் நாட்டை சேர்ந்தவர். ஒன்பது ருபாய் நோட்டு மூலம் கவனம் பெற்றவர்.

தங்கர்பச்சான் முன்பு எழுதிய கதைதான் அதே பெய‌ரில் சினிமாவாகிறது. இதுவொரு கம்யூனிஸ்டின் கதை. பிரபுதேவா கம்யூனிஸ்டாக வருகிறார்.

மே தினம் அன்று பெ‌ரியார் கொடியேற்றும் நிகழ்ச்சி படத்தில் இடம் பெறுகிறது. பெ‌ரியாராக சத்யரா‌ஜ் நடிக்கிறார். இந்த‌க் காட்சியில் பாடல் ஒன்றையும் வைத்திருக்கிறார் தங்கர்பச்சான். பரத்வா‌ஜ் இசையில் உருவாகியிருக்கும் அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்.

'யதார்த்த சினிமாவின் இன்னொரு ப‌ரிமாணமாக களவாடிய பொழுதுகள் இருக்கும்' என்று கூறிஇருந்தார் தங்கர்.

பிரபுதேவா, நயன்தாராவே தனது மோஸ்ட் 'wanted' என்று போனதுதான் 'களவாடிய பொழுதுகள்' தற்காலிகமாக நிறுத்தபட்டு இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறுகிறார்கள். பிரகாஷ்ராஜ் கொடுத்த தேதிகள் வேறு முடிந்துவிட்டதாம்.

இப்பொழுது அங்காடிதெரு படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில், லண்டன் நிறுவனம் மீண்டும், இப்படத்தை வெளியிடும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

சினிமாவில் ஒரு நல்ல படைப்பாளியாக இருக்க ஒரு கலைஞன் அனுபவிக்கும் வேதனைகளை அவர் வெளிப்படையாக தனது சமிபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் திரு.தங்கர் பச்சான்.

"நம் சினிமா குப்பையாக இருக்கிறது. பெரிய பெரிய மாற்றங்களையெல்லாம் செய்த வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஆனால் நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது. ஒரே ஒரு சினிமாவில் ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருந்தால், நம் மக்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள். நான் வைத்திருக்கிறேன் ஒரு கதை. யார் செய்ய முன் வந்தார்கள்'' என்று ஒரு பொதுமேடையில் பேசிய தங்கர், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி : யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே?

தங்கர் : சிற்பம், இசை, சினிமா என எல்லாமே வாழ்வின் பாதிப்புதான். ஆனால் நம் சினிமாக்களில் எந்த மக்களின் வலி, வாழ்வு இருக்கிறது.

ஒரே கதைதான். அது என்னவாக இருந்தாலும் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் நம் சினிமாக்களின் பாடுபொருள். விதை நெல்லை விற்று வயிறு நிரப்பும் விவசாயி. கஞ்சி தொட்டி திறக்கப்படாதா? என காத்திருக்கும் நெசவாளி என யாருடைய பதிவு இங்கு இருக்கிறது? குப்பை சினிமாக்களுக்கே இங்கு முதலிடம். நல்ல சினிமாக்களுக்கு தியேட்டர் இல்லை. விவசாயி போல, நெசவாளி போல நல்ல படைப்பாளியும் திணறுகிறான்.

52 ஆண்டுகளாக ஈழத்தில் ஒரு போராட்டம் நடக்கிறது. அது சார்ந்த ஒரு பதிவு நம்மிடம் இருக்கிறதா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் யூத இனத்தின் அழிவை "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற பெயரில் படமாக எடுத்தார். அப்போதுதான் மீதம் இருந்த யூதர்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பின் பெரிய மாற்றமே அங்கு வந்தது. ஆனால் இங்கு போராட்ட குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் நம் உறவுகள் பஞ்சம் பிழைப்பது பற்றி யாருக்கு கவலை இருக்கிறது. ஆனால் காசு வைத்திருக்கும் உலகத் தமிழனை தேடி வாரத்துக்கு ஒரு சினிமா வெளியாகிறது. ஈழத்தமிழனின் வாழ்க்கையை ஒரு சினிமாவில் பதிவு செய்திருந்தால் நம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனால் நாம் என்ன செய்தோம் வெறும் பொழுதுபோக்கு குப்பைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறந்த நடிகர்களை வைத்து நாம் என்ன செய்வது? ""எம் இனத்தின் அழிப்பை பற்றி ஒரு சினிமா இருக்கா'' என கேட்க வரும் தலைமுறைக்கு என்ன பதில் இருக்கிறது?

கேள்வி : மனதில் உள்ளதை பளிச்சென போட்டு உடைப்பதால் பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகின்றீர்களே?

தங்கர் : நல்லவர், வல்லவர் என ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிக் கொள்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படி பேசினாலும், உண்மை என்னவென்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். பந்தி வைக்கிற இடத்தில் நான் எதையும் பதுக்கி வைக்க கூடாது என நினைக்கிறேன்.

கேள்வி : தமிழ் சினிமாவின் சமீபத்திய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தங்கர் : பயமாக இருக்கிறது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கற்பனைகளை மட்டுமே மனசு முழுவதும் நிரப்பி, கோடம்பாக்கத்தில் அலைகிறவர்களை நினைத்து பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கிற மாதிரியான நிலை இனி தமிழ் சினிமாவில் இல்லை. தமிழ் சினிமாவை நிறைய பேர் ஆக்கிரமித்து விட்டார்கள். கற்பனைகளுக்கு இனி இடம் இல்லை. காசு இருந்தால் பார்க்கலாம் என சொல்லும் நிலை வந்திருக்கிறது. அத்தனை படைப்பாளிகளும் அவசரமாக கூடி பேச வேண்டிய தருணம் இது.

நம் தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தொடர்ந்து தந்துகொண்டு இருக்கும், இயக்குனர் திரு.தங்கர்பச்சானின் ஆதங்கமும், கோபமும் மிகவும் நியாயமானதே.

யதார்த்த சினிமா மீது நம்பிக்கை கொண்ட, நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதை தனது கொள்கையாக வைத்து இருக்கும் தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள் நிலைத்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு மிக அவசியம். 'களவாடிய பொழுதுகள்' விரைவில் முடிந்து வெளிவரும் என்று நம்புவோம்.

-இன்பா

Tuesday, March 22, 2011

"விம்பம்" - லண்டன் குறும்பட விழா - ஒரு பார்வை.

அம்ஷன்குமார் - குறும்பட இயக்குனர்களின் மிகவும் முக்கியமானவர். சர்வதேச அளவில் தனது குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றவர். இன்றைய குறும்படங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களில் முதன்மையானவர் இவர்.

விம்பம் - ஆறாவது குறும்பட விழா, லண்டனில் நடைபெற்ற விழா.

சமிபத்தில் நடந்த இந்த குறும்பட விழா பற்றி அம்ஷன்குமார் உயிர்மை இதழில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கே...

பலவற்றிலும் தனித்துவம் காட்டும் இலங்கைத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களின் படங்களைத் தங்கள் படங்கள் என்று பாவிக்கத் தொடங்கியதால் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. இதனால் அங்கு தயாரிக்கப்பட்ட சொற்பமான எண்ணிக்கைப் படங்கள் தரத்திலும் மிகவும் பின்தங்கின. இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு திரைப்படக்கேந்திரமும் அங்கு உருவாகவில்லை. ஆனால் சிங்களர்கள் அவர்கள் விரும்பிப் பார்த்த இந்தி திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து தங்களை விரைவிலேயே விடுவித்துக்கொண்டு ஒரு புது பாணியை உருவாக்கத்தொடங்கினார்கள். இதனால் இன்று சர்வதேச திரைப்பட அரங்குகளில் சிங்களப் படங்கள் பேசப்படுகின்றன.

தக்க வழிகாட்டல் இன்றியும் தயாரிப்பு நிறுவனங்கள் இன்றியும் நிலைகுத்திப் போயிருந்த இலங்கைத் தமிழர் திரைப்பட உலகம் இன்று அதன் இளம் தலைமுறையினரால் குறும்படங்கள் வாயிலாக ஒரு புதிய திசை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் தயாரிக்கும் குறும்படங்கள் தமிழகத் தமிழர்கள் தயாரிக்கும் படங்களுக்கு சற்றும் குறைந்தன அல்ல.

இலங்கைத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் ஆகிய இருவரும் குறும்படங்கள் எடுத்தாலும் குறும்படங்கள் பற்றிய செயற்பாடுகளில் முந்தையவர்கள் பிந்தையவர்களை மிஞ்சி விட்டார்கள். தமிழின் முதல் குறும்பட டாகுமெண்டரி போட்டியை சர்வதேச அளவில் லண்டன் சினி சங்கம் யமுனா ராஜேந்திரனின் முயற்சியால் 2001ம் ஆண்டு நடத்திற்று.

அதைத் தொடர்ந்து அவர்கள் தாங்கள் குடியேறிய பல நாடுகளிலும் இவ்விழாக்களை உற்சாகத்துடன் நடத்தி வருகிறார்கள். கலை இலக்கிய அமைப்பான ‘விம்பம்’ லண்டனில் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக குறும்பட விழாக்களை சிறந்த படங்களுக்கான விருதுகள் அளித்து நடத்தி வருகிறது. நவம்பர் 2010ல் லண்டனில் விம்பம் நடத்திய ஆறாம் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்விழாவில் திரையிடப்பட்ட விருது பெற்ற படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் நான் இடம் பெற்றிருந்தேன்.

விழா க்ரீன்விச் யுனிவர்சிடி ஆடிடோரியத்தில் நடைபெற்றது. தமிழர்களின் விழா ஒன்று இவ்வரங்கில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். விழா அரங்கு நிறைந்த காட்சியாக இருந்தது. தமிழகத்தில் நடைபெறும் மாற்றுப்பட நிகழ்ச்சிகளுக்கு அவற்றில் திரையிடப்படும் படங்களில் இடம் பெற்ற கலைஞர்கள், அவர்களது நண்பர்கள் ஆகியோரை மட்டுமே காணமுடியும். பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் அல்லது அவர்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் என்றால் திருவிழாபோல் சுற்றத்தாருடன் மக்கள் கூடிவிடுவார்கள்.

ஆனால் கலாச்சார உணர்வு மிக்க இலங்கைத் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குறும்பட டாகுமெண்டரி படத் திரையிடல்களுக்கு வருவதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்விற்கு பாரீஸிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். எந்தெந்தப் படத்திற்கு என்னென்ன விருது கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள அவர்கள் முன்னதாகவே ஆர்வம் கொண்டிருந்தனர். ‘எங்கடை ஆட்கள் எப்படி படமெடுக்கிறார்கள்? அவர்கள் முன்னேறிவிட்டார்களா?’ என்று என்னிடம் பலரும் அக்கறை மேலிட விசாரித்தனர். எல்லா தரப்பினரின் ஆதரவினையும் பெற்ற இக்குறும்படத் திரைப்பட விழா பற்றிய அறிவுப்புகள் ஐரோப்பியத் தமிழர்களால் அதிக அளவில் பார்க்கப்படும் லண்டன் தீபம் டிவி சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.

சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டிகளிலிருந்து இந்த ஆண்டு போட்டி சிற் சிலவற்றில் வேறுபட்டது. இவ்வாண்டிலிருந்து இலங்கை வாழ் தமிழர்கள், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் மட்டுமே கலந்துகொள்ளும் போட்டியாக விம்பத்தின் சர்வதேச குறும்பட விழாக்கள் அமைகின்றன.

‘தமிழகத் தமிழர்களுக்கான அமைப்புகள் ஏற்கனவே நிறைய உள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கான அமைப்புகள் வெகு சிலவே. தவிரவும் முழு முனைப்போடு இலங்கைத் தமிழர்களின் குறும்பட செயல்பாடுகளுக்கு ஊக்கம் தரவேண்டும் என்பது எங்களது இலட்சியம்’ என்று விம்பத்தின் புதிய நிலைப்பாடு குறித்து சிறந்த ஓவியக்கலைஞரும் விம்பத்தின் முக்கிய பொறுப்பாளர்களுள் ஒருவருமான கே.கிருஷ்ணராஜா கூறியபொழுது அதிலுள்ள நியாயத்தை உணர முடிகிறது. குறும்படங்களைத் தவிர டாகுமெண்டரி படங்களையும் விம்பம் போட்டிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியபொழுது அவர் விம்பம் எல்லாவித படங்களையும் வரவேற்கிற அமைப்பு என்று தெளிவுபடுத்தினார்.

விருது பெற்ற படங்கள் பலதரத்தவையாக இருந்தன. ‘அம்மாவுக்கு ஒரு கடிதம்’, ‘12 pm to 12 am’ ஆகிய படங்கள் விருது பெறாதவை என்ற போதிலும் அனுப்பப்பட்ட பல படங்களைவிட அவை சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்ததால் அவையும் விழாவில் திரையிடப்பட்டன.

‘அம்மாவுக்கு ஒரு கடிதம்’ (லண்டன். இயக்கம்: எஸ்.வி.ஜெயராஜ். 15 நிமிடங்கள்)

லண்டன் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் தலைமுதல் கால்வரை குளிருடைகள் அணிந்துகொண்டு படுத்துக் கிடக்கும் ஒரு 25 வயது இளைஞன் போவோர் வருவோரிடம் ஒரு பவுண்டு தர முடியுமா என்று யாசித்துக் கொண்டிருக்கிறான். சாப்பிடுவதற்காகப் பணம் கேட்பதாகச் சொல்லும் அவன் அதை போதை மருந்து வாங்குவதற்காகச் செலவிடுகிறான். ஊரிலிருந்து இங்கு வந்தது டாக்டராக வேண்டும் என்கிற கனவுடன்தான். இரண்டு வருடங்கள் டாக்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தபொழுது இந்தக் கொடிய போதைப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அது அவனுக்கு வரக் காரணம், அவனால் தனிமையைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்பதுதான். தன் தாய்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு காட்சி தவிர படப்பிடிப்பு முழுவதும் நடைபாதைகளிலேயே படமாக்கப்பட்டிருந்தது.

‘நேசம்’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: சி.கோணேஸ்வரன். 20 நிமிடங்கள்)

படம் சிங்கப்பூரில் நடக்கிறது. குடும்பத் தலைவனுக்கு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வனிதா மீது ஒரு கண். அதாவது சந்தேகக் கண். வீட்டில் தான் வைக்கும் சிகரெட்டுகளையும் சில்லறைகளையும் அவள்தான் களவாடுகிறாள் என்று தன் மனைவியிடம் கூறுகிறான். அவளுக்கு அம்மாதிரியான சந்தேகங்கள் எதுவும் கிடையாது. அவனுடைய நச்சரிப்பு தாங்காமல் பணிப்பெண்ணை அவன் முன்னிலையில் கேட்கிறாள். வனிதா குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அவள் தரப்பில் அதற்கு அவள் அளிக்கும் விளக்கம்தான் வேறாகிறது. அவளுடைய தந்தை பீடிப் பழக்கத்தினால் மாரடைப்பு வந்து இறந்துபோனதால் தனது கல்வி நின்றுபோய் வேலைக்காரியாக மாறிவிட்ட தனது நிலைமை, அவர்களது குழந்தை அனுவிற்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவள் சிகரெட் பாக்கெட்டுகளைத் தூர எறிந்து விட்டதாகக் கூறுகிறாள். சில்லறைகளை உண்டியலில் போட்டு விட்டதாகவும் கூறுகிறாள். ஏன் அவள் சில்லறைகளை எடுக்க வேண்டும்? படம் பார்ப்பவர்களுக்கு க்ளைமாக்ஸ் நெருங்கும்வரை பலவிதமான எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற புதிர் உத்தியின் விளைவாக அதைக் கொள்ளலாம். இதுவும் பிரச்சாரப் படம்தான். குடும்பத் தலைவனாக நடித்த சிவகுமாரின் தேர்ந்த அசைவுகள் அவரை ஒரு நல்ல நடிகராகக் காட்டின. வனிதாவாக நடித்த லேசா சோனத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

‘12 pm to 12 am’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: எரிக் தாம்ஸன். 16 நிமிடங்கள்)

எளிதில் கலவரம் அடையக்கூடிய சுபாவம் கொண்டவன் பிரேம். மத்தியானம் 12 மணிக்கு அவன் கையில் ஒரு துண்டுக் கடிதம் கிடைக்கிறது. அதில் அன்று இரவு 12 மணிக்கு அவனுக்கு சாவு என்று எழுதப்பட்டிருக்கிறது. அறைக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும் அவனுக்கு மொபைல் போனில் மிரட்டல் தொடர்கிறது. 12 நாட்களுக்குப் பிறகு சித்தப்பிரமை கொண்டு தெருவில் அலையும் பிரேமை அவனது அலுவலக நண்பன் பார்க்கிறான். பிரேமிற்குக் கடிதம் எழுதியும் போனில் மிரட்டியும் வந்த கும்பலில் அவனும் ஒருவன். இந்த அளவிற்கு நிலைமை விபரீதமாகிவிட்டதே என்று அவனுக்குக் கவலை. என்ன செய்தாலும் பிரேமை சுயநினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. அவனுக்கும் ஒரு மொபைல் கால் வருகிறது. அதே மிரட்டல் தொடர்கிறது. பிரேமாக நடித்த கமல்ராஜ் தன் கதாபாத்திரத்தை சரியாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

‘கறுப்பு வெள்ளை’ (பிரான்ஸ். இயக்கம்: ஸ்ரீ தயாளன். 3 1/2 நிமிடங்கள்)

பாரிஸில் ஒரு தெருவிற்குக் கீழே சுரங்கப் பாதையில் இலங்கைத் தமிழன் தொப்பி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். தொப்பியின் விலை ஒன்று 5 யூரோக்கள் என்று அவன் கூறுவதைக் கேட்கும் ஒரு பார்வையற்ற இளைஞன் அவனிடம் வருகிறான். அவனுக்கு ஒரு தொப்பி தரப்படுகிறது. அதை அணிந்துகொண்டபின் அவனுக்கு ஒரு சந்தேகம். தொப்பியின் நிறம்? சிவப்பு. ஆனால் தனக்குக் கறுப்புத் தொப்பிதான் வேண்டுமென்கிறான். தொப்பி வியாபாரியிடம் கறுப்புத் தொப்பி இல்லை. இல்லை இல்லை, இருக்கிறது. அந்த ஒன்றை அவன் அணிந்து கொண்டிருக்கிறான். அதைக் கழற்றிக் கொடுத்து விடுகிறான். பார்வையற்றவனால் அதைக் கண்டுகொள்ளவா முடியும்? ஆனால் அவன் தொப்பியை அணியுமுன் அதை முகர்ந்து விடுகிறான். இப்பொழுது அவன் இரண்டு ஐந்து யூரோ நோட்டுகளைத் தருகிறான். ஒன்று தொப்பிக்கு. இன்னொன்று? ‘நீங்கள் ஆசையாக அணிந்திருந்த தொப்பியை எனக்குத் தந்தீர்களே அண்ணா. அதற்காக.’ தொப்பி வியாபாரி தலை குனிகிறான். கறுப்புத் தொப்பியை அணிந்து படிகள் மீதேறி வெளியேறும் அவனது உலகம் ஒளியினால் பிரகாசிக்கிறது. இது என்னை மிகவும் கவர்ந்த படம். படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. காமிராவைக் கையில் வைத்துக்கொண்டு டெசுபன் கதாபாத்திரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவப்புத் தொப்பி தவிர மற்ற அனைத்தும் கறுப்பு வெள்ளையாகப் படமாக்கப்பட்டிருந்தன. ஜனாவின் மெலிதான பியானோ பின்னணி இசை சறுக்கல், மேன்மை ஆகிய படத்தின் ஆதார உணர்வுகளை வருடுகின்றன. சிறந்த ஸ்கிரிப்டிற்கான விருதினைப் பெற்ற படம் இது.

‘இனியவள்’ (பிரான்ஸ். இயக்கம்: ஐ.ரமணன். 4 1/2 நிமிடங்கள்)

முதல் இரவு. மணப்பெண் பட்டுப்புடவை, ஜாக்கெட் அணிந்து உடல் முழுவதும் நகைகளைப் பூட்டிக்கொண்டு கட்டில் மீது சற்று பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறாள். அருகே சிறு மேஜையில் பால் சொம்பு. கூடையில் பழங்கள்.எத்தனையோ படங்களில் பார்த்து அலுத்துப்போன காட்சி. சற்று பொறுங்கள், ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. மேஜை டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்துப் பிரிக்கிறாள். அதிலிருந்து எதையோ எடுத்துப் பார்க்கிறாள். அரவம் கேட்கவும் அதைப் பழையபடி அங்கேயே வைத்து விடுகிறாள். ஆசையோடு அவள் கணவன் உள்ளே நுழைந்து அவள் கரம் பற்றுகிறான். அவள் அவன் கையை உதறிவிடுகிறாள். அவன் காரணம் கேட்கிறான். அவள், ‘உங்களைப் பிடிக்காது’ என்கிறாள். அவன், ‘பிடிக்கலேண்டா, நான் உங்கடை புருஷன்’ என்கிறான். அவள் மேஜையிலிருந்து அந்த கவரைத் தருகிறாள். அதிலுள்ள புகைப்படத்தைப் பார்த்து ‘யார்’ என்று கேட்கிறான். ‘அது என்ட லவர்’ என்கிறாள் அவள். பின்னர் அவள் எல்லா கதாநாயகிகளையும்போல இதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்றும் அப்பா, அம்மா வற்புறுத்தலுக்காகத்தான் இந்தக்கல்யாணத்திற்கு சம்மதித்தேன் என்றும் கூறி விசும்புகிறாள். அவன் விரக்தியுடன் வெளியேறுகிறான். அந்தப் புகைப்படத்தை நாம் இப்போது பார்க்கிறோம். அவளுடைய லவர் ஒரு யுவதி. ஓரினக் காதல் பற்றிய படமான ‘இனி அவள்’ தலைப்பு ‘இனியவள்’ என்று காட்டப்பட்டதின் அர்த்தம் நமக்குப் புரிகிறது. ஒரு இனியவளுக்காகத் திருமணத்தை துறந்தவள். இலங்கைக்கு வெளியே எடுக்கப்பட்ட சிறந்த படம் என்கிற விருது இதற்குக் கிடைத்தது.

‘3 இரவு 4 பகல்’ (பிரான்ஸ். இயக்கம்: ஐ.வி.ஜனா. 22 நிமிடங்கள்)

படத்தின் தலைப்பு சுற்றுலா பயணத்தை நடத்தும் பயண நிறுவனங்களின் விளம்பரத்தை நினைவுபடுத்துவதாயுள்ளது. ஆனால் இப்படம் இலங்கையிலிருந்து தங்கள் சொந்தங்களைக் காணச் செல்பவர்களின் பயணங்கள் எத்தனை கொடூரமானவை என்பதைக் காட்டுகின்றது. ஒரு ராப் பாடலுடன் படம் துவங்குகிறது. வாழ்வோ சாவோ நம் கையில் இல்லை என்ற அறிவுறுத்தலை மனதில்கொண்டு கொழும்பு விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ செல்கிறார்கள் ஒரு குழுவினர். மாஸ்கோ சென்றவுடன் அவர்களது பயணம் நகரைத் தாண்டிய எல்லையோரத்தை வந்தடைகிறது. இடைத்தரகர்கள் அவர்களிடமிருந்து பலவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஒரு வேனில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள். போலந்தை வேன் அடைகிறது. அங்கு சிலர் இறக்கிவிடப்படுகிறார்கள். ஒரு இளைஞனை கார் டிக்கியில் வைத்து ஜெர்மனி வழியாக பாரிஸ் கொண்டு செல்கிறார்கள். அந்த இளைஞனை அழைத்துப்போக அவனது சகோதரன் காரிடம் வருகிறான். ஆனால் அவனை அழைத்து வந்தவர்கள் (அவர்களும் தமிழர்கள்தான்) பேசிய தொகையைக் காட்டிலும் அதிகமாக இரண்டாயிரம் பிராங்குகளைத் தருமாறு கேட்கிறார்கள். ஒருவழியாக அதைக் கொடுத்துவிட்டு வெளியே கூட்டி வரும்பொழுது அடையாள அட்டை இல்லை என்பதற்காக, அண்ணன் கதறக் கதற தம்பியை போலீஸ் பிடித்துச் செல்கிறது. புலம்பெயர்ந்த பல இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் பயணத்தின் சுவடுகள் இவை என்பதால் அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் படம் வெகுவாக நெகிழ வைத்தது. சிறந்த படம் மட்டுமின்றி, சிறந்த இயக்குநர், நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று பல விருதுகளைப் பெற்ற படம் இது.

‘கலாச்சாரம்’ (பிரான்ஸ். இயக்கம்: பி.கீதரன். 11 நிமிடங்கள்)

இக்குறும்படத்தின் நிகழ்வுகள் அனைத்தும் 11.07.2010 அன்று நடக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் எந்த நேரத்தில் நடக்கிறது என்பது காட்டப்படுகிறது. 13.25. குறுந்தாடி இளைஞன் அடுக்குமாடிக் கட்டிடத் தினுள் நுழைந்து ஒரு ப்ளாட்டின் கதவைத் தட்டுகிறான். டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் இளம்பெண் கதவைத் திறக்கிறாள். அவளுடைய புருஷன் எங்கே என்று கேட்கிறான். அதற்கு அவள் ‘வெளியே’ என்கிறாள். ‘உன்னுடைய கள்ளப் புருஷனைக் கேட்கவில்லை. சொந்தப் புருஷனை’ என்கிறான். அதற்கு அவள் ‘தெரியவில்லை’ என்கிறாள். உடனே அவளைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறான். 15.12, 19.27, 23.54 என்று வெவ்வேறு நேரங்களில் இதே போன்று தனியாக உள்ள திருமணத்திற்கு அப்பால் தொடர்புள்ள பெண்களைக் கொலை செய்கிறான். பின்னர் கொலைகாரன் அமைதியாக எலெக்ட்ரிக் ஷேவரில் சவரம் செய்கிறான். மேலே விவரிக்கப்பட்ட நான்கு கொலைகளும் ப்ளாஷ்பேக்கில் பின்னோக்கிச் செல்கின்றன.

11.57. அதாவது படத்தில் நடந்த முதல் கொலைக்கும் முந்தைய நேரம். ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் ஒருத்தியைப் படுக்கையில் அனுபவித்தபின் வெளியே செல்வதை அவன் பார்க்கிறான். வீட்டிற்குள் சென்று அவளைக் கொலை செய்கிறான். அவள் வேறு யாருமல்ல. அவனது மனைவிதான் என்பதை அவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்திலிருந்து தெரிகிறது. கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் கள்ளப் புருஷர்களுடன் சல்லாபிப்பதைப் படம் கண்டிக்கிறதா? கலாச்சாரத்தைக் காப்பவனாகத் தன்னைக் கருதிக்கொண்டு ஆணாதிக்க வெறியுடன் பெண்களைக் கொலை செய்வதைப் படம் சாடுகிறதா? தலைப்பு குழப்புகிறதென்றாலும் படத்தின் கதை சொல்லும் உத்தி வித்தியாசமானது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதினை இப்படம் பெற்றது.

‘அம்மணம்’ ( பிரான்ஸ். இயக்கம்: ஐ.வி.ஜனா. 11 நிமிடங்கள்)

பாரிஸில் ஒரு இளம் ஓவியன். அவனுக்கு கல்கி பகவானின் உருவத்தைக் கீற (வரைய) அழைப்பு வருகிறது. பண நெருக்கடியினால் ஒப்புக் கொள்கிறான். இச்சம்பவங்களுக்கு இணையாக அவன் பாரிஸ் நகரத் தெருக்களில் ஒரு பெரிய சூட்கேஸுடன் நடந்து செல்வதை அவனது இடுப்புக்குக் கீழே காட்டப்படுகிறது. அந்த சூட்கேஸில் என்ன இருக்கக்கூடும் என்கிற எண்ணத்தைப் பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஓவியம் முடிகிற தருவாயில் தொலைக்காட்சியில் நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி ஆகியோரின் லீலா விநோதங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. ஓவியன் தன்னால் படத்தை வரைய முடியாது என்கிறான். அவனுக்கு முன்பணம் தந்திருப்பதைக் காட்டி மிரட்டுகிறான் கல்கி பக்தன். சுருட்டிய படத்தையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் அந்த சூட்கேஸில் அடைத்து வெளியே வருகிறான். படத்தை எறிந்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியை விற்கிறான். முன்பணத்தைக் கொடுப்பதற்காக அவன் மடித்த சூட்கேஸுடன் செல்கிறான். காசுக்கு விலை போகாத கலைஞனைப் பற்றிய குறும்படம். பாரிஸ் நகரத் தெரு ஒன்றில் ஓவியர்கள் வரைந்து கொண்டிருக்கும்பொழுது அவர்களை அவன் சூட்கேஸுடன் கடந்து செல்வது காண்பிக்கப்படுகிறது. மோசடியான பேர்வழியை வரைவதற்கு அவனுக்குக் கிடைத்த வாய்ப்பிற்கும் தெருவில் வரும் மக்களை வரைவதற்கும் உள்ள வேறுபாட்டினை அக்காட்சி வலிமையுடன் உணர்த்துகிறது. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது.

‘100% Discount’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: நிலனி பாஸ்கரன். 8 நிமிடம்)

ஒரு டிபார்மென்டல் ஸ்டோரில் கல்லாவில் நின்றுகொண்டு சதா நேரமும் மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும் பணிப்பெண்.

வெளியே காரில் ஒரு ஆணும் பெண்ணும் வந்திறங்குகிறார்கள். அவர்களிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அந்தப் பெண் கடைக்குள் நுழைந்து அங்குள்ள அலமாரிகளிலுள்ள பொருட்களை ஏதோ வகைக்கு ஒன்று என்பதைப்போல அள்ளிப் போடுகிறாள். பணம் கொடுக்க கல்லாவிற்கு வருகிறாள். பணிப்பெண்ணின் கவனத்தைத் திருப்ப, அவளுக்கு வெளியே காரில் வந்த ஆணை போன் செய்யுமாறு அவள் ஏற்பாடு செய்கிறாள். பணிப்பெண் மொபைலில் பேசிக்கொண்டே எல்லா பொருட்களையும் பையில் போட்டு அவளிடமே கொடுத்துவிடுகிறாள்.

அந்தப் பெண் காரியம் பலித்துவிட்டதால் மூட்டையுடன் வெளியேறி அவனுடன் சேர்ந்து கொள்கிறாள். இருவரும் காரில் ஏறிச் சென்று விடுகிறார்கள். அப்பொழுதுதான் பணிப்பெண்ணுக்குத் தான் பணம் பெற்றுக் கொள்ளாமலேயே பொருட்களைக் கொடுத்தது தெரிய வருகிறது. அவள் எல்லா பொருட்களையும் ‘நூறு சதவிகித தள்ளுபடி’ செய்திருக்கிறாள். நகைச்சுவையான படம். மொபைல் போன் மீதான மெல்லிய விமர்சனமும் இதில் இருப்பதாகக் கருதலாம்.

போட்டிக்கு வந்த படங்களிலிருந்து இலங்கைத் தமிழ்க் கலைஞர்களின் இன்றைய மனோபாவமும் ஒருவாறாகப் புலப்படுகிறது. எதிர்காலப் பிரச்சினைகள், மனித உறவு சம்பந்தப்பட்ட என்றைக்குமான சிக்கல்கள் ஆகியன மீது அவர்கள் மையங்கொள்ள ஆரம்பித்துவிட்டதை இக்குறும்படங்கள் மூலம் அறியலாம். தமிழ் தேசியம் பற்றிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. படங்களைப் பற்றிப் பார்வையாளர்கள் நிர்த்தாட்சண்யத்துடன் விமர்சனங்களை முன்வைத்தது அவர்கள் அடையவிருக்கும் வளர்ச்சியை எண்ணிப் பார்க்க வைத்தது. ‘நேசம்’, ‘100% Discount’ ஆகிய படங்கள்மீது அவர்களுக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் குறும்படங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்கிற தளர்வடையா நோக்கில் உற்சாகப்படுத்தப்பட வேண்டிய கோணங்களில் அவற்றில் என்னவெல்லாம் தென்படுகின்றன என்பதையும் அவர்கள் பார்த்தார்கள்.

இக்குறும்படங்களில் குறும்படத்திற்கான கருக்களைத் தேர்ந்தெடுத்தல், பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, படமொழியை உருவாக்கும் இயக்கம் என்று பலவற்றிலும் நல்ல வளர்ச்சியைக் காணமுடிகிறது. இலங்கைத் தமிழர்களிடம் பிரத்யேகமான திரைப்படமொழி உருவாகி வருவதை இக்குறும்படங்களை முன்வைத்து உறுதியாகக் கூறமுடியும்.


(நன்றி : இயக்குனர் திரு.அம்ஷன்குமார், உயிர்ம்மை)

Monday, March 21, 2011

வைகோவின் மனப் புண்ணுக்கு மருந்து - கி.வீரமணி


அதிமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காததால், வைகோ தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இது குறித்து,திராவிட கழக தலைவர் கி.வீரமணி, வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்? தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் “ஆரிய மாயை” பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது! கடந்த காலத்தில் அந்த அம்மையாயோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள்மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - “அவாளின்” இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவை அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப, இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா? தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட “பொடா” கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் “பளிச்சிடும்” நிலை உண்டு. அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் “நீரடித்து நீர் விலகாது” என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி “விசுவரூபம்” எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தேர்தலில் மீண்டும் (திமுக) ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம். வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் - தங்களை அம்மையார் “பொடா”வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள்.

- என்று கி.வீரமணி வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன், அதிமுக ஆட்சியில் : "சமுக நீதி காத்த வீராங்கனை என்று புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு பட்டம் வழங்குகிறேன்".என்று அறிவித்தவர்தான் இந்த வீரமணி.

இதே வீரமணிதான், அன்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் "ராஜகுரு" என்று தன்னையே அழைத்து கொண்டவர்.

தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்ப்பட்டு,மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதாக அறிவித்தபோது :

"தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்".என்றார் வீரமணி.

இவர் குறிப்பிடும், தன்மானம், சுயமரியாதை எல்லாம் முதலில் இவருக்கே இருக்கிறதா?
அப்படி இருந்து இருந்தால்,

மீண்டும் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தந்ததாக அறிவித்தபோது, வீரமணி அவர்கள் திமுகவை "ஒரு மானங்கெட்ட கழகம்" என்றுதானே அறிவித்து இருக்க வேண்டும்.

Friday, March 18, 2011

அழகர்சாமியின் குதிரை - இசையும், கதையும்


கவுதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் "அழகர்சாமின் குதிரை " படத்தின் இசை வெளியிட்டு விழா சமிபத்தில் நடந்தது. இதில், இளையராஜா பேசிய உரை திரையுலகில் பெரும் கவனம் பெற்று உள்ளது.
அவர் பேசியதாவது,

"இந்த படத்தில் இசையமைக்கும் போது என் முதல் படம் போல் வேலை பார்த்தேன். இந்த இயக்குநர் சுசீந்திரன் எனக்கு தெரியாது, அறிமுகமும் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு படம் வந்தபோது போஸ்டரை பார்த்துவிட்டு என் உதவியாளரிடம் சொன்னேன், இந்தபடம் நல்ல வந்திருக்கும் போல, வித்யாசமான போஸ்டராக இருக்குது என்றேன். படமும் வந்து நன்றாக போனது.

நான் மகான் அல்ல வந்தபோது திடீரென்று ஒருநாள் சுசீந்திரன் என்னை சந்தித்தார். இந்தபடத்தி‌ன் கதையை பற்றி சொன்னார். வார இதழில் வெளிவந்த பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரையை சினிமாவாக்கும் முயற்சியில் இருந்தார். கதை பிடித்திருந்தது, இதுஒரு புதுமுயற்சி என்றேன். பாடல் கம்போசிங்கை இப்போதே தொடங்கலாமா? அல்லது படத்துக்கு பிறகு ‌வைத்துக் கொள்ளலாமா? என்று உங்கள் விருப்பம் என்றார் டைரக்டர். பின்னர் மொத்த படத்தையும் முடித்து வந்து போட்டு காட்டினார் டைரக்டர். பிறகு என்னுடைய வேலையை தொடங்கினேன். 3பாடல் கம்போசிங்கும் செய்தேன்.

உலகமே தமிழ்நாட்டு படைப்பாளிகளை தான் திரும்பி பார்க்கின்றனர். நல்ல புதுபுது கதை களங்களுடன், படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். டைரக்டர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதையும், பகிர்ந்து கொள்வதையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு, அத்தனைபேரும் அழகர்சாமியின் குதிரை படத்தில் நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சுசீந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல உணர்வையும், உறவையும் வெளிப்படுத்துகிறது. 10நிமிடம் அனைவரும் கவலையை எல்லாம் மறந்து கண்ணைமூடி இந்த படத்தின் இசையை கேட்டீங்கினா, நிச்சயமாக கண்ணுல இருந்து தண்ணீர் வரும். அப்படி வரலேனா, இசையமைப்பதையே நான் நிறுத்தி விடுகிறேன். அந்தளவுக்கு இப்படம் உணர்வுபூர்வமா வந்திருக்கு.

படத்தின் ஆடியோ ரிலீஸின்போது அப்புக்குட்டிக்குதான் அவ்வளவு பாராட்டும் கிட்டியது. உடனே அவரை சூப்பர் ஸ்டார் என்று நினைக்க கூடாது. சூப்பர் ஸ்டாரால கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியாது. இந்தபடத்துல உன்னை(அப்புக்குட்டி) ஹீரோவாக்கிய இயக்குநரைத்தான் பாராட்டனும். இனி உனக்கு வரும் படங்களை எல்லாம், கதை கேட்காமா ஒத்துக்கணும். ஏனென்றால் இயக்குநர் மனசுல அந்த கதையோட்டத்துடன் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும், சொல்லப்போனால் நமக்கெல்லாம் அவர்கள் தான் முதலாளி. நாட்டுல நடக்குற பிரச்சனை, குழப்பம் எல்லாம் பார்க்கும்போது நமக்கு சில நேரம் கண்ணீர் வருது. அதுக்காக என்னபண்ண முடியும், அரசியல் கட்சியை குற்றம் சொல்ல முடியுமா, எல்லாம் ஆண்டவனால் விதிக்கப்பட்டது. எது நடக்குமோ, அது நடகும், அதுபோலத்தான் ஒரு கலைஞனும் உருவாகிறான் அதை யாராலும் தடுக்க முடியாது.

சிலநேரங்களில் கதையை கேட்கும்போது, நானே இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேன், என்னய்யா இதுமாதிரியான குப்பையான கதையெல்லாம் எடுத்து வந்திருக்க என்று. இசை என்பது ஒரு கதையை கேட்டதும், ஜீவனுக்கு உள் இருந்து அப்படியே வெளிவரணும், அதைத்தான் அழகர்சாமியின் குதிரையில கொட்டி ‌வச்சுருக்காங்க. டைரக்டர் சுசீந்திரன் நல்ல கதையை டைரக்ட் பண்ணி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய வைத்துள்ளார்.

நல்ல இசையை கேளுங்க, விளம்பரபடுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை, ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையை சொல்லியிருக்காங்க. இதமனசுல வச்சுகிட்டு, மக்கள்கிட்ட இந்தமாதிரி படத்தை கொண்டு போங்கனு கேட்டுகிறேன்". இவ்வாறு அவர் கூறினார்.

அழகர்சாமி குதிரை படத்தில் மொத்தம் மூன்றே பாடல்கள்.

"அடியே இவளே" என்றே ஒரு பாடல். இதை பாடலாசிரியர் சிநேகன், லெனின்பாரதி இவர்களுடன், "ஜில்லா விட்டு" புகழ் தஞ்சை செல்வி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இளையராஜா சொந்த குரலில் பாடியிருக்கும் "குதிரைக்காரா". கார்த்திக், ஷேரேயா கோசல் பாடியிருக்கும் "பூவைக்கேளு" என்னும் ஒரு கிராமிய டூயட் பாடல் போன்றவை மட்டும் இடம் பெற்று உள்ளன.

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதை தான் இந்த 'அழகர்சாமியின் குதிரை'. ஒரு கிராமத்து கதையான இந்த சிறு கதையின் மீது சுசீந்திரனுக்கு இருந்த ஆர்வத்தினால், சினிமாவிற்கு ஏற்ற சிறு மாற்றங்களோடு படமாகிறது.

இப்படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது,

"தேனி அருகே உள்ள மல்லையாபுரம் கிராம மக்கள், ஊரில் உள்ள கோவில் திருவிழா நடந்தால்தான் ஊரில் மழை பெய்யும் என்று நம்புகிறார்கள். திருவிழா நடைபெறும் நேரத்தில், சாமியின் வாகனமான மரத்தினால் ஆன குதிரை காணாமல் போய்விடுகிறது.

அதேநேரத்தில், பெரியகுளம் அருகே உள்ள அகமலை என்ற மலை கிராமத்தில் குதிரையில் பொதியேற்றி பிழைக்கும் அழகர்சாமிக்கு திருமணம் நெருங்கும் நேரத்தில், குதிரை காணாமல் போய்விடுகிறது. குதிரை கிடைத்தால்தான் திருமணம் என்னும் சூழ்நிலையில், அழகர்சாமி தன் குதிரையை தேடி புறப்படுகிறான்.

மரக்குதிரை கிடைத்து கிராம மக்களின் திருவிழா நடந்ததா, இல்லையா? நிஜகுதிரை கிடைத்து அழகர்சாமியின் திருமணம் நடந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு படத்தில் விடை இருக்கிறது".

அழகர்சாமியாக அப்புக்குட்டி என்பவர் நடித்துள்ளார். அவருடன் சரண்யா மோகன், அழகன் தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாஸ்கர் சக்தி வசனமும், சினேகன், யுகபாரதி, ஜெ.பிரான்சிஸ் கிருபா ஆகியோர் பாடல்களும் எழுதியிருக்கிறார்கள்

படத்தின் பாடல்களை விட,இளையராஜா அவர்கள் படத்தின் பின்னணி இசையில் முழு கவனம் செலுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

-இன்பா

Thursday, March 17, 2011

வைகோ - வைGO ??


அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து, ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துள்ளார். நாளை முதல் அவர் பிரசாரத்தை துவக்குவதாக இருந்தார்.

இந்நிலையில், கூட்டணி கட்சித்தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி 3வது அணியை அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

"மூன்றாவது அமைக்கும் வாய்ப்பே இல்லை. கருத்துவேற்றுமைகளை களைந்து எங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விஜயகாந்துடன் பேசினோம்" என்றார் மூவந்தர் முன்னேற்ற முன்னணி சேதுராமன்.

அதிமுக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கூட்டணி தொடரும் என அறிவித்து இருக்கிறார்கள்.

"கடந்த சட்டசபை தேர்தல் முதல், ஐந்தாண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் விசுவாசமாக தொடர்கிறார். ஐந்தாண்டுகளில் எந்த போராட்டம் என்றாலும், இவர் சொந்தமாக தன் கட்சிக்கென்று நடத்தவில்லை.

சாதாரண அறிக்கை வெளியிடுவது என்றாலும், ஒவ்வொரு பிரச்னையிலும், ஜெயலலிதாவின் முடிவு என்ன என்று அறிந்த பின்பே அரசியல் செய்தார்.கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, "ஜெ., எவ்வழியோ அவ்வழி' என்று செயல்பட்டவர் வைகோ. தன் கட்சியின் பொதுச்செயலராக செயல்பட்டாரோ இல்லையோ, ஜெ.,வின் தளபதியாக இருந்தார். அவரது விசுவாசத்திற்கு இப்போது கிடைத்த பரிசு இதுவா" என்கிறார்கள் வைகோவின் தொண்டர்கள்.

ஆனால், பாமக போன்ற எதிர்கட்சிகளின் வயிற்றில் மீண்டும் புளியை கரைக்கும்விதமாக, தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., இறங்கி வந்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது.
ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், அ.தி.மு.க., இறங்கி வந்தது. தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., நேற்று இறங்கி வந்து, பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக சூழ்நிலையை உருவாக்கியதை அடுத்து, மூன்றாவது அணி முயற்சி நேற்றிரவு முடிவுக்கு வந்தது என்கிறது செய்தி.

வைகோ, வைGO ஆவாரா? இல்லையா? என்று இன்று தெரிந்துவிடும்.

Wednesday, March 16, 2011

தேநீர் விடுதி - சினிமா பார்வை

"சூச்சு மாரி" - நமது குழந்தைகள் அனைத்தையும் முணுமுணுக்க வைத்த "பூ" படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அறிமுகம் ஆன, தனது முதல் படமான "பூ" படத்தின் மூலம் கவனிக்க தக்க இசை அமைப்பாளராக முன்நெரிவிட்டவர் குமரன்.

இளையராஜா அவர்களுக்கு பின்னர், மனதை தொடும் மெல்லிய கிராமிய இசை தருவதற்கு தற்சமயம் எஸ்.எஸ்.குமரனால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. களவாணி பாடல்களை தொடர்ந்து தற்போது அவர் இசை அமைப்பில் வெளிவந்து இருக்கும் "தேநீர் விடுதி" படத்தின் பாடல்களை, இசையை கேட்டால்.

இதில் இன்னொரு விஷயம்..இப்படத்தின் இயக்குனரும் குமரனேதான்.

அவரது சொந்த ஊரில் நடந்த கதை என்றும், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற தனது பத்து வருட கனவு, இசை அமைப்பாளராக வளர்ந்தபின் நிறைவேறிவிட்டதாக சொல்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

"நான் எனது பணியை குறும் படங்கள் மூலம் தொடர்ந்தேன். அதுமட்டுமன்றி எனக்கு இசைக்கருவிகள் வாசிப்பது மிகவும் பிடிக்கும், அதனாலேயே எனக்கு இசையின் மேல் ஆர்வம் வந்தது என்றார். டைரக்டர் சசி சாருக்குத்தான் என் நன்றி, ஏனெனில் பூ படத்திற்கு அவர்தான் என்னை அறிமுகம் செய்தார்" என்கிறார் குமரன்.

பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அனுஷ்கா தேவி தயாரிப்பில் எஸ்எஸ்.குமரன் இயக்கும் 'தேநீர் விடுதி'. இதில் ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா, பிரபாகர், பெரிய கருப்ப தேவர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பலசரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. கடைக்கு எதிரில் இருக்கிற டீக்கடையில் இருந்துதான் காதலுக்கே பேஸ்மென்ட் போடுகிறார் ஹீரோ.

"இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோவும் சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி சொல்லி இருக்கிறேன்" என்று பேட்டியில் இப்படம் பற்றி தெரிவித்தார் 'பூ' குமரன்.

இசையமைப்பாளர் டைரக்ட் செய்த படம். குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும்.

கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும்.அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

1 ."என்னமோ என்னமோ பண்ணுது புள்ள" - பாடலை கேட்டாலே மனதை என்னமோ பண்ணும் இந்த அழகிய பாடலை பாடி இருப்பவர்கள் சின்மயி,மாளவிகா மற்றும் எஸ்.எஸ்.குமரன்.

இளையராஜா அவர்கள் தான் இசை அமைக்கும் படத்தின் அழுத்தமான காட்சிகளில், சொந்த குரலில் மனதை தொடும்படி பாடுவாரே. அதைபோன்றே ஒரு குரல்வளம் குமரனுக்கும் இருக்கிறது.

2."மெல்லென சிரிப்பாளோ, ஜில்லென முறைப்பாளோ" - இப்பாடலை பாடி இருப்பவர்கள் கவுசிக் மற்றும் மிருதுளா. குமரனுக்கே உரித்தான குழந்தைகளின் பின்னணி குரலும் இப்பாடலில் இருக்கிறது. இப்பாடலின் துவக்கத்தில் வரும் கம்போசிங் மனதில் இடம் பிடிக்கிறது.

3. "ஒரு மாலை பொழுதில் நான் உனை பார்த்தேன்.
உனை பார்த்தேன், அன்பே, நான் என்னை பார்த்தேன்."

-"நெருங்கி வருவாய்" விளம்பர பாடல் பாடிய சோனா மோகபத்ரா பாடியிருக்கும் இந்த பாடல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கபோகிறது. உயிரோட்டமான ஒரு மெலடி. சோனாவின் கனமான குரலும், பாடல் வரிகளும் அருமை. எஸ்.எஸ். குமரனின் மெலடி இசை திறமைக்கு நல்ல சான்று இந்த பாடல்.

இதே "ஒரு மாலை பொழுதில்" வயலின் இசையில், வாத்திய இசையாக மட்டுமே இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும், அலுக்காத தேனிசை.

4 . "உயிரோடு உறவாடி, உலகம் மறந்து போவோம்" - இசை அமைப்பாளர் குமரன் பாடி இருக்கும் ஒரு சிறிய பாடல். இதுவும், அருமையான மெலடி.

யாஷ் கோல்சா பாடி இருக்கும் "ஏய்...இவன் பந்தல்காரன்" என்று வரும் பாடல், படத்தில் இந்த பாடல் மட்டுமே மெலடி இல்லாமல் குத்து பாடல் போன்று இருக்கிறது. ஆனாலும், ஒரு சில வரிகளே உள்ள சிறிய பாடல்.

"படத்தின் முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடும். ஒரு காட்சி கூட தேவையில்லாததாக இருக்காது என்பதுதான் அது. குளோஸ் அப் விளம்பரத்தில் வரும் 'நெருங்கி வருவாய்...' என்ற பாடலை பாடிய சோனா மோகபத்ராவை முதன் முறையாக தமிழில் பாட வைத்து இருக்கிறேன்" என்ற குமரன், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னுடன் முதல் படத்திலிருந்து பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி அவர்களை கவுரவித்தார்.

'தேநீர் விடுதி' முழுக்க முழுக்க யதார்த்தமான முழு நீள நகைச்சுவை படம் என்பதோடு, எளிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம்.

பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், பூ, வெண்ணிலா கபடி குழு, களவாணி, தென் மேற்கு பருவகாற்று என நமது மக்களின் ரசனையை மேம்படுத்தி இருக்கும் படங்களின் பட்டியலில், குமரனின் "தேநீர் விடுதி" நிச்சியம் இடம் பெரும் என்று எதிர்பார்க்கலாம்.

-இன்பா

Monday, March 14, 2011

மங்காத்தா - இசை அறிமுகம்


அஜித்தின் "மங்காத்தா" படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரப்போகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிஞர் வாலி, கவிஞர் கங்கை அமரன் மற்றும் மகாகவியின் பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

"இந்த படத்தில் எனது தந்தை கங்கைஅமரன் பாடல் எழுதி இருப்பதும், எனது குடும்பத்தில் பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இடம் பெற்று இருப்பதும் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி" என்கிறார் வெங்கட் பிரபு.

"மங்காத்தா ஒப்பந்தம் ஆனதும்,அஜித் என்னிடம் பேசியபோது இந்த படம் மியுசிக்கலாக சிறப்பாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.அதனால், நான் தனிப்பட்ட கவனம் எடுத்து வருகிறேன்." என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் யுவன்.

"எனது காரில் எப்போதும் ஒலித்துகொண்டு இருப்பது, மங்காத்தாவுக்காக நான் இசை அமைத்து இருக்கும் "விளையாடு மங்காத்தா" தான்" என்று தனது ட்விட்டரில் எழுதி இருக்கிறார் யுவன்.

"மங்காத்தா" வில் இன்னொரு சிறப்பு அம்சம் தனது தந்தை இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடுகிறார் யுவன்.தமிழ் - ஆங்கிலம் கலந்து வரும் இந்த பாடலின் தமிழ் வரிகளை இளையராஜாவும், ஆங்கில வரிகளை யுவனும் பாடவிருக்கிறார்கள்.

"படத்தில் 6 பாடல்கள் கம்போஸ் பண்ணப்பட்டு இருக்கின்றன. 3 பாடல்கள் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு விட்டன.படத்தை பற்றிய ஒரு பாடல் , ஒரு க்ளப் பாடல், மங்காத்தா தீம் பாடல் என , படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கின்றன" என்று படத்தின் இசை பற்றி தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

"யுவன் ராக்ஸ்" என்று ஒரு வரியில் சொல்கிறார் வெங்கட் பிரபு.

முழுவதும் எடிட் செய்யப்பட்டுவிட்டது மங்காத்தா. படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி இவ்வாறு தனது ட்விட்டரில் எழுதி இருக்கிறார்.

"மங்காத்தா படத்தை பார்த்து விட்டேன்.தல தலதான்".

பதிவுடன், மங்காத்தா படத்தின் இதுவரை வெளிவராத புத்தம்புது ஸ்டில்ஸ்.

-இன்பா

Saturday, March 12, 2011

சங்க காலத்தில் காதல் - பிரபஞ்சன்



தமிழ் பண்பாடு :

பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1

தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.

காதலும்,திருமணமும் :

நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.

இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.

சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை).

குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.

காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.

‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’

- குறுந்தொகை

இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.

சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.

‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’

பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.

குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை.
அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.

பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

களவு :

தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.

1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.

2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.

3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.

4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.

5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.

மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.

பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.

‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.

காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’

இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.

இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி.

அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)

தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.

சங்கத் திருமணங்கள் :

சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.

காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.

இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.

சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.

வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .

ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.

திருமண வாழ்க்கை :

தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.

காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.

திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன.

களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை.
அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை.

போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.

ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.

கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.

“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”

கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?

காதல் சுதந்திரம் :

1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.

2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.

3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.

4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.

5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.

6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.

7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.

(நன்றி : காலச்சுவடு பதிப்பகம்).

Friday, March 11, 2011

விபுதி மணம்


"கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி" என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ இல்லை எங்காவது படித்தாலோ கிருபானந்த வாரியாரின் தமிழும், குரலும் நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. 'திருமுக' என்ற அடைமொழிக்கு ஏற்ற ஒரு முகம் அவர் முகம். அதில் எப்போதும் புன்சிரிப்புமாய், நம் நினைவுகளில் கமழ்கிறது. ...அவர் நெற்றியில் பூசிஇருக்கும்... விபுதி மணம்.

இன்று சுவாமிகள்(அல்லது) குரு என்று தன்னையே அழைத்துகொள்ளும் யாரையும் நீங்கள் காசு கொடுக்காமல் பார்க்கஇயலாது. சிலவருடங்களுக்கு முன்னால் நான் புனேவில் இருந்த ஒரு ஆஸ்ரமதிற்கு போனபோது, அங்கு உள்ள சுவாமிகள் இறைவனை அடையும் வழி (!) குறித்து பயிற்சிமுகாம் நடத்துவதாகவும், அதில் கலந்துகொள்ள 5000 கொடுங்கள் என்றார்கள்.

வேலூர் பொற்கோவிலை கட்டியதாக(?) கூறப்படும் சக்தி அம்மாவை 'தரிசிக்க' 1000 கட்டணம். ஸ்ரீ அம்மா மற்றும் கல்கி பகவானின் ஆஸ்ரம்கள் சார்லஸ் அரண்மனையின் 'மினியேச்சர்' வடிவங்கள்.

ஆனால், கிருபானந்த வாரியார் எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கூலி தொழிலாளிக்கும், கோடிஸ்வரனுக்கும் சரிசமமாக 'ஆன்மிகத்தை' கொண்டுசென்றவர்.

1906 ஆம் வருடம் வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் பிறந்த வாரியார் பள்ளியே சென்றதில்லை. இவருக்கு இசை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை,அற நூல்களை கற்பித்து, குருவாகவும் விளங்கினர் இவரது தந்தை மல்லையதாசர். நல்ல இல்லறத்தில் சிறந்துவிளங்குவதே துறவரதிர்க்கான முதல்படி என்னும் இந்துமத நெறிப்படி இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்.
(இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்).

1936 இல் முருகவழிபாட்டை ஆரம்பித்தவர், திருப்புகழமிர்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, திருப்புகழ், கந்தர்அலங்காரம் போன்றவற்றுக்கான உரைகளும்,
சமய கட்டுரைகளையும் எழுதினார். 1956 இல் திருப்புகழ் திருச்சபை என்ற அமைப்பை நிறுவி கோவில்களுக்கான திருப்பணிகள் மற்றும் ஏழைமக்களுக்கான கல்வி,மருத்துவ சேவைகளையும் செய்தார். 57 ஆண்டுகள் அவர் ஒருநாளும் முருகவழிபாட்டை நிறுத்தியதுஇல்லை, 1993 இல் அவர் இறைவனடிசேரும் வரை.

தன் சமய,தமிழ் பணிகளுக்காக அண்ணாமலை மற்றும் தஞ்சை பல்கலைகழகங்களால் முனைவர் பட்டம் பெற்றவர் வாரியார். சிதம்பரத்தில் ஒரு சொற்பொழிவின்போது நான் கேட்ட "என்அப்பன் முருகன்" என்னும் குரல் இன்னும் நினைவில் இருக்கிறது. மக்களை தன் தமிழாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டிபோட்டவர் அவர்.

ஒருமுறை கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை பார்த்து முருகபெருமானின் தந்தை பெயரை கேட்க, சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே "சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொன்னவர் வாரியார்.

இன்று உள்ள ஆன்மிகவாதிகளுக்கு போஸ்டர்கள், பேனர்கள், டிவி/பத்திரிகை விளம்பரம் தொடங்கி சொந்தமாக டிவி சேனல்வரை தேவைப்படுகிறது. இது எதுவும் இல்லாமலே கிராமம் தொடங்கி உலகம்வரை புகழும், பெயரும் அவருக்கு தேடிவந்தது. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த வாரியார் ஒரு நிஜமான ஆன்மிகவாதி.

அவரது சமாதியும் அவர் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ளது. அவர் விட்டு சென்ற பணிகளை கிருபானந்த வாரியார் அறக்கட்டளை செய்துவருகிறது.

அவரின் சில பொன்மொழிகளோடு, அவரின் இறைபணிகளை நாம் நினைவில் கொள்வோம்.

"பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்".

"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை"

"ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்"

- வேலும்,மயிலும் துணை -

(நான்,முன்பு இட்லிவடையில் எழுதிய ஒரு பதிவு)

-இன்பா

Monday, March 7, 2011

குடியால் சீரழியும் தமிழ்க்குடும்பங்கள்


சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பார் ஒன்றில் மது அருந்திய ஒருவர் சாவு. மூன்று பேர் மயக்கம். சென்னை சுங்கச் சாவடி அருகே உள்ள பார் ஒன்றில் தகராறு, கத்திக் குத்து. ஒருவர் கைது. இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி. இரண்டு ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சிக்காக மது அருந்தினராம். வாக்குவாதம், விளைவு, ஒருவருக்குக் கத்திக்குத்து. இது நடந்தது சென்னை முகப்பேரில் உள்ள டாஸ்மாக் பாரில்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் ஒருவரின் மாமனார், மாமியார், மருமகள் ஆகிய மூவர் தூக்கிட்டுத் தற்கொலை. ஒருவரின் குடிப்பழக்கம், ஊதாரித்தனம் கந்து வட்டிகாரர்களிடம் பட்ட கடன் சுமையே தற்கொலைக்குக் காரணம் எனப் புகார்.

விருதுநகர் முத்தால்நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துத் தற்கொலை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மனைவி, மகனை குடிபோதையில் வெட்டிக் கொன்ற விவசாயி.

இவையெல்லாம், ஏதோ ஓராண்டிலோ அல்லது ஒரு மாதத்திலோ நடைபெற்ற சம்பவங்கள் அல்ல. சென்னையில் பிப்.22-ம் தேதி ஒரே நாளில் வெளியான செய்திகள். இப்படிக் குடும்பம் குடும்பமாய் மக்கள் மடிவதற்கும், இளைஞர்கள் எல்லாம் கொலை செய்யும் காட்டுமிராண்டிகளாக மாறிக் கொண்டிருப்பதற்கும் என்ன காரணம்?

மகிழ்ச்சியாக இருக்க மதுவைக் குடித்த மனிதன் அதற்கே அடிமையாய்ப் போனது ஏன்? மனிதன் தவறு செய்கிறானா அல்லது மது தவறு செய்ய வைக்கிறதா?

சமீபத்தில் நடைபெற்ற பாதிக்கும் மேற்பட்ட குற்றநிகழ்வுகள் குடிபோதையில்தான் நடைபெற்றுள்ளன. அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் வரதட்சிணையைவிட, குடிபோதையில் பெண்களைத் துன்புறுத்தும் கணவன்மார்கள் மீதான புகார்கள்தான் சுமார் 80 சதவீதம் இருக்கிறது. நெடுஞ்சாலை விபத்துகளுக்குக் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இதற்கெனவே நூற்றுக்கணக்கில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டியதும், பெரும் தொகை செலவு செய்யவேண்டியதும் தவிர்க்க முடியாததாகும்.

மேலும், கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயரும் என்கிறார் அரசு ஸ்டான்லி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன்.

இதுமட்டுமல்ல, பள்ளிக்கூடம் முதல் கல்லூரிகள் வரை மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலச் சந்ததியே ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிடும் அபாயம் தொடங்கிவிட்டது. கிராமப்புறங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் கிராமியப் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது.

மது அருந்தியவர்களைக் கண்டாலே சற்று ஒதுங்கி நிற்கும் கிராமங்களில் இப்போது குடிப்பழக்கம் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தனை அவலங்களும், கேடுகளும் சமூக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும் புரியாதது அல்ல.

எல்லாவற்றுக்கும் காரணம் வருமானம்தான். அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84-ல் தொடங்கப்பட்டபோது அதன் முதலீட்டுத் தொகை ரூ.15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ.15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மதுவிற்பனையைத் தனியார் மூலம் நடத்திய அரசு 2003-04-ல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த வருவாய் ரூ.2,828 கோடி. 2009-10-ல் இது ரூ.12,461 கோடியாக உயர்ந்து, நடப்பாண்டில் ரூ.15,000 கோடியைத் தாண்டிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இதில் ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்துக்கு ரூ.4,500 கோடியும், இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்துக்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் பல திட்டங்களுக்கும் கோடிகளில் ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், ஒன்று புரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் தொடர வாக்காளர்கள் அவசியம். வாக்காளர்களைக் கவர இலவசங்கள் தேவை. இலவசங்கள் தொடர கஜானா நிரம்பியிருக்க வேண்டும். கஜானாவை நிரப்ப மது விற்பனைதான் ஒரே வழி என்பதைத் தமிழக அரசியல் தலைவர்கள் கொள்கை முடிவாகக் கொண்ட பிறகு சமூகம் சீரழிந்தால் என்ன? சாமானிய, நடுத்தரக் குடும்பங்கள் கூட்டாகத் தற்கொலை செய்துகொண்டால் என்ன?

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 23,978. மதுக்கடைகளின் எண்ணிக்க 6,642. முன்னதைப் பின்னது இன்னும் சில ஆண்டுகளில் தொட்டுவிடும். கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்கும் ஆட்டின் நிலைமைதான் மதுவிலக்கை எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதே இப்போதைய நிலை.

தேர்தல் வந்துவிட்டது. சமூகம் பற்றிப் பேசுவது எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது கூட்டணி யாரோடு என்பதே இன்றைய கவலை.

(நன்றி : தினமணி)

Sunday, March 6, 2011

என் உடல், பொருள், ஆவியை...


சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.

உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.

உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.

நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.

ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.

என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.

"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.

நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.

கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.

நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். அரசியல் நோக்கமாக இருந்தாலும் நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?

"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.

"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?

இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.

ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?

நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.

நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.

1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.

அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.

சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.

TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.

"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?

தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.

முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?

சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.

நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?

சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..

அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?

"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?

சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?

எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?

"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.

உங்கள் பதில் "ஆம்" என்றால்,

அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.

ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.

எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.

இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.

மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.

வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை "ராணா"வில் முறியடிக்க காத்திருக்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன்
.

 
Follow @kadaitheru