Friday, November 20, 2009

பசுமைக்கல்வி தாராயோ?


சில வருடங்களுக்கு முன்னால் ஊட்டி சென்றபோது அது எனக்கு ஒரு கசப்பான,மனதில் ஒட்டாத அனுபவமாகவே அமைந்தது.பார்க்கும் இடமெல்லாம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்...கழிவுகள்..கூட்ட நெரிசல்..அதன் காரணனமான சீர்கேடுகள் இப்படி பல.

"ஊட்டி போறது வேஸ்ட். கொடைக்கானல் தான் இப்போ பெஸ்ட்" என்று தனது ஹனிமூன் பயணதிட்டம் பற்றி பேசினான் என் நண்பன் ஒருவன். ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் பெய்த பேய் மழை மற்றும் நில சாரிவுகள் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது நீலகிரி . மூன்று நாட்களில் பெய்த 600 செ.மீ* மழையில் 543 இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டதாகவும் 816 வீடுகள் சேதமடைந்ததாகவும்# செய்திகள் தெரிவிக்கின்றன. ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2,636 மீ உயரத்தில் இருக்கும் மலை, வரையாடுகள், ஷோலா புல்வெளிகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் கொண்ட, பூகோளரீதியாகவே நிலச் சரிவுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்ட மலை நீலகிரி.

"யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை (பயோஸ்பியர் ரிசர்வ்) நீலகிரி, இன்றைக்கு உலக வெப்பமயமாதலின் அபாயச் சங்காக மாறியிருக்கிறது. குறைந்த நாளில் அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், பல நாட்கள் வெயில் வாட்டி எடுப்பதும் இதன் வெளிப்பாடுதான். நீலகிரியில் மக்கள் குடியேற்றம் அதிகமாவதற்கு முன்பே, பெருமழை, வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு என பல விதமான இயற்கைப்பேரழிவுகள் நடந்துள்ளன.

இப்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, ஒன்பது லட்சம். கடந்த 1981ல் நான்கு லட்சம் மட்டுமே. 1967ல் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊட்டி நகரில், இப்போது ஒன்றே கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இம்முறை இயற்கையின் சீற்றத்தில் அப்பாவி மக்கள் 43 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சி தரும் செய்தி, இதற்கு முழு காரணம், பொறுப்பு இயற்கை இல்லை. மனிதர்கள் ஆகிய நாம் தான்.

1.சுற்றுலா மையமாக மாறிய பின், மக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சோலைக் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும், கான்கிரீட் காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2. பணப்பயிர்களில் காசு பார்த்தவர்கள், மலையெல்லாம் தேயிலையை விதைத்து, பார்க்குமிடத்தையெல்லாம் "பசுமைப் பாலைவனம்' ஆக மாற்றத்துவங்கினர். நீலகிரியில் இப்போதுள்ள மொத்த விவசாயப் பரப்பில், 80 சதவீதத்துக்கு தேயிலை விவசாயமே நடக்கிறது.மொத்தம் 5,536 சதுர கி.மீ., பரப்புள்ள நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடப்பதாகவும், அதில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 697 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தேயிலை விவசாயம் மட்டுமே நடப்பதாக தோட்டக்கலைத்துறை கணக்குச் சொல்கிறது.

3. மாவட்டத்திலுள்ள 10 தோட்ட நிறுவனங்களிடம் மட்டு மே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்து மே வளம் கொழித்த காடுகளாக இருந்தவைதான். காடழிப்பைக் கண்டு கொள்ளாத அரசு, அங்கெல்லாம் ரோடுகள் போடவும் நிதியை வாரிக் கொடுத்தது.கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப் பரப்பை விட, கடந்த 60 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப்பரப்பே அதிகம்..

4. நீலகிரியில் காடழிப்பு, மரக்கடத்தல், அனுமதியற்ற கல்குவாரி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா, மாற்று வழி, புதிய ரோடுகள், புதிய ரயில்வே வழித்தடம் என வளர்ச்சிப் பணிகள்,மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் உருவான கட்டடங்கள்.

5. இருக்கிற ரோடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும், இதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல்,ரோடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

மாநில வன உயிரின வாரிய உறுப்பினரும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகியுமான ஏ.சி.சவுந்திரராஜன் தினமலருக்கு அளித்த பேட்டியில், ""மலை மாவட்டம் என்பதால், இதற்கென தனித்தன்மை உண்டு. இங்குள்ள வனமும், சுற்றுச்சூழலும் இங்குள்ள மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை. கடந்த 1993ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னும், தேவையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பல வித நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுத்து இங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுமேயானால், இன்னும் 20 ஆண்டுகளில் இப்படியொரு மாவட்டம் இருப்பதே கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.

எத்தனை முறை அடி வாங்கினாலும் மனிதன் திருந்துவதாய் இல்லை என்பதற்கு உதாரணமாய், நிருபனமாய் நீலகிரி சம்பவத்திற்கு பின்னர் வந்த ஒரு செய்தி.

உடுமலை தாலுகாவில் விவசாயம் பிரதானமாக உள்ளதால் பசுமை தாலுகாவாக உள்ளது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட, வருவாய்த்துறை அனுமதி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், இச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. வளர்ந்த மரங்களை வெட்டப்படுவதை கண்காணிக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் முதல் தாலுகா நிர்வாகம் வரை கண்டு கொள்ளாததால் உடுமலை பகுதிகளில் தொடர்ந்து பச்சை மரங்கள் வெட்டி, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு மரங்கள் பயன்படுவதால் ஒரு டன் பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், சமீப காலங்களில் பசுமை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதே போல், நெடுஞ்சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகளின் ஓரத்திலும், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங் கள், வாய்க்கால்கரைகள் என பல இடங்களில் உள்ள மரங்கள், வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது.

அரசியல்வாதிகள் முதல் அன்றாடம்காய்ச்சிகள் வரை இயற்கை வளத்தினை, அதன் பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவு மருந்துக்கும் இல்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

நமது கல்வி முறைகளில், பாட திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பசுமை கல்வி என்னும் ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி, மழலை பள்ளிகள் முதல் அதை கட்டாய படமாக கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் முதல் நாம் தொடங்குவோம்.

கடைக்காரர் கமெண்ட் :
பெரியவங்க தலையில் வெறும் நீலகிரி மண்ணு தான் இருக்கு. பாலியல் படிப்பு மாதரி பசுமை படிப்பு ஒண்ணு கொண்டுவந்து, அதை ஸ்கூல் புள்ளைங்களுக்கு சொல்லித்தரணும்ங்க.






பதிவு : இன்பா

3 comments:

Selvakumar Iniyan said...

மிகவும் சரியான வழி.

படுக்காளி said...

மலைகளின் ராணி என செல்லமாய் அழைக்கப் படும் நீலகிரி பற்றி மிக ஆழமான தகவல் செறிந்த பதிவு.

/// ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.////

இத்தகைய சிறப்பான ஒரு பதிவு தர நிச்சயம் சமுக அக்கறையும் முனைப்பும் தேவை. தங்களைப் போல் பொறுப்பான குடிமகன்கள் வலைமகன்கள் நாட்டுக்கு மிக முக்கியம்.

/// "யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை ////

தகவல் மிகுந்த இந்த பதிவுக்கு, தங்களின் கடின உழைப்பு நன்கு தெரிகிறது.

ஏதோ எழுதினோம்னு இல்லாம, நல்ல சரக்க, பொட்டலம் கட்டும் கடைக்காரருக்கு வாடிக்கையாளர் ஆதரவு நிச்சயம் உண்டு.

கலக்குங்க இன்பா

Loganathan - Web developer said...

பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்... நாட்ல யார் சார் இது பற்றியெல்லாம் கவலைப்படராங்க... எல்லாம் எனக்கு ப்ரி கல்ர் டி.வி தரல என சொல்லிக்கிறாங்க

 
Follow @kadaitheru