Monday, November 16, 2009

புத்தகங்களோடு ஒரு பயணம் - கவிஞர் சல்மா


"எல்லா அறிதல்களுடன் விரிகிறது என் யோனி" - என்று படிக்கின்ற யாரையும் ஒரு கணம் அதிர வைக்கும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சல்மா. ஒரு பெண் எழுத்தாளர் இதைமட்டுமே எழுதவேண்டும் என்று இருந்த எழுதப்படாத விதிகளை கதை,கவிதை, நாவல் என எல்லா தளங்களிலுமே உடைத்து எறிந்தவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண் கவிஞர் சல்மா.

தொண்ணூறுகளின் இறுதியில் எழுத தொடங்கிய இவர், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் ஊராட்சி தலைவியாகவும், தமிழ்நாடு சமூக நலவாரிய தலைவராகவும் இருக்கிறார். இவரது குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்,பச்சை தேவதை மற்றும் இரண்டாம் ஜாமங்களின் கதை

புத்தகங்கள் மற்றும் வாசிப்பு அனுபவம் குறித்தான அவரது உரை இங்கே...

இன்று வாசிப்பு என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து பார்க்கவும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. என்னளவில், வாசிப்பு வெறும் அனுபவமாக மட்டுமின்றி காலத்தோடும் வாழ்க்கையோடும் இணைந்து ஒன்றாகவே எனக்குள் பதிவாகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

வாசித்தலை பழக்கம் அல்லது ஆர்வம் அல்லது வேட்கை இப்படித் தான் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் என்னைப் பொறுத்தளவில் அது விடுதலையின் அடையாளம். மனித மனங்களில் நிகழும் பிறழ்வுகள், சிக்கல்கள், வாழ்க்கைமீதான பார்வைகள், குழப்பங்கள், கேள்விகள் இவற்றை அறிந்துகொள்ளவோ அறிந்து தெளியவோ அறிந்து கடந்து செல்லவோ வாசிப்பு உதவுகிறது.

இளமைப் பருவம் பல கனவுகளால் ஆனது. நாளைக்கு ஒன்றாக, அந்தக் கனவுகளுக்குத் தீனி போடக் கூடியதாகவும் வாசிப்பு இருந்திருக்கிறது. கல்லூரியும் பல்கலைக் கழகமும் செய்யாததை, அங்கும்கூட நாம் கற்றுக்கொள்ள இயலாத உலக வாழ்க்கையை மனித மனத்தின் போக்குகளை, புதிர்களை அறிமுகம் செய்யக்கூடியனவாகப் புத்தகங்கள் இருந்திருக்கின்றன.
வாசிப்பு வேறு படைத்தல் வேறு என என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை. வாசிப்பே படைப்பதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

எதெல்லாம் மிகச் சிறந்த படைப்புகள் என உணர்ந்தேனோ, எதெல்லாம் என்னைப் பாதித்ததோ அப்போதெல்லாம் ஏன் நானும் இதைப் போன்றதொரு படைப்பை எழுதக் கூடாதென்கிற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்துகொண்டிருந்தது. சமூகம் உருவாக்கித் தந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற வெறியும் நோயுற்ற சமூகத்தின் சலனமற்ற முகத்திரையைக் கிழித்துவிட வேண்டு மென்கிற தவிப்பும் கூடவே இருந்துகொண்டிருந்தது.

வாசிப்பு உருவாக்கிய அதிர்வுகளும் மிக முக்கியமானவை. நான் எதையெல்லாம் சரியென நம்பியிருந்தேனோ எதெல்லாம் தவறு என மதிப்பீடு வைத்திருந்தேனோ எதெல்லாம் வாழ்க்கை நியதியென பின்பற்றினேனோ அவையெல்லாவற்றையும் குலைத்துவிடும் முயற்சிகளில் சில புத்தகங்கள் இறங்கி என்னை நிலை குலையச் செய்துகொண்டிருந்தன.

எப்படிச் சிறந்த வாசிப்பைப் புத்தகங்களால் தர முடியுமோ எப்படி உன்னதமான இலக்கியங்களை அறியத் தர முடியுமோ அதைக் காட்டிலும் முக்கியமானது புத்தகங்களால் நம் நம்பிக்கைகளைக் குலைக்க முடியுமென்பது, அந்த இளம் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் அதிர்ச்சி. வாசிப்பு என் பார்வைகளை மாற்றிக்கொண்டிருந்தது. குறிப்பாக ஒழுக்கம் சார்ந்த கலாச்சாரம் குறித்த பார்வைகள், பெண்கள் வீட்டுப்படி தாண்டக் கூடாது அந்நிய ஆண்களிடம் முகம் காட்டக்கூடாது என்கிற ஓரிடத்திலிருந்து கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் தொழிலாளிகளின் நியாயங்கள் குறித்தும் என்னால் யோசிக்க முடிந்ததற்கு எனது வாசிப்புதான் காரணமாக இருந்தது.


இத்தகைய சிந்தனை மாற்றங்களோடு வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையோடு போராடுவதும், முரண்பட்டுக் கசங்குவதும் அத்தனை எளிதாக இல்லை என்பதே உண்மை.

ஒரு கட்டத்தில் காலத்தைக் கடத்துவதற்கான ஒன்றாக இருந்த வாசிப்பு, பிந்தைய நாட்களில் வாழ்வின் ஆதாரமானதாக மாறிப் போயிருந்தது. வாசித்தலின் வழியே வாய்த்த மொழியும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக் கிடைத்த சிந்தனையும் சுற்றிலும் நிகழ்கிற வாழ்க்கையைப் பார்க்கும் பார்வைகளை மேலும் கூர்மையாக்கக்கூடியதாக இருந்தது.

வாசிப்பே எழுதுவதற்கான தூண்டுகோலாகவும் இருந்தது. அந்த நாட்களில் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் பெரும்பாலானவர்களில் கையாளப்படுகிற ஒரு வடிவமாகக் கவிதை இருந்தது, இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.
மொழியைத் தன்னளவில் புதுப் பிக்கும் ஆற்றல் கொண்டதான கவிதை வடிவம் இயல்பாகக் கைகூடிற்று. புற உலகின் அனுபவங்களையும் நுட்பமான உணர்வுகளையும் என் கவிதைகளுக்குள்ளாகக் கொண்டுவருவது எளிதாகக் கைகூடிற்று.

தமிழில் 80கள்வரை அழகியல் சார்ந்து படைக்கப்பட்டுக்கொண்டிருந்த நவீன கவிதை பிறகு தனிமனித வாழ்வியல், உளவியல், சமூகம் சார்ந்த கவிதைகளாகத் தன் மொழியில் மர்மம் பூணத் துவங்கிற்று. 90களுக்குப் பிறகு எழுத வந்த பெண்களின் எண்ணிக்கையும் மொழியின் வெளிப்பாடும் முக்கியமானது. அத்தகைய தனித்துவமான கவிதைகளைத் துவக்கிவைத்தவையாக என் கவிதைகளே இருந்தன.

புற மற்றும் அக உலகத்தில் தான் வகிக்கும் நிலைகளை உணர்வுபூர்வ மான, வெளிப்படையான மொழியில் பதிவுசெய்யத் தொடங்கினேன். ஆணின் மதிப்பீடுகளாலான, மொழியை மறுத்து பெண் உடலின் அரசியலை கவிதைகளின் கருப் பொருளாக்கினேன். பெண் இருப்பு, ஒடுக்கப்பட்ட அவளது உடல், உணர்வுகள் அனைத்தும் பகிரங்க மாக்கப்பட்ட நிலை உருவாக என் படைப்புகள் வழிவகுத்தன. தொடர்ந்து இப்படிப்பட்ட கவிதைகளின் வழியே நவீன இலக்கிய உலகில் பெண்களின் படைப்புகள் மீதான கவனத்தைத் திருப்ப முடிந்தது.

தமது உடல் சார்ந்த மதிப்பீடுகளைப் பரிசீலித்த தமது உடலைக் கொண்டாடத் தொடங்கிய பெண்களின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன. அது உங்களுக்கும் கூடத் தெரியுமென நினைக்கிறேன்.

கடும் விமர்சனங்கள், சமூக எதிர்ப்புகளுக்கிடையே நாவலுக்கான திட்டமிடலைத் தொடங்கினேன். தேர்வு செய்த களம் என் சமூகமும் அதன் வாழ்க்கை முறையும், குறிப்பாக பெண்களின் உலகம். அதற்கான முன் தயாரிப்புக்கு வைக்கம் முகமது பஷீர், சுந்தர ராமசாமி ஆகியோரது நாவல்களும் உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அப்படைப்புலகம், மற்றும் சித்தரிப்புகள் அவற்றை வாசித்தலின் வழியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக முக்கியமானவை. ஒரு படைப்பாளியாக இன்றைக்கு உருவாவதற்கு சுதந்திரமானதொரு நபராக உணர்வதற்கு, அர்த்தமுள்ளதாக ஒரு வாழ்வை நான் வாழ்வதாகத் திருப்தி கொள்வதற்கு வாசிப்புதான் காரணமாக இருந்திருக்கிறது. நாவலின் கருவை யோசிக்கும்போதே, அது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் விதம் குறித்தும் ஒரு தெளிவு இருக்கவே செய்தது.

பஷீரின் நாவல்கள்தாம் எனக்கும் என் கதைக்களனை உருவாக்கித் தந்தது. எதையெல்லாம் எழுத முடியும் எப்படி எழுத முடியும், ஏன் எழுத வேண்டும் என்கிற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவரது படைப்புகள் பதில் தந்தன.

பஷீர் தனது படைப்புகளில் கற்பனை சார்ந்த நிஜத்திற்கும் சுய வாழ்க்கை சார்ந்த நிஜத்திற்குமான இடைவெளியை அழித்துவிடுவார் என்று சுந்தர ராமசாமி சொல்வார். இப்படித் தான் என் படைப்புலகம் உருவாக பஷீரின் படைப்புகள் உறுதுணையாக இருந்தன. நான் எதை எழுத வேண்டுமென விரும்புகிறேனோ அதை எழுதுவதற்கான நியாயங்களை உருவாக்கித் தந்தன. அவரது படைப்புகள், ஒரே வித்தியாசம் அவர் ஆண். நாம் எப்போதுமே நமக்கான நியாயங்களை நாமே கற்பனை செய்துகொள்கிறோம்.

நம் வசதிக்கேற்ப, அது வாழ்க்கைக்கு எப்படி சரிவராதோ, அப்படித்தான் படைப்புகளுக்கும். நாம் உருவாக்கும் கணித முறைகள் போல எனது நாவலுக்குள் நான் கவனித்த என் சமூக நிலைகள் அத்தனையையும் கேள்விக்குட்படுத்தினேன். விமர்சித்தேன். ஒரு படைப்பாளியாக எனது பங்களிப்பு அது. அதற்கான விமர்சனங்களை, எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் எனக்கு ஒரு மனநிறைவு. நான் என் படைப்பில் சமரசங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை, ஒரு படைப்பாளிக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தரக்கூடியது இதுதான்.


வாசிப்பு நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லக்கூடியதாகவும் மனித மனத்தின் கூறுகளைப் பக்குவப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.
நாம் எதை எதையோ விடுதலை என மதிப்பீடு செய்கிறோம். அது அவரவரது மனநிலை சார்ந்தது என்றாலும், என்னளவில் வாசித்தல் மட்டுமே விடுதலையின் அடையாளம். கால ஓட்டத்தில் பின்தங்கி விடாதிருக்க வாசிப்புதான் உதவுகிறது. வாசிக்காத ஒருநாள் வாழாத ஒரு நாளாக மனத்தில் கனக்கிறது.

புத்தகங்களும் மனதும் முடிவற்றவையாக நீண்டுகொண்டிருந்தன என்று போர்ஹே எழுதுவார். நமக்கு முன்பாகப் புத்தகங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன, முடிவேயில்லாதபடி.

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்.

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை.


( கவிஞர் சல்மா எழுதிய "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைதொகுப்பில் இருந்து,நன்றி : காலச்சுவடு).


பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru