Thursday, November 12, 2009

I.D. இழந்த I.T. ஊழியர்கள்


அது புனே நகருக்கு சற்றுதள்ளி இருக்கும் ஒரு ஆசிரமம். ஒரு மலைஅடிவாரத்தில், ஒரு பெரும் நிலப்பரப்பை அழகான நந்தவனம்போல உருவாக்கிஇருந்தார்கள். ஆங்கங்கே சிறு, சிறு மண்டபங்கள் மொசைக் தரையுடன். தியானம் செய்வத்தற்கு ஏற்றாற்போல்.

சுமார் பத்து இளைஞர்கள் ஒரு புல்தரையில் வட்டமாக அமர்ந்துஇருக்க(நானும்தான்), நடுவே அமர்ந்துஇருந்த ஆசிரமத்தை சேர்ந்த,சுடிதார் அணிந்து இருந்த ஒரு பெண்மணி படுசரளமான ஆங்கிலத்தில் இப்படி பேசினார்.

"நம் சுவாமிகள் நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து வந்தார். ஆறு மாதம் இந்தியாவிலும், ஆறு மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிலும் இருப்பார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இமயமலையில் இருந்து இருக்கிறார். அதன்பிறகு, உருவாக்கியதுதான் இந்த ஆசிரமம் " என்றார் பக்தி பரவசத்துடன் அவர்.

"சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி உங்கள் மனதை பக்குவப்படுத்தும். மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும். ஒரு மழைநேரத்தில், சூடான டீ குடிப்பது போன்ற தியான பயிற்சி இது " என்று எப்படி சொன்னால் இளைஞர்களுக்கு புரியுமோ,பிடிக்குமோ அந்த மொழியில் தொடர்ந்தார் அவர்.

"இந்த பயிற்சி முகாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதுவும், உங்களுக்கு ஏற்றார்போல வார இறுதி நாட்கள் மட்டும் " என்று முடித்த அவர்."உங்களுக்கு வேறு எதாவது கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.

நாங்கள் சில கேள்விகளை கேட்டோம்.
'மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும்' இந்த வாக்கியம் எங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.
"சுவாமிகளை இன்று நேரடியாக சந்திக்க முடியுமா "

" நீங்கள் முதலில் இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும், பயிற்சி முடிந்ததும் அதன் இரண்டாம் கட்டமாக தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் இருக்கிறது. சுவாமிகளே உங்களுக்கு ஆசி வழங்கி, தீட்ச்சை தருவார்"

"இந்த பயிற்சி எத்தனை கட்டங்கள். ஆசிரமத்திற்கு தொடர்ந்து வர இயலுமா"

"ஸி. இது வேலைநெருக்கடியில் சிக்கிதவிக்கும் உங்களை போன்ற இளைஞர்களுக்காகவே உருவாக்கபட்ட சிறப்பு தியானமுறை. தீட்ச்சை எடுத்து கொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இங்கு வரலாம். நீங்கள் விரும்பும்வரை தங்கவும் செய்யலாம். இங்கு நல்ல வசதிகளுடன் உள்ள ரூம்கள் உள்ளன.அங்கே பாருங்கள். அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள்.இங்கு கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்து, தியானத்தில் ஈடுபடுகிறார்கள்"

அவர் சுட்டிகாட்டியதை கண்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்களை பார்த்துகொண்டிருந்த அந்த அமெரிக்க தம்பதிகள் எங்களை நோக்கி புன்னகையுடன் கைஅசைத்தார்கள்.

"இந்த வாரமே நாங்கள் உங்கள் பயிற்சி முகாமுக்கு வருகிறோம்"

"நல்லது. இத்தைகைய நல்ல விஷயங்கள் எளிதில் பிறருக்கு கிடைத்துவிடாது. சுவாமிகள் இங்கு இருக்கும்போது, இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்"

"உங்கள் பெயர்களை ஆபீஸ் ரூமில் பதிவு செய்யவேண்டும். இரண்டு நாள் தியான முகாமுக்கு கட்டணம் வெறும் 5000. சுவாமிகள் தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணவிரும்புவர்களுக்கு தனியாக 2000 கட்டவேண்டும் ".

நான், மற்றும் ஒரு நண்பரை தவிர மற்ற அனைவரும் பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டு, இரண்டு நாளும் 'சூப்பர் மீல்ஸ் மேன்' என்று சொன்னார்கள்.

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...அவர்கள் அனைவரும் ஐ. டி நிறுவன ஊழியர்கள் என்பதுதான்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆசிரமங்களுக்கும், யோகா போன்ற சென்டர்களுக்கும் வருமானத்தை தரும் கஸ்டமர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஐ. டி. நிறுவன ஊழியர்களே.

இடம் : பாண்டிச்சேரி. ஏ.சி வழியும் நட்சத்திர பார். நானும், செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பனும்.
விஸ்கியை உறிஞ்சியபடி அவன் சொன்னான்." நான் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்."

"ஏன் இப்படி டிசைட் பண்ணிட்டே. வேற ஒரு நல்ல வேலை கிடைசிடிச்சா".

"இல்லைடா. கைல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு. கும்பகோணத்துல சொந்தமா ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கபோறேன்".

வேலையை விடுவதற்கு அவன் சொன்ன காரணம், "பத்து பேரு பார்த்துக்கொண்டு இருந்த எங்க ப்ரோஜெச்ட்டுல இப்போ அஞ்சு பேரு மட்டும் பார்த்துகிட்டு இருக்கோம்.நைட் 12 மணிக்குதான் வீட்டுக்கு வரோம். காலையில 7 மணிக்கு திரும்பவும் வேலைக்கு வரச்சொல்றாங்க".

மேலும் தொடர்ந்த அவன்,"மூணு மாசமா நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியல. ரொம்ப டென்ஷன் டா. போன மாசம் ஒரு தடவை மட்டும் டிஸ்கோதே போன்னேன். அந்த .....(நடிகையை) பார்த்தேன். உன்னை போல் ஒருவன் இன்னும் பாக்கல. படம் எப்படி" என்றான்.

இது போன்ற, வேலை பிரச்சினைகளையும் தாண்டி, ஐ.டி ஊழியர்கள் சந்திக்கும் ஒரு ஜீவ,மரண போராட்டம்.....வேலை நிரந்தரமின்மை.சத்யம் நிறுவனம் 6400 பேருக்கு ஒரே நாளில் 'கல்தா' கொடுத்தது உங்களுக்கு தெரிந்ததே.

இன்னொரு சம்பவம்...அவ்வாறு வேலை இழந்த ஒரு நண்பருக்கு சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில்இருந்து 'இன்டர்வியு' அழைப்பு வந்தது. சுமார் இரண்டு மணிநேரம் பயணித்து, கிட்டத்தட்ட ஆறு மணிநேரங்கள் காத்திருந்தவருக்கு கடைசியாக கிடைத்த பதில் "உங்கள் 'இன்டர்வியு' தள்ளிவைக்க பட்டுவிட்டது. பிறகு தகவல் சொல்கிறோம்" என்பதுதான்.

இங்கே, இந்தியாவில் நிலை இப்படி போக, சென்ற வருடம் யு.எஸ். சென்ற என் இன்னொரு நண்பன் 'சாட்டில்' வந்தான்.அவன் சொன்னது " h1b விசாவுல இங்க செட்டில் ஆகலாம்ன்னு வந்தேன். ஆனா, இன்னும் நிரந்தர வேலை கிடைக்கல. இங்கே எல்லார் நிலையும் அதுதான். இந்தியாவுல வந்துதான் வேலை தேடனும்".

அமெரிக்காவில் வேலைஇல்லா திண்டாட்டம் கடந்த 6 மாதத்தில் கடுமையாக தலைவிரித்தாட துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக எழும்பி வந்த பொருளாதார நிலையில் , வேலை இழப்பு, வேலையின்மை காரணமாக மீண்டும் பெரும் பின்னடைவு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆ‌ரோக்‌கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது.

பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது.

இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப் பட்டுள்ளது

எல்லாரும் நினைத்து கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன், பகட்டான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை.

கூலி தொழிலாளியோ, பாரத பிரதமரோ....அவரவர் தொழில்களுக்கு உரிய பிரச்சினைகளுடனும், போராட்டங்களுடன்னும்தான் மனிதர்கள் எல்லாரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

கடைக்காரர் கமெண்ட்:
வயல்ல வேலை செய்யறவன் உடலாலே உழைக்கிறான். கம்ப்யூட்டர்ல வேலை செய்யறவன் மூளையால உழைக்கிறான். ஆனா, விவசாயிக்கு கிடைக்குற மனநிம்மதியில கால்வாசி கூட கம்ப்யூட்டர்காரங்களுக்கு கிடைக்கிறது இல்லை
பதிவு : இன்பா

2 comments:

ரோஸ்விக் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
மென்பொருள் துறையை சார்ந்தவர்கள் சமுதாய ஓட்டத்திலிருந்து விரும்பியோ, விரும்பாமலோ தனித்து இருக்கின்றனர். செல்வம் பெற்ற இவர்களுக்கு, சமுதாய ஆட்சி அமைப்புகளில் செல்வாக்கு என்பதே கிடையாது. இவர்களிடம் உள்ள பணத்தை மட்டுமே வைத்து இவர்களின் வெற்று மதிப்பு கணக்கிடப்படுகிறது.

வரதராஜலு .பூ said...

//வயல்ல வேலை செய்யறவன் உடலாலே உழைக்கிறான். கம்ப்யூட்டர்ல வேலை செய்யறவன் மூளையால உழைக்கிறான். ஆனா, விவசாயிக்கு கிடைக்குற மனநிம்மதியில கால்வாசி கூட கம்ப்யூட்டர்காரங்களுக்கு கிடைக்கிறது இல்லை//

இதுதான் நிதர்சனம்

 
Follow @kadaitheru