Tuesday, November 17, 2009

I.P.L. இருக்க பயமேன்?


"புதிய இளைஞர்களுக்கு ஐ. பி. எல் போட்டிகள் ஒரு வரப்பிரசாதமாக அமையும்" என்று இந்த போட்டிகள் அறிமுகப்படுத்தபட்ட போது, இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஆனால், அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம்...இந்த போட்டிகள் ஏற்கனவே அணியில் விளையாடும் சீனியர் வீரர்களின் அலட்சியத்திர்க்கும், அவர்கள் விரும்பும்போது சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெற்று, செட்டில் ஆவதற்கும் உதவும் என்பதே.

ஒரு ஐ. பி. எல் ஒப்பந்தம் கிடைத்தால் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் அதுவே போதுமானது. அவர் தனது திறமையை சர்வதேச போட்டியில் ஆடித்தான் நிரூபிக்கவேண்டும் என்று அவசியமோ, நிர்பந்தமோ இல்லை. அவர்கள் ஆடும் சர்வதேச அணியின் வெற்றி, தோல்விகள் அவர்களை பாதிக்காது. இது எந்த நாட்டு வீரருக்கும் பொருந்தும்.

நமது இந்திய அணி பற்றி ஒரு செய்தி..

ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மிகப் பரபரப்பான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புயலாக ஆடி 175 ரன்களை விளாசினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.இந்தப் போட்டியில் இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இதயம் பட படக்க போட்டியைப் பார்த்தனர். ஆனால் இந்தியாவின் தோல்வி அவர்களை நொறுங்கிப் போகச் செய்தது.

இந்தத் தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பழம்பெரும் பத்திரிக்கையாளரான பிரபாஸ் ஜோஷி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் ஒருபக்கம் சோகங்கள் உலவிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது கேப்டன் டோணி தலைமையில், தோல்வி குறித்து கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் பார்ட்டியில் கலந்து கொண்டு குடித்துக் கொண்டாட்டமாக இருந்துள்ளனராம்.இதுகுறித்து சேனல் நியூஸ் எக்ஸ் என்ற தனியார் தொலைக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் டோணியும், வீரர்கள் சிலரும் ஜாலியாக இருப்பது போல உள்ளது.அவர்களுடன் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.டோணியுடன் வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நேஹ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காணப்படுகின்றனர். குடி, கொண்டாட்டம், ஆட்டம், பாட்டமாக அந்த விருந்து நடந்தது என்கிறது அந்த செய்தி. இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் மும்பை கிரிக்கெட் வீரர் ராம்ஜி தரோத் கூறுகையில் "இந்தப் படங்கள் உண்மையானவை என்றால் அது மிகவும் சோகமானது. ஒரு கேப்டனுக்கு இப்படிப்பட்ட புகைப்படங்கள் நல்ல பெயரை வாங்கித் தராது" என்றார் அவர்.

இன்னொரு உதாரணம் , இங்கிலாந்து அணியின் பிளின்டாப். நன்றாக ஆடிகொண்டிருந்த அவர் திடிரென்று சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். அதேசமயம் தனது ஐ. பி. எல் ஒப்பந்தம் தொடரும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து கிரிக்கெட் இணையதளத்திற்கு இங்கிலாந்து முன்னாள் வீரரும் விமர்சக வர்ணனையாளருமான ஜெஃப் பாய்காட் வழங்கிய பேட்டியில்,, "ஐ.பி.எல். கிரிக்கெட்டோ, அல்லது வேறு கிளப் கிரிக்கெட்டோ பிளின்டாஃப் போன்ற வீரர்களுக்கு அதிக தொகை அளிக்க முன் வருகிறது என்றால், அது அவர் தேசிய கிரிக்கெட்டில் பெற்ற பெயரும் புகழானிலுமே தவிர வேறு காரணங்களுக்காக இல்லை, எனவே இங்கிலாந்திற்காக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற கிளப் அணிகள் அவரை பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.அவர் முதலில் தன் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு அவர் விருப்பம் போல் இருந்து கொள்ளட்டும் என்பதே என் கருத்து. அவர் விருப்பம்போல் இங்கிலாந்துக்கு ஆடுவதா வேண்டாமா என்று தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. முதலில், எந்த ஒரு கிரிக்கெட் வீரராயிருந்தாலும் நாட்டிற்காக விளையாடவேண்டும், இதனால்தான் அவர்கள் பெயரும் புகழும் பெறுகிறார்கள்.

தற்போது பிளின்டாஃபிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 25,000 பவுண்டுகள் தொகை தர முன்வந்துள்ளது. இது தவிர ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் 6 வாரங்களுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் ஈட்டப்போகிறார், மேலும் அவர் தற்போது ஒரு கிரிக்கெட் புத்தகம் எழுதியுள்ளார். அது செய்தித் தாள்களில் தொடராக வெளிவருகிறது.இதனால் அணியில் இருப்பதற்காகவே பெரிய தொகையை அளிக்கக் கூடாது. அவரால் அணி வெற்றி பெறுகிறது என்றால் ஊக்கத்தொகை இன்ன பிற பரிசுகளை அளிக்கலாம். இது இப்படியிருந்தால்தான் நல்லது". இவ்வாறு கூறியுள்ளார் ஜெஃப் பாய்காட்.

நியூசிலாந்து அணியின் ஜெகப் ஓரம் தான் சர்வதேச அணியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், ஐ. பி. எல் போட்டிகளில் மட்டும் விளையாடப்போவதாகவும் கூறிஇருந்தார்

"பணமழை பொழியும் ஐ.பி.எல். போன்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமானது, டெஸ்ட் கிரிக்கெட்டை 5 நாள் உடல் நோக விளையாட வேண்டியத் தேவையில்லை என்று வீரர்கள் முடிவு செய்யும் காலம் தூரத்தில் இல்லை" என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்.

துடிப்பான, இளம் வீரர்களும் சர்வதே அணியில் இடம் பெற்று தங்களை, நிருபிப்பதைவிட தங்களது ஐ. பி. எல் அணியில் விளையாடுவதையே முக்கியமாக,தங்களது இலக்காக நினைக்கதொடங்கிவிட்டனர்.நமது மக்களுக்கும் தேசிய உணர்வை விட, இந்த ஐ. பி. எல் அணி உணர்வு அதிகரிக்க தொடங்கிவிட்டது.

அறிமுகம் இல்லாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும் , நாடு மற்றும் மாநிலம் பாகுபாடின்றி அனைவரும் விளையாடும் ஐ. பி. எல் போட்டிகள் தேவையே. அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டை காப்பாற்றவேண்டுமானால், முதலில் ஐ. பி. எல் போட்டிகளுக்கான இடைவெளியை அதிகரித்து,உலக கோப்பை போட்டிகள் போல மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தினாலே போதுமானது

கடைக்காரர் கமெண்ட்:
ஐ. பி. எல் ஆட்டமானாலும் சரி, சர்வதேச ஆட்டமானாலும் சரி.
நல்லா ஆடினாதான் துட்டுன்னு ரூல்ஸ் வேணுங்க...





பதிவு : இன்பா

1 comments:

Loganathan - Web developer said...

நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. எதாவது பயனுள்ள கட்டுரையாக போடுங்க சார்.

 
Follow @kadaitheru