Sunday, November 8, 2009

கிராம கோயில்களும்,தலித்துக்களின் போராட்டங்களும்கோயில் என்னும் வெளி சார்ந்த தலித்துகளின் போராட்டங்கள் நெடுங்காலத்தவை. தொடர் போராட்டங்களால் சில வெற்றிகளையும் பல சமயங்களில் தோல்விகளையும் கண்டுள்ளனர். பெரும்பாலான சாதி மோதல்கள் கோயில் தொடர்பாகவே இருந்துள்ளன.

கோயிலைச் சார்ந்து ஏற்படும் போராட்டம் பிறஉரிமைகளைக் கோரியும் நீண்டுள்ளன. கண்டதேவி, உத்தபுரம், கந்தம்பட்டி, பாப்பாபட்டி போன்றவை நாமறிந்த சமகாலத்திய போராட்டங்கள்.

பொதுவாகவே தலித்துகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் 85 ஊராட்சிகளைச் சார்ந்துள்ள கோயில்களில் கள ஆய்வு ஒன்றை நடத்தியுள்ள எவிடன்ஸ் என்னும் அரசு சாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.

பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம். அறிவியல் பூர்வமான துல்லியத்தையும் கடந்தது சாதியின் நுட்பம் என்னும் வகையில் மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டியதாகவே யதார்த்தம் இருக்கும்.

வைதிகப் பண்புகளற்ற சிறுதெய்வக் கோயில்களை மையப்படுத்தி கிராமத்தின் ஆதிக்கச் சாதியினரால் ஏவப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டு அரசியல் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இந்த அனுபவம் தலித் இயக்கங்களின் புரிதலில், செயல்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களைக் கோருகிறதா?

நவீனக் கல்வியும் நகர்ப்புறப் பொருளாதாரமும் தலித்துகளின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தலித் சமூகம் அடைந்துள்ள விழிப்பு நிலையும் தனி அடையாளத்துக்கான அவர்களுடைய தொடர் போராட்டங்களும் ஆதிக்கச் சாதியினருக்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இந்தப் பதற்றமே பெருகிவரும் வன்முறைகளுக்குக் காரணம். கிராமப்புறச் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றுள்ள ஆதிக்கச் சாதியினர் அரசியல்ரீதியில் நிறுவிக் கொண்டுள்ள மேலாதிக்கத்தின் மூலம் தலித்துகளின் மீதான தொடர் வன்முறைகளைச் சட்டப் பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்

ஏற்கனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகளைப் பண்பாட்டுரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர். தொடர்ந்த வன்முறைகளின் மூலம் தமது பண்பாட்டு உரிமைக்காகப் போராடும் தலித்துகளை அச்சுறுத்தித் தமது சாதிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ, வைணவக் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின் மேல் தம் அரசியல் மேலாண்மையை நிறுவிக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதி அரசியல்சக்திகள் கிராமப்புற கோயில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் தலித்துகளுக்கு எதிரான பிராமணரல்லாத ஆதிக்கச்சாதியினரின் வன்முறை குறித்தும் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருகின்றனர். தமிழ் நாளேடுகள் தலித்துகளின் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை. தவிர்க்க முடியாமல் வெளியிடும்பொழுது அவற்றின் சாதியப் பின்புலத்தைத் தந்திரமாக மறைத்தும் திரித்தும் வெளியிடுகின்றன.

கடந்த காலங்களில் பார்ப்பன மேலாதிக்கத்திற்கெதிராகப் போராடிய சுயமரியாதை இயக்கங்கள் தலித்துகளின் மீதான சாதி இந்துக்களின் வன்முறைக்கெதிராக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தலித் இயக்கங்கள் மைய நீரோட்ட அரசியலின் பகுதிகளாக மாறிவரும் சூழலில் கிராமப்புற ஆதிக்கச் சாதியினரின் இத்தகைய வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களில் சமரசங்களற்ற நிலைபாடுகள் எடுக்கமுடியாத நிர்ப்பந்தம் உருவாகும் அபாயமுள்ளது.

வைதிகத்திற்கெதிராகச் சிறுதெய்வ வழிபாட்டை அடையாளப்படுத்திய தமிழ் அறிவுத் துறையினர் அதன் சாதிய அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. சாதியம் இந்தியத் தன்மை கொண்டது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அது வட்டாரரீதியில் வெவ்வேறு பண்புக்கூறுகளால் பிளவுபட்டிருக்கிறது என்பதும். ஒவ்வொரு இடத்திற்கும் காலத்திற்கும் சாதிகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப அதன் சமன்பாடுகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அதனதன் சமன்பாடுகளுக்கேற்ப சுயேச்சையான வழிபாட்டு முறைகள், சடங்குகள், தீட்டுக் கோட்பாடுகள் இருக்கின்றன. மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் வைதிக மயப்பட்ட பெருங்கோயில்களோ சமஸ்கிருதமயப்பட்ட வழிபாட்டு முறையோ இல்லை.

பிராமணியம் சிறுதெய்வ வழிபாடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் கருத்து முழுக்க ஏற்கத்தக்கதல்ல. பிராமணியம் இவற்றைத் தன்னுடைய பகுதியாக்கி வருகிறது. அதற்குச் சாதகமான சாதி உள்ளிட்ட கூறுகள் சிறுதெய்வ மரபில் இருக்கின்றன. சுயாட்சிமிக்க வட்டாரத் தன்மைகள்தான் இந்துயிசத்தின் ஆதாரம். வட்டாரரீதியிலான அடையாளங்களைக் காப்பாற்றிக் கொண்டு இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள முடியாது. வட்டாரரீதியிலான அடையாளங்களைக் குறித்த கவலை என்பது அடிப்படையில் சாதியைக் குறித்த அதைப் பாதுகாப்பது குறித்த கவலையே.

தன்னுடைய காலனிகளில் மத நடைமுறைகளுக்குள் தலையிட்ட பிரிட்டீஷார் இந்தியாவில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். கொள்கை வைதிக நம்பிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் சிறுதெய்வ மரபுக்கும் பொருந்தியிருந்தது.

1852இல் மத நடைமுறைகளிலுள்ள மூர்க்கத்தனமான வழிபாட்டு முறைகளைக் கைவிட வேண்டுமெனக் கூறிய பிரிட்டீஷாரின் அறிக்கை, 1854இல் அதில் சில மாற்றங்களை வலியுறுத்தியதோடு நின்றுவிட்டது. கிராமப்புற ஆன்மிக நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட சலுகை சாதியத்தின் தீமையை மறைப்பதற்கே பயன்பட்டது. சிறுதெய்வ வழிபாடுகளில் கடைபிடிக்கப்படும் சாதியக்கூறுகளைக் களைவதற்கு முயல வேண்டும். இக்கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொணரப்பட்டு அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான்
2008இல் தமிழக அரசு கொணர்ந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தைக் கிராமப்புற ஆதிக்கச் சாதியினருக்குச் சமத்துவத்தைக் கற்பிக்கும் விதமாய் விரிவுபடுத்த முடியும். கோயில், கோயில் சொத்து ஏலம் போன்றவற்றில் பொதுவிதிகளை உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும்விட தலித்துகள் மீதான சாதியப் பாடுபாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசின் சட்டரீதியிலான நடைமுறைகள் உண்மையான அக்கறையோடு இருக்க வேண்டும். இவற்றைச் செயல் படுத்துவதற்கான நெருக்குதல்களைத் தம் போராட்டங்களின் மூலம் அரசுக்கு அளிக்க வேண்டியதே தலித் இயக்கங்கள் முன்னுள்ள உடனடிக் கடமை.

(நன்றி: ஜூலையில் வெளியிடப்பட்ட மதுரை எவிடன்ஸ் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை மற்றும் காலச்சுவடு).

இது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.

'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள்.

கிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல.


கடைக்காரர் கமெண்ட்:
வட மாவட்டமும் சரி...தென் மாவட்டமும் சரி..கிராம மக்கள் தங்களுக்கு "வாழ்க"ன்னு கோஷம் போடுறவரைக்கும்தான் அரசியல்வாதிங்க பொழைக்க முடியும்.இதை நம்ம மக்கள் என்னைக்கு
புரிஞ்சிகிராங்களோ அன்னைக்குதான் எல்லாத்துக்கும் ஒரு முடிவு பொறக்கும்.பதிவு : இன்பா

1 comments:

லெமூரியன் said...

நம்ம மக்களுக்கு குடிக்க சாராயமும் கொஞ்சம் கரி சோறும் தேர்தலப்போ போட்ட வோட்டு கை மேலங்கற அரசியல் கட்சிகளின் கணிப்புகளை தவறாமல் மெயப்பித்துக்கொண்டிருக்கிற வரை மாற்றங்களுக்கு நமக்கும் தூரம் அதிகமே....இதைப் புரிந்து கொண்டவர்கள் தலைமை ஏற்று வழி நடத்த முன்வருவதில்லை.....முறையான தலைமை இன்றி தள்ளாட்டத்தோடு நமது இனம்...!

 
Follow @kadaitheru