உத்தரபிரதேசம் மாநிலம் தியோபந்த் நகரில் “ஜமாத் இ உலமா ஹிந்த்” என்ற அமைப்பின் சார்பில் தேசிய முஸ்லிம்கள் மாநாடு நடந்தபோது, இதில் 10 ஆயிரம் முஸ்லிம் மத தலைவர்கள் பல்வேறு துறை பிரதிநிதிகள் மற்றும் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் தேச பக்தி பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலில் ஒரு சில வரிகள் இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த பாடலை முஸ்லிம்கள் பாடவேண்டாம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. மாநாட்டில் பேசிய பலரும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள். இதில் கலந்து கொண்ட மேல்- சபை எம்.பி. மெகமூத் பதானியும் எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.
அடுத்ததாக வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம் மத முறைப்படி தடைவிதிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
"இந்தியாவில் மறுபடியும் வந்தே மாதரம் பாடல் பிரச்னை வந்துவிட்டது. வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் பிரிவினைவாதிகள். நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள்" என்று அறிக்கைவிடுத்தார் இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம. கோபாலன்.
முஸ்லிம்கள் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காரணங்கள்,
ஒன்று, இந்த பாடல் நாட்டை இறைவனாக்கி வணங்கசொல்கிறது. இஸ்லாமில் இறைவனை தவிர, வேறு எதையும், பெற்ற தயையும் வணங்குவது தவறு.
இரண்டு, இந்த பாடல் நமது நாட்டை துர்கா தேவியாக உருவகப்படுத்துகிறது.
1882 ஆம் வருடம், பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஆனந்த்மத் என்ற நாவலில் எழுதப்பட்டது "வந்தே மாதரம்" பாடல்.
இந்த நாவலின் கருவே, சில முஸ்லிம் அறிஞர்களின் எதிர்ப்புக்கு உள்ளது. காரணம், அது 18 ஆம் நூற்றாண்டில் நடந்த பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான இந்து மத சந்நியாசிகளின் போராட்டத்தை பேசுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பாகவே, 1923 ஆம் வருடம் இந்த பாடலை ஒரு பொதுவான,தேசிய பாடலாக ஏற்றுகொள்ள முஸ்லிம் மக்கள் மறுத்துஉள்ளனர். 1937 ஆம் வருடம், இந்திய தேசிய காங்கிரஸ் முதல் இரண்டு "மா துர்கா" என்று இல்லாத சரணங்களை ஏற்றுக்கொள்ள முஸ்லிம்கள் சார்பில் ஒப்புதல் பெற்றது.
இந்த பாடலை இரண்டு முறை, வெவ்வேறு நடையில் மகாகவி பாரதியார் அவர்கள்,தமிழில் மொழி பெயர்த்துஇருக்கிறார். (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)
முதலாம் மொழிபெயர்ப்பு
(இதில் மக்கள் தொகையை முப்பது கோடி என்கிறார் பாரதி).
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!
முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
(வந்தே)
நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!
(வந்தே)
தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே!
(வந்தே)
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ!
(வந்தே)
போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி!
(வந்தே)
புதிய(இரண்டாம்) மொழிபெயர்ப்பு
(இதில் மக்கள் தொகையை கோடி,கோடி என்று திருத்தம் செய்துஇருக்கிறார் பாரதி அவர்கள்).
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.
(வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ; உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே.
(வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
(வந்தே)
திருநிறைந்தனை, தன்னிகரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) .
தேசபக்திப் பாடலான வந்தேமாதரத்துக்கு, இஸ்லாமிய மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட, "பத்வா' குறித்து, இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர் ('பத்வா' - இஸ்லாமிய சட்டங்கள்).
பத்வா குறித்து தங்கள் நிலைப் பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித் துள்ளனர். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டக் குழுவின் தலைவர் மவுலானா கல்பே சாதிக், அனைத்திந்திய ஷியா தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் மிர்ஜா முகமது அத்தர், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்டக்குழுவின் தலைவர் ஷாயிஸ்தா அம்பேர் ஆகியோர் கூறியிருப்பதாவது:
"முஸ்லிம்கள் தாய் நாட்டை நேசிக்கின்றனர். வந்தே மாதரம் பாடலை மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஏற்றுக் கொண்டார். அதனால் அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். சம்ஸ்கிருத, இந்தி, உருது அறிஞர்கள் கூடி, "வந்தே' எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் கூற வேண்டும்.அச்சொல், "மரியாதை' என்ற பொருளில் கையாளப்பட்டிருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். "வழிபாடு' என்ற பொருளில் இருந்தால் அந்தப் பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது" இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் இந்தியில் இந்த பாடலை ஒரு ஆல்பமாக உருவாக்கி பெருமை சேர்த்தவர் ஆஸ்கார் தமிழர் ஏ.ஆர்.ரகுமான்.
2003 ஆம் வருடம் BBC நடத்திய கருத்துகணிப்பில், உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக அறிவிக்கபட்டது "வந்தே மாதரம்" .
கடைக்காரர் கமெண்ட்:
வந்தே மாதரத்தை ஒரு மதத்தோட பாடலா பாக்காதிங்க அய்யா..அது...நாட்டை பத்தி நம்ம இதயத்திலேந்து வர்ற..மனசார பாடற ஒரு பாட்டு. அவ்வளவுதான்...
பதிவு : இன்பா