Thursday, June 30, 2011

ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்



1806 ஜூலை 10.

அன்று - சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்பு - வேலூர்க் கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் நிலவு பிரகாசித்துக்கொண்டிருக்க, அதிகாலை 2 மணிக்கு இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் காவல் படையுடன் கோரமான கிளர்ச்சி ஒன்றில் இறங்கினார்கள். அலறல்களும் துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் அமைதியைச் சிதைக்க, அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டார்கள்; ஆங்கிலேயரின் பாசறைகளுக்குள் சுட்டார்கள்; அவர்களது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள். அத்தாக்குதலில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் இறந்தார்கள்.

14 மைல் தள்ளி ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பியின் படையினர் காலை 9 மணிக்கு ஏவிய எதிர்த் தாக்குதலில் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். சில பிரிட்டிஷ் தகவல்களின்படி, இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 800.

வரலாற்றுப் பதிவுகளில் அதிகம் இடம்பெறாத இந்த நிகழ்வுதான் காலனிய இந்தியாவில் வளர்ந்துவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடந்த முதல் பெரும் கிளர்ச்சி. இந்த நிகழ்வால் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு வேலை போனது.

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டிய, முதலைகள் நிறைந்த அகழியுடன்கூடிய வேலூர்க் கோட்டையை 1677இல் சிவாஜி கைப்பற்றினார்;

1768இல் அதைக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ராணுவத் தளமாக்கிக்கொண்டது. கிளர்ச்சி நடந்த சமயத்தில் அந்தக் கோட்டையில் மேன்மை தங்கிய மன்னரின் 69ஆம் ரெஜிமென்ட், 1ஆம் பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், 1ஆம் ரெஜிமென்ட், 2ஆம் பட்டாலியனின் மொத்தப் படையினர், 23ஆம் ரெஜிமென்ட் எல்லோரும் சேர்ந்து 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தார்கள்.

மோசமாக நடத்தப்பட்டது, முன்பிருந்த அந்தஸ்தை இழந்தது, மிகச் சுமாரான சம்பளம் ஆகியவற்றால் தக்காணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்கனவே அதிருப்தி எழுந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென நடந்த அந்த ஆக்ரோஷத் தாக்குதலுக்கு வேறு சில தூண்டுதல்கள் இருந்தன.

சிப்பாய்களுக்காகச் சர்ச்சைக்குரிய புதிய தலைப்பாகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள் அதை வெள்ளைக்காரன் தொப்பியாகத்தான் கருதினார்கள். நெற்றியில் ஜாதி அடையாளங்களை வரைந்துகொள்ளுதல், கடுக்கன் அணிதல், தாடி, மீசை வைத்துக்கொள்வது ஆகியவை பற்றிப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ராணுவக் கட்டுப் பாட்டு நெறிமுறைக்குச் சென்னை ராணுவத்தின் (Madras Army) தலைவர் சர் ஜான் க்ராடாக் 1806 மார்ச் 13 அன்று ஒப்புதல் வழங்கினார்.

திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் - 12 மகன்களும் 8 மகள்களும் - கிளர்ச்சிக்கு அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பலத்தைக் கொடுத்தார்கள். 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைவிட்டுப் போனதிலிருந்து இவர்கள் வேலூர்க் கோட்டையின் பல்வேறு மஹால்களில் தங்கியிருந்தார்கள். தங்கள் உன்னத அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாலும் வெளித் தொடர்பு இல்லாமல், அரண்மனைச் சுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இக்கிளர்ச்சியைப் பதிவுசெய்த முதல் வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். ஃபர்னெல் என்பவர். த ம்யூட்டினி ஆஃப் வேலூர் என்னும் அவரது புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ஆர்க்கைவ்ஸில் இன்றும் எஞ்சியிருக்கின்றன.

3,000க்கும் மேற்பட்ட மைசூர்க்காரர்கள் (பெரும்பாலும் 'முகம்மதியர்கள்') வேலூர் இளவரசர்களின் இருப்பிடமான பின், வேலூரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்று ஃபர்னெலின் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பின் கிழக்கிந்தியக் கம்பெனி பல 'உள்நாட்டுச் சிப்பாய்களை' வேலையில் சேர்த்துக் கொண்டது. இவர்களில் திப்புவின் முன்னாள் சிப்பாய்கள் - குறிப்பாக அதிகாரிகள் - கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். திப்புவின் வாரிசுகள் வேலூர்க் கோட்டையில் இருந்தது அவர்கள் தங்கள் முன்னாள் எஜமானர்களின் போராட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

கிளர்ச்சி தொடங்கச் சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து வந்த முகம்மதியப் பக்கிரிகள் சிலர் வேலூரின் தெருக்களிலும் கடைவீதிகளிலும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடி திரிந்துகொண்டிருந்தார்கள். நாடோ டிகளாக வாழ்ந்த அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஹோல்கர்கள், சிந்தியாக்கள், ஜெய்ப்பூர் மன்னர்கள் ஆகிய பல்வேறு இந்திய ராணுவங்களுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கூலிப்படையாகச் செயல்பட்ட பக்கிரிகளுக்குக் கட்டுப்பாடோ டு இயங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தில் இடமிருக்கவில்லை. 1805லிருந்து வேலூரில் காணப்பட்ட பக்கிரிகள் கிளர்ச்சியைத் தூண்டினார்கள்.

திப்புவின் முன்னாள் கூட்டாளிகளான அப்துல்லா கான், பீர்ஜாதா ஆகியோரின் தலைமையில் பக்கிரிகள் வேலூரில் ஆங்கிலேயர்களைக் கேலிசெய்தும் அவர்களுக்கு அழிவுக் காலம் நெருங்கிவிட்டதாகப் பிரகடனம் செய்தும் பொம்மலாட்டங்களை நடத்தினார்கள்; புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக, ஜாதி மற்றும் மத "மாசுபாட்டிற்கு" வழிவகுக்கும் வகையில் தோலாலான தலைப்பாகைப் பட்டையும் (cockade) மார்பில் சிலுவை போலிருந்த turnscrew ஒன்றையும் அணிந்ததற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏளனம்செய்தார்கள். இதனால் காலப்போக்கில் எல்லாச் சிப்பாய்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பக்கிரிகள் அறிவித்தார்கள். மத மாற்றத்தை இந்துச் சிப்பாய்களைவிட முன்பு ஆளும் வர்க்கமாக இருந்த முகம்மதியச் சிப்பாய்கள் வெறுத்ததுபோல் தெரிந்தது.

லண்டனின் இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட மாயா குப்தாவின் ஆராய்ச்சிப்படி, 1806 மே 6 அன்று 4ஆம் ரெஜிமென்ட்டின் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த 29 சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தார்கள். தங்கள் எதிர்ப்பை மறுநாளும் தொடர்ந்த அவர்கள், தலைப்பாகை அணியாமல் கைக்குட்டை போட்டுக்கொண்டார்கள்; ஆங்கிலேய அதிகாரிகளை 'நாய்கள்' என்று ஏசினார்கள்.

கீழ்ப்படியாத சிப்பாய்கள் சென்னையில் சிறைவைக்கப்பட்டு ராணுவ விசாரணை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவித்து எதிர்ப்பைக் கைவிட்ட சிப்பாய்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்த இரண்டு ஹவில்தார்கள் - (ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து) - 900 கசையடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஜூன் மாதம் வேலூர் அருகிலுள்ள வாலாஜாபாதிலும் தலைப்பாகையை எதிர்த்துப் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது.

ஜூன் 17 அன்று 1ஆம் ரெஜிமென்ட் சிப்பாய் முஸ்தஃபா பெக் கிளர்ச்சி நடக்கத் திட்டம் தீட்டப்படுவது பற்றித் தலைமை அதிகாரி லெப். கர்னல் ஃபோர்ப்ஸிடம் போய்ச் சொன்னார். ஃபோர்ப்ஸ் இந்திய அதிகாரிகளிடம் அது குறித்துக் கருத்துக் கேட்க, அவர்கள் அது சாத்தியமில்லை என்று சொன்னதோடு பெக்கிற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். பெக் இடமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாலும், பிறகு அவருக்கு 7,000 ரூபாய் சன்மானமும் ஒரு சுபேதாருக்குரிய ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் - குறிப்பாக அதிகாரிகள் - மைசூர் ஆட்சியை மீண்டும் நிறுவும் நோக்கத்தில் போலிகர்கள் (தக்காண நிலப் பிரபுக்கள்), ஹோல்கர்கள், மராட்டியர்கள், ஆட்சியை இழந்த ஹைதராபாத் மன்னர்கள் ஆகியோர் மட்டுமின்றிப் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடனும் தொடர்புவைத்திருந்ததாகப் பின்னாளில் கணிக்கப்பட்டு சீக்ரெட் சண்ட்ரீஸ் (Secret Sundries) என்னும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகளில் பெரும் பாலானவற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் ஜூலை 14ஐத்தான் ஒருங்கிணைந்த கிளர்ச்சிக்கான தேதியாகக் குறித்திருந்தார்கள்; ஆனால் பெக்கின் துரோகம் கிளர்ச்சியை அதற்கு முன்பே நடத்தச் செய்தது.

திப்புவின் மூன்றாம் மகன் மொஹியுதீன், நான்காம் மகன் மொய்ஸுதீன் தவிர மூத்த மகன் ஃபத்தே ஹைதரும் அந்தக் கிளர்ச்சியைச் சிந்தித்து உருவாக்கிச் செயல்படுத்திய முக்கியமான நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜூலை 10 அன்று கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாள்களில் கோட்டையில் திப்பு சுல்தானின் கொடியை ஏற்றினார்கள். கிளர்ச்சி நிறைவு பெற்ற பின் சிப்பாய்களின் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும் என்று மொய்ஸுதீன் உறுதியளித்தார்.

வேலூர்க் காவல் படையின் தலைமை அதிகாரி கர்னல் ஃபேன்கோர்ட்டும் 23ஆம் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கெராஸும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட, பல அதிகாரிகள் தப்பித்துச் சென்று ஒளிந்துகொண்டார்கள்; மிக அருகில் ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளத்திற்குத் தகவல் அனுப்பினார்கள்.

படுகொலை முடிந்து கோட்டையைக் கைப்பற்றியதும் சிப்பாய்கள் திருடுவதில் இறங்கினார்கள். ஆங்கிலேயர் வசிப்பிடத்தையும் (paymaster's) அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். சுமார் 7 மணியளவில் பொது மக்கள் பலரும் கோட்டைக்குள் நுழைந்திருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஷ் மதிப்பீட்டின்படி அந்தக் கிளர்ச்சியில் 5,48,429 பகோடாக்கள் (தங்க நாணயங்கள்) திருடப்பட்டன. சிப்பாய்களும் பொது மக்களும் சூறையாடிக்கொண்டிருக்கையில் ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் தலைமையில் 19ஆம் டிராகூன்ஸும் 7ஆம் குதிரைப் படையும் கோட்டைக்குள் நுழைந்தன.

கோட்டையின் நான்கு வெளி வாயில்களில் மூன்று கவனிப்பாரற்று இருந்ததால் ஆங்கிலேயப் படைகளுக்குக் கோட்டைக்குள் நுழைவது சிரமமாக இருக்கவில்லை. கர்னல் கென்னடி கூடுதல் படையினருடன் வந்ததாலும் இந்தியச் சிப்பாய்களின் ஆயுத பலம் குறைந்துவந்ததாலும் கிளர்ச்சியாளர்கள் கோட்டையை எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றினார்களோ அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயப் படைகள் கோட்டையை மீட்டன. எட்டு மணி நேரத்திற்குள் அத்தனை அமர்க்களமும் முடிந்துவிட்டிருந்தது. கில்லெஸ்பியும் அவரது ஆட்களும் இளவரசர்களையும் திப்பு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பிழைத்துப் போக விட்டார்கள்; 1807 ஜனவரி வாக்கில் இளவரசர்களின் மொத்தப் பரிவாரமும் தொலைதூரத்திலிருந்த கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது.

787 சிப்பாய்கள் தப்பித்துப்போனதாகவும் 446 சிப்பாய்கள் பெரும்பாலும் சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்டார்கள் எனவும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகள் சொல்கின்றன. "தண்டனை விதிக்கப்பட்ட ஆறு கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளால் சிதறடிக்கப்பட்டனர், ஐவர் மஸ்கெட்களால் சுடப்பட்டனர், எட்டு பேர் தூக்கிலிடப்பட்டனர்" என்று சீக்ரெட் டெஸ்பேட்ச்சஸ் என்னும் ஆவணத்தின் 33ஆம் தொகுதி தெரிவிக்கிறது. இந்தத் தண்டனைகள் கோட்டையின் வடக்குப் பகுதியில் நிறைவேற்றப்பட்டன.

வட ஆற்காடு மாவட்டக் கையேட்டில் [Manual of the North Arcot District (1898)] மாஜிஸ்திரேட் ஆர்தர் சி. ஃபாக்ஸ் அடக்க முடியாத சந்தோஷத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்கு ஆவலுடன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, கழுகுகள் பல துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன. பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் கூவினார்கள்."

இது போன்ற காட்சிகள் தென்னிந்தியர்களின் மனத்தில் ஏற்படுத்திய பயங்கரப் பாதிப்பில்தான் அவர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள்.

"வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் வர்ணித்த 'ஆதி தேசியவாதம்' (proto-nationalism) என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். ஆதி தேசியவாதத்தில் மொழி, இனம், பழக்க வழக்கங்கள், உடை முதலானவற்றில் உள்ள வேறுபாடுகளால் எதிர்ப்பு கிளம்புகிறது" என்கிறார் அதிகாரபூர்வமற்ற வேலூர் இருநூறாண்டு நினைவுக் குழுவிற்காக வேலூர்க் கிளர்ச்சியைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிகுமார்.

இந்தச் சம்பவம் ஏன் நாட்டு மக்கள் மனத்தில் ஓர் ஓரத்திலேயே இருந்திருக்கிறது என்று சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்:

"தமிழ்நாடு எப்போதுமே தேசியவாத வரலாற்று நூல்களில் ஓர் ஓரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. வடக்கும் வங்காளமுமே பெருமளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 1920களில் பெரியார் தலைமையில் தமிழ்நாடு மேற்கொண்ட "தேசிய எதிர்ப்பு"ப் போக்கு, அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க.வின் எழுச்சி ஆகியவை அப்படி ஓரங்கட்டப்படுவதற்கு ஒரு நியாயத்தைக் கொடுப்பது போலிருந்தன. வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மௌனத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்." வேலூர்க் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஒரு ராணுவக் கிளர்ச்சியாகவே இருந்தது என்கிறார் வேங்கடாசலபதி.

"அது பாசறைகளில் தொடங்கிப் பாசறைகளில் மட்டுமே நடந்தது. ஆனால் 1857 சம்பவம், ஒரு கிளர்ச்சியாகத் தொடங்கி வட இந்தியாவில் பல இடங்களில் பரவி ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியானது" என்கிறார் அவர்.



வேலூர்க் கோட்டையில் கிளர்ச்சிக்கான திட்டம் தோன்றிய இடமான திப்பு மஹால்,இப்போது இந்த இடம் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதி ஆகியிருக்கிறது. முன்பு இங்குத் தமிழகக் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றுவந்தார்கள் - ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த இடத்தில் இவர்கள் குளித்துக்கொண்டும் மலம் கழித்துக்கொண்டும் இருந்தார்கள்.


வேலூர்க் கோட்டையில் இன்னொரு கிளர்ச்சியும் நடந்தது. திப்பு மஹாலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 43 பேர் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி அகழி வழியாக 153 அடி நீளச் சுரங்கம் ஒன்று தோண்டித் தப்பித்தார்கள். தமிழகக் காவல் துறை அதில் அவமானப்பட்டுத் திப்பு மஹாலில் யாரும் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.

வேலூர்க் கிளர்ச்சியின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமின்றித் தொடங்கும் இந்தத் தருணத்தில், வரலாறு படைக்கப்பட்ட அந்த இடத்தை எட்டிப் பார்க்கக்கூடத் தமிழகப் பொதுமக்களுக்கு வாய்க்காமல் போகலாம்.

(நன்றி : அவுட்லுக் மற்றும் திரு.திவாகர் ரங்கநாதன்)

3 comments:

JesusJoseph said...

நல்ல தகவல்!


நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

Thabo Sivagurunathan said...

நல்ல பதிவு !
http://oruulaham.blogspot.com/

Anonymous said...

I am interested in this issue and I would be grateful if you'll post something new on the same topic. kamagra jelly 100mg buy kamagra [b]kamagra soft [/b]

 
Follow @kadaitheru