Friday, June 3, 2011

எனக்கு பிடித்த சில காதல் கதைகள் - அசோகமித்திரன்



காதல் கதைகளுடன் தமிழ் சினிமா தொடங்கவில்லை. புராணக் கதைகளில் இரு பாலருக்குள் ஈர்ப்பு இருந்தாலும் அதைக் காதல் என்று கூற முடியாது.

ஆனால் காதலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது?

'அம்பிகாபதி' திரைப்படத்தில் காதல்தான் ஆதார சுருதி. அரசனிடம் நிறைய அதிகாரம் குவிந்திருந்தாலும் அவன் எளியோரும் அணுகக்கூடியவனாக இருந்திருக்கிறான். காதலன்-காதலியின் வர்க்க பேதம் அவனைச் சங்கடப்படுத்தியிருக்கக்கூடும் என்றாலும் கீழ் வர்க்க அம்பிகாபதி அவனுடைய நூறாவது பாட்டையும் பேரின்பச் சுவை கொண்டதாக இயற்றியிருந்தால் அரசன் தன் மகளை அரசவைக் கவிஞரின் மகனுக்கு மணமுடித்திருப்பான்.

சாதாரணமாக இருவருக்குள் இருக்கக்கூடிய பிணைப்பைவிட அம்பிகாபதி-அமராவதி பிணைப்பு, கடும் விளைவுகளையும் எதிர்கொள்ள இருவருக்கும் மன உறுதி கொடுத்திருந்தது. இந்த மன உறுதியைக் காதலாகச் சொல்லலாமா? அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அமராவதி என்னவானாள்?

தமிழ் சினிமாவில் ஆண்-பெண் இணைப்பை மரபு வழி உறவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 'சாவித்திரி' என்ற படத்தில் சாவித்திரி தன் கணவன் உயிரைத் திரும்பப் பெற எமனைத் தொடருகிறாள். அவளுடைய கணவனின் உயிரைத் திரும்பப் பெறும் நோக்கத்தில் அவள் இயங்கியது காதலாலா?

சாவித்திரியும் சத்தியவானும் சேர்ந்து ஓராண்டு வாழ்ந்தாலும் அது சத்தியவானின் முதிய பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதில்தான் கழிகிறது. அதிலும் நடுக் காட்டில் வசதிகளற்ற இடத்தில் அவன் எப்படி அடுப்பை மூட்டினான்? தானியங்கள் எங்கிருந்து கொண்டுவந்தான்? சத்தியவானின் ஒரே பணி விறகு கொண்டுவருவது. இதற்கு நடுவில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும்?

தமிழ் சினிமாவின் முதல் சமூகக் கதைகளாக 'மேனகா'வையும் 'சதி லீலாவதி'யையும் குறிப்பிடுகிறார்கள். எல்லாமே செவி வழிச் செய்திகள்தான். 'அம்பிகாபதி'யில் இருந்த அளவு காதல் இருந்திருக்குமா? சந்தேகந்தான்.

காதலர்கள் எப்படி இருப்பார்கள்? ஜெமினி கணேசனும் சாவித்திரியும் போல இருப்பார்களா? நானறிந்து தமிழ் சினிமாவில் காதல் சில கணங்களாகத்தான் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அவை மௌனமான கணங்கள்.

'சிவகவி' என்றொரு படத்தில் ஒரு குருவிடம் பாடம் கற்கும் ஒரு மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே ஈர்ப்பு இருக்கிறது. மாணவி ஓர் அரசனின் மகள். அவள் அகம்பாவத்தில் ஒரு துறவிமீது தண்ணீர் வாரியடிக்க அவள் முகம், உடலெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் வாரிக் கொட்டிவிடுகின்றன. மாணவனுக்கு அருள் இருக்கிறது. அவன் அவளைக் குணப்படுத்திவிடுகிறான். பின் திருமணம். அவன் பொருள் ஈட்டாமல் இருப்பதை மனைவி குத்திக் குத்திப் பேசுகிறாள். இதெல்லாம் காதலுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதல்ல. காதல் என்றவுடனேயே தெய்வீகம் என்றொரு சொல்லையும் கூறிவிடுவார்கள். இந்தத் தெய்வீகத்தையும் எளிதில் இலக்கணப்படுத்திவிட முடியாது.

ஆனால் காதல் என்றால் ஒருவனை ஒருத்தியோ ஒருத்தியை ஒருவனோ எல்லா நேரமும் நினைத்து உருகுவதானால் 'மகா மாயா' என்றொரு தமிழ்ப் படத்தை உதாரணம் காட்டலாம். இது முழுக்க முழுக்கக் கற்பனைக் கதை என்கிறார்கள்.

இதில் ராஜா, ராணி, இன்னொரு ராஜா, ராணி என்று வந்தாலும் சரித்திரச் சான்று கிடையாது. ஓர் அரசன் இன்னொரு நாட்டு அரசியை அடைந்தே தீருவது என்றிருக்கிறான். இதற்காகப் போர், படுகொலை, சிறைச்சாலை, சித்திரவதை என எதற்கும் தயாராக இருக்கிறான். அந்த இன்னொரு ராணி இறந்துவிடுவதில் கதை முடிகிறது. இது 1944இல் வந்தது. இப்படியொரு கதையையும் பாத்திர வார்ப்பையும் உருவாக்கியவர் இளங்கோவன். படம் அன்றைய வெற்றி நடிகர்களாகிய பி.யூ. சின்னப்பா, கண்ணம்மா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் பங்குகொண்டது. பாடல்கள் கம்பதாசன். டைரக்ஷன் டி.ஆர். ரகுநாத். அறுபது ஆண்டுகளாக இப்படியொரு துணிச்சலான படம் உருவாக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். நிஜ வாழ்க்கையில் இப்படி நேர்ந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

காதலுக்கு இலக்கியத்தில் எடுத்துக்காட்டாகக் கூறுவதில் ரோமியோ-ஜூலியட் கதை முக்கியமானது. ஷேக்ஸ்பியரின் இலக்கிய வாழ்க்கையில் இந்தக் கதையின் நாடக வடிவை அவருடைய ஆரம்ப காலப் படைப்புகளில் ஒன்றாகக் கூறுகிறார்கள்.

ரோமியோ, ஜூலியட் இருவருக்கும் பதினாறு வயதுக்கு மேல் ஆகவில்லை. அதாவது இது ஒரு பாலப் பருவ ஈர்ப்புக் கதை. பெரும் சோகத்தில் இது முடிந்தாலும் இது ஒரு பக்குவமான மனிதர்களின் நடவடிக்கை என்று கூற முடியாது. ரோமியோ ஜூலியட் என்ற பெயரியேயே தமிழில் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்றாலும் தியாகராஜ பாகவதரையும் எம்.ஆர். சந்தான லட்சுமியையும் 'அம்பிகாபதி'யின் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் 'ரோமியோ ஜூலியட்' என்ற ஹாலிவுட் படம் சென்னையில் ஒரு வாரம் ஓடியபோது தினமும் பார்க்கச் சொன்னதாகக் கூறுவார்கள். 'ரோமியோ ஜூலியட்' நாடகம் (திரைப்படம்) கொண்ட புகழ் பெற்ற 'பால்கனி' காட்சி 'அம்பிகாபதி'யில் உண்டு. மீண்டும் இளங்கோவன். ஷேக்ஸ்பியர் இளங்கோவனின் சொற்களில் முழு நிலாவாக ஒளி வீசினார். ரோமியோவின் சொற்களில் ஜூலியட் கதிரவன்!

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இலக்கியங்களில் காதல், திருமணம் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் ஓரளவு பக்குவம் பெற்ற பிறகே நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களிலும் இதுதான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்திய வாழ்க்கையில் பால்ய மணம், பெற்றோர் பெரியவர்கள் ஏற்பாடு என்றுதான் இருந்திருக்கிறது. தொடர்ந்து அன்னியர் படையெடுப்புகள், பெண்கள் கடத்தல் போன்றவை பால்ய மணத்துடன் 'சதி' என்னும் பழக்கத்தையும் கொண்டுவந்துவிட்டன. அலாவுதீன் கில்ஜி சித்தூர்க் கோட்டையைத் தாக்கியபோது பத்தாயிரம் ரஜபுதனப் பெண்மணிகள் பெரிய நெருப்பு மூட்டி அதில் விழுந்து மடிந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

தென்னிந்திய மத்திய கால வரலாற்றில் கர்ண பரம்பரையாகவும் பெரும் காதல் கதைகள் உருவாகவில்லை என்று தெரிகிறது. தமிழ்த் திரை மற்றும் மேடையில் பெரிய 'காரியங்கள்' நேரவில்லை என்பது ஒரு காரணமாயிருக்கக்கூடும். யதார்த்தத்தில் ஆண் மற்றும் பெண் ஒருவருக்காக அனைத்தையும் துறப்பது, பழியேற்பது, மரணமடைவது என மட்டும் இருந்திருக்கிறது.

டைரக்டர் ஸ்ரீதர் படைப்பாகிய 'கல்யாணப் பரிசு' அன்றும் இன்றும் ஒரு தமிழ்த் திரைப்படக் காதல் ஓவியமாகக் கொண்டாடப்படுகிறது. படம் திரையில் ஓடும்போது எல்லோரும் பாத்திரங்களுடன் ஒன்றிப் போய்விடுகிறார்கள்.

அதில் இரு சகோதரிகள் ஒருவனைக் காதலிக்கிறார்கள், அதாவது விரும்புகிறார்கள். யதார்த்தத்தில் அந்த இளைஞன் இருவரையும் மணந்துகொள்வது சர்வ சகஜமான நிகழ்ச்சியாகக் கருதப்படும். ஒருதாரச் சட்டம் வந்த பிறகு கூடப் பலர் இரு மனைவிகள், மூன்று மனைவிகளோடு பொது வாழ்க்கையில் பங்குகொள்வது வியப்பையளிப்பதில்லை. அந்த மனிதர் முதல் மனைவியைவிட இரண்டாவது மனைவியைக் காதலிப்பதாகக் கொள்ளலாம். இரண்டாவதைவிட மூன்றாவது மனைவியை இன்னும் அதிகமாகக் காதலிப்பதாகக் கொள்ளலாமா? காதலென்பது வளர்ந்தும் குறைந்துபோகும் குணமுடைத்ததா?

'கல்யாணப் பரிசு' என்ற திரை 'ஓவிய'த்தை மீண்டும் விவாதிப்போம். அந்த இளைஞன் தங்கையோடு ஓடியாடிப் பாட்டுப் பாடி உற்சாகமாயிருக்கிறான். அவனை மூத்தவளும் விரும்புகிறாள் என்று அறிந்தவுடன் கடற்கரையில் ஓடியாடிய இளையவள் ஒதுங்கிக்கொள்வதோடு அந்த இளைஞன் அக்காவை மணம்செய்து கொள்ள வற்புறுத்தி அந்த மணத்தையும் நடத்திவிடுகிறாள்! இது என்ன காதல்? என்ன தியாகம்? அவள் விரும்பும் இளைஞன் அவளுக்குக் கிட்டமாட்டான் என்று அவளே தீர்மானித்து, அவனுக்குத் தண்டனையளிப்பதுபோல அவன் விரும்பாத ஒருத்தியை அவனுக்கு மனைவியாக்கிவிடுகிறாள். இது பரிசு அல்ல, தண்டனை என்றே தோன்றுகிறது. அவள் காதலைத் தியாகம் செய்கிறாள், ரொம்ப சரி. ஏன் பிடிக்காத ஒருத்தியை அவன் தலையில் கட்ட வேண்டும்? எவ்வளவு நாட்களுக்கு இந்த ரகசியத்தைக் கட்டிக்காக்க முடியும்? உண்மை தெரிந்தவுடன் மூத்தவள் மனம் என்ன பாடுபடும்?

தமிழ் சினிமாவில் இந்த முக்கோணக் 'காதல்' எவ்வளவு படங்களில் வந்துவிட்டது! தியாகம் செய்கிறேன் பேர்வழி என்று இன்னொருவரை வாழ்நாள் முழுதும் திண்டாடவைப்பது எவ்வகைக் காதல்?

வங்காள நாவலாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜி 1916இல் 'தேவதாஸ்' நாவலை வெளியிட்டார். அவர் அதற்குப் பின் உயிருடன் இருந்த இருபது ஆண்டுகளில் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கில் நிஜ தேவதாஸ்கள் ஏற்பட்டுவிட்டனர்.

சரத்சந்திரரே மிகவும் மனம் வருந்தினார். "இப்படி விளைவுகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அந்த நாவலை எழுதியே இருக்க மாட்டேன்" என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் 'தேவதாஸ்' பல முறை தோன்றிவிட்டான். காதலுக்கு மிகவும் தவறான உதாரணம் தேவதாஸ். குடும்ப கௌரவம், தந்தையின் விருப்பம் - இதற்காகக் காதலைத் தியாகம் செய்தால் என்ன நியாயம்? ஒரு பெண் அவனுக்காகத் தன்னுடைய பணம், வாழ்க்கை முறை, அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கிறாள். அவளுடைய காதலுக்குக் கதாநாயகன் என்ன பதில் தருகிறான்? 'தேவதாஸ்' தமிழ்த் திரைப்படமாக இரு முறை வந்தது; இந்தக் குடும்ப கௌரவம், ஏழை-பணக்காரன் என்ற அம்சங்கள்கொண்டு டஜன் கணக்கில் திரைப்படங்கள் வந்துவிட்டன. பல படங்கள் பெரும் ஆதரவைப் பெற்றன. காதல் தோல்வியை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு குடிகாரனாவது மனித கண்ணியத்துக்கு நியாயம் செய்வதாகாது.

பாரதிராஜா படத்தில் காதல் படும் பாடு விவாதிக்கத்தக்கது. அவருடைய கதாநாயகிகள் காதலனை இழக்கும் நிர்ப்பந்தம் திரும்பத் திரும்ப நேருவது எல்லாருக்கும் காதல் திருமணத்தில் நேருவதில்லை. ஆனால் தோல்வி என்றால் ஏன் இன்னொரு அப்பாவியை மணந்துகொண்டு அந்த நபரைத் தண்டிக்க வேண்டும்?

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் எடுத்த எடுப்பிலேயே அத்திரை அனுபவம் யதார்த்தத்திலிருந்து விலகியது என்று தெரிவிக்கப்பட்டு விடும். கோஷ்டி நடனங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படும். காதல் என்ற சொல்லை வைத்து தேசம், கோட்டை என்ற தலைப்பைக் கொண்ட இரு படங்கள் நிறைய ஆதரவுபெற்றன. அப்படங்களின் கதையடிப்படையை ஒத்துக்கொண்டால் இரண்டுமே உருக்கமான படங்கள். 'மின்சாரக் கனவு' என்ற படமும் 'ஒரு தலைக் காதல்' என்ற படமும் இருபது ஆண்டு இடைவெளியில் வெளிவந்தாலும் 'காதில் பூ' என்று கருதக்கூடும் ஆதாரத்தைத் தலையில் சூட்டிய பூவாகக் கருத வேண்டும். அப்போது அவை நல்ல காதல் கதைகள்தான். கு.ப.ரா.வின் 'திரை' என்ற சிறுகதை மூன்று நான்கு பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால் மூன்று மணி நேரத் திரைப்படம் எதுவும் அச்சிறுகதையை அணுகக் கூடிய அளவில் இல்லை.

நூற்றாண்டுகளாக ஒரு மகத்தான காதல் கதை பல ஐரோப்பிய மொழிகளில் உலவிவருகிறது. அது 'சிரானோ டி பெர்ஜராக்' என்ற பிரெஞ்சு நாடகம். நூற்றுக்கணக்கில் இதற்குத் தழுவல்கள். இந்தியில் 'சாஜன்' என்று வெளிவந்த வெற்றிப் படத்தைத் தமிழில் பாலச் சந்தர் 'டூயட்' என்றொரு வெற்றிப் படமாக மாற்றினார். 'சிரானோ' எழுதிய எட்மண்ட் ரோஸ்டாண்டு அவருடைய கல்லறையில் புன்னகை புரிந்துகொண்டிருப்பார். அந்த நாடகம் செய்யுள்களும் நிகழ்ச்சிகளும் கொண்டது. ஒரு நடிகனுக்கு 'ஹாம்லெட்' வேடம் எவ்வளவு மகத்தான சவாலோ அதே அளவுக்கு 'சிரானோ' வேடம் கருதப்படுகிறது.

'ஐ லவ் யூ' என்று சொல்வது எளிதாக இருக்கிறது. "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று தமிழில் சொல்வது சரித்திரக் கதைகளில் சாத்தியமாகலாம். ஆனால் சம காலத்துக் காட்சிகளைப் பயன்படுத்தி ஒரு நடிகனோ நடிகையோ 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வது சங்கடமானது. இந்தக் கதா நாயகர்கள் ஆடும் நடனமும் போடும் சண்டையும் காதலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிடுகின்றன.

அம்ஷன்குமாரின் 'ஒருத்தி' படத்தில் வெளிப்படையாக ஏதும் சொல்லப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண்ணும் ஓர் இளைஞனும் தினமும் காத்திருந்து சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் சேர்ந்து இருக்கும்போது மிகுந்த முக மலர்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த இளைஞன் வைப்பாட்டியாகத்தான் அவளை முதலிலிருந்தே கருதுகிறான் என்று தோன்றுகிறது. அவனுக்குத் திருமணம் என்று வரும்போது ஒருத்திக்கு இருவராகச் சகோதரிகளை மணந்துகொண்டு ஊர்வலம் வருகிறான். அவன் வெட்ட வெளியில் ஆடி ஓடி மகிழ்ந்த பெண் அவள் பிறந்து வளர்ந்ததிலிருந்து செய்துவந்த ஆடு வளர்ப்பைத் தொடருகிறாள். அவள் அழுவதில்லை.


நாம் திரைப்படக்காரர்களைக் குறை கூற வேண்டியதில்லை. காதல் நழுவிக்கொண்டு போகும் இயல்புடையதுதான். நடைமுறை வாழ்க்கையில் சமரசமும் பொறுத்துக்கொண்டு போவதும் காதலாகிவிடுகின்றன. அதை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஏதேதோ செய்கிறார்கள், சொல்கிறார்கள். ஆனால் மகத்தான காதல் வெளிப்பாடு என்று தனித்துக் கூறும்படியாக இருக்காது என்றே தோன்றுகிறது.

(முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ஒரு கட்டுரை)

0 comments:

 
Follow @kadaitheru