Tuesday, June 7, 2011

கு(ச)லாம் நபி ஆசாத் பதில்கள்

குலாம் நபி ஆசாத் : காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் மற்றும் மத்திய அமைச்சர்.

பதில் சொல்வதற்கு என்றே பிறந்தவர்.ஆசாத், கீறல் விழுந்த டேப் ரெக்கார்டர் என்பதற்கு சரியான உதாரணமாய் விளங்குபவர். குலாம் நபி ஆசாத் - திமுகவை பொறுத்தவரை ஒரு 'சலாம்' நபி ஆசாத்.

திமுக - காங்கிரஸ் உறவு குறித்து அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் தந்த பதில்கள் இங்கே...செய்தி # 1 : பல ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது

குலாம் நபி ஆசாத் : ராசா கைதுக்கும்,திமுக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

செய்தி # 2 : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு.

குலாம் நபி ஆசாத் : திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

செய்தி # 3 : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது.

குலாம் நபி ஆசாத் : திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

செய்தி # 4 : சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி.

குலாம் நபி ஆசாத் : சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஜெயலலிதா கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக அதிமுக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏனென்றால் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஒரு கட்சி தோல்வியுற்றதால், வெற்றிபெற்ற மற்றொரு கட்சியின் பின்னால் செல்ல முடியாது

செய்தி # 5: 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது மகள் கனிமொழியை சந்தித்துப் பேசுவதற்காக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலை டெல்லி வந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் குலாம் நபி ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தார்.

குலாம் நபி ஆசாத் : கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.எனினும் சட்ட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது என அவர் கூறினார்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது.

2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதையும், இதில் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதி புரிந்துகொண்டுள்ளார்.அது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே.

செய்தி # 6 : ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மற்றொரு திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை.

குலாம் நபி ஆசாத் : கருணாநிதியின் வருத்தத்தில் பங்கேற்கிறோம்: மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கைது நடவடிக்கையால், தந்தை என்ற முறையில் கருணாநிதியின் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று புரிகிறது. அவர் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, சிபிஐ இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருவதால் எங்களால் வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். மத்திய அரசின் பங்கு இதில் ஏதுமில்லை.


நாளை,இப்படி ஒரு செய்தி வந்தால் :

ஆ.ராசா,கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களின் ஊழலுக்கு மூல காரணமாக இருந்ததால், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கைது.

அப்போது குலாம் நபி ஆசாத் இப்படி கூறுவார்:

பிரதமர் கூறியதுபோல ஊழலை ஒழிப்பதில் அரசு முழுமையான, உண்மையான அக்கறையுடன்தான் உள்ளது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க நாங்கள் கடுமையாக முயன்று வருகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

திமுக தலைவர் கருணாநிதி கைதால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது. இன்னமும், தயாளு அம்மாள்,ராஜாத்தி அம்மாள் கைது செய்யப்படவில்லை.

மேலும்,ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

திமுகவில் கடைசி தலைவர் கைது செய்யப்படும் வரை,திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.


-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru