Sunday, June 19, 2011

நெல்லை மாணவியின் உலக சாதனை



சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நடத்தும் ஆன் லைன் தேர்வுகளில் ஒன்றான சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார் பத்து வயதேயான சிறுமி விசாலினி.

இந்தத் தேர்வுகளைக் கம்ப்யூட்டர் துறையில் பி.டெக், பி.இ., எம்.சி.ஏ., படிக்கும் மாணவர்களே எழுதுவார்கள். அதுவும் மிக மிகக் கடுமையாக முயற்சி செய்து.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான விசாலினி, இந்தத் தேர்வை மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போன மாதம் 13- ஆம் தேதி சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் விசாலினி. இதற்கு முன்பு ஜனவரி மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான எம்சிபி தேர்வை எழுதி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

பத்து வயதான யாரும் இதுவரை இத்தேர்வுகளை எழுதி உலக அளவில் வெற்றி பெறவில்லை.

விசாலினிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்??

"உண்மைதான். எங்களுடைய மகள் விசாலினி உலக சாதனைதான் செய்திருக்கிறாள். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஸ ஹைதர் என்ற 12 வயதுச் சிறுவன் இதுபோல இந்தத் தேர்வுகளை எழுதி உலக அளவில் சாதனை செய்தான். அவனைவிட 2 வயது குறைவான விசாலினி இப்போது சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் பூரிப்புடன் அவருடைய அம்மா சேதுராகமாலிகா.

"விசாலினி எட்டு மாதத்திலேயே பிறந்துவிட்டாள். சிசேரியன் மூலம் பிறந்தாள். சராசரி எடையைவிடக் குறைவான எடை. பிழைப்பது அரிது என்று கூடச் சொன்னார்கள். அதைவிட மருத்துவர்கள் சொன்ன இன்னொரு தகவல் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. விசாலினிக்குப் பேச்சு வராது என்ற தகவலே அது. அவளுடைய நாக்கின் அடிப்பகுதியில் ஜவ்வு இருந்தது. அது நாக்குக்குக் கீழ் உள்ள வாய்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால் பேசுவது சிரமம் என்றார்கள். அதை அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யலாம் என்றால் விசாலினியின் உடல் நிலை அறுவைச் சிகிச்சையைத் தாங்காது என்று சொல்லிவிட்டார்கள்'' என்ற அவர்,

"நல்ல வேளையாக டாக்டர் ராஜேஷைப் போய்ப் பார்த்தோம். அவர் குழந்தையின் 40 வது நாளில் இருந்து அவளிடம் எதையாவது பேசிக் கொண்டே இருங்கள், குழந்தை பேச வாய்ப்பிருக்கிறது என்றார். குழந்தைக்கு ஏதாவது புரியுமா? என்று கேட்டோம். புரிகிறதோ, இல்லையோ ஒரு நாளைக்கு 20 மணி நேரங்கள் பேசிக் கொண்டே இருங்கள் என்றார். அதன் பிறகு தினமும் நான் குழந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தேன். அவள் நாக்கு நன்கு பிறழுமாறு உள்ள சொற்களை அடிக்கடி கூறி வந்தேன். குழந்தை 9 வது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டாள் '' என்கிறார்.

விசாலினியின் அப்பா கல்யாணகுமாரசாமி எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர். தன் குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்காதவர்.

விலாசினி பற்றி அவர், பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக பேசினார்.

"தொடர்ந்து நாங்கள் டாக்டர் ராஜேஷிடம் விசாலினியை அழைத்துக் கொண்டு போனோம். அவர் விசாலினியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, மதுரையில் உள்ள மருத்துவ உளவியலாளர் நம்மாழ்வாரிடம் அழைத்துச் சென்று சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதற்கென்று தெரியாத நிலையில் நாங்கள் விசாலினியை மதுரைக்கு அழைத்துச் சென்று அவரைச் சந்தித்தோம்.

இரண்டு நாட்கள் விசாலினியைப் பல்வேறு பரிசோதனைகள் செய்த அவர், அவளுடைய ஐக்யூ, அதாவது அறிவுத்திறன் 220 இருப்பதாகக் கூறினார். சாதாரணமாக ஒருவருக்கு 90 இலிருந்து 109 வரைதான் இருக்குமாம். என் மகளின் ஐக்யூ கிட்டத்தட்ட சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் மேலே இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவையெல்லாம் விசாலினியைப் பள்ளியில் சேர்க்காமல் இருந்தபோது நடைபெற்றவை''

"முதல் வகுப்பையும், இரண்டாம் வகுப்பையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டாள். மூன்றாம் வகுப்புப் பாடங்களை ஒன்றரை மாதத்தில் முடித்துவிட்டாள். ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஓர் ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. பள்ளியில் டபிள் புரோமோஷன் தர மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆறாம் வகுப்பில் சேர்க்கப் போகும்போது இவள் வயதுக்கு 4 ஆம் வகுப்புதான் படிக்க வேண்டும். வேண்டுமானால் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டுக் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டோம்.

வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இப்படி ஆறாம் வகுப்பை அவள் படித்து முடிக்கவே மூன்று பள்ளிகளை மாற்ற வேண்டியதாகிவிட்டது. மூன்றுவிதமான சீருடைகள், புத்தகங்கள் வாங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பாடத்தில் ஒரு கேள்வியை விசாலினியிடம் கேட்டால் மூன்று புத்தகங்களில் இருந்தும் அதற்கு பதில் சொல்வாள். ஆறாம் வகுப்பில் டபிள் புரமோஷன் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்படித் தர வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதி வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள்'' என்கிறார் அவர்.

"நாங்கள் மூவரும் சென்னைக்கு வந்து பள்ளி கல்வித்துறையின் உரிய அதிகாரிகளைப் பார்த்துப் பேசினோம். அவர்கள் விசாலினியைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். அவளுக்கு ஐக்யூ அதிகமாக இருப்பதை ஒத்துக் கொண்டார்கள். விசாலினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிப்பதால்,அது தொடர்பான துறையைத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்'' என்கிறார் கவலையுடன்.

""பாளையங்கோட்டையில் டான்டெம் கம்ப்யூட்டர் சென்டரின் சுந்தரபாண்டியன் சாரிடம் விசாலினியை அழைத்துச் சென்றோம். கம்ப்யூட்டரில் எதுவுமே தெரியாத விசாலினியைப் பார்த்து அவர் ஆரம்பத்தில் சிறிது யோசித்தார். ஆனால் அவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்ததுமே அவளுடைய திறமையைத் தெரிந்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் எம்சிஏ ஆன்லைன் தேர்வு எழுதி அதில் விசாலினி தேர்ச்சி பெற்றாள். மே மாதம் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் நடத்தும் சிசிஎன்ஏ தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று உலக சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் கல்யாணகுமாரசாமி.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயராமன் உடனே விசாலினியை அழைத்துச் சால்வை போட்டு பாராட்டியிருக்கிறார். மருத்துவர்கள், என்ஜினீயர்கள் உள்ள கூட்டத்தில் அவளைப் பேசச் சொல்லியிருக்கிறார்.

"இவ்வளவு சிறிய வயதில் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு விலாசினி சொன்ன பதில்,

"ரொம்பப் பெருமையா இருக்குது. கலெக்டர் அங்கிள் என்னை அழைத்துச் சால்வைப் போட்டு பாராட்டினாங்க. அங்க நடந்த மீட்டிங்கில என்னைப் பேசச் சொன்னாங்க. அது ரொம்ப.. ரொம்ப பெருமையா இருக்குது'' என்கிறார் மழலை மாறாமல்.

"பாகிஸ்தானில் இரிட்ஸா ஹைதர் என்ற சிறுவன் 12 வயதில் இச்சாதனையைச் செய்தபோது அங்கே பாகிஸ்தானுக்கே பெருமை (Proud of Pakistan) என்று பாராட்டினார்கள். நமது நாட்டில் எங்களுக்குச் சிறப்பு அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமப்பட வேண்டியிருப்பது கஷ்டமாக இருக்கிறது.

எட்டாம் வகுப்பு படித்த பின்பு அவளை பொறியியல் கல்லூரியில் சேர்க்காமல், பத்தாம் வகுப்பு வரை முறையாகப் படிக்க வைத்தாலும், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது வயது குறைந்தவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதக் கூடாது என்று பிரச்னை வரும். குறைந்த வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே குறைந்த வயதில் பெரிய வகுப்புகளைப் படிக்க அவளுக்குச் சிறப்பு அனுமதியைக் கல்வித்துறை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

தமிழக முதல்வர் மனது வைத்தால் எங்கள் கவலை ஒரு நொடியில் தீர்ந்துவிடும். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால்,இப்போது பொறியியல் படிப்புகளில் நேரடியாகச் சேரும் தகுதியை எங்களுடைய மகள் நிரூபித்துவிட்டாள்'' என்கிறார் சாதனை மாணவியின் அம்மா சேதுராகமாலிகா.

(நன்றி : தினமணி)

திருநெல்வேலியில் இத்தகைய சாதனையை செய்திருக்கும் மாணவி விலாசினி, மற்றும் அவரது சாதனைக்கு காரணமான அவரது பெற்றோர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

1 comments:

PATTISUTTAVADAI said...

wow super congratulations

 
Follow @kadaitheru