Thursday, September 23, 2010

அமரர் எம்.ஜி.ஆர் பதில்களும், 'நாடோடி மன்னன்' உருவான கதையும்.


நான் ரசித்த சில அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில பதில்களும், "நாடோடி மன்னன்" திரைப்படம் உருவான விதம் குறித்த அவரது அருமையான விளக்கமும் ஒரு பதிவாக உங்கள் பார்வைக்கு.


கேள்வி : உங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு பற்றி கூறுங்கள்.

பதில் : நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம்.

என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

கேள்வி : உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?

பதில் : நானே இருக்கிறேனே, போதாதா?

கேள்வி : உண்மை அழிந்த பின், நிலைத்திருப்பது என்ன?

பதில் : உண்மை தான்! ஏனென்றால், அது அழிவது கிடையாது.

கேள்வி : நீங்கள் எதை நம்புவதில்லை?

பதில் : நடிகர்களுக்குக் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!

கேள்வி : எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?

பதில் : என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும், துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.

கேள்வி : இந்தி மொழியின் ஆதிக்க பரவல் குறித்து... ? (சட்டபேரவையில்) .

மொழிப் பிரச்சினையில் இந்திய ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சினையில் நானும் கருணாநிதியும் நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்.


-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru