Thursday, October 21, 2010

"வானம்" தொடும் யுவன் ஷங்கர் ராஜா...

"நவராத்திரி எங்களுக்கு மிகவும் சிறப்பான பண்டிகை. இந்த நாட்களில்,பல பாடகர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதால், ஒவ்வொரு மாலை பொழுதும் இசைபொழுதாக இருக்கும். இந்த நாட்களில் நான் மாலை ஆறு மணிக்கே வேலை செய்வதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன்" என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

இளையராஜா அவர்கள் தனது மற்றொரு மகனான கார்த்திக்ராஜாவை "பாண்டியன்" உட்பட பல படங்களில், பின்னணி இசை உட்பட பல இசைபணிகளில் ஈடுபடுத்தி, பல வாய்ப்புகளை தந்தாலும், அவரை முந்திக்கொண்டு, இன்று தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில இருக்கிறார் யுவன். "அந்நியன்" போன்று ஹாரிசுக்கு அமைந்ததுபோல யுவனின் திறமைக்கு ஏற்றார்போல இன்னும் பிராஜெக்டுகள் யுவனுக்கு இன்னும் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.

தற்போது கைவசம் சுமார் பன்னிரண்டு படங்களுக்கு இசை அமைத்துவருகிறார் யுவன்.

"நான் ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கு இசை அமைக்கும் வழக்கம் உடையவன். பகலில் ஒரு படத்திற்கும், இரவில் மற்றொரு படத்திற்கும் பணி புரிவது என் பாணி. தற்சமயம் நான் அவ்வாறு இசை அமைக்கும் படங்கள் சிம்பு நடிக்கும் "வானம்" மற்றும் அஜித்தின் 50 வது படமான "மங்காத்தா" என்று தெரிவிக்கிறார் யுவன்.

சிம்பு நடிக்கும் "வானம்" தெலுங்கு படமான "வேதம்" படத்தின் ரீமேக். "வானம் படத்தில் நடிக்கும் சிம்பு,அனுஷ்கா,வேகா,பரத் ஆகியோருக்கு தனித்தனியாக பாடல் இருக்கிறது. முற்றிலும் புதிய டியுன்களை நான் அமைத்து இருக்கிறேன். இந்த படத்திற்காக நான்,சிம்பு இணைந்து பாடும் ப்ரோமோ ஆல்பம் தயாரித்து வருகிறோம்" என்று கூறுகிறார் யுவன்.

பொதுவாகவே, சிம்பு - யுவன் கூட்டணியில் பாடல்கள் கலக்கும் என்பதால் வானம் படத்திற்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்காக கிளப் இசை பாணியில் ஒரே ட்ராக்கில் ஒரு பாடல் அமைத்து இருக்கிறார்.

யுவன் இசை அமைக்கும் மற்றொரு படமான வெங்கட் பிரபுவின் "மங்காத்தா", 'தல' அஜித்துடன் அவர் இணையும் 5 வது படம்.

"மங்காத்தா ஒப்பந்தம் ஆனதும்,அஜித் என்னிடம் பேசியபோது இந்த படம் மியுசிக்கலாக சிறப்பாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.அதனால், நான் தனிப்பட்ட கவனம் எடுத்து வருகிறேன். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.அதில், ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன். இன்னும் பாடல் வரிகள் மற்றும் பின்னணி பாடகர்கள் முடிவாகவில்லை" என்கிறார் யுவன்.

"மங்காத்தா" வில் இன்னொரு சிறப்பு அம்சம் தனது தந்தை இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடுகிறார் யுவன்.
கில் ஒரு பாடல் அமைத்து இருக்கிறார் யுவன்.தமிழ் - ஆங்கிலம் கலந்து வரும் இந்த பாடலின் தமிழ் வரிகளை இளையராஜாவும், ஆங்கில வரிகளை யுவனும் பாட, அஜித்தின் அறிமுக மற்றும் டைட்டில் பாடலாக அதிரவைக்க போகிறது இந்த பாடல்.

யுவன் இசை அமைத்து முடித்து இருக்கும் வேறு இரு முக்கிய படங்கள் பாலாவின் "அவன் இவன்" மற்றும் அமீரின் "ஆதி பகவன்". இதில் ஆதி பகவன் படத்தில் டெல்லி - 6 படத்தில் புகழ்பெற்ற "மசாக்களி" பாடலை பாடிய மொஹிட் சவுகான் முழுநீள இந்தி பாடலை பாடி இருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இந்தியிலும் அறிமுகம் ஆகிறார். மணி ரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர் சிவகுமார் இயக்கத்தில்,விவேக் ஓபராய் கதாநாயகனாக நடிக்க போகும் இந்தி படத்திற்கு இசை யுவன்தான். ஏற்கெனவே அவர் சித்தார்த் நடித்த ஸ்ட்ரிகர் என்ற இந்தி படத்தில் ஒரு தனி ட்ராக் அமைத்து தந்து இருந்தாலும், மணிரத்தினம் மூலம் முழுமையான பாலிவுட் படத்தில் அடி எடுத்து வைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

பல வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும் வரும் டிசம்பர் 18 அன்று முதல் முறையாக சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார் யுவன். " சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மிகவும் அற்புதமான அனுபவம். இந்த நிகழ்சிக்காக "புதுப்பேட்டை" படத்தில் வரும் 'ஒரு நாள்..' பாடலை முற்றிலும் ஒரு புதிய பாணியில் பாடஇருக்கிறேன்" என்கிறார் யுவன்.

ஒரே சமயத்தில், பல படங்களுக்கு இசை அமைப்பதால்தான்,அவரால் முழுமையாக செயல் பட முடியவில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது. இசையில் அவரால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.

"பருத்திவீரன்" மூலம் நமது மண்ணின் இசையை இந்த நவீன யுகத்திலும் மணக்க செய்த யுவன் ஷங்கர் ராஜா விரைவில் தனது இசையின் மூலம் சர்வதேச அளவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்ப்போம்.

-இன்பா

2 comments:

MURUGANANDAM.R said...

u are the best and no:1

MURUGANANDAM.R said...

U ARE THE BEST

 
Follow @kadaitheru