சமிபத்தில் திருவண்ணாமலை சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்கிறார் எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்.
போனவாரம் திருவண்ணாமலை போயிருந்தேன், ஞானத்தேடலா என்றால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இல்லாதவனுக்குத்தானே தேடல். எனக்கு இருக்கிறது. அது காரணம் இல்லை. சும்மா பட்டணத்துப் பிடுங்கலிலிருந்து நாலைந்து நாட்கள் தப்பித்து ஓடலாம் என்பதுதான். அதிகாலையிலும், மாலை மயங்கி வரும் நேரத்திலும் மலைப்பாதை நடப்பதற்குச் சுகமாக இருக்கும். போடப்பட்ட பாதையை விட்டுவிலகி, குறுக்காகவும், தான் தோன்றித்தனமாகவும் நடக்க வேண்டும். அப்படி நடந்தவர்கள்தான் சேரிடம் அறிந்து சேர்ந்திருக்கிறார்கள். ஒழுங்காக நடந்தவர்கள் ஒழுங்கில்லாமல் செத்திருக்கிறார்கள். நாங்கள் நடந்த (நாங்கள் என்பது என்னையும்., என் நண்பர் விசித்திர சித்தனையும்) பாதையில் நிறைய காவி உடுத்தியவர்கள் தட்டுப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாரிடமாவது பேசுவோமா என்றார் நண்பர். காவிக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டு நடந்தேன். அப்படியென்றால், நீங்கள் சண்முகம் ஐயாவைத்தான் சநதிக்க வேண்டும் என்றார் நண்பர். அவர் யார் என்றேன்.
'துறவி.'
'எதுக்காகத் துறந்தார்? யாருக்கு முன்னால் துறந்தார்?'
'அப்படிப்பட்டவர் இல்லை அவர். யாரையும் தன்னிடம் அண்ட விடாதவர். தன்னைப்பற்றி எந்த நல்ல அபிப்ராயமும் யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.’ அப்படியென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு குகைக்குள் அவர் இருந்தார். வெள்ளைச் சட்டையும், வேட்டியும். மடக்கிய கால்களுக்கு முன் பில்டர் வில்ஸ் சிகரெட் இருந்தது. புகைத்துக் கொண்டு இருந்தார். நண்பரை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்தார். என்னைப் பார்த்து ‘யார் இவர்’ என்றார். நான் சொல்லிக் கொடுத்தபடி 'சும்மா என்னைப் பார்க்க வந்தவர்' என்று மட்டும் சொன்னார்.
'உக்காருங்க' என்றார்.
'இவருக்கு உங்ககிட்ட சில கேள்விகள் கேட்க இருக்கு. நீங்கள் விரும்பினால் சொல்லலாம்.'
'கேட்கச் சொல். ஆனால் கடவுளைப் பற்றி மட்டும் கேட்கக் கூடாது. அது அயோக்கியர்களுக்கான பிரச்சினை. நமக்கு வேணாம்.'
இதைத் தொடர்ந்து நாங்கள் கேட்டதில் அவர் சொன்னதும், அவர் பாஷையிலேயே சொல்கிறேன். இதை வேதாந்தமாகவோ, விவாதமாகவோ நீங்கள் வியாக்யானம் செய்து கொள்ளலாம்.
அப்போது ஒரு இளம்பெண், சாமியார் வேஷத்தில் எங்களைக் கடந்து போனாள். என் மனசு அவள் பின்னால் போயிற்று.
'சரி. வந்துடு' என்றார் சண்முகம் என்னைப் பார்த்து.
'வந்துட்டேன்' என்று நான் அடங்கினேன்.
1) மழை இப்போதெல்லாம் பெய்யும் காலத்தில் பெய்யாமலும், பொய்த்தலும், காலம் அல்லாத காலத்தில் பெய்தலும் எதனால்? நல்லவர்கள் குறைந்து போனார்கள். அதனால், மழை குறைந்துவிட்டது என்பதெல்லாம் உண்மைதானா?
அழுக்கு மற்றும் சாக்கடைகளின் வெப்ப அனல் நெருப்பின் ஆவிப் பிசாசுகள், மேல் எழுந்து குளிராது. நெருப்புக்கோளமாய் விகசித்துப் பெய்கிறது கல்மழை. மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. முன்னெல்லாம் சூரியன் கடலில் இருந்து நீரை முகந்தது. இப்போது கூவத்திலிருந்து. மழை மக்கள் உறங்கும் போது பெய்கிறது. மக்கள் அதை அறிய மாட்டார்கள். மழையை, அரசர்கள் மற்றும் சமஸ்தானாதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்து லாக்கரில் பூட்டி இருக்கிறார்கள். உனக்கும் எனக்கும் மழை என்பது இனி இருக்காது. தவிரவும், என்ன மயித்துக்கு மழை? அரிசியை, உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். கமபெனிகள் கமிஷன் பல்லாயிரம் கோடிகள் வரும். தண்ணீருக்குப் பதில், மலிவு மது விற்பனைக்கு வரும்.
2) வள்ளுவன் வான் சிறப்பு என்ன ஆவது? இளங்கோவை?
வான்சிறப்புக்குப் பதிலாக மன்னர் சிறப்பு இடம்பெறும். பெறட்டுமே. நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா என்ன?
3) கனகவிசயர்களின் முதுகு நிமிர்ந்ததா, இல்லையா?
இனமகளை விட்டு இறங்கி வழிந்தது / புனைவில் புகைத்தெழுந்த கனக விசயக் கதா மைதுனம் புலிக் கொடி ஏற்றிய மூதினத்தின் முதுகில் ஏறின/ சதுக்கப் பூதங்கள்.
4) சாம்ராஜ்யங்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன?
தற்கொலைப் பிணங்கள் மிதக்கும். சாக்கடை நதியில் பூதம், ஸ்தாபிதம் ஆகிறது. அந்தச் சாம்ராஜ்யம். அந்த மாபெரும் அரண்மனையை ஆட்டின் கால் ஒரு தூணாகவும், ஒடிந்த நாயின் கால் ஒரு தூணாகவும், கோழியின் காலும், காக்கையின் காலும், நான்கு தூண்களின் மேல் நிற்கின்றன. நின்றன சாம்ராஜ்யங்கள். வீட்டின் சுவர்கள் இடிந்து அரண்மனைச் சுவர்கள் உருவாகின்றன. ஏரிகளின் மேல் அரண்மனை வருகிறது. தராசுகளை உருக்கிக்கத்திகள் தயாரிக்கப்படுகின்றன.
பள்ளிக்கூட வகுப்பறைகளில் ரம்பை, ஊர்வசி, மேனகா, திலோத் தமை நடனங்கள் நடக்கின்றன. அரவம் தீர்ந்த இரவுகளில் உடைந்த குழம்புச் சட்டிகளில் முரசங்கள் தயாராகின்றன. சாயம் தீட்டப்பட்ட கோவணங்கள் கொடிகளாகின்றன. அரசமரமும், ஆலமரமும் மோதிக் கொள்கின்றன. எல்லாக் காலத்திலும் வழிந்தோடுகின்றன சகோதர ரத்தம். மனித ரத்தத்தில் தொட்டு எழுதப்படுகின்றன சமாதான உடன்படிக்கைகள். சமாதானத்தின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் யுத்த முஸ்தீபுகளே கள்ளச் சிரிப்புடன் ஒளிந்திருக்கின்றன.
5) போரைப் புலவர்கள் ஆதரிக்கிறார்களே?
போரை ஆதரிப்பவர்கள் புலவர்கள் ஆகார். அறிஞர் என்போர் அரசுக்கு வாழ்த்துப்பாட தம் வார்த்தைகளை எடுக்க மாட்டார்கள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுகிறவரே அறிஞர்கள், எழுத்தாளர்கள். நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டவர்கள், கருவறையிலேயே விஷம் வைத்துக் கொல்லப்படுகிறார்கள். மீறிப் பிறந்தால் கல்லில் அடித்துச் சாகடிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி நிமிர்ந்து நின்றால், புறக்கணிப்பின் நஞ்சை அருந்தி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். உண்மைப் படைப்பாளிகள் பட்டினியால் சாவதில்லை. அவமானப்படுத்தலால் சாகிறார்கள். நீ, உண்மையை எழுதப் பேனாவை எடுக்கும்போதே உன் தோள்களில் சிலுவைகள் சுமத்தப்படுகின்றன. உன் ஒவ்வொரு எழுத்தும், உனக்கு நீயே வெட்டிக் கொள்ளும் சவக்குழி. எல்லாக் காலத்திலும் அரசர்களுக்குச் சார்ந்து தங்கள் மூளையைக் கபடமைத்துக் கொண்டவர்களே சௌகர்யமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
6) அறம் என்ற ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே?
நானும் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் அப்படி ஒன்று இருந்ததாக. இப்போது அது, அரசுக் கட்டிலின் பக்கத்தில் நின்று சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக அரண்மனைச் சேவகர்கள் சொல்கிறார்கள்.
இந்த யுகத்தில் அறம், நக்கிப் பிழைத்தல், வாக்கு சுத்தம் அல்ல, நாக்கு நீளம் முக்கியம். அதிகாரத்தின் காலையும் மற்றும் அதிகாரம் விரும்பும் இடங்களை நக்குபவர்களே இந்தச் சமூகத்துக்கு நாயகர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களின் சுற்றம் மற்றும் உறவுக்காரர்கள், உறவுக்காரர்களின் அடிமைகள் இவர்களே நக்கப்படுவதற்கு ஏற்ற நபர்கள். நக்கிப் பிழைத்தலுக்குத் தமிழில் மிக நீண்ட மரபு உண்டு. பாரியைக் கபிலர் புகழ்வதைப் படித் திருக்கிறாயா? 'பாரி பாரி' என்று சொல்லிக் கொண்டு புலவர்கள் எல்லோரும், பாரியைச் சூழ்ந்து கொள்கிறீர்களே, பாரி மட்டுமா கொடுப்பவர். மாரி, மாரி (மாரி என்பது பிஸ்கட் அல்ல, மழை என்பது பொருள்) என்ற ஒன்றும் இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியாதா' என்பதே கபிலனின் பாட்டு.
நக்கல் மரபை அங்கிருந்தே இனம் காணலாம். காலம்தோறும் அறிஞர்கள் அந்தக் கலையை மிக ஆழமாகக் கற்றுத் தங்களை வளப்பமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கடவுளாகவே உயர்த்திச் சௌகர்யம் அடைந்திருக்கிறார்கள். ‘திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேன் எனும்' என்று பூரிக்கிறார் ஒரு புலவர். புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையைக் காணவந்தார் ஒரு புலவர். 'கொஞ்சம் இரும்' என்றார் பிள்ளை. புலவருக்கு அவசரம். பறந்தார். ‘சீக்கிரம் கொடுப்பதைக் கொடும்’ என்றார். பிள்ளை 'ஏன் பறக்கிறீர்' என்று சினந்தார். புலவர் ஒரு பாட்டுபாடுகிறார். 'கொக்கு பறக்கும் குருவி பறக்கும், நக்கிப் பொறுக்கிகளும் பறப்பர்,... நீ என் அருகிருக்க, ஒரு நாளும் பறவேன், பறவேனே' என்பது போலப் பாடி இருக்கிறார். ஆக, ஆனந்த ரங்கப்பிள்ளை காலத்திலும் நக்கிப் பொறுக்கிகள் இருக்கிறார்கள் என்பது பெறப்படுகிறது.
ஆக. அறிவு மரபில், இந்தத் தொழும் மரபு மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சமணர்கள், துறவிகளின், பெரிய ஞானிகளின் கால்களை வணங்கி ஒரு மரபைத் தொடங்கி வைத்தார்கள். பாதங்களை மட்டும் கவ்விப்பிடித்து வணங்கி இருக்கிறார்கள். பிறகு, இந்தத் தொழும் மரபு தொடங்கியது. கண்ணகி தன் கணவனை அடிகள் என்றுகூட அழைத்திருக்கிறாள். சைவர்கள் அடியார்களை உருவாக்கினார்கள். தொண்டர்கள் தொழுவதற்கு என்றே பிறப்பெடுத்து வந்தார்கள். அவர்கள் தலைவர்களின் முகத்தை அறியார்கள். கால்களை மட்டுமே அறிவார்கள். ஆங்கிலேயர் காலத்தில் 'பூட்ஸ் நக்குபவர்கள்'என்ற சொல்லாக்கத்தையே உருவாக்கினார்கள். ஆக, இந்த அரும் மரபு மிக நீண்ட ஆயுளை உடையது.
7) இந்த நக்கல் மரபை மீறிய அறிவுத் தடம் தமிழில் இல்லையா?
உண்டு. நிறையவே உண்டு. ‘மன்னவனும் நீயோ, உலகத்தை எல்லாம் நீதான் ஆள்கிறாயோ, உன்னைக் கண்டா, எதிர்பார்த்தா தமிழை ஓதினேன். என்னை மரியாதையோடு நடத்த மன்னர்கள் ஏராளம் உண்டு. தெரியுமா?’ என்று கேட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். 'மன்னா.. உனக்கு உன்நாட்டில்தான் மரியாதை. எனக்கு உலகம் முழுக்க மரியாதை தெரியுமா' என்று மன்னன் முகத்துக்கு நேராகக் கேட்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவை எதிர்க்கிற அறிவாளிகளே மிக அதிகம். உண்மையான அறிஞர்கள் என்போர் ஆதிக்கத்துக்கு எதிராகவே தம்மை நிறுவிக் கொள்கிறார்கள். இந்த நக்கலை மறுத்து வாழும் உண்மை அறிஞர்கள் தமிழ் பூமியிலும் இருக்கவே செய்கிறார்கள். தமிழ் மரபு, அவர்களில் பலரை உருத்தெரியாமல் அழித்து இருக்கிறது. இன்னும் அந்த அழிப்பு வேலை நீடிக்கவே செய்கிறது. என்றாலும், அந்தப் பெருமைக்குரிய சிறுபான்மை அறிவு மரபினர் தங்களை விற்றுக் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள். தமிழ் என்கிற மொழியும் அது உருவாக்கி இருக்கும் கலாச்சாரமும், உருவாக்க இருக்கும் பண்பாடும் இந்தச் சிலராலேயே வாழ்கிறது. அந்தப் பெரும்பான்மை தயாராக இல்லை.
8) அறிவாளிகள் என்போர் எங்ஙனம் சீரழிவுக்கு உள்ளாகிறார்கள்?
அவரவரும் அவரவர் வழியில் கெட்டுப் போகிறார்கள். கெடுவதற்கு மிகப் பெரிய அசைவுகள் தேவைப்படுவதில்லை. தமிழ்ச்சூழலில் உண்பது, உடுப்பது, சம்சாரம் பேணுவது போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானவர்கள் பலரே, அறிவுத்துறைக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு அலுவலர், வங்கி அலுவலர் என்று பலரும் இங்கு இலக்கிய, கலாச்சாரத் துறைக்குள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் காலை உணவு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத அச்சத்தில் இவர்கள் உழல்கிறார்கள். தங்களுக்களிக்கப்பட்ட ரொட்டி தங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடுமோ என்ற கவலையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். தங்கள் துறைத்தலைவர்கள்/அதிகாரிகள் மூலம் தங்களுக்குத் துன்பம் வரலாம் என்று அஞ்சுகிறார்கள். இந்தவகை மனோபாவம் கொண்டவர்களுக்கு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிந்தனைகளை, மரபை, இலக்கணத்தை மீற முடியாது. மரபை மீறாது, முன்னோர்கள் வெட்டிய உப்புக்கிணற்றில் தண்ணீர் குடிப்பார்கள். இவர்கள் அதிகாரத்தை ஒருபோதும் நிமிர்ந்தே பார்க்கமாட்டார்கள். வாழ்க்கைப் பாதுகாப்பு என்பதே முதலும் கடைசியுமான லட்சியமாக இருப்பதால் அவர்களிடம் இருந்து அந்தப் பாதுகாப்பை அசைக்கிற எந்தச் சிறுமுனகலும் வராது.
இந்த அறிவாளிகள், அதிகாரத்தை அணுகி, அவர்கள் பாதுகைகளைக் கழற்றி, கால் உறைகளையும் நீக்கித் தங்கள் பணியைத் தொடங்குகிறார்கள். அதிகாரத்துக்குள், தம்மை நிறுவிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்கள் சகவாசம் தேவைப்படுகிறது. இந்த அதிகாரம்+அறிவுத்துறை கூட்டு பரஸ்பரம் இருவருக்கும் இலாபமாக அமைகிறது. அறிவு வர்க்கம்- இந்த அ-அறிவு வர்க்கம் அதிகாரத்துக்கு முகஸ்துதியும் பாதபூஜையும் செய்து, அதிகாரத்தின் அங்கமாகத் தம்மை வடிவமைத்துக் கொள்கிறது. இவர்கள் பொதுவாகவே நாலாம் தரத்தினராகவே இருப்பார்கள். இப்படி இருப்பதே அதிகாரத்துக்கும் வசதி. அதிகாரம், இந்த அடிமுடி வருடிகளுக்குப் பட்டம், பதவி, பணம், விருது என்று பல சலுகைகள் தருகிறது. அ.அறிவாளிகள் அதிகாரத்துக்குத் தங்கள் போற்றிப் பரவலால் அதற்கு ஈடு செய்கிறது.
9) மக்கள், மக்கள் அரசியல் என்றெல்லாம் அடிக்கடி பேசப்படுகிறதே. மக்கள் என்றால் என்ன. அவர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்?
மக்கள் பாவம். அவர்களை "மக்கள் அரசியல்வாதிகளே"கைவிட்டு மட்டும் அல்லாமல் காட்டிக் கொடுத்தும் விட்டார்கள். மக்களுக்கு அயோக்கியத்தனம், ஊழல், என்பவைமேல் எல்லாம் அலுப்பு வந்துவிட்டது. இவைகளைத் தம் வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஒரு மனிதன் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததை அவர்களிடம் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை. எவன் திருடலை, எவன் ஊழல் செய்யலை என்றே அவர்கள் கேட்பார்கள். இதுக்கு என்ன காரணம். இந்த தேசத்து அறிவுஜீவிகள் என்போல அயோக்கியர்களாகி விட்டார்கள் என்பதே காரணம். பிரக்ஞை என்கிற சூட்டை மக்களுக்குள் என்றும் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் அறிவாளர்கள். அவர்களே அதிகாரத்து மனிதர்களை விடவும் இழிந்து போனார்கள். நம் தலை முறையின் மிகப்பெரிய பிரச்சினையே இதுதான். மக்கள், தங்கள் அன்றாட ஜீவியத்துக்குப் படும் அல்லல், எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்னொரு வீழ்ச்சியும் இங்கு நடந்திருக்கிறது. ஊழலை ஒரு சாதாரண சமாச்சாரம் என்கிற மன நிலைக்கு மக்களைக் கொண்டுவிட்டதில் வெற்றி பெற்ற அதிகாரவர்க்கம், மக்களையும் அவர்களின் சக்திகளுக்கு ஏற்ற விதத்தில் அளவில் முடிந்தால் சுரண்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையையும் கட்டமைத்துக் கொடுத்துவிட்டது. மக்கள் எல்லோரும் இன்னும் கறை படிந்தவர்களாக மாறவில்லை. என்றாலும், அப்படி அவர்களை ஆக்கும் சதி வலை பின்னப்பட்டுவிட்டது. மக்களுக்கு, அவர்களின் உழைக்கும் தகுதிக்கு ஏற்ப உழைப்புச் சூழலை உருவாக்கிக் கொடுத்து, கண்ணியம் மிக்க மனிதர்களாக ஆக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை இழிவுபடுத்திக் கொண்டு இருக்கிறது. இது மக்களின் ஆளுமையைச் சிதைக்கும். இதுகுறித்து எந்த மக்கள் அரசியல்வாதிகளும் கவலைப்படவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் தத்துவம், கட்சி அரசியலாகச் சீரழிந்து கிடக்கிறது. கட்சி நடத்துகிறவர்களின் தகுதியே அதுவாகத்தான் இருக்கிறது. மக்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் சினிமா, தொலைக் காட்சி, பத்திரிகை என்ற அனைத்து ஊடகங்களும் அதிகாரத்தின் கைவசமே இன்று இருக்கிறது. அரசியல், பண்பாடு என்று அனைத்து வகையாலும் மக்கள் இன்று இழிவுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.
10) இன்றைய மனிதனுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை?
தனித்திருக்க விரும்பாதே. கூட்டத்தில் உன்னைக் கரைத்துக் கொள். நாக்கை வலிமைப்படுத்து. அதிகாரத்தின் அருட்பார்வையில் இடம் பெற்று, அறிஞர் குழாத்தில் இடம் பெறு. சொத்துகளைப் பெருக்கிக்கொள். சுவிஸ் வங்கியில் பணம்போடு. சினிமா எடு அல்லது சினிமாவில் பங்கெடு. உனக்குப் பின்னால் சுற்றும் ஒளிவட்டத்தின் பிரகாசத்தை அதிகப்படுத்து. அதிகாரத்துக்கு ஊறுகாய் பிடிக்காது என்றால், உன் பரம்பரை மற்றும் உன் மனைவிக்கும் ஊறுகாய் பிடிக்காது என்பதை ஊர்ஜிதப்படுத்து. துரோகம் செய். பழிவாங்கு. எல்லா சட்ட மீறல்களையும் சட்டபூர்வமாகச் செய். காட்டிக் கொடுத்தலை ஒரு கலையாகச் செய்.
மேன்மைமிகு சண்முகத்திடமிருந்து நாங்கள் விடைபெறும்போது இருண்டிருந்தது. இருட்டு. செல்லும் வழி இருட்டு. சிந்தையிலும் தனி இருட்டு. என்றாலும் அந்த மகான் அளித்திருந்த ஞானதீபத்தால் எந்தப் பிரச்சினையுமின்றி நாங்கள் வழி நடந்தோம்.
அனுபவம் : எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்
(நன்றி : உயிர்மை)
4 comments:
பிரபஞ்சன் அவர்கள் அதிகாரங்களுக்கு சாமரம் வீசுவதில்லை. இப்படி ஆங்காங்கே கொழுத்திப் போட்டால் அவர்களும் எப்படி இவரைக் கண்டுகொள்வார்களாம்...:)) “நக்கல்“நாயகர்கள் மத்தியில் இப்படி பிழைக்கத் தெரியாதவராய் இருக்கிறாரே...அவரது தார்மீகத்திற்கு தலைவணங்கவே வேண்டும்.
பிரபஞ்சன் என்றுமே என் விருப்பத்திற்குரிய,மரியாதைக்குரிய ஓர் எழுத்தாளர். அவருடைய இந்தக் கருத்துகளை உயிர்மை தாங்கியிருப்பதுதான் அதிசயம்.
நிகழ்கால சமூக அவலங்களை பதிவுசெய்வது ஒருபடைப்பாளியின் கடமை... அந்த கடமையை சிறப்பாக செய்து வருபவர் பிரபஞ்சன்...
//தனித்திருக்க விரும்பாதே. கூட்டத்தில் உன்னைக் கரைத்துக் கொள். நாக்கை வலிமைப்படுத்து. அதிகாரத்தின் அருட்பார்வையில் இடம் பெற்று, அறிஞர் குழாத்தில் இடம் பெறு. சொத்துகளைப் பெருக்கிக்கொள். சுவிஸ் வங்கியில் பணம்போடு. சினிமா எடு அல்லது சினிமாவில் பங்கெடு. உனக்குப் பின்னால் சுற்றும் ஒளிவட்டத்தின் பிரகாசத்தை அதிகப்படுத்து. அதிகாரத்துக்கு ஊறுகாய் பிடிக்காது என்றால், உன் பரம்பரை மற்றும் உன் மனைவிக்கும் ஊறுகாய் பிடிக்காது என்பதை ஊர்ஜிதப்படுத்து. துரோகம் செய். பழிவாங்கு. எல்லா சட்ட மீறல்களையும் சட்டபூர்வமாகச் செய். காட்டிக் கொடுத்தலை ஒரு கலையாகச் செய்.//
இதைப் படித்தபோது இன்றைய பல பிரபலங்கள் நினைவில் வந்து தொலைந்தார்கள்.
இந்தச் "சண்முகம்" யார்?
Post a Comment