Friday, July 9, 2010

அஸ்திவாரம் இல்லாத ஆனந்தபுரத்து வீடு"இன்று உள்ள பல தயாரிப்பாளர்கள் சரியாக ஸ்க்ரிப்ட்டை படிப்பதில்லை" என்று சில வாரங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் இயக்குனர் தங்கர் பச்சான். அது இயக்குனர் ஷங்கருக்கே சரியாக பொருந்திஇருக்கிறது.

"எந்திரன்" பட பிஸியில் தனது சொந்த நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் ஸ்க்ரிப்ட்டை ,சமிப காலமாக ஷங்கர் படிப்பதோ ஏன் கேட்பது கூட இல்லை இன்று தோன்றுகிறது. அதற்க்கு, முதல் உதாரணம் தாமிராவின் ரெட்டை சுழி, இரண்டாவது உதாரணம் நாகாவின் ஆனந்தபுரத்துவீடு.

"விடாது கருப்பு" என்று கலக்கிய, சின்னதிரையின் மணிரத்னம்(!) என்று அழைக்கபட்ட நாகாவின் படம், கூடவே எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன்னின் திரைக்கதை மற்றும் வசனம் என்றதுமே ஒரு பேய் அல்லது அமானுஷிய படம் பார்க்கும் முடிவுக்கு வந்துவிடுகிறோம். பேய் படத்தில் லாஜிக் பார்க்கலாமா? (விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் மட்டும் என்ன லாஜிக் வாழ்கிறதாம்?)

"ஆனந்தபுரத்துவீடு" படமும் பேய் படம்தான்.

படத்தின் முதல் காட்சியிலையே இயக்குனர் நாகா படத்தின் ஹீரோ,ஹீரோயின் (வயதான பேய்கள்) அறிமுகத்தை செய்துவிடுகிறார்.

சிறுவயதில் ஒரு விபத்தில் தனது தாய் தந்தை இருவரையும் இழக்கும் நந்தா, 50 லட்சம் கடன் தொல்லையில் சிக்குகிறார்.அதில் இருந்து தப்ப, 15 வருடங்களுக்கு பின் கிராமத்தில் இருக்கும் தனது வீட்டிற்க்கு மனைவி மற்றும் குழந்தையோடு வருகிறார்.அவரை தேடி, கடன் கொடுத்த வில்லன் குண்டர்களோடு வர, கூடவே பிசினஸ் பார்ட்னராக இருக்கும் நபரும் வருகிறார். அந்த வீட்டில், ஆவிகளாக வாழும் நந்தாவின் பெற்றோர்கள் எப்படி நந்தாவின் சிக்கலை தீர்க்கிறார்கள் என்பதே கதை.

நந்தாவிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க வரும் அந்த சேட்டு வில்லனின் குரலே மிரட்டுகிறது.ஆனால், நந்தாவின் பார்ட்னராக, அவருடன் ஆனந்தபுரத்து வீட்டில் இருக்கும் அவரது நண்பனே மெயின் வில்லன் என்பதை எளிதாக யூகிக்க முடிவது கதையின் பலவீனம்.

பேய் படத்தில் வரும் குழந்தை என்றாலே தலை சீவாமல், ஒரு மாதரியாக இருக்கவேண்டும் என்று இலக்கணமே வகுத்து இருக்கிறார்கள் போலும். இதிலும் நந்தாவின் மகனாக(?) வரும் பையனுக்கு அதே கெட்டப்.

நந்தாவின் மனைவியாக சாயாசிங். பயந்து அலறி, பின் பேயாய் உலவும் மாமியாரின் பாசத்தை(?) புரிந்து கொள்கிறார்.

வெளிநாடுகளுக்கு போகாமல், எளிமையாக, விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்,ஒரு பழமையான வீடு என்று 50 லட்சம் பட்ஜெட்டில்(கதையில் நந்தாவின் கடன் தொகை) படத்தையே முடித்துவிட்ட நாகாவுக்கு ஒரு ஷொட்டு.

கடன் அடைக்க வீட்டை விற்க நந்தா முடிவு செய்ய, அந்த வீட்டை பார்க்க அண்ணாச்சி ஒருவர் வரும் காட்சியில் நல்ல காமெடி சென்ஸ் தெரிகிறது. பேசாமல் முழு படத்தையும் காமெடி படமாகவே எடுத்து இருக்கலாம்.இந்த திகில்(!) கதையை சீரிசாக எடுப்பதா அல்லது காமெடியாக எடுப்பதா என்று இயக்குனர் நாகாவும் குழம்பி, நம்மையும் குழப்பி இருக்கிறார்.

அறிமுக இசை அமைப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா பாடல்களில் டிவி சீரியல் எபக்ட் கொடுத்தாலும், ஒரு திகில் படத்துக்கு உரிய பின்னணி இசையை தந்துஇருக்கிறார்.ஒளிப்பதிவு : அன்புமணி பழனி.ஓகே ரகம். ஆனால், பெரியதாக சொல்வதற்கு இல்லை.

படம் முழுவதும் நந்தாவை மிரட்டும், சாயா சிங்கை பார்த்து ஜொள்ளுவிடும் அந்த சேட்டு வில்லன் கடைசி காட்சியில் நந்தாவுக்கு அறிவுரை சொல்வது தலைவி ஷகீலாவின்(!!) படங்களை நினைவு படுத்துகிறது.

திகில் படம் என்றால் திருப்பங்கள் நிறைந்த வேகமான திரைக்கதை அவசியம். இதில் அது மிஸ்ஸிங். "ஈரம்" வரை ஷங்கர் தயாரிப்பில் வந்த படம் என்றாலே துணிந்து போகலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தநம்பிக்கை அவர் தயாரித்த கடைசி இரண்டு படங்களில் ஆட்டம் கண்டு இருக்கிறது. கவனியுங்கள் ஷங்கர் சார்.

ஆனந்தபுரத்து வீடு - விறுவிறுப்பு என்னும் அஸ்திவாரம் இல்லாத வீடு.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru