Tuesday, January 12, 2010

விவசாயி - கடவுள் கண்டெடுத்த தொழிலாளி?

எந்திரம் என்பதற்காக நான் எந்திரத்தை எதிர்க்கவில்லை ,அது நம்மீது முழுமையாக ஆளுமை கொள்ளும் போது முற்றிலுமாக எதிர்ப்பேன்"


--யங் இந்தியாவில் காந்திஜி எழுதியது.

நேற்றோடு முடிந்த ,கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தினமும் 4,5 லாரிகள் என கேரளா நோக்கி சென்ற அடி மாடுகளின் எண்ணிக்கை ஏராளம்.அவை அனைத்தும் என் இல்லம் கடந்தே சென்றது மன வருத்தத்தை அளிக்கிறது.30-40 ஆண்டுகள் பால் வியாபாரம் செய்த வரதனும் இனிமேல் தொழில் செய்ய முடியாது என்ற தீர்மானத்தில் அதை விட்டுவிட்டதாக கூறினான். தான் பால் கறக்கும் வீடுகளில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மாடுகளை அடி மாடாக விற்று விட்டார்கள்.மாடுவளர்ப்பு தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என தகவல் சொன்னான்.


கம்பம் பள்ளத்தாக்கில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் அதிகம். அரசின் உதவி என்பது அவர்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் பரிதவிக்க வைக்கின்றன.இலவச கலர் டீவியை குதிரையில் சுமந்து சென்று அரசு தருகிறது. ஆனால் பாவம் ஞாபகமறதியில் மின் இணைப்பை தரவில்லை. கட்டிலில் படுக்கவைத்து நோயுற்றவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டி உள்ளது.ஆரம்ப சுகாதார மையம் இல்லை. உருப்படியான பாதை இல்லை.இப்படியாக நிறைய "இல்லாமைகள்" அதிகம் உள்ள கிராமங்கள் அதிகம். அவர்களது அடிப்படை தொழில் காட்டு புற்களை கொண்டு கூடை முடைவது ,விவசாயம் செய்வது, பால்மாடு வளர்ப்பது ஆகும்.உழவிற்கு "ஏர் உழவு தான்" ,டிராக்டர்கள் இல்லை. இவ்வளவு நெருக்கடியிலும் மக்கள் மனதில் ஈடில்லா மகிழ்ச்சி நிறைய உள்ளது.
காந்தி வாழ்ந்த காலத்தில் டிராக்டர்கள் இல்லை.ஆற்றல் என்ற வார்த்தை பிரயோகம் பல்வேறு கோணங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த போது , விவசாயம் சார்பாக, டிராக்டர்கள் முன்னிறுத்தப்பட்டது. இதன் வருகை காளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


நவீன அறிவியலின் அடையாளமான டிராக்டர், மீண்டும் உருவாக்க முடியாத பெட்ரோல், டீசல் போன்ற இயற்கை மூலாதாரங்களை சார்ந்தே வரும் என்பதை யாரும் அப்போது உணரவில்லை.இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஏர் உழவு பிராதனமாக கொண்டிருக்கும் சூழலில், நம் பொருளாதார மேதைகள் இதை "மாட்டுவண்டி பொருளாதாரம்" என கிண்டல் செய்து,புறந்தள்ளுவது பெரும் வேதனை. இன்று "உயிர்ச்சூழல் சமன்பாடு" என்ற (ecological balance) வார்த்தை அதிக புழக்கத்தில் உள்ளது. அதிக குழப்பம் தரும் வார்த்தையும் இதுவே. இந்த சமன்பாட்டை தரும் ஒரே உயிரினம் பசுக்கள், எருமைகள், மற்றும் காளைகளே.ஆனால் டிராக்டர் வாங்க கடன் உதவியும்,தள்ளுபடியும் தரும் வங்கிகள் ஏனோ காளை வண்டி வாங்க கடன் தருவதில்லை. 1960களில் 31,000 டிராக்டர் மட்டுமே இருந்த இடத்தில் தற்போது பல லட்சம் டிராக்டர்கள் உள்ளன.ஒன்று, இரண்டு ஏக்கர் நிலம் உள்ள விவசாயியால் எப்படி டிராக்டர் வாங்க முடியும்?இதை அரசு நினைவில் கொள்ளவே இல்லை.பத்தாண்டுகளுக்கு முன்னர் 740 லட்சம் காளை மாடுகள் ,நமது விவசாயத்திற்கு தன் தோள் தந்தது.8,200 லட்சம் பசுக்களின் சாணமும், கோமியமும் உரமாகின. இன்று இவை அனைத்தும் மாமிசத்திற்காக கொலை களத்தில் உள்ளன. கால் நடை பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட ஜோரில் காலாவதியும் ஆகியது.


பெங்களூரில் உள்ள "கார்டுமேன்" நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்த தகவல் படி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறு மணி நேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா ஹெர்ட்ஸ் அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு ,எருமை மாடுகளின் ஈடுபாடும் சுமார் 16,000மில்லியன் யூனிட் மின் சக்தியை மிச்சமாக்குகின்றன. பாரமிழுக்கும் மாடுகள், சந்தைக்கு செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல, தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் யூனிட் மின்சக்தி மிச்சமாகிறது.இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் டீசலை நாம் கச்சா எண்ணை வாங்க வேண்டும்.இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வருமானால், நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார் அமெர்த்தியா சென். நவீன அறிவியலை உட்புகுத்திய ஐரோப்பிய நாடுகள், தங்கள் கிராமங்களில் இன்றும் காளைகளை பயன்படுத்துவதற்கு எப்போதும் தயங்குவதே இல்லை.நம் நாட்டின் நிலை தலைகீழாக மாறி கிராமங்களில் காளை உழவை காண்பது அரிதாகி வருவது வேதனைக்குரியது.


மத்திய அரசின் புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், ஆற்றலை விரிவாக்கும் நோக்கத்தோடு, சூரிய ஆற்றலை பயன்படுத்த அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறது.உண்மையில் சூரிய ஆற்றலை எரிசக்தியாக உபயோகிக்க பயன்படும் நுட்பம் இந்திய தொழில் நுட்பம் இல்லை,அது அமெரிக்க நுட்பமாக உள்ளதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அதற்காக அரசும் மானியம் தரவேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகிறது. பயோமாஸ் விஷயத்திலும் இதே நிலைதான்.பயோமாஸ் தொட்டி அமைக்க மானியம் தரும் அரசு அதற்கான மாடுகள் வாங்க எந்த மானியமும் அளிப்பதில்லை.அவ்வாறு தர முன் வந்தாலும் நிறைய உத்திரவாதங்களை வங்கி வேண்டுகிறது.எல்லாவற்றையும் கடந்து மாடு வாங்கினாலும் புல், வைக்கோல், மாட்டு தீவனம் போன்றவற்றின் விலை ,அப்பாடா தலையே சுற்றிவிடுகிறது.இப்படி அடுக்கடுக்கான தொல்லை வேண்டாம் என்று விவசாயி, அந்நிலத்தையே ரியல் எஸ்டேட் வியாபாரியிடம் விற்றுவிட்டு கிடைத்தவரை லாபம் என ஒதுங்கிவிடுகிறார்கள்.


காமாட்சிபுரத்தில் நடந்த வேளாண்மை கருத்தரங்கில் ஒரு விவசாயி கோபமாக, டிராக்டர் சாணி போடுமா? என வினவினார்.அப்போது உடனிருந்த அரசு அலுவலர்கள் அவரை கிண்டலாக பார்த்து சிரித்தனர். அவரின் உட்கருத்து வேறு.இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியமானதும், உயர்வாகவும் சாணமே உள்ளது. மண்ணை மிருதுவாக்கி இளம் பயிர்கள் எளிதில் வேர் விட உதவுகிறது. "ஈரமான நிலத்தில் கால் பட்டாலே புல் முளைக்காது".என்பது எங்கள் ஊரின் பெரியோர் வாக்கு .இந்நிலையில் 3 டன் எடையுள்ள டிராக்டர் ஓடும் போது நிலம் அதிக அதிர்வுக்கு உள்ளாகிறது.டிராக்டரால் 4அடி ஆழம் வரை மட்டுமே உழ முடிகிறது. இதனால் அடி மண் மிகவும் கடினமாகிறது.ஆனால் காளை உழவினால் 6 அடி வரை உழ முடிகிறது. அதிர்வும் இராது. மண்புழு மற்றும் நுண்ணியிர்களுக்கும் சேதம் இருக்காது.


பஞ்சாப் ,ஹரியானா போன்ற மாநிலங்கள் இந்தியாவின் சிறந்த கால்நடை இனங்களை கொண்டவை. காலம் காலமாக உழவு வேலைக்கு, காளைகளையும், உரமாக சாணத்தையும் உபயோகித்து வந்த அம்மக்கள் யாருடைய அறிவுரையால் மாறினார்களோ தெரியவில்லை, உழவுக்கு காளையை விட்டுவிட்டு ,டிராக்டரை நாடியுள்ளனர். சாணம் போய் ரசாயன உரம் இடம் பிடித்துள்ளது. நிலமேம்பாட்டு ஆணையத்தின் ஆராய்ச்சி அறிக்கையில் கடந்த 10 வருடங்களில் அம்மாநில மக்களின் நிலங்களில் வளர்ச்சி விகிதம் திடுக்கிடும் அளவு குறைந்துள்ளது. வயல் வெளிகளின் தன்மை முற்றிலுமாக மாறிப்போனது. வழக்கம் போலவே, அவ்விவசாயிகள் திவாலாகி அவர்களின் வாழ்வு தற்கொலையில் முடிந்தது. நில அதிர்வால் உண்டான இறுக்கமும், பெட்ரோல்,டீசல் போன்றவற்றின் பாதிப்பும் ,பிரதான காரணங்களாக பின்னர் அறியப்பட்டன.


டி.டி.கோசாம்பி தனது "பண்டைய இந்தியா" நூலில் பூர்வீக எச்சங்கள்(primitive survivals) என்ற தலைப்பில் உழும் கருவியாகிய ஏர் கலப்பையை,"இன்றும் வாழுகின்ற சாட்சியம்" என்று அழைக்கிறார். மரக்கலப்பை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குஷானர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதை உறுதி செய்யும் ஒரு காந்தார சிற்ப படத்தையும் அளித்துள்ளார்.தோல்வி அடைந்த பசுமை புரட்சியினால் பலன் பெற்றவர்கள் தொழில் துறையினர் அன்றி விவசாயிகள் அல்லர். உரம், பூச்சி மருந்து தயாரிப்பாளர் துவங்கி, மிகப்பெரிய ஆலை தொழில் அதிபர்கள் வரை நஷ்டம் அடையாமல் பாதுகாக்க, அரசு மானிய திட்டத்தை கொணர்ந்தது.இது விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு உதவவில்லை.


நாட்டின் மொத்த உற்பத்தியில் 35%விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் தொகை 14% மட்டும் பெறக்கூடியவர்களாக விவசாயிகள் உள்ளனர்.மன்மோகன் பிரதமர் ஆவதற்கு முன் ஒரு நேர்காணலில் "நான் பிரதமர் ஆனால் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் "என்றார்.இது மின்சாரத்தை பற்றிய ஒருபொருளாதார மேதையின் பார்வையாக மட்டும் எடுத்துக் கொள்ள கூடாது. ஒட்டுமொத்த விவசாயத்தின் மீதான தவறான பார்வையாகத்தான் கருத வேண்டும்.


"விவசாயம் இந்நாட்டின் முதுகெலும்பு" என தத்துவம் பேசும் அரசியல் வாதிகள், உண்மையான நோக்குடன் விவசாயத்தை அணுகி அதன் மூலாதாரங்களான, கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயற்கை உர தயாரிப்பு போன்றவற்றில் அக்கறையும், பங்களிப்பும் தர வேண்டும் .இப்போதெல்லாம் நான் பார்க்க யாரும் தங்களை "விவசாயி" என அறிமுகம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அதற்கு பதிலாக "ரியல் எஸ்டேட்" பிஸினஸ் என பெருமையாக கூறிக்கொள்வதை கேட்கும் போது வேதனையாக உள்ளது.

(நன்றி:எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா , உயிர்மை பதிப்பகம்).


வாசக நண்பர்களுக்கு எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

1 comments:

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

 
Follow @kadaitheru