Thursday, January 7, 2010

சாருவின் வெற்றியும்,ஜெயமோகனின் தோல்வியும் - கவிஞர் மனுஷ்யபுத்திரன்


மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி. இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை. அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.
- எழுத்தாளர் ஜெயமோகன்

"நான் ஒரு தொழில்முறை கவிஞனே ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல."
- கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பதில் கட்டுரை....

கடந்த வாரம் துவங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி வார இறுதி நாட்களில் வாசகர்களின் பெரும் உற்சாகத்தால் நிரம்பி வழிந்தது. உண்மையில் பெரும் மக்கள் திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். தேதி மாற்றம் பார்வையாளர்களின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மக்களின் திரளான வருகையை உறுதி செய்யும் வண்ணம் விரிவான விளம்பர ஏற்பாடுகள் செய்திருந்த சென்னை புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க புதிய நிர்வாகக் குழுவினர் பாராட்டிற்குரியவர்கள்.
பல புதிய நூல்கள் கண்காட்சியை முன்னிட்டு வெளிவந்துள்ளன. வாசகர்களின் தேர்வு கடினமாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தின் நூல்கள் பல கடைகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் திரும்பத் திரும்ப வைக்கப்பட்டிருப்பது பெரும் எரிச்சலூட்டுவதாக வாசகர்கள் பலரும் தெரிவித்தனர். இவ்வாறு அந்தப் பதிப்பகம் போலிப் பெயர்களில் கடைகளை எடுத்து கண்காட்சியை ஆக்ரமிப்பது, கண்காட்சியின் உண்மையான நோக்கத்தை சீர்குலைப்பது குறித்து ஏற்கனவே பல முறை பப்பாஸியிடம் பதிப்பாளர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சங்கக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை கடுமையாக எழுப்பப் போவதாகப் பதிப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.


உயிர்மை அரங்கம் வழக்கம்போல வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. புதிய நூல்களை சிறந்த முறையில் கொண்டுவரும் ஒரு பதிப்பகம் அடையக் கூடிய அத்தனை நன்மதிப்பையும் அனுகூலங்களையும் உயிர்மை முழுமையாகப் பெற்றுள்ளது. வாசகர்களின் இந்த அன்புக்கும் ஆதரவிற்கும் உயிர்மை குடும்பத்தினர் தலைவணங்குகின்றனர்.


இந்தச் சந்தர்ப்பத்தில் மன வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடந்தேறின. ஜெயமோகன் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் கருத்துகள் தொடர்பாக சில நண்பர்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளனர்.


ஜெயமோகனுக்கும் எனக்குமான நட்பைக் குறித்தோ அல்லது அவரது நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நான் எவ்வாறு அவருடன் இருந்தேன் என்பது பற்றியோ அல்லது உயிர்மை அவரை எவ்வளவு கொண்டாடியது என்பது பற்றியோ நான் பேசாமல் இருக்கவே விரும்புகிறேன். காரணம் அவை எனது அந்தரங்கமான தேர்வுகள். உயிர்மை என்ற பெயர் உருவாவதற்கு பலவருடங்கள் முந்தைய தேர்வு அது. நண்பர்களுக்கு செய்ததைச் சொல்லிக் காட்டுவதை, உள்ளார்ந்த பிரியத்தை நினைவுபடுத்துவதைவிட இழிவு ஒன்றுமே இல்லை. அதே சமயம் உயிர்மைக்கு அவர் ஆற்றியுள்ளதாக கூறும் பங்களிப்பு அனைத்தையும் குறித்த அவரது பிரகடனத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆம், அதில் சந்தேகமே இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அதை மறக்கவோ மறுக்கவோ போவதில்லை. அவை பத்து நாளைக்கு முன்வரையிலான சரித்திரம்.


சாருநிவேதிதா உயிர்மை நூல்வெளியீட்டுக் கூட்டத்தில் ஜெயமோகன் கருத்துகள் தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய விதத்தை நான் எந்த விதத்திலும் ஏற்கவில்லை. அது அவரது தேர்வு. அவரது வழிமுறை. அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாளி. இதற்குமுன்பும் உயிர்மை கூட்டங்களில் பலரும் பலருக்கு எதிரான கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


ஜெயமோகனே ஒரு கூட்டத்தில் சாரு நிவேதிதாவை அவரும் பேசிய அரங்கில் ‘முட்டாள்’ என்று வர்ணித்தார். ஒரு சக எழுத்தாளனை நோக்கிச் செலுத்தப்படும் இந்த வசை நிகழ்த்தப்பட்ட அவையிலும் அந்த மேடையில் இருந்த நான் மெளனமாகவே இருந்தேன்.


ஜெயமோகனை கருணாநிதி திட்டினாலும் சரி, எம்.ஜி சுரேஷ் திட்டினாலும் சரி ஜெயமோகனுக்காக வாதாடிய நான் ஏன் இந்த அரங்கில் மெளனமாக இருந்தேன் என்பதற்கு காரணம் மிக எளிமையானது. கூட்ட்டத்தின் கவனம் இந்தப் பிரச்சினையில் குவிவதை நான் விரும்பவில்லை. கூட்டத்தை நடத்துகிறவன் என்ற முறையில் சாரு முன்வைத்த கருத்துகள் தொடர்பாக மொத்தக் கூட்டமும் திசை திரும்புவது எனக்கு ஏற்புடையது அல்ல. எஸ்.ராமகிருஷ்ணனின் கூட்டத்தில் ஞாநி என்னைக் குறித்துப் பேசிய பேச்சுக்கு நான் எதிர்வினையாற்றவேண்டுமென்று பல நண்பர்கள் மேடையில் இருக்கும்போதே குறுஞ்செய்திகளை அனுப்பியவண்ணம் இருந்தனர். அவர் அந்த மேடையில் எங்கள் விருந்தினர். அவரை நான் அவமதிக்க விரும்பவில்லை. அப்போதும் மௌனமாகத்தான் இருந்தேன்.
சாரு நடந்துகொண்டவிதம் தொடர்பாக ஜெயமோகனோ அவரது வாசகர்களோ புண்பட்டிருந்தால் அதற்காக கூட்டத்தின் அமைப்பாளன் என்ற பொறுப்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.


ஆனால் அமெரிக்கா சதாம் ஹுசைன் மேல் நடத்திய ஒரு விசாரணைக்கும் தண்டனைக்கும் நிகரான ஒன்றை ஜெயமோகன் என்மீது சுமத்த விரும்புகிறார். இது நானும் சாருவும் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதி என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார். ஒரு நெடுங்கால நண்பனின் மேல் இந்த அவதூறை சுமத்துவது தொடர்பாக அவருக்கு எந்த அவமான உணர்ச்சியும் இல்லை. இதற்கு ஆதாரமாக அவர் மூட்டமான எதை எதையோ தெரிவித்து வருகிறார். அவை அவரை வைத்து விளையாட விரும்புகிற அற்பங்களின் கற்பனைகள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. யாராவது தான் செய்யப்போகிற ஒரு சதியை ஊரெல்லாம் சொல்லிவிட்டு நிறைவேற்றுவார்களா என்பதைக்கூட ஜெயமோகன் யோசிக்கவில்லை. மேலும் அந்த சதியின் மூலம் நான் அடையக்கூடியதுதான் என்ன?


என் கவிதைகள் தொடர்பாக அவர் முன்வைத்த சில கருத்துகள் எனக்கு உடன்பாடில்லை என்பதை அவரிடமே தெரிவித்தேன். அந்தக் கருத்துகள் ஒரு விவாதப் புள்ளி என்ற அளவில் அதைப் பிரசுரிக்கவும் செய்தேன். எனது கவிதைகள் தொடர்பான யாருடைய எந்த அபிப்பிராயத்திற்கும் நான் இதுவரை பதில் சொன்னதில்லை. அப்படி பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வக்கீல்கள் யாருடைய உதவியும் தேவை இல்லை.


என் கவிதைகள் தொடர்பாக நான் பதற்றமடையவேண்டிய இடத்தில் இல்லை என்பதை வேறு யாரையும்விட ஜெயமோகன் நன்கறிவார். எனக்குக் கால்கள் இல்லை என்பது எனக்குக் கைகள் இருக்கின்றன என்பதற்கு நிகரான ஒரு உண்மைதானே. நான் அதில் சஞ்சலம் அடைய ஒன்றுமே இல்லை. இதுபோல என்னிடம் இல்லாத, எனக்குத் தேவைப்படுகிற எவ்வளவோ விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. மேலும் என்னுடைய காதலிகள் மட்டுமே என்னுடைய உடலைப்பற்றி அக்கறை காட்டவேண்டியவர்கள். அவர்களுடைய கருத்துகள் மட்டுமே இந்த விவகாரத்தில் எனக்கு முக்கியமானவை.


மாறாக இந்த விவகாரத்தை தாழ்வுணர்ச்சி கொண்ட ஒருவனின் சதி என்ற ரீதியில் தொடர்ந்து சித்தரிக்க முயல்வது எனக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகக் கருதுகிறேன். என்னுடைய உடல்பற்றிய அத்தனை ரகசியங்களும் நான் சொல்லி நீங்களும் பிறரும் அறிந்ததுதானே? என்னுடைய நிர்வாணத்தை நான்தானே மனத்துணிவுடன் எல்லோருக்கும் முன்னதாக வைத்திருக்கிறேன்?

என்னைத் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என அவமதிக்க விரும்புகிறவர்கள் அதன்மூலம் என்னைப் புண்படுத்த விரும்பினால் நான் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்ளவே விரும்புவேன்.

உயிரோசை இந்த இதழில் ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றி அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது கூட்டுச் சதியின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். அல்லது உடல் ஊனம் கொண்ட தாழ்வுணர்ச்சிகொண்ட இன்னொரு நபரின் எதிர்வினையாகவும் இருக்கலாம். விஷயங்கள் எவ்வளவு எளிமையும் சிறுமையும் படுத்தப்பட்டுவிட்டன என்பதை நினைக்கும்போது பெரும் கசப்பே மிஞ்சுகிறது.

ஜெயமோகன்,

இந்த இரண்டாண்டுகளில் உயிர்மைக்கு எதிராக எத்தனையோ குறிப்புகளை நீங்கள் எழுதியிருக்கிறீகள் என்பது உங்களுக்குத் தெரியும். உயிர்மைக்கு எதிராக தமிழினி, வார்த்தை போன்ற பத்திரிகைகள் மேல் நீங்கள் காட்டிய உற்சாகம் உங்களுக்கு பெரும் அவப்பெயரையே தேடித் தந்தது. பதிலுக்கு உங்கள் மேல் நான் எவ்வளவு பிரியத்தையும் நட்பையும் வெளிப்படுத்தினேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். முறித்துக்கொள்ளவேண்டும் என்பது உங்கள் நீண்ட நாள் விருப்பம். நான்தான் உங்களை எனது அறியாமையின் காரணமாக தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தேனோ என்று சந்தேகமாக உள்ளது. என் வாழ்க்கையில் மிகப் பெரிய தீங்கை இழைத்தவர்களிடம்கூட உறவை முறித்துக்கொள்ளலாம் என்று நான் அறிவித்ததில்லை. அதில் வெளிப்படும் அகங்காரமும் மனிதவிரோதத் தன்மையும் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல அதைப் பற்றிக் கேள்விப்படுகிறவர்களைக்கூட ஆழமாகக் காயப்படுத்தக்கூடியது.

உங்கள் மூலம் எனக்கு நடக்கும் வியாபாரம்தான் நான் இதையெல்லாம் எழுதக் காரணம் என்று தயவுசெய்து புரிந்துகொள்ளாதீர்கள். உயிர்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானும் இருப்பேன். நீங்களும் இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கையெழுத்துப் பிரதியை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அகரம் கதிரைப் பார்க்கப்போகும் வழியில் துவரங்குறிச்சியில் இறங்கி அதன் இன்னொரு பிரதியைப் படிப்பதற்கு என்னிடம்கொடுத்த நாள்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாளின் நினைவுதான் என்னை உங்களுடைய பதிப்பாளனாகவும் மாற்றியது. நீங்கள் இப்போது வெளியிடும் வர்த்தக பிரகடனங்களைப் பார்க்கும்போது எதையும் புரிந்துகொள்ளாத நினைவில் வைத்துக்கொள்ள விரும்பாத ஒரு இடத்திற்குப் போய்விட்டீர்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் கற்பனை செய்யும் வர்த்தகன் நான் அல்ல. 50 விற்கக்கூடிய புத்தகங்களை வெளியிட்டால் 100 விற்காத புத்தகங்களை வெளியிடுபவன் நான். வணிக சினிமாவின் மையத்தை நோக்கி வெகு வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் ஆளுமைக்கு தகுதியற்ற எத்தனையோ வேலைகளை அங்கே செய்துகொண்டிருக்கும் நீங்கள் உங்களுடைய நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவனை வணிகன் என்று அழைக்கிறீர்கள். வரலாறு நீங்கள் சித்தரிப்பது போல என்னையோ உங்களையோ ஒருபோதும் எழுதப்போவதில்லை.


உங்களுக்கு எதிராக இதுவரை என்னை எவ்வளவோ பேர் எத்தனையோ விதங்களில் தூண்டியிருக்கிறார்கள். நான் ஒருபோதும் அதற்கு செவிசாய்த்ததில்லை. அவை உங்களைப் பற்றிய எனது நிலைப்பாடுகளை எந்தவிதத்திலும் பாதித்ததுமில்லை. ஆனால் சாரு நினைத்தால் எனக்கு எதிராக உங்களைத் தூண்ட முடியும், எனக்கு எதிராக அதிக பட்ச நடவடிக்கைகளை எடுக்க வைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். இது சாருவின் வெற்றியல்ல. உங்களது தோல்வி. உங்கள் தன்னிலையின் தோல்வி. உங்கள் அகங்காரத்தின் தோல்வி. இந்தத் தோல்வியை உங்களது வெற்றியாக உங்களை நம்பவைக்க முயல்பவர்கள் உங்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள்.

இந்தத் தோல்வி உங்கள் நண்பன் என்ற முறையில் என்னை ஆழமாக சங்கடப்படுத்துகிறது.

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

4 comments:

Dr.Rudhran said...

தாமதமாகவென்றாலும் தக்க விதத்தில் சொல்லிவிட்டபின், கொம்பு சீவ வருபவர்களை அனுமதிக்க வேண்டாம். உங்கள் உணர்வுகளை மதிக்கும் அன்புடன் இந்தப் பின்னூட்டம்.

கடை(த்)தெரு said...

நல்ல கருத்து திரு.ருத்ரன்.

தங்களின் கடைதெரு வருகை
குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

அன்புடன்,
இன்பா

R.Gopi said...

//Dr.Rudhran said...
தாமதமாகவென்றாலும் தக்க விதத்தில் சொல்லிவிட்டபின், கொம்பு சீவ வருபவர்களை அனுமதிக்க வேண்டாம். உங்கள் உணர்வுகளை மதிக்கும் அன்புடன் இந்தப் பின்னூட்டம்.//

-*-*-*-*-*-*-*

பிரபல மருத்துவர் திரு.ருத்ரன் அவர்களின் கூற்று சரியானதே...

முடிந்து போன ஒரு விஷயத்தை நாம் மறுபடியும் ஆராயத்தான் வேண்டுமா இன்பா?

R.Gopi said...

//Dr.Rudhran said...
தாமதமாகவென்றாலும் தக்க விதத்தில் சொல்லிவிட்டபின், கொம்பு சீவ வருபவர்களை அனுமதிக்க வேண்டாம். உங்கள் உணர்வுகளை மதிக்கும் அன்புடன் இந்தப் பின்னூட்டம்.//

-*-*-*-*-*-*-*

பிரபல மருத்துவர் திரு.ருத்ரன் அவர்களின் கூற்று சரியானதே...

முடிந்து போன ஒரு விஷயத்தை நாம் மறுபடியும் ஆராயத்தான் வேண்டுமா இன்பா?

 
Follow @kadaitheru