Friday, January 8, 2010

தமிழை காக்கும் ஓதுவார்கள்


உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் மிகவும் தொன்மையான சமயம் சைவ சமயம். சைவ சமயத்துக்கு அடிப்படையான நூல் பன்னிரு திருமுறைகள்.

இப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 அருளாளர்கள். அவர்கள் 4,286 பாடல்களை அருளியுள்ளனர். தமிழகம் செய்த தவப்பயனால் கிடைத்தவை பன்னிரு திருமுறைகள். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேந்தனார் உள்பட இருபத்தேழு அடியார்களால் அருளிச் செய்யப்பட்டவை.

"எனதுரை தனதுரையாக' என சம்பந்தர் கூறுவதால், திருமுறைகள் யாவும் இறைவன் வாக்காகும். கல்லா மாந்தரையும் வன்னெஞ்சரையும் கசிவிக்க வல்லவை.

"மெய்யன்போடு காதலாகிக் கசிந்து ஓதுபவர்கட்கு' இம்மைச் செல்வங்கள், மறுமைப் பயன்கள், வீடுபேறு ஆகிய நலன்களையும் செம்மையாக அளிக்க வல்லவை.

பல லட்சம் பாடல்களில் செல்லுக்கும், மண்ணுக்கும் உணவானவை போக 796 பதிகங்கள்தான் எஞ்சியிருக்கின்றன. சைவ சமய நூல்களில் பன்னிரு திருமுறைகள் "தோத்திரங்கள்' என்றும், பதிநான்கு மெய்கண்ட நூல்கள் "சாத்திரங்கள்' என்றும் வழங்கப்படுகின்றன.

தோத்திரங்கள் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. சாத்திரங்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை என வரலாறு கூறுகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டது தமிழ். ஆனால், தமிழ்ப் பண்ணிசை பாடும் ஓதுவாமூர்த்திகளின் நிலை பரிதாபத்துக்குரியது.
பித்தா பிறைசூடி பெருமானே என தமிழ்ப் பாடல் பிறந்த ஊர்களில் ஓதுவாமூர்த்திகளின் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து வருகிறது.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஓதுவாமூர்த்திகள் உலகோர் யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பாடுகிறார்கள். பண்ணாங்கம், சுத்தாங்கம், சரிதம், முகவுரை, தாளம் இவை அனைத்தும் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் தமிழ் இசையைப் பரப்பியவர்கள் ஓதுவாமூர்த்திகள்.

ஊர்தோறும் சென்று அங்குள்ள திருக்கோயில்களில் தேவார, திருமுறைகளைப் பாடி, சமயத் தொண்டு செய்து தமிழ் வேதத்தின் அற்புதங்களை உலகறியச் செய்தவர்கள்.

திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அப் பாடலாகிய தமிழிசைக்கு உரிய பண்ணிசை பாட ஓதுவாமூர்த்திகள் இல்லை. அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையினரால் எவ்விதப் பலன்களும் கிடைக்கவில்லை.

திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களில் தமிழ்ப் பண்ணிசை பாட வாய்ப்பளிக்க வேண்டும். அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.

சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு பல லட்சம் செலவு செய்கிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.
அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.

ஓதுவாமூர்த்திகள் இல்லாத திருக்கோயில்களில் ஓதுவார்களைக் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். காலநிலை கருதி போதிய ஊதியம் வழங்க வேண்டும்.


தமிழ், தமிழ் என கூக்குரலிட்டால் போதாது. கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்த ஓதுவாமூர்த்திகள் வேண்டாமா? இதற்கு உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், பிறகு சம்ஸ்கிருதம் தானே கோலோச்சும். இதை நாம் உணர வேண்டாமா?
தமிழுக்காகத் தொடர்ந்து வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவாமூர்த்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்ற பின் ரூ.3 ஆயிரமாவது ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணி செய்தால் மட்டுமே ஓய்வூதியம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, பணிசெய்த ஓதுவார்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

திருவிழாக் காலங்களில் தமிழ்ப் பண்ணிசை வாணர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தேவாரப் பாடசாலையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பயிற்சி பெற்றவுடன் கோயில்களில் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் உடனடியாகச் செய்யும்பட்சத்தில் தமிழைப் பரப்பும் ஓதுவாமூர்த்திகளின் எதிர்காலம் சிறக்கும், தமிழும் வளரும்.

(நன்றி : தினமணி)

கடைக்காரர் கமெண்ட்:
தமிழை காக்கும் ஓதுவார்களுக்கு நிரந்திர பணி வழங்க நம்ம அறநிலையதுறை உடனே நடவடிக்கை எடுக்கணும். இல்லையனா அடுத்த தலைமுறைக்கு தேவாரம், திருவாசகம் அப்படினா என்னன்னு தெரியாம போய்விடும்.





பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru