இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் மகாகவி பாரதியாரின்
மூலம்
வேர்விடத்தொடங்கிய நவீன இலக்கிய மறுமலர்ச்சி அடுத்த இரு பத்தாண்டுகளில்
புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., க.நா.சு. போன்றோரால் தீவிரமடைந்து
‘மணிக்கொடி
காலமாக’ப் பரிணமித்து வளர்ந்திருக்கிறது.
தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றித் தீர்க்கமான பார்வையின்றி, குழப்பமான, மேம்போக்கான கருத்தாக்கங்களே நிலவிவந்த காலகட்டத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெளிவான, இலக்கியப் பிரக்ஞை கொண்ட பார்வையை முன்வைத்தவர் எனப் புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும். அவர் தொடங்கிவைத்த இவ்விவாதத்தின் பலனாக மொழிபெயர்ப்பு மார்க்கத்தின் மீது கவிந்திருந்த மேகமூட்டங்கள் கலைந்து நவீன மொழிபெயர்ப்பு ஓர் இயலாகப் படைப்பிலக்கியத்திற்கு இணையான ஒரு ஸ்திதியைத் தற்போது அடைந்திருக்கிறது.
ஆனால் இத்தகைய கோட்பாடு, விவாதங்கள் தொடங்குவதற்கு முப்பதாண்டுகள் முன்னதாகவே பரிபூரண இலக்கியப் பிரக்ஞையோடு பாரதி மொழிபெயர்ப்பை அணுகியிருப்பது அந்த அதிகலைஞனின் மற்றொரு ஆச்சரிய பரிமாணம்.
இலக்கிய மொழிபெயர்ப்பு ஒரு கலையாக வளர்ச்சியுற்ற பிறகு தூய மொழிபெயர்ப்பாய்வு என்றும் பயன்முறை மொழிபெயர்ப்பாய்வு என்றும் ஜேம்ஸ் எஸ். ஹோம்ஸால் வகைப்படுத்தப்பட்டு, இன்று பல்வேறு மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் கிளைத்திருக்கின்றன. அத்தகைய பகுப்பாய்வுக்குள் செல்லாமல் மூலப்படைப்பிற்கும் படைப்பாளிக்கும் அப்படைப்பு உருவான கலாச்சாரத்திற்கும் மொழிபெயர்க்கப்படும் பிரதி விசுவாசமாக இருத்தல் என்ற அடிப்படையளவில் எளிமைப்படுத்தி பாரதி, மொழிபெயர்ப்புகளை இங்கு விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன்.
தேசியக் கவிஞர் என்னும் ஒற்றைப் பரிமாணத்திலேயே பெரும்பாலும் தரிசிக்கப்படும் பாரதியின் மொழிபெயர்ப்புகள் இலக்கியரீதியாகப் போதிய கவனம் பெறப்பட்டவையோ ஆய்விற்குட்பட்டவையோ அல்ல. ஒரு கலைஞனை holy cow ஆக ஆக்கி, அவனைப் பற்றிய அதிபிம்பங்களை மட்டுமே தரிசித்துக் கொண்டிருப்பது அவனை மறைமுகமாகப் புறக்கணிப்பதுதான். பாரதி கணிசமான அளவில் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறாரா என்பது இப்போது உருவாகும் கேள்வி. பத்துக் கவிதைகளையும் தாகூரின் எட்டுச் சிறுகதைகளையும் (அவற்றில் ஒன்று குறுநாவல்),பகவத் கீதை மற்றும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் அவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளாகச் சேர்க்கலாம்.
ஒரு பத்திரிகையாளராக, தாதாபாய் நௌரோஜி, திலகர், விபின் சந்திரபால், ஜகதீச சந்திரபோஸ் ஆகியோரது சொற்பொழிவுகளையும் காங்கிரஸ் மகாசபையின் சரித்திரத்தையும் பற்பல செய்திக் கட்டுரைகளையும் மொழி பெயர்த்திருப்பதை அவற்றின் செய்தி மதிப்பிற்காகக் கணக்கில்கொள்ளாமல் அவரது இலக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றி மட்டும் இங்கே பேசலாம்.
‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர
மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவு பல காட்டல், கண்ணீர்த்
துளி வர உள்ளுருக்குதல்...’
ஆகியவை வேண்டுமென வாணியிடம் பாரதி வேண்டுவது அவரது பகவத் கீதை மொழிபெயர்ப்பில் சித்தி ஆகியிருக்கும். அவரது பகவத் கீதையை ஆன்மிகத் தேவையேதுமின்றி வெறும் வாசிப்பு ரசனைக்காக மட்டுமே பயில்வது ஒரு மகத்தான அனுபவம்.
பகவத் கீதையின் சுலோகங்கள், மிகக் கச்சிதமான வாக்கிய அமைப்புகளில் அவரது உரைநடைகளில் வழக்கமாகக் காணப்படும் சமஸ்கிருத வார்த்தைகள் கூட மிக மிகக் குறைவாக, தெளிவான நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் பாரதியின் பகவத் கீதை அளவிற்கு முழுமையான, அதே நேரத்தில் ரத்தினச் சுருக்கமான மொழிபெயர்ப்பு வேறெதுவும் கிடையாது.
மொழிபெயர்ப்பின் நடுவில் எந்த விளக்கவுரையையோ வியாக்கியானத்தையோ கொண்டு வராமல் ஒரு நீளமான முன்னுரையில் பட்டினத்தார், தாயுமானவர், திருநாவுக்கரசர் ஆகியோர் மேற்கோள்களோடு பகவத் கீதையின் சாராம்சம், அது முன்வைக்கும் தத்துவம், வேதம்-உபநிடதங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள், வேதங்கள் மிக மிகப் பழைய சமஸ்கிருத மொழியிலும், காலத்தால் பின் தங்கிய உபநிடதங்கள் பிற்காலத்திய சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டிருப்பது குறித்த விளக்கங்கள், கீதை குறித்த மேம்போக்கான தப்பபிப்பிராயங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.
அவரது மொழிபெயர்ப்புகளில் முதலிடம் பெற வேண்டியது அதன் மொழி அந்தஸ்திற்காக, பகவத் கீதை மொழிபெயர்ப்பேயாகும்.
‘எதனையெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.... பார்த்தா, மூன்றுலகத்தில் எனக்கு யாதொரு கடமையுமில்லை, நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலே இயங்குகிறேன்... பார்த்தா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில்செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில்செய்ய வேண்டும்.’
பகவத் கீதைக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பு தாகூரின் எட்டுக் கதைகளின் தமிழாக்கம். பாரதி தேர்ந்தெடுத்த இக்கதைகளில் ‘மானபங்கம்’, ‘நள்ளிரவிலே’, ‘ஸமாப்தி’ ஆகிய கதைகள் மிக அற்புதமானவை.
சௌந்தர்யங்களில் மனமுருகி பாரதி புனைந்திருக்கும் பல கவிதைகளைக் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் கண்டிருப்போம். மானபங்கம் என்னும் தாகூரின் இந்தக் கதையை பாரதி மொழிபெயர்க்கையில், யௌவனத்தின் சோபை ததும்பும் வர்ணனைகள் அற்புதமான வரிகளைச் சமைக்கின்றன. இக்கதையின் முதல் ஐந்து பத்திகள் நமக்கு ஏற்படுத்தும் மனவெழுச்சியும் களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டலும் கண்ணீர் வர உள்ளுருக்குதலும் வங்க மொழி வாசகனுக்குத் தாகூரின் மூலத்தை வாசிக்கையில் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இதே கதையில் கணவன் மனைவியை அடித்து, கட்டாயப்படுத்தி அவளது நகைகளை அபகரித்துக்கொண்டுசெல்லும் கொந்தளிப்பான கட்டத்தில் பாரதியின் மொழி லாவகம் பிரமிப்பேற்படுத்துகிறது.
‘வீட்டில் யாரும் துயில் கலையவில்லை. நிலா அமைதியாக வீசிற்று. இரவின் மோனம் குலையவில்லை. இத்தனை சாந்திக்கிடையேகூட மனிதர் திரும்ப சொஸ்தமாக இடமில்லாதபடி நெஞ்சுடைந்து போதல் ஸாத்யமாகிறது.’
தாகூரின் மூன்று சிறுகதைகளை இணைத்து சத்யஜித் ரே இயக்கிய ‘தீன் கன்யா’வில் இடம்பெறும் கதையான ‘ஸமாப்தி’யை பாரதியின் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது, ஒவ்வொரு வரியிலும் அந்த அற்புதமான திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதே வேகத்தில், அதே அழுத்தத்தில், அதே உணர்ச்சி நுட்பத்தோடு நம்முன் விரிகின்றன.
சத்யஜித் ரேவின் ‘ம்ருண்மயி’யும் பாரதியின் ‘ம்ருண்மயி’யும் ஒரே ஜாடையில், ஒரே விதமான மருட்சி கண்களில் தெரிய, ஒரே மாதிரியான துள்ளல் நடையில் ஒன்றுபோலவே தெரிகின்றனர். ‘தீன்கன்யா’வைப் பார்த்தவர்களுக்கு இக்கதையைப் படிக்கும்போது அதன் திரைக்கதைப் பிரதியை வாசிக்கும் உணர்வுதான் ஏற்படும்.
பாரதியின் மற்றொரு பிரபலமான மொழிபெயர்ப்பான பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ இருமுறை தமிழாக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாகச் செய்த ‘இனிய நீர் பெருக்கினை இன் கனி வளத்தினை’ என்ற கவிதை மிகச் சிறப்பானது.
‘வெண்ணிலாக் கதிர் மகிழ விரித்திடுமிரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரன் பல செறிந்தனை!
எனச் செறிவான மொழியில் இயற்றப்பட்ட பாடலை மீண்டும் ஒருமுறை ‘நளிர்மணிநீரும் நயம்படு கனிகளும்’ என்று மொழிபெயர்த்திருப்பதற்கு அவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது. ‘வந்தே மாதரம்’ பாடல் பக்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவலில் சாமியார்கள் பாடும் வழிநடைப்பாடலாக இடம்பெறுகிறது. முதலில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் அகவலாக மொழிபெயர்த்தது பாடுவதற்கு நயப்படாததால் இப்போது பல சந்தங்கள் தழுவி மொழிபெயர்த்திருப்பதாக இரண்டாம் பாடலுக்குமுன் விளக்கமளிக்கிறார்.
‘பதஞ்சலி யோக சூத்திர’த்தைப் பாரதி மொழிபெயர்க்கையில் மூலத்தின் சூத்திர வரிகள் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. இதற்கான பொருள் விளக்கம், சூத்திரத்தை விரித்துச் சொல்வது மட்டுமின்றி வேறுபல மொழிபெயர்ப்புகளை, சாத்திரங்களை, கூற்றுகளை மறுக்கவும் உடன்படவும் செய்யும் விவாதமாக மாறுவது புதிய அணுகுமுறை.
பாரதிக்குத் தேச சுதந்திரப் போராட்டமும் சமூக விடுதலையை ஏற்படுத்தும் போராட்டமும் ஒன்றாகவே கலந்திருந்ததனால்தான் இந்து மதவெழுச்சியை ஆங்கிலேயே ஆதிக்க சக்திக்கு எதிர்ப்பாக மாற்ற பகவத் கீதையையும் பதஞ்சலி யோக சூத்திரத்தையும் தமிழில் கொண்டுவந்திருக்கிறார் எனலாம். அவர் மொழி பெயர்க்கத் தேர்ந்தெடுத்த அயல் மொழிக் கவிதைகளைக் கவனிக்கும்போதும் இதே முனைப்புதான் வெளிப்படுகிறது.
லாங்ஃபெலோவின் ‘மேலோர் புகழ்’, பைரனின் ‘சுதந்திரம்’, அரவிந்தரின் ‘கடல்’, ஃபுளோரா ஆண் ஸ்டீலின் ‘கலியுக முடிவு’, மாட்ரால் ஸ்டன்ஷர்மனின் ‘இந்தியாவின் அழைப்பு’, தாகூரின் ‘நாட்டுக் கல்வி’, ஜான் ஸ்கர்ரின் ‘கற்பனையூர்’, சியூசீனின் ‘பெண் விடுதலை’ ஆகிய பாரதி மொழிபெயர்த்த இதர கவிதைகளுக்கிடையே சமூக விடுதலை என்ற பொதுச்சரடுதான் காணப்படுகிறது.
(நன்றி : காலச்சுவடு )
-இன்பா

0 comments:
Post a Comment