Tuesday, May 29, 2012

தேடல்...

  "Searching...Never Ends" என்கிற இந்த புகைப்படம் CANDID CAMERA முறையில்  காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் எடுக்கப்பட்டது.

புகைப்படம் எடுக்கப்பட்டதேதி : 28-5-12   நேரம்: காலை11:30 மணி அளவில்.

புகைப்பட கலைஞர் : பத்மநாபன்
http://www.facebook.com/padmanaban.mohan
 

இங்கே
தேடல்...
தொடங்குகிறதா? இல்லை
முடிகிறதா?

இருபதுகளில்
காதல்
அறுபதுகளில்
ஆன்மிகம்

இப்படி
எந்த வயதில்
எதை தேடவேண்டும் என்பதை
எது
தீர்மானிக்கிறது?

ஆழமான வாசிப்பும்
ஒரு
தவம் அல்லவா?

இப்படியொரு
வாசிப்பு
ஒரு வரம் அல்லவா?

இங்கே
உள்மனமே வழித்துணை.

ஒரு பக்கத்திற்கும்
மறு பக்கத்திற்கும்
உள்ள இடைவெளியே..
ஓய்வு.

இது..
உயிரில்லா புத்தகங்களுக்குள்
ஒரு உயிர் தேடும்
முடிவில்லா பயணம்.

திருநாமத்தையும் தாண்டித் தெரியும்
நெற்றிச் சுருக்கங்கள்..

தேடும்போதே
இவருக்கு தெரிந்துவிட்டதா?

தேடுவதை
தேடிக்கொண்டே இருக்கவேண்டும்
என்பது.

இத்தனை வருடங்களாய்..
தொடர்ந்து கொண்டிருக்கும்
இவரின் தேடல்களை..
எங்கே சென்று நாம் தேடுவது?

அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு
ஒரு
அடையாளம் இவர்.

கண்ணாடிக்குள் இருக்கும்
இவர்
கண்களின் வெளிச்சத்தில்...
தெளிவாக தெரிகிறது

நான்
எதையோ தொலைத்துவிட்டதும்... 

இதுவரைக்கும் 
'அதை'
தேடவேயில்லை  என்பதும் .


கவிதை - இன்பா

Sunday, May 20, 2012

கடற்கரை


கவிதைக்காக வரிகள்
கோர்ப்பது போன்றது...
கடற்கரையில் சிப்பி சேகரிப்பது.

நம்
கடந்த கால டைரியின்
காதல் பக்ககங்களை மட்டுமே
புரட்டுகிறது கடல் காற்று.

ஆறறிவு படைப்பின்
அர்த்தம் புரிகிறது...
அலைகளோடு
நடக்கும் தருணங்களில்...

இதயத்தின் அறைகளில்
எதிரொலிக்கும் இசை இரண்டு...
ஆலய மணியோசை
அலையோசை.

சூர்யோதயம்
சந்ரோதயம் என
உலகின் மிக அழகான
இரு பூக்களை
தினமும் பூக்கும் ஒரே செடி...
கடல்.

போதி மரம் எதற்கு?
பக்கத்திலே  இருக்கிறது..
பவுர்ணமி நிலவும்..
கடற்கரையும்.

கலவி அனுபவம்
நிமிட கணக்கு.
கடுந்தவம் என்பது
வருட கணக்கு.

கணக்கில்லா மோனம்..
கடற்கரையில் நிற்றல்.

இன்று
எந்த  நேரமும்
சுனாமியாய்..
உலகை உள்வாங்க
தயாராகவே இருக்கிறது..

தின்று வீசிய குப்பைகளும்
(கள்ள) காதலர்கள் முத்தங்களும்
கொட்டிக் கிடக்கும் கடற்கரை..


கவிதை :  இன்பா

 
Follow @kadaitheru