நேதாஜி 1941ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். 1935ல், "இந்தியப் போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது, சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றினார் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.
அக்கடிதத்தை, 1948ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத்போசுவிடம் கொடுத்தார் எமிலி.
நேதாஜி எழுதிய வங்கக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு...
பெர்லின், 8.2.1943
என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,
இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கிப் புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிரயாணத்தில் நான் ஏதும் விபத்திற்குள்ளானால் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி, அதை தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளேன்.
நான் இங்கே கலியாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்ணா! தாங்கள் என் வாழ்நாள் முழுதும் என்னிடம் காட்டி வந்த அன்பு எல்லையற்றது. அதே அன்பை, கருணையை, என் மனைவி, மகள் இருவரிடத்தும்... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும், பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டுச் செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! இதுவே, நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதியான பிரார்த்தனை. விடை பெற்றுக்கொள்கிறேன்.
அண்ணா! தங்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும், நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்.
தங்கள் பேரன்பிற்குரிய
"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல...' என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.
அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், "தேவையில்லை' என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.
காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.
ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.
நம்மிடையே, "வாழ்ந்து' கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.
தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.
நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.
மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.
நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும் கொண்டு ஒரு சாட்சியாக நிற்கும் இந்த நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ் ஜெயாவிற்கு சிரமமாக உள்ளது. வாடகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி, இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவர்.
ஆகவே, நேதாஜியின் நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும்,நேதாஜி நினைவு இல்லத்தை சுற்றிப் பார்க்க விரும்பு பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793.
நேதாஜி என்று நம் இந்திய மக்களால் பெருமையுடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்க்கு வருகிற
(நன்றி : தினமலர்) .
கடைக்காரர் கமெண்ட் :
அரசியல் கட்சிகளின் லாப நோக்கத்துக்கு காந்தி பயன்பட்டது போல, அமரர் நேதாஜி பயன்படவில்லை போலும்.
பதிவு : இன்பா