Wednesday, November 26, 2014

காடு - 'கத்தி'க்கூர்மைசமிபகாலமாக தமிழ்சினிமாவில் மிகவும் ஆரோக்கியமான போக்கு ஒன்று உருவாகி இருக்கிறது. அது, சமகால சமுதாய பிரச்சனைகளை பேசும் போக்கு.

கிரிக்கெட்டில் சாதியம் பேசும் ஜீவா,அரசியல் தெளிவு பற்றி பேசும் மெட்ராஸ், எல்லாவற்றும் ஒருபடி மேலே சென்று பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை பேசியது கத்தி.  

 விஜய் போன்ற முண்ணனி நடிகர் ஒருவர் மக்கள் பிரச்சனைகளை, திரைப்படத்தில் முழங்கி இருப்பது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பிறகு கத்தியில் மட்டுமே பார்க்கமுடிந்து இருக்கிறது. கேப்டன் பிரபாகரனையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்

இந்த வரிசையில், "காடு"

இப்படி ஒரு படத்தை துணிந்து தயாரித்த நேரு நகர் நந்து அவர்களையும், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செய்த இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

காடு - தலைப்புக்கு ஏற்றார்போல காட்டின், மரங்களின் அருமையை பேசுகிறது.

எப்படியாவது வனத்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று விரும்பும் ஒருவன், அந்த வேலைக்கு பணம் கொடுக்க சந்தனமரம் கடத்துகிறான்.
அவனுக்காக பழி ஏற்று, சிறைக்கு செல்லும் நண்பன் விதார்த், அங்கு புரடசியாளர் சமுத்திரகனியை சந்திக்கிறார். அதன் பிறகு, அவர் வாழ்வில்,குறிப்பாக கொள்கைகளில் நிகழும் மாற்றமே "காடு" படத்தின் கதை.
 
"நாங்க உயிர் வாழ்வதற்க்காக காட்டில் இருந்து, எத வேண்டுமானாலும் எடுத்துகொள்வோம். ஆனா, வசதியா வாழறதுக்காக ஒரு செடியை கூட வெட்டமாட்டோம்" என்னும் வசனமே படத்தின் உயிர் நாடி.

சமுத்திரகனி பேசும் சிந்தாந்தகளும், வசனங்களும். படத்துக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கின்றன. இதுபோன்ற ஒரு வேடத்துக்கு இவரைவிட வேறுயாரும் பொருந்தவாய்ப்பில்லை.

'கத்தி' படத்தில் விஜய் பேசியதைவிட,கூர்மையான வசனங்கள். இதுபோன்ற டிரெண்டை அமைத்து தந்து இருக்கும் விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு நாம நன்றி சொல்லலாம்.

குறிப்பாக, "போராட்டம் என்றால் ஒன்று வெற்றி அல்லது தோல்வி.. சமாதானம் என்று ஒன்று இருக்கவே முடியாது. உலக சரித்திரத்தில், எங்கெல்லாம் சமாதானம் முன்வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதிகாரம் ஜெயித்து இருக்கு". என்று அவர் விதார்த்துக்கு கூறுவது.

இதற்கு நம் இந்தியாவைவிட ஒரு சிறந்த உதாரணம் இல்லை. கடைசிவரை சமாதானம் வேண்டாமென்று புலித்தலைவர் மறுத்ததின் அர்த்தமும் இதுவே.

அதைபோன்று, கூத்துக்கலைஞராக நடித்து இருக்கும் ஒரு பெரியவர். காவல்துறையினர் சிறையில் அவரை அடித்து உதைக்கும்போது, அவர் கூத்து கட்டிய காட்சிகளை பார்க்கும்போது, ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதல்கள் நம் மனதை பிளக்கின்றன.

படத்தின் பாடல்களை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

யுகபாரதியின் யதார்த்தமான வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகத்தேவையான அளவுக்கே இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இசைஅமைப்பாளர் கே. தமிழ்சினிமாவில் இது புதிய முயற்சி. மேலும், தமிழிசை கருவிகளின் ஒலியை காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகா,ஒகோவென்று புகழும் அளவுக்கான படமில்லைதான்.  கம்யுனிச நெடி படத்தில் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால், படத்தின் கதைகளத்துக்காகவும், படத்தில் சொல்லி இருக்கும் கருத்துகளுக்காகவும்,குறைகளை மறந்துவிட்டு  நாம கொண்டாட வேண்டிய படம்.....காடு,

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru