Sunday, November 23, 2014

காணாமல்போன கழுதைகள்


பிரபல ஆங்கில கவிஞனரான ஆர்.எல். ஸ்டீவன்சனுக்கு கழுதைகளின்மேல் தனி மரியாதை இருந்தது. அதனைப் போற்றி பெரிய கவிதையே எழுதி வைத்தார். கவிதையின் மையப் பொருளாக அதன் சகிப்புத் தன்மை போற்றப்பட்டது.

மக்கள் அதனிடமிருந்து இக்குணத்தை கற்க வேண்டும் என்ற அவர் விருப்பம் அதில் தொனித்தது. நெப்போலியனின் தங்கை தன் முகச்சுருக்கத்திற்கு கழுதை பாலில் மருந்து தயார் செய்து பூசிக் கொண்டாளாம், ஹிப்போகிரேட்டஸ் கழுதை பாலை சர்வ ரோக நிவாரணியாக புகழாரம் சூட்டியுள்ளார். கிளியோபாட்ரா தினமும் கழுதை பாலில்தான் குளித்தாளாம். அதற்காக 700பெண் கழுதைகள் அவள் அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்டது. பாவம் அதன் குட்டிகளின் கதி என்னாயிருக்கும்? இப்படியெல்லாம் படாத பாடுபட்டு தன் மேனியழகை பளபளப்பாய் வைத்துகொண்ட அவர் அல்பாயுசில் பாம்பைக் கொத்த விட்டு இறந்து போனதை என் மனம் ஏற்க மறுக்கிறது.

போன மாதம் புத்தக நிலையத்திற்கு சென்று புத்தகங்களை வாங்கினேன் எனது 7 வயது மகளும் அவள் பங்கிற்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆங்கில படக் கதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் . ஒரு வாரத்திற்கு பிறகு அவள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். கதையில் அலிபாபாவிற்கு ஒரு கழுதை நண்பனாக உள்ளதை போல் எனக்கும் ஒரு கழுதைக் குட்டி உடனடியாக வேண்டும் என்றாள். கோரிக்கையின் உப பங்காக முதலில் தான் கழுதையை நேரில் பார்க்க வேண்டும் என்றாள். ஒரு தந்தையின் தார்மீக கடமையாகக் கருதி எனது இருசக்கர வாகனத்தில் தேனியின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாயாக அலைந்தும் கழுதையைக் காணவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது நிறையக் கழுதைகள் என் வீட்டிற்கு அருகே நின்றிருக்கும். தற்போது நவீன நகர்மயமாகிப் போன தேனி நகரத்தில் துவைப்பவர்கள் தங்கள் துணிகளைப் பழைய எம்.80 வண்டியிலோ, சற்று கூடுதலாக இருந்தால் பைக், டெம்போ வண்டியில் ஏற்றிச் சென்று மெஸின் மூலமே துவைக்கின்றனர். அரிதினும் அரிதாகவே ஆற்றில் துவைப்பதை காண முடிகிறது. அக்கம்பக்க நண்பர்களிடம் கழுதைகளின் இருப்பிடம் பற்றிக் கேட்ட போது கேலிச் சிரிப்பே மிஞ்சியது. கஜினியின் விடா முயற்சியோடு நான்கு வாரத் தேடலுக்கு பின் தேனியின் புறநகர் பகுதியில் ஒரு தாயும் குட்டியும் மேய்வதைக் கண்டோம். என் மகளும் மிகவும் வாஞ்சையோடு அதனை அணுகினாள். நட்புடன் பார்த்த தாயும், துள்ளலுடன் வந்த சேயும், எந்த வித தடையுமின்றி ஓடிச்சென்ற என் மகளும் என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.

மனித வளர்ப்பில் ஆளாக்கப்படும் உயிரினங்களில் கழுதை மிகவும் கேவலமாகவும், அவமானத்துக்குரிய ஜீவனாகவும் உள்ளது. உண்மையில் குதிரைகளைப் போல் ஏன் அதைவிடவும் ஒருபடி மேலே பயனுள்ளதாகவும் உள்ள மிருகம் இது. குளம்பி வகையைச் சேர்ந்த கழுதைகள் மனித சமுதாயத்தோடு பண்ணெடுங்காலமாக தொடர்பு கொண்ட ஒன்று. மெசபடோமிய நாகரீக படிமங்களில் கழுதைகள் மனிதனோடு தொடர்பு கொண்ட சான்றுகள் சிக்கியுள்ளன.

மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையையும் தன் சிறப்புக் குணங்களாக  கொண்ட இவ்வினம் தன்னை விட 1 1/2 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது. இன்றும் முஸ்லீம் நாடுகளில் அதிகமாக தங்கள் பயணங்களில் உபயோகிக்கப்படும் உயிரினம் கழுதைகள். சுமார் 50 ஆண்டுகள் வரை வாழும் இவை, மனிதனால் மிக அதிகபட்சமாக உபயோகிக்கப்பட்டு இறுதி நாட்களில் நோய்வாய்பட்ட நிலையிலேயே தெருக்களில் கைவிடப்படுகிறது. யாருடைய கவனத்தையும், மனதில் சஞ்சலத்தையும் இன்று வரை இந்த விலங்கினம் இந்தியாவில் ஏற்படுத்தியது இல்லை என்பதுதான் சுடும் உண்மை.

வளர்ந்தவை 3 அடி உயரமும், 5 அடி நீளமும் கொண்டவையாக இருக்கும். இதன் பிறப்பு அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்திருக்கும் என்கிறார் இது தொடர்பான ஆய்வு செய்த டாக்டர் டயனா நானன் . பின்னர் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டன என்பது இவரது கருத்து. கூட்டமாக வாழ விரும்பும் இவைகள், 3 வயதிற்குப் பிறகு பருவத்திற்கு வருகின்றன. வயதில் முதிர்ந்த ஆணும் சரி, இளம் வயதினரும் சரி, பெண்ணைக் கவர்வதில் ஆவேசமாக போட்டி போடுவதில்லை. பெண்ணானது, சரிசமமாக உடலுறவு கொள்கிறது. ஆண்களுக்கு இடையேயோ அல்லது பெண்களுக்கு இடையிலோ போட்டி எனும் போது ஒன்றையொன்று வெறியோடு கடித்துக் கொள்கிறது. இதன் பற்கள் வலிமையானவை என்பதால் பலமான காயமேற்பட வாய்ப்புள்ளது. சந்தோஷ தருணங்களில் இவை அதே போல் செல்லமாக கடித்துக்கொள்ளும் நிகழ்வும் நிகழ்கிறது.

ஆண்குறியின் நீளம் அதிகமென்பதால் பெண்ணின் புழைக்குள் நுழைக்க அதிக முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இதன் விந்தும் உடனடியாக வீணாக வெளியேறி பெண்ணின் முதுகுப்புறத்தில், தொடையில் சிந்த நேரிடுகிறது. தவிர காதல் களியாட்டத்தின் ஒரு அங்கமாக உடலுறவு கொள்ளும் சமயம் பெண் திடீரென விலகி ஓடுவதும், பின்புறமாக எத்துவதுமாக இருப்பதும் ஆணின் பல முறை முயற்சிக்க நேரிடுகிறது. 10 நாட்கள் நீடிக்கும் இந் நாடகத்திற்குப் பின் கருவுறும் பெண் ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிபோடும். குட்டியை மிகுந்த அக்கறையோடு வளர்க்கும். இளம் குட்டியைத் தாக்க நினைக்கும் எந்த உயிரினத்தையும், தயவு தாட்சண்யமின்றி கடித்துக்குதறும். ஒரு வேளை 300 மி.லி சுரக்கும் இதன் பாலைக் கறந்து இன்றும் கிராமத்தில்  விற்பனை செய்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு கழுதைப்பாலை சுமார் 10 சொட்டுகள் வரை குடிக்கக் கொடுப்பதன் மூலம் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி வளரும் என்றும், பேய் பிசாசுகள் அண்டாது என்ற நம்பிக்கையும் உண்டு.

கழுதைகள் பேதமின்றி உணவைத் தின்கின்றன. மிக அதிகபட்சமாக உண்ணும். இவ்வுணவு மிக வளர்ந்த குதிரை உண்ணும் உணவை விட அதிகமாக இருக்கும். இதன் ஜீரணமண்டலமும், மிகச்சிறப்பானது. உலகிலேயே  பெரிய விலங்கினங்களில் மிகச்சிறந்த ஜீரண உறுப்பைக் கொண்டது கழுதைகளே. இதன் சாணமானது ,சத்துக்கள் முற்றிலும் உறிஞ்சப்பட்ட சக்கையாகவே வெளியேறும். இதனால் இது உரமாக்கப்படுவதில்லை. மலைப்பிரதேசங்களில் காய்ந்த இதன் சாணம் குளிர்காலங்களில் எரியூட்டப் பயன்படுகிறது. இதன் சிறுநீரும் காட்டமான நெடியுடையது. பழங்குடிகள், கொசு விரட்டியாக, பாம்பு போன்ற ஊர்வனம் தங்கள் குடிசைக்குள் வராமல் இருக்கவும் ,  இருப்பிடம் சுற்றி தெளிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகம்,

இதன் செரிமாண சக்தி குறித்து தொடர் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் மருந்துகள் தயாரிக்கவும் முயற்சி செய்கிறது. ஸ்மித் சோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைடால் எப்படி இதற்கு இப்படிப்பட்ட அதிக சக்தி படைத்த ஜீரண மண்டலத்தை இயற்கை படைத்துள்ளது என வியப்படைகிறார். அது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளதாம்!.

கழுதைகளின் காது மிகப் பெரியதாக இருப்பது இதன் உடலை மித வெப்பமாகவே நிலை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்தமானது பிற பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதன் வாலும், மாட்டிற்கு உள்ளது போல நுனியில் அதிக முடி கொண்டது. உண்ணிகளை, ஈக்களை விரட்ட மட்டுமின்றி ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. மிக நுண்ணிய ஒலியையும், உணரும் இதன் காதுகள், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள எச்சரிக்கும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. தனது குறைந்த பார்வைத் திறனை காதுகளின் செயல்பாட்டின் மூலம் சமன் செய்து கொள்கிறது.

கழுதைகளின் ஒலி சற்று வித்தியாசமானது. சுமார் 7 விதமாக ஒலி எழுப்பும், ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும் ஒரு குறியீடாக இருக்கும். உதாரணமாக நீண்ட ஒலிதான் காமத்தோடு இருப்பதையும் கர்.......கர்....என்ற ஒலி கோபத்தோடு இருப்பதையும், புர்.....புர் என்ற உறுமும் ஒலிதான் உண்ணும் உணவில் பூச்சிகள் அல்லது ஒவ்வாத பொருட்கள் இருப்பதையும் அதே உறுமும் ஒலி படுத்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டால்தான் தூக்கத்திற்குத் தயாராக இருப்பது என பல்வேறு சமிக்ஞைகளின் அடையாளமாகின்றது.

அபூர்வ உயிரினமான கழுதைகள் இன்று இந்தியாவில் அருகி வருகின்றன. பம்பாய், கொல்கத்தா, போன்ற நகரங்களில் பல வயதான கழுதைகள்,
ஊனமுற்றும், நோய்களுக்கு ஆளாகியும் அநாதையாக விடப்படுகின்றன. கிராமங்களில், பாலியல் நோய்களால் தாக்கப்பட்ட, போதை பழக்கத்திற்கு ஆளான ஆண்கள், கழுதைகளோடு உறவு கொண்டால் நோய் தீர்ந்து போகும் என்ற தவறான நம்பிக்கையால் பல பெண் கழுதைகள் ,பாலியல் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து போகின்றது. இது திடுக்கிடும் உண்மையாகும். இதன் வாலில் பனை ஓலையை கட்டி தீ வைத்து மிரண்டு ஓடும் அதன் அழகை குரூரமாக ரசிக்கும் பல மக்களை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு இவைகள் கஷ்டப்படுவதையெல்லாம் அறிந்த பேராசியரும், உயிரின ஆதரவாளருமான டாக்டர் ஜீன் மற்றும் அவரது துணைவி பால் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று கொல்கத்தாவில் ஒரு காப்பகம் துவங்கி உள்ளனர். முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட, கைவிடப்பட்ட கழுதைகளை பேணிக் காப்பது இவர்களின் குறிக்கோள்.

கழுதைகளுக்கு 24 மணி நேரமும், மருந்தளிக்க மருத்துவர்களும் அழைத்து வர ஆம்புலன்சும் இங்குள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிகளுக்கு சென்று கழுதைகளின் சிறப்பு குறித்து வகுப்புகள் எடுக்கின்றனர். நிறைய துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். துவக்கத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர்கள் தற்போது புதுவித நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். நம் நாட்டில் உள்ள கழுதைகள் மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை  என ஒரு மதவாத அமைப்பு கேள்வி கேட்டும்,   நிதிவரத்து குறித்தும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மிக நுண்ணிய அறிவு படைத்த இவைகளை இந்தியா் மட்டும் ஏனோ கண்டு கொள்ளவே இல்லை. இவற்றைப் பொதி சுமக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில், இதனைப் புரிந்து இவற்றைப் பொதிசுமக்க மட்டுமின்றி ,உழவு வேலைக்கு, வண்டி ஓட்ட, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருப்பி அழைத்து வர, பட்டியில் அடைத்த ஆடு,கோழிகளைப் பாதுகாக்க போன்ற அறிவு சார்ந்த செயல்கள் பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். நம் ஊர் சேவல் சண்டை போல், ஆப்கானிஸ்தானில் கழுதைகளை வைத்து போட்டிகள், சண்டைகள் நடத்துகின்றனர்.

நமது மதங்களும் கூட கழுதைகளை காளராத்திரி தேவி, சீதளாதேவி போன்றோருக்கு வாகனமாக்கிப் பார்க்கிறது. நவ மாதர்களில் முக்கியமானவளாக கருதப்படுபவள் காளராத்திரி, நவராத்திரியில் இவளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. துர் மந்திர உபாசனை செய்யும் போது காளி தேவிக்கு கழுதையை வாகனமாக்கி வழிபடுவது மற்றுமொரு தந்திர வழிபாடு. பண்டைய எகிப்திய அரசர்கள் இதனை தெய்வத்தின் அடையாளமாகவும், தாங்கள் இறந்தால் 10 கழுதைகளைப் பலியிட்டு புதைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டனர். தற்போது கிடைத்துள்ள புதை பொருள் ஆராய்ச்சி இதனை உண்மை என நிரூபித்துள்ளது.

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

0 comments:

 
Follow @kadaitheru