Thursday, February 24, 2011

"பஸ் டே” கொண்டாட்டங்கள் - கோபி

இது, என் இனிய நண்பர் திரு.கோபி எழுதிய பதிவு. படித்தவுடனே பொட்டில் அடித்த உணர்வு. உண்மையான பாதிப்புடன் அவர் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவு...உங்களுக்காக
இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது.. இளைஞர்களே கனவு காணுங்கள், நம் நாடும் நாளை வல்லரசாக மாறும் என்று... இளைஞர்களே... இன்று நீங்கள் வாழ்வில் செய்யும் எந்த விஷயங்களும், எடுக்கும் எந்த நல்ல முடிவுமே வருங்காலத்தில் நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் என்று இன்று இருக்கும் பல நல்லவர்கள் உங்களை பற்றி உயர்வாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் செய்வது என்ன?

ஒவ்வொரு வருடமும் ”பஸ் டே” கொண்டாட்டங்கள்....

ஆஹா... பஸ் டே கொண்டாட்டமா, தாராளமாக கொண்டாடுங்களேன்... பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து குடும்பங்களும் எப்படி மகிழ்ச்சியாக தன் சுற்றம் சூழ மகிழ்வாக கொண்டாடுகிறோமோ அப்படித்தானே இந்த பஸ் டே கொண்டாட்டமும்..

இந்த கொண்டாட்டத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

* மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பஸ் டிப்போக்களுக்கு சென்று, அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து, பொதுமக்கள் முகம் சுளிக்காமல் பயணம் செய்யும் வகையில் செய்யலாம்...

* வருடம் முழுதும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி குழந்தைகள் என்று எல்லோரையும் பத்திரமாக செல்லும் இடம் சேர்க்கும் வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் டிக்கெட் கொடுக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு ஏதேனும் பதில் மரியாதை செய்யலாம்...

* பேருந்தில் பயணிக்கும் சக பயணியர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாம்...

* தான் கல்லூரிக்கு செல்வது படிப்பதற்கே, மற்றபடி தான் எந்த வேலையையும் (மாணவர்களை கவனித்து கொள்ளும் தந்தை, அண்ணன்கள் போல்) செய்யாமல், வெறுமே புத்தகங்களை கையிலேந்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்து, அவர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை கிரகித்து அதை தன் வாழ்நாளுக்கு உபயோகப்படுத்துதலாம்...

ஆனால் ”பஸ் டே” என்ற பெயரில் அந்த தினத்தில் சென்னையெங்கும் நடக்கும் கூத்துகள் என்ன?

பேருந்துகளில் உடன் பயணிக்கும் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பெரிதாக ஓசையெழுப்புவது...

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பெண் பயணிகளை கிண்டல் செய்வது
பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகள் யாரேனும் இந்த நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முன்வந்தால் அவர்களை கும்பலாக சேர்ந்து நையப்புடைத்து காயப்படுத்துவது.

பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு ஆட்டம் என்ற பெயரில் அனைத்து கன்றாவிகளையும் செய்வது.

பேருந்துகள் செல்லும் வழியெங்கும் சாலைகளில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்வது, கடைகளை சூறையாடுவது, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பயணியர்களை ஏசுவது, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பெண்களை கண்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அசிங்கமான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதில்லை (உபயம் : இன்றைய கேவலமான திரைப்படங்கள்).... எதிர்ப்படும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவது....

நாட்டின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் காவலர்கள் இந்த அராஜக மாணவர்களின் அட்டகாசங்கள், கூத்துக்கள் அத்துமீறாமல் இருக்க, பெரும்படையாக இவர்களுடன் பலதரப்பட்ட வாகனங்களில் கூடவே ஊர்வலம் வர செய்வது...

இதெல்லாம் இந்த படிக்கும் வயதில், இளைஞர்கள் / மாணவர்கள் செய்ய காரணம் என்ன? இன்றைய அக்கிரம அரசியல்வியாதிகள் தான்...

போன வருடம் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? இதோ, இந்த வருடமும் இந்த “பஸ் டே” கொண்டாட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றனர்... ஏராளமான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்... பெண் காவல்துறை அதிகாரியை கொச்சையான, ஆபாசமான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தி உள்ளனர்... ஏன், இவர்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா, அவர்களை இப்படி தான் நடத்துகிறார்களா? இது தான் இவர்கள் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் பாடமா?

இந்த மாணவர்களின் கடமை தான் என்ன?

இன்றைய சூழலின் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவர்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்... நன்றாக உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்...... எப்படி உணவருந்த வீட்டில் உட்காரும் போது, உணவை ருசித்து சாப்பிடுகிறார்களோ, திரையரங்குகளுக்கு சென்றால் திரைப்படத்தை ரசித்து பார்க்கிறார்களோ, அதே போல் கல்லூரியில் படிக்கும் அந்த 3-4 வருடங்கள் அவர்களின் முழு கவனமும் படிப்பின் மீது மட்டுமே இருக்க வேண்டும்...

அனைத்து விதமான தீய பழக்கங்களில் இருந்தும் கவனமாக ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளலாம்... முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியிலாவது உதவியாக இருக்கலாம்... தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு எந்த அநாவசிய செலவையும் வைக்காமல் இருக்க குறைந்தபட்சம் முயற்சிக்கவாவது செய்யலாம்... ஓய்வு நேரங்களை தன் வாழ்வை வளமாக்கும் வழியில் நூலகங்களில் சென்று செலவிடலாம்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்னால் சென்று, கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தில், தன் பகுதியில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...

செய்வார்களா இன்றைய மாணவர்கள்?? இல்லையென்றால், இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தானா?

நம் நாட்டின் இன்றைய நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத ஒரு சராசரி குடிமகன்.

(உணர்வு : ஆர்.கோபி)

5 comments:

R.Gopi said...

அன்பு நண்பா இன்பா...

இன்று காலை வந்ததும் வழக்கமாக எல்லா செய்திகளையும் வாசிக்கும் போது, இந்த ஒரு செய்தியை வாசித்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன்...

அது என்ன கொண்டாட்டத்தின் போது எல்லா பொருட்களையும் நாசப்படுத்துவது, அனைவரையும் கெட்ட வார்த்தைகளில் ஏசுவது, ரவுடிகள் போல் செயல்படுவது, பெண்களை கேலி செய்வது???

படிக்கும் வயதில் கல்லூரிக்கு சென்றால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் இதென்ன ரவுடித்தனம் என்ற என் கோபத்தின் வெளிப்பாடே அந்த பதிவு...

நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் உங்கள் வலையில் இட்டு அந்த பதிவிற்கு ஒரு கவுரவம் சேர்த்தமைக்கு என் மனமார்ந்த நன்றி..

karurkirukkan said...

பஸ் தினம் தேவையா ? போலீஸ் மண்டையை உடைத்த மாணவர்கள்

பஸ் தினம் என்ற போர்வையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம், எல்லை தாண்டிப் போக ஆரம்பித்திருக்கிறது. நேற்று பச்சையபப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தின நிகழ்ச்சி பெரும் வன்முறையாக மாறியது. பெண் துணை கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேரை மாணவர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.


Read more: http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_2679.html#ixzz1Ewm4GOQ4

Anonymous said...

பேருந்து தினம் என்ற அடவாடித்தனத்தை நிறுத்த அரசும், காவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லை என்றால் பேருந்து பயணிக்கும் மக்கள் எல்லாரும் சேர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சும்மா மூடிக் கொண்டிருந்தால் பேடி என்று நினைத்துவிடுவார்கள் .. பொதுச் சொத்தை சேதப்படுத்தும், எவனையும் சும்மா விடக் கூடாது.. நாதாரிகள் அவர்கள் ..............

வடுவூர் குமார் said...

கொடுமை!! இதை வேறு நேரில் பார்த்தேன் இரு முறை.

Philosophy Prabhakaran said...

சூப்பர்ப் நண்பா... நான் எனது இடுகையில் செய்யத் தவறியதை நீங்களும் நண்பர் கோபியும் கச்சிதமாக செய்து இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

 
Follow @kadaitheru