Sunday, February 6, 2011

களத்தில் இறங்கிய "காவலன்"


"மோதனும்ன்னு முடிவு பண்ணிட்டா மன்னன்னு பார்க்கமாட்டேன், மந்திரின்னு பார்க்கமாட்டேன் " - என்று "சுறா" படத்தில் விஜய் பேசியபோது 'மொக்கையாய்' தோன்றிய இந்த வசனம் இப்போது அர்த்தத்தோடு கேட்கிறது. அவர் நிஜமாகவே மன்னர்களோடும், மந்திரிகளோடும் மோதுவதற்கு தயாராகிவிட்டார் என்று தெரிகிறது.

நம் தமிழ் சினிமாவில் தற்சமயம் மன்னர்கள் அல்லது மாமன்னர்கள் என்றால், அது வரிசைப்படி 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன், 'ரெட் ஜெயன்ட்ஸ்' உதயநிதி ஸ்டாலின் மற்றும் அழகிரியின் மகன் ' க்ளவுட் நைன்' துரை தயாநிதி. (ஊரில் இருக்கும் நிறுவனங்களை எல்லாம் தமிழில் பெயர் வைக்க சொன்னவரின் குடும்ப நிறுவனங்களின் பெயர்களை கவனியுங்கள்).

அரசு அதிகாரம் மற்றும் அளவிட முடியாத பணபலம் இவற்றால், தமிழ் சினிமா துறையில் இவர்கள் செய்யும் அராஜகங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல என்று திரைத்துறையில் குரல்கள் கேட்க தொடங்கி இருக்கின்றன.

உதாரணங்களுக்கு, சுமார் ஒன்றரை கோடியில் தயாரான "களவானி" கொஞ்சம் கவனம் பெற தொடங்கியதுமே அதை ஒரு கோடிக்கும் குறைவான அடிமாட்டு விலைக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் மிரட்டியதாக அதன் தயாரிப்பாளர் திரு.நசிர் தெரிவித்த கருத்து வெளியில் வாராமல் முறிக்கப்பட்டு விட்டது.

சென்ற மாதம் வெளியாகி நல்ல வெற்றிபடமாக வரவேண்டிய "தா" , இவர்கள் குடும்பத்து படங்கள் பொங்கலில் வருவதற்காக, ஒரு சில திரைஅரங்குகளில் சில தினங்கள் மட்டுமே ஓடி, பின்னர் வேறு எங்கும் வெளிவராமல் நிறுத்தப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தங்கள் வெளியிடும் படங்கள் படு மொக்கை என்று தெரிந்தும் கூட, "இந்த வாரம் முதல் இடத்தை பிடித்த படம்" என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஒருவரை வைத்து தங்கள் "டாப் டென்" நிகழ்ச்சியில் அறிவிக்கிறார்கள். மற்ற படங்களை நன்றாக ஓடினாலும், அதை மட்டம் தட்டிவிடுகிரார்கள். நேர்மையான, நடுநிலையான விமர்சனங்களுக்கு இப்போது எந்தவொரு சானலிலும் இடம் இல்லாமல் போனதற்கு சன்
டிவியே பிள்ளையார் சுழி.

ஒரு படம் வெளிவரும் முன்பே மக்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கவேண்டும் அல்லது ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கவேண்டும் அல்லது சிறிய பட்ஜெட்டில் வெளிவரப்போகும் கொஞ்சம் நல்ல படமாக இருக்கவேண்டும்(உ.தா: மைனா).

மேற்கூறிய மூன்று வகையறாவில், ஏதேனும் ஒன்றில் இருந்தால் அதை கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி இந்த மூன்று மன்னர்களில் யாரேனும் ஒருவர்தான் வெளியிடவேண்டும் என்ற எழுதபடாத சட்டமே தற்சமயம் இருக்கிறது.

இவர்களை மீறி இந்த சட்டத்துக்கு புறம்பாகவோ,அதை எதிர்த்தோ யாரும் வாயே திறக்க முடியாத இன்றைய அரசியல் சூழலில், யாருமே எதிர்பார்க்காத, அவர்களுடன் மிகவும் நெருக்கமானவராக இருந்த விஜய், முதல் முறையாக எதிர் குரல் கொடுத்து இருக்கிறார்.

தனது "காவலன்" படத்தை இவர்களுக்கு தர மறுத்து தன்னிச்சையாக வெளியிட முயன்றதுதான் விஜய்யை அரசியலை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கவைத்திருகிறது.

அதை தொடர்ந்து அவர்க்கு பலவகையான பிரச்சினைகளை தரத்தொடங்கி விட்டார்கள் 'மன்னர்கள்(?)' தரப்பு ஆசாமிகள். அவர்களது படங்களான "ஆடுகளம்" மற்றும் கருணாநிதி தனது ஓய்வு(?) நேரத்தில் எழுதிய "இளைஞன்" போன்ற படங்களின் ரிலீசை சுட்டிக்காட்டி "காவலனை" முடக்கிவிட முயற்சி செய்கிறார்கள் என்பது ஊருக்கே தெரிந்து விட்டது.

இதை பற்றி துணிந்து பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார் விஜய்.

"காவலன் படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு தெளிவாக திட்டம் போடுறதை புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது.

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் காவலன் வந்தான்.சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன்.

அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே? "

என்ற விஜய், பேட்டியின் உச்ச கட்டத்தில் "இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.
" என்று கூறியிருக்கிறார்.


"தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளினாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடை சூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது. அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.

முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'

யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்"
.
என்று தனது அரசியல் பிரேவசம் குறித்து அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.

விஜய்யின் முந்தைய படங்களை போல எந்தவொரு ஆர்ப்பட்டமும், விளம்பரங்களும் 'காவலனுக்கு' இல்லை. படம் வருமா இல்லை கிடப்பில் போடபட்டுவிட்டதா என்ற அளவுக்கு இருட்டில் கிடந்தது இப்படம்.

இத்தனையையும் மீறி, கலைஞர் மற்றும் சன் டிவியில் "காவலன்" விமர்சனங்களிலும் , விளம்பரங்களிலும் ஓரங்கட்டபட்ட போதும், படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக போய்கொண்டு இருப்பது மற்ற தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையை தந்து இருக்கிறது என்று நம்பலாம்.

இதை எல்லாம் விட என்னை கவர்ந்த(!) விஷயம்...கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதே, துணிச்சலாக எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதாவை விஜய் நேரடியாக சந்தித்ததுதான். . இந்த தைரியம் ரஜினி,கமல் போன்ற எந்தவொரு முன்னணி நடிகருக்கும் இருக்குமா என்பது சந்தேகமே.

நம் மன்னர்களை எதிர்த்து விஜய் தொடர்ந்து தாக்குபிடிப்பாரா இல்லை இன்னொரு "எஸ்.வி. சேகர்(பாபு)" கணக்கில் சேருவாரா என்று எனக்கு உறுதியாக சொல்லதெரியவில்லை.

என்ன இருந்தாலும் , கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி என்ற, தமிழ் சினிமாவையே ஒட்டு மொத்தமாக விழுங்கிவிட
துடிக்கும் இந்த மூன்று பூனைகளுக்கு 'மணி' கட்டிய ஒரு காரணத்திற்கே நாம் "காவலனை" வரவேற்க்கலாம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru