சென்ற ஆண்டு வெளிவந்த சில சிறந்த ஆங்கிலப் புத்தகங்கள் பற்றி திரு.சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய ஒரு அருமையான கட்டுரை இங்கே...
நாவல்
சென்ற ஆண்டு எத்தனையோ புதினங்கள் வெளிவந்தன. அவற்றில் Tariq Ali இன் Night of the Golden Butterflyஐ உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அலியின் நாவலை முக்கியப்படுத்துவதற்குக் காரணம் உண்டு. அதைச் சொல்லும் முன்பு சில தகவல்கள். தாரிக் அலியைப் பெரும்பாலானவர்கள் அரசியல் கிளர்ச்சியாளராகவும் செயல்திறனாளராகவுந்தான் அறிந்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அலி தன்னை நல்ல கதை சொல்லியாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார். அலியுடன் தங்கள் அரசியல் வாழ்வை இடதுசாரிப் பார்வையுடன் ஆரம்பித்தவர்கள் இன்று அரசின் உண்மையை அறிவிப்பவர்களாக மாறியபோதும் அலி இன்னும் சளைக்காமல் அரசுக்கு உண்மையை எடுத்துரைப்பவராக இருக்கிறார்.
இந்த நாவல், இஸ்லாமுக்கும் மேற்குலக்குமிடையே ஏற்பட்ட கலாச்சார, அரசியல் ஊடாடுகளை (interaction) அலி அலசும் வரிசைத் தொடர் நாவலில் ஐந்தாவதும் இறுதிப் பாகமும் ஆகும். முதல் பாகம், Shadows of the Pomegranate Tree 15ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆண்ட ஸ்பெயினில் ஆரம்பிக்கிறது. இதை வாசித்த Edward Said நாவலைச் சமகாலம்வரை நீட்டிக்கச் சொன்னார். சயத்தின் வேண்டுகோளை இந்தக் கடைசிப் பாகம் பூர்த்திசெய்கிறது.
இந்த நாவல் 60களில் கூட்டாளிகளாகவும் பொதுவுடமை எண்ணமுள்ளவர்களாகவும் லாகூரில் வாழ்க்கையைத் தொடங்கிப் பிறகு மேற்கே சென்ற Dara, Zahid, Plato and Confucius என்னும் நண்பர்கள் நால்வர் மறுபடியும் பாகிஸ்தானுக்குத் திரும்புவது பற்றியது. இந்த ஐந்து தொடர்நாவல்களில் ஒவ்வொன்றும் தனித்தன்மையானவை. ஆகையால் காலமுறை வரிசையில் படிக்க வேண்டியதில்லை. வாசகர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி இந்தத் தொடரில் எந்தத் தொகுதிக்குள்ளும் நுழையலாம். தந்தையர் நாடான பாகிஸ்தானை உள்ளிருந்து அரிக்கும் நான்கு புற்றுநோய்களான அமெரிக்கா, ராணுவம், முல்லாக்கள், வசப்படுத்தத்தக்க அரசியல்வாதிகள் என ஆரம்பிக்கும் நாவலில் ஒவ்வொரு பக்கத்திலும் அரசியல் குறும்புத்தனம் துள்ளுகிறது.
இஸ்லாமைவிட்டு விலகி இன்று வலதுசாரிகளின் சுவரொட்டிப் பாவையான Ayaan Hirsi Ali எப்படி மறைமுகமாகப் பகடிசெய்யப்படுகிறார் என்பதைப் படிக்கும்போது ரசிக்கத் தவறாதீர்கள்.
அலியின் நாவல் என் கவனத்தைக் கவர்வதற்குக் காரணம் இதுதான். இன்றைய ஆங்கில இலக்கியத்தில் முதல்முதலாக ஒபாமாவின் ஆட்சியை விசாரணைப்படுத்தும் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். இந்த நாவலின் பிரதான பாத்திரமான Dara, ஓவியர். அவர் வரைந்த படத்தில் இன்றைய ஏகாதிபத்தியத்தின் தலைவர் ஒபாமா ஒரு பொத்தான் அணிந்திருக்கிறார். அதில் பொதிந்திருக்கும் வாசகம் ஒபாமாவின் ‘ஆம் எம்மால் முடியும்’ என்னும் பிரபலமான சொற்றொடரைப் பரிகசிக்கிறது: Yes, we can… still destroy countries.
ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டபோது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒருவர் சொன்ன வார்த்தையைக் காலச்சுவடில் எழுதியிருந்தேன். அவரின் ஆருடத்தை ஒபாமாவின் சமீபத்திய சில செயல் முறைகள் மெய்ப்பித்திருக்கின்றன. அன்று எழுதியதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்: ஒபாமா ஆப்பிரிக்க-அமெரிக்கராக இருக்கலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு வரும் இயல்பான அதிகாரத்துடன் ஆள்வார்.
சுயசரிதை
நான் புழங்கும் வட்டத்தில் டொனி பிளையர் ஒரு தூஷன வார்த்தை. ஆகையால் அவரது சுயசரிதையான A Journeyஐ வாங்கும்போது புத்தகக்கடையில் யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று நாலு பக்கமும் பார்த்துவிட்டுத்தான் வாங்கினேன். 600க்கும் மேலான இந்தத் தொக்கையான புத்தகத்தில் பிளையரைப் பற்றிப் புதிதாக அறிந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை. பிளையரை உந்துவித்த இரண்டு சமாச்சாரங்கள் உண்டு. ஒன்று அவருடைய அரசியல் கருத்தியல். இரண்டாவது மத நம்பிக்கை.
ஆனால் இந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அவை பற்றிய தகவல்கள் மிகக் குறைவே. அவருடைய புகழுக்கும் அவர் தொழிற்கட்சிக்கு ஈட்டிக் கொடுத்த மூன்று தேர்தல் வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியல் தத்துவம் பற்றி விளக்கமே இல்லை. இவர் நிச்சயமாக சமதர்மவாதியல்ல. சமூக மக்களாட்சிவாதியும் அல்ல. அவருடைய எதிரிகள் கேலிசெய்வதுபோல் பழமைவாதியும் அல்ல.
இந்த நூலில் தன்னை ‘முற்போக்காளர்’ ‘நவீனமயமாக்காளர்’ என்று வர்ணிக்கிறார். ஆனால் இவருடைய சிந்தனை என்ன மாதிரியான முற்போக்குடையது அல்லது இவருடைய திட்டங்கள் எவ்விதம் புதுமாதிரியானவை என்று தெளிவான விளக்கமில்லை. பிளையரைச் சக்தியூட்டியதில் கிறிஸ்தவத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பது எல்லோரும் அறிந்த செய்தி.
79ஆம் பக்கத்தில் ஒருவகையில் மதம் என் வாழ்வில் முதல் இடம்பெறுகிறது என்கிறார். நூலின் இறுதியில் அரசியலைவிட ஆன்மிகத்தில்தான் தான் ஆர்வம் காட்டியதாக எழுதுகிறார். ஆனால் இந்தப் பக்கங்கள் உள்ள இடைவெளியில் கிறிஸ்தவம் எவ்வாறு அவருடைய அரசியல் முடிவுகளைத் தீர்மானித்தது என்று ஒரு தகவலும் இல்லை. இந்த விடுபடல் லெனின் தன்னுடைய சுயசரிதையில் மார்க்ஸைக் குறிப்பிடத் தவறியதுக்குச் சமமானது.
செய்தியறிவிப்பு இலக்கியம்
நான் அடுத்து அறிமுகம் செய்யும் படைப்பு நாவலா ஆவணமா எனச் சொல்ல முடியாத இலக்கிய வகையைச் சேர்ந்தது.
உண்மைச் சம்பவத்தைக் கொஞ்சம் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார் David Eggers அவரது Zeitoun என்னும் நூலில். தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ இணைய உலக (cyber space) நாவல் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த எழுத்து முக்கியப்படுத்தும் Abdul-rahman Zeitoun என்பவரின் குடும்பப் பெயர். 2005இல் அமெரிக்காவைத் தாக்கிய காட்ரீன் சூறாவளிக்காற்று ஷைட்டூனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட கடும்தேர்வை (ordeal) விவரிக்கிறது.
ஷைட்டூன் கட்டட வடிவமைப்பாளர். சிரியா நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவற்றைவிட மிக முக்கியச் செய்தி இவர் முஸ்லிம். இவர் காத்தி என்ற லூசீயான வெள்ளைப் பெண்ணை மணந்திருந்தார். சூறாவளிப் புயல் நீயூ ஒர்லீயன்சில் சேதம் விளைவித்தபோது முழுநகரமே ஊரை விட்டுக் கிளம்பியது. மனைவியையும் பிள்ளைகளையும் அடுத்த மாநிலத்தில் வசித்த காத்தியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். குடும்பத்தைப் பத்திரமாக வழியனுப்பி விட்டு ஷைட்டூன் வீட்டில் சும்மா இருக்கவில்லை. வெள்ளத்தில் வீட்டில் அடைபட்டுக்கொண்ட வயோதிகர்களுக்குத் தன்னுடைய சிறு வள்ளத்தில் போய்ப் பல உதவிகள் செய்திருக்கிறார். அப்போது தான் பிரச்சினை ஆரம்பமாயிற்று. புயலுக்குப் பிறகு குண்டர்கள் சிலர் நடத்திய சூறையாடலைத் தடுக்க அனுப்பப்பட்ட ராணுவம் இவரது மத்தியக் கிழக்குத் தோற்றத்தையும் ஆங்கில உச்சரிப்பையும் வைத்து இவர் ஒரு அல்கைதா, தலிபான் என்று கைதுசெய்து மறியலில் வைத்தது. ஷைட்டூன் இருந்த சிறை சாதாரண காவல்கூடம் அல்ல. குந்தான பே பாணி சிறைச்சாலை. காத்தி இவரை விடுவிக்க எடுத்த முயற்சிகள், அரசின் நிர்வாகக் கட்டுப்பாடுகள், நடந்துகொண்ட விதம், அமெரிக்கத் தேசியப் படையினரின் திமிர், சிறைச்சாலை அதிகாரிகளின் உணர்வின்மை ஆகியவை இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகின்றன.
இவற்றைக் கதையாக எழுதியிருந்தால் இப்படியும் அமெரிக்காவில் நடக்குமா என்று வாசகர்கள் மூக்கில் விரலை வைப்பார்கள். ராணுவத்தின் நடவடிக்கையைப் படிக்கும்போது ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க அரசு எந்தப் பிரச்சினையையுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போராகத்தான் பார்க்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தூப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த சட்டச் செயலாக்க அதிகாரிகளின் தொகை 46,838. அமெரிக்க அரசு லூசியானாவில் நடத்தியது மீட்பு நடவடிக்கை அல்ல. படையெடுப்பு. சொந்த மக்கள்மீதான தாக்குதல்.
ணிரீரீமீக்ஷீsஇன் நூல் தனி மனிதனின் கதையைத் தேசத்தின் கதையுடன் ஒருங்கிணைக்கிறது. ஷைட்டூன் இந்தச் சூறாவளி தனக்கு வந்த சோதனை என்றார். ஒருவிதத்தில் காட்ரீன் புயலை அமெரிக்கா என்ற வல்லரசு எப்படியான நாடு என்பதைப் பரிசோதிக்க நடத்திய மிகக் கடினமான பரீட்சையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மின்நூல்
இஸ்லாமியர்கள் ‘படுதீவிரவாதிகள்’, ‘குண்டுதாரிகள்’ என்னும் பரவலான ஊடக ரூபக்கெடுதலை (distortion) சீர்செய்து நாஜிகள் (Nazis) யூதர்களைப் பெரும் நாசம் செய்த நாட்களில் முஸ்லிம்கள் எவ்வாறு யூதர்களுக்குக் கருணை காட்டினார்கள் என்று சித்தரிக்கும் மின்பிரதி The Role of the Righteous Muslims (eds. Fiyaz Mughal & Esmond Rosen).
யூதர்கள் மீட்டெடுப்பு பற்றிப் பேசும்போது வணிக சினிமா பிரபலப்படுத்திய ஸ்டிவன் ஸ்பில்பேர்கின் ஓஸ்கார் சிண்டிலர் ஞாபகத்துக்கு வருவார். சிண்டிலரின் உள்நோக்குக் கொஞ்சம் சந்தேகத்துக்குரியது. மீட்பு நட வடிக்கையைவிட அவருக்கு யூதர்கள் மலிவான கூலிகளாகவே தென்பட்டார்கள். ஹாலிவூட் ஆரவாரத்தில் மறந்துபோன இன்னொருவர் ஜப்பானியரான Chiune Sugihara. இவர் லித்தூனிய தூதராலயத்தில் வேலைசெய்த நாட்களில் இவரும் இவருடைய மனைவியும் யூதர்களுக்கு நுழைவிசைவு (ஸ்வீsணீ) வழங்குவது சட்டவிரோதமான செயலாகக் கருதப்பட்டாலும் தாராளமாக வினியோகித்தார்கள்.
இதனால் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் நாஜிகளின் ஆக்கினையிலிருந்து தப்பிக்க முடிந்தது. சுகிகாராவின் இரக்க உணர்ச்சியை அங்கீகரித்து யூதர் அல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த தகுதியான ‘நாட்டினங்களின் நியாயவான்’ (Righteous Among the Nations) என்னும் பட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இதேரீதியில் இஸ்லாமிய நாடுகளான டியுனிசியா, அல்ஜீரியா, மொரோக்கொ, போஸ்னியா, குரோஏசியா வாழ்யூதர்களுக்கு முஸ்லிம்கள் காட்டிய இரக்கம், இவர்களை நாஜிகளின் பிடியிலிருந்து தப்பிக்கவைத்த உபாயங்களை இந்தச் சிறிய மின் நூல் பதிவுசெய்கிறது. இவர்களின் தயவான செய்கைகளைப் பாராட்டி முஸ்லிம்கள் பலருக்கு ‘நாட்டினங்களின் நியாயவான்’ என்ற கௌரவத்தை அளித்துத் தன் நன்றியை இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அவர்களின் பெயர்களை இந்நூல் பட்டியலிட்டிருக்கிறது.
இந்த நூலின் பலம் முஸ்லிம்களை நேர்நிலையானவர்களாகக் காட்ட உதவுகிறது. இதுவே அதன் பலவீனமுங்கூட. நாஜிகளுக்கு உடந்தையாக இருந்த அரபு நாடுகளின் பெயர்கள் இங்கே தரப்படவில்லை. கிட்டத்தட்ட 150,000 - 300,000 முஸ்லிம்கள் நாஜிகளுக்கு நேசமான படைகளுடன் இணைந்து இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மீள்வாசிப்பில் ஒரு சங்கடம் சரித்திர முரண்பாடுகள், கருத்துமாறுபட்ட விவரங்கள் விடுபட்டுப்போவதாகும்.
வாழ்க்கை வரலாறு
தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவை ஊடகம் பூலோக பொக்கிஷமாக மாற்றியிருக்கிறது. அவதார ஸ்தானத்திலிருக்கும் மண்டேலாவின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் நூல் David James SmithÞ¡ Young Mandela. மண்டேலாவின் சுயசரிதையான Long Road to Freedom இல் விடுபட்டுப்போன, மறைக்கப்பட்ட சம்பவங்கள் இதில் இருக்கின்றன.
இந்த நூலில் மண்டேலாவின் இளவயதுப் பால் புணர்ச்சிப் பிசவுகள், அவருடைய காதலிகள், முக்கியமான அவருடைய முதல் திருமணம் எப்படிக் கட்டுச்சிதைவடைந்தது பற்றி விவரிக்கிறது. அவருக்கும் அவருடைய முதல் மனைவி Evelynக்கும் ஒத்துப்போகவில்லை. எவலினுக்குப் மண்டேலாவிடம் செம்மையாக அடிவாங்கியிருக்கிறார். அவரது தொண்டையைக்கூட மண்டேலா நெறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உடல் வதைப்புகள் விவாகரத்தில் முடிவடைந்தது. ஈவிலீனுக்குப் பிறந்த குழந்தைகள் மண்டேலாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்கள். மூத்த மகன் Thembe மண்டேலா சிறையில் இருந்தபோது அவரை ஒரு தடவையாவது போய்ப் பார்க்கவில்லை. இவருடைய இரண்டாவது மகன் Makgatho மிதமிஞ்சிய மது நுகர்வாளர். உடற்தேய்வு சம்பந்தப்பட்ட நோயால் இறந்துபோனார்.
வெள்ளை அரசியல் எதிரிகளுக்குப் பரிவுகாட்டிய மண்டேலா தன்னுடைய சொந்தப் பிள்ளைகளுக்குப் பாசம் காட்டத் தவறியவராகக் காட்சியளிக்கிறார். டேவிட் ஜான்ஸ் சிமித் உருவாக்கியிருக்கும் இளம் மண்டேலா தமிழ் சினிமா அப்பாக்கள்போல் மரபுவழி ஆண் ஆதிக்கக் கட்டுப்பாட்டாளர்.
மண்டேலாவின் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கும்போது இன்னும் ஒரு தலைவர் ஞாபகத்துக்கு வருகிறார். அவரும் மண்டேலா போல் ஒரு வக்கீல். தேச விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.
இதுவரை நீங்கள் ஊகித்திராவிட்டால் அவர் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தியின் மண வாழ்க்கை, அவருடைய பாலியல் சோதனைகள், அவருக்கும் அவருடைய மகன்களுக்குமிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் ஏற்கனவே பொதுக்களத்தில் விவரமாகவும் வாதிக்கிடமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நம்முடைய தலைவர்களின் கால்கள் களிமண்ணாலானவை. ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் போராடுகிறவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தினருக்கு இரக்கம் காட்ட இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
“தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது ஒன்று தெளிவாகிறது. பெருந்தலைவர்களுக்குச் சீடர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைச் சரிதங்களை யூதாஸ்கள்தான் எழுதுவார்கள்”, இது என்னுடைய சொந்தச் சரக்கல்ல. மார்க் டுவையின் சொன்னது.
மண்டேலாவின் பேத்தி சொன்னதுபோல் தேசிய வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்குக் குடும்பம் இல்லாதிருப்பது நல்லது. இது இன்றைய தமிழக அரசியல் குடும்பம் கேட்க வேண்டிய முக்கியச் செய்தி.
Tuesday, February 22, 2011
அறிவுக்கு விருந்தாகும் ஆங்கில புத்தகங்கள் - 2010
Posted by கடை(த்)தெரு at 12:06 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கஷ்டம் தான்... எப்போதாவது கிடைக்கும் நேரத்திலும் தமிழ் புத்தகங்களை மட்டுமே படிக்க முடிகிறது...
பார்த்தே தீரவேண்டிய உலகப்படங்களின் தொகுப்பு...
http://blogintamil.blogspot.com/2011/02/50.html
Post a Comment