Friday, December 24, 2010

கடிதக்கலை

ஒரு செய்தி : "இன்றைக்கு செல்போனின் வருகையால், போஸ்ட்கார்ட் உள்ளிட்ட கடிதங்களின் பயன்பாடு அடியோடு நின்றுவிட்டது.இதனால், தபால்துறை நஷ்டத்தில் இயங்கிவருகிறது.மேலும்,கடிதங்களை பயன்படுத்தாத காரணத்தால், தமிழை எழுதும் வழக்கமும் நமது மக்களிடையே அரிதாகிவிட்டது".
- திரு.ராமமூர்த்தி,தபால்துறை அதிகாரி.

எத்தனையோ
வருடங்களாகிவிட்டது
என் விரல்களுக்கு...

'இப்படிக்கு, அன்புடன்'
என்று முடிக்கும்
இருதயத்தை இறக்கிவைக்கும்
ஒரு கடிதம் எழுதி.

இருபதாம்நூற்றாண்டில்
எழுத்துதமிழை ஏந்திநின்ற
இரு கரங்கள்
'இன்லேன்ட் லெட்டரும்'
'போஸ்ட்கார்டும்'.

மரபுக்கவிதைகள்
பழைய ஏற்பாடு.
புதுக்கவிதைகள்
புதிய ஏற்பாடு.
இரண்டுக்குமே
மாற்று ஏற்பாடு
கடிதங்கள்.

கவிதைதொகுப்புகளுக்கு
இணையான சேகரிப்பு...
அஞ்சல்தலை சேகரிப்புகளும்.

அன்றைக்கு
வீட்டு வாசலுக்கு
தெருவாசிகளை
ஓடி வரவழைப்பது
சாமி தரிசனமும்
தபால்காரர் வருகையும்தான்.

சுவாமிக்கும் செல்லும்
சவஊர்வலத்திற்கும் செல்லும்
பூக்களை போலவே
கடிதங்களும்,

மஞ்சள்தடவி வந்து
மங்கள செய்தியும் சொல்லும்.
மரண செய்தியும் சொல்லும்.

என் சேமிப்பில்
கவிதைபுத்தகங்கள்
அஞ்சல் தலைகள்
கூடவே
மறக்க முடியாத
சில கடிதங்களும்.

அயல்நாட்டில் இருந்து
அப்பா அனுப்பிய கடிதத்தில்...
எனக்கான வரிகளை
இன்னொரு தாலாட்டாய்
அம்மா வாசித்த
நாட்கள் இனி,வருமா?

எனக்கென்று வந்த
முதல் கடிதம்
பள்ளிப்படிப்பை
பாதியில்நிறுத்திய
என் தோழன்
எழுதி அனுப்பிய கடிதம்.
வார்த்தைகள் யாவும்
இன்னமும் எனக்குள் கனமாய்..

இன்றுவரை
'அவளுக்கு' தராமலே
வைத்திருக்கிறேன்
கல்லூரி நாட்களில்
நான் எழுதிய
என் முதல்
காதல் கடிதத்தை.

'தொப்புள் கொடி' உறவுகளை
பிணைத்து வைத்தது
'தபால் கொடி' உறவுகள்.

கடிதமொழி பேசாத தமிழ்
இன்றைக்கு வெறும்
பேச்சுவழக்கில் மட்டும்.

நலமறிய ஆவலில்லா
நாகரிக மனிதர்களால்
காணமல் போன
கிராமத்து கலைபோலான
'கடிதக்கலை'
இன்னமும்
குற்றுயிராய் வாழ்வது
குறுக்கெழுத்துபோட்டிகளால் மட்டும்.

மனசுதொட்டு எழுதும்
'அன்புள்ள'வுக்கு
ஈடாகுமா?

ஈ-மெயிலின்
'ஹா(ஹ)ய்யும்'
செல்போனின்
'ஹலோவும்'.

கவிதை : இன்பா

வாசக நண்பர்களுக்கு கடைத்தெருவின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

2 comments:

Philosophy Prabhakaran said...

ஏன் இங்க் தொட்டு எழுதினால்தான் கடிதமாகுமா... கடிதத்தில் எழுத நினைக்கும் வரிகளை மெயிலில் டைப்படித்து அனுப்புங்கள்...

வீரராகவன் said...

மனசுதொட்டு எழுதும்
'அன்புள்ள'வுக்கு
ஈடாகுமா?

அருமையான வரிகள்.
காகிதத்திலான கடித சுகத்தை
மின்னஞ்சல் தருவதில்லை.
இன்லேண்ட் கடிதத்தைப் பிரிக்கும் போது ஏற்படும்
சுகம் மின்னஞ்சலை திறக்கும்போது
இருப்பதில்லை.
மெல்ல மறையும்
கடிதக் கலாச்சாரத்தை
கவிதையில் கூறியதை
பாராட்டுவதா?
கடிதங்களின் நிலை குறித்து
வருந்துவதா?
புரியவில்லை.

 
Follow @kadaitheru