Thursday, December 30, 2010

காந்தியைக் கடந்த காந்தியம் - புத்தாண்டுச் சிந்தனைக்கு.

காந்தியை ‘மகாத்மா’ எனச் சுட்டுவதற்கு எனது மொழிப்புலன் இடம்தரவில்லை. அதில் உள்ள முரண் என்னை வெறுமையாக்குகிறது. ‘பாப்பு’ என மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அழைப்பதில், சுட்டுவதில் ஒரு இயல்பு நிலையை உணருகிறேன். மகாத்மா என்பதில் உள்ள உயர்தனி நிலை எனக்கு ஏற்புடையதல்ல. பாபாத்மா என்னும் எதிர்நிலையை அது கொண்டிருக்கிறது. காந்திக்கும்கூட அந்த அடையாளம் உவப்பானதாக இருந்ததில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவர் உணர்ந்திருந்தார்.

ரவீந்தரநாத் தாகூர் காந்தியை ‘மகாத்மா’ என உறுதிப்படுத்தியதன் பின்னணியில் ஒரு ஏகாதிபத்திய மறுப்பு இருந்தது. காந்தியை இந்திய அரசியலும் மக்களும் மகாத்மா என ஏற்றுக்கொள்ளும் முன்பே இந்த அடையாளம் காந்திக்கு உருவாகியிருந்தது. தென்னாப்பிரிக்க உரிமைப் போராட்ட காலத்தில் அவருக்கு இந்த அடையாளம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அடையாளம் பல சூழல்களில் காந்தியை உருமாற்றியிருக்கிறது.

காந்தி தான் தேர்ந்தெடுக்கும் மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது தான் மகாத்மாவாக இறக்க வேண்டுமென்றால் இயற்கையானதாக அது நிகழக் கூடாது என்றார். தனது மகாத்மா தன்மையைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோதெல்லாம் தான் அதற்குத் தகுதியற்றவன் என்றே குறிப்பிட்டுவந்தார். அதே சமயம் தன்னை அதற்குத் தகுதியுடைய மனிதனாக மாற்றிக்கொள்ளும் முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டுவந்தார்.

தன்னை ‘மகாத்மா’வெனப் பிறர் குறிப்பிடும்போது அவர்கள் ஒருவித லட்சிய உயர்நிலையை ஏற்பதைக் காந்தி உணர்ந்தார். இந்த ‘லட்சிய உயர்நிலை’ குறித்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வரிடமும் உயர்குணங்களை, நற்பண்புகளை, அறங்களை வளர்த்துவிட முடியுமென்று அவர் நம்பினார்.

தேசிய அரசியலையும் விடுதலை அடைந்த சமூகத்தையும் உருவாக்க நினைக்கும் யாருக்கும் ‘மகாத்மா தன்மை’ என்ற லட்சிய உயர்நிலை வழிகாட்டும் பண்பு அடையாளமாக இயங்க முடியுமென்பதை அவர் கண்டார். ஒவ்வொரு இந்தியரும் மகாத்மா என்னும் நிலையை அடைவதற்கும் இந்தியா முழுமையும் விடுதலை அடைவதற்குமான உருவக உறவுநிலையை அவர் முன்வைத்தார். தான் செய்யும் நற்செயல்கள், பிழைகள் என்பவற்றை மதிப்பிடவும் அளவிடவும் மகாத்மா என்ற உருவகநிலையை ஒரு முன்புலமாகக் காந்தி பயன்படுத்திவந்தார், இதனைத் தனது அரசியல் சொல்லாடல் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள அவர் தயங்கவில்லை. இதைக் காந்தியத்தின் உருவகம், குறியியல் செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே கூற வேண்டும்.

மகாத்மா என்ற அடையாளம் காந்திக்கு முன்பு பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. அது அவர்களின் தனித்தன்மை குறித்த அடையாளம் ஆனால் காந்திக்கு வழங்கப்பட்ட அவ்வடையாளம் தேசிய உளவியல், அரசியல் கூட்டுணர்வின் அடையாளமாக வரலாற்றுத் தன்மையை அடைகிறது. மகாத்மா காந்தி என்ற சுட்டுதல் இவ்வகையாகத்தான்; ஒவ்வொரு பின்னணியிலும் அல்லது சூழலிலும் உயர்நிலைக் கருத்தியல் ஒன்றின் சுட்டுதலாக, வழிகாட்டு நெறியின் சுட்டுதலாக, விமர்சனக் கருத்தியல் ஒன்றின் சுட்டுதலாகச் செயல்பட முடிந்தது.

காந்தியின் வாழ்வென்பதும் செயலென்பதும் இவ்வகையாகத்தான் குறிப்பான்களை, உருவகங்களை, சொல்லாடல்களை உருவாக்குவதாக இருந்தது. . தனிமனிதர், குடும்பம், ஊர், பிராந்தியம், மொழி அடையாளம், சமய அடையாளம், உலகுசார் அடையாளம் என்பனவற்றை ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாக மாற்றி ஒவ்வொரு உடல், ஒவ்வொரு தனிமனித இருப்பு, ஒவ்வொரு சொல் மற்றும் செயலசைவு அனைத்தையும் அரசியல் தன்மையுடையதாக விளக்கிக்காட்ட காந்தியத்தால் முடிந்தது.

அரசியல், சமூகச் செயல் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகள் என்பவை, முற்றிலும் பூடகமான, எளிய தனிமனிதர்களுக்கு இயலாத பெரும் நிகழ்வுகள் என்பதான ஒரு மயக்கநிலையைக் காந்தி இவ்விதமாகத் தெளியவைத்து தனித்த உடல், தனி ஒரு சொல் என்பதிலிருந்தே அரசியல், பொருளாதாரம், வரலாறு என்பவை தொடங்குகின்றன என்பதைப் புலப்படுத்திக்காட்டினார். இது நவீன அரசியல் சமூகச் சூழலில் வகிக்கும் இடம் நாம் மதிப்பிடுவதைவிடப் பல மடங்கு பெருமதி கொண்டது. ஏனெனில் தனிமனிதர், தனி உடல் என்பதற்கு எந்த மதிப்புமற்ற ஒரு முன்நவீனநிலை இந்தியச் சூழலில் இருந்த ஒரு காலகட்டமே காந்திய அரசியலின் காலகட்டம். தனிமனிதர் என்பதன் உருவாக்கத்தை நாம் அறிவொளிக்காலத்திலிருந்து அடையாளம் காண்பது அகிலம் சார்ந்த சூழலில் பொருத்தமாக இருக்கும் (இந்திய உப மரபுகள், கிளை மரபுகள் மறதிக்குட்பட்ட காலகட்டத்தைப் பற்றியது இந்தக் குறிப்பு). இந்தியச் சூழலில் சாதிய, சமய, மொழியினச் சூழல்களில் தனிமனிதர் என்பதன் பொருள் வேறு. காலனியச் சூழலில் இந்திய உடல்கள் ஆளப்படும் உடல்களாக, உற்பத்தி செய்யும் உடல்களாக, பொருள் நுகரும் உடல்களாக அடையாளம் காணப்பட்டன. இயந்திரங்கள், உற்பத்திச் சாதனங்கள், தொழில்நுட்பக் கருவிகள், நவீன நிர்வாகம், பொதுச் சமூகம் என்பவையும் சட்ட - ஒழுங்கு விதிமுறைகள், வெகுமக்கள் தொடர்பு ஊடகங்கள் என்பவையும் இந்தியச் சமூகங்களில் தனிமனிதர் என்னும் நிலையை ஒரு யூகவடிவமாக அறிமுகப்படுத்தியிருந்தன. அடிபணியும் ‘தனிமனித நிலை’ என்பது இரு வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. மரபான அமைப்புகளுக்குப் பணிந்திருக்கும் தனிமனிதர்; காலனியப் பேரரசுக்குப் பணிந்திருக்கும் ‘தனிமனிதர்’. இந்தப் பணிந்திருக்கும் தனிமனிதர் நிலையைத்தான் காந்தி செயல்படும் தன்னிலையாக, ‘வினையாற்றும்’ தனிமனித நிலையாக, தன்னைத்தானே அடையாளப்படுத்தும் தன்னிலையாக மாற்றிக்காட்டினார். இந்தப் புதிய தனிமனிதத் தன்னிலை உருவாக்கம் பெரும் அரசியல் இயக்கங்களாலும் போராட்டங்களாலும்கூட உருவாகியிருக்க முடியும். இந்தியச் சூழலில் போரும் சமயமும் உருவாக்கித் தந்திருந்த தானற்ற நிலை நோக்கிய கூட்டு அடையாளத்திற்கும் தன்னிலை அழிந்தநிலைக்கும் நெருக்கமாகவே இந்தத் தேசிய-விடுதலை மற்றும் போராட்ட அடையாளங்கள் இருந்திருக்கும்.

ஆனால் காந்தி இதை உள்ளிருந்தே மாற்றிக் காட்டினார். ஒவ்வொரு சத்தியாகிரகியும் ஒரு தனிப்படை, தனித்த சக்தி என்பதை உருவகப்படுத்தியதன் மூலம் செயல்பாடுடைய, அடையாளமுடைய, தன்னொழுங்குடைய ஒரு தனிமனித அடையாளத்தை உருவாக்கிக் காட்டினார். இது நவீனத்துவக் கூட்டுத் தன்னிலைகளிலும்கூடச் சாத்தியமில்லாத ஒன்று.

உலகை மாற்றும் முன் உம்மை மாற்றுதல் என்பதில் தொடங்குவதால் உடல் - மனம், அகம் - புறம், பொருள் -கருத்துருவம், தனிநிலை - கூட்டுநிலை என்பவை குறித்த நவீனத்துவச் சிக்கல்கள் பலவற்றைக் காந்தியம் அழகியல், உருவகத்தன்மை என்பதன் மூலமும் நம்பிக்கை, அறம் என்பதன் மூலமும் எளிமையாகக் கையாண்டுவிடுகிறது. இந்த எளிமைதான் காந்தியத்திலும் காந்தியிடமும் உள்ள சிக்கலானதும் கடினமானதுமான பகுதி. எளிமைகள் சிக்கலடைவதும் இயல்புகள் அச்சமூட்டுவதும் மனித அறிவுருவாக்கத்தின் முரண்கள். மனித சமூகங்கள், இனங்கள் என்பவை எளிய நிலையிலிருந்துதான் இவ்வளவு சிக்கல்களை அடைந்திருக்கின்றன. அப்படியெனில் காந்தியத்தின் எளிமையைப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் நவீன உலகின், நவீனத்துவ அறிவு மற்றும் மனித உருவாக்கத் திட்டத்தின், மனித பொருள்படுத்தும் முறைகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலுமா எனப் பார்க்க வேண்டும்.

காந்தியம் இவ்வகையில் உடலரசியல், நுண்ணரசியல், இனவியல் - பாலின அரசியல், அழகியல் - பண்பாட்டு அரசியல், அதிகார - கண்காணிப்பு அரசியல், ஓரமைவாக்க - மேலாதிக்க அரசியல், உலகமயமாக்கல் -இயந்திரமயமாக்கல் அரசியல், போர்மைய அரசியல், அழிவு அரசியல், தனிமனித - குழு அரசியல், மாற்று அரசியல் எனப் பலவித அரசியல்களைப் புரிந்துகொள்ளவும் மொழியாக்கிப் பார்க்கவும் நம்மைக் கொண்டு செல்கிறது. காந்தியைக் கடந்து காந்தியம் விரிவடையும் தளங்கள் இவை.

‘நோய் என்பது நமது செயல்களை மட்டும் சார்ந்ததல்ல. நமது சிந்தனைகளையும் சார்ந்தது.’ ‘மனிதரின் அடிமைநிலை அல்லது சுதந்திரம் என்பது அவரவரது மன அமைப்புச் சார்ந்து அமைவது.’ ‘அறியாமை என்பது நோய்க்கான ஒரு காரணம்.’ ‘இயற்கையான வாழ்வின் சுதந்திரத்துடன் வாழும் விலங்குகள், எப்போதும் பட்டினியில் இறப்பதில்லை. அவற்றுக்கிடையே ஒரு நாளைக்குப் பலமுறை உண்ணும் பணக்காரர், ஒருவேளை உணவு கிடைக்காத ஏழை என்ற பிரிவுகள் இல்லை. இந்த இயல்பற்ற நசிவுகள் மனிதர்களான நம்மிடையே தான் உள்ளன. இருந்தும் விலங்குகளைவிட நாம் நம்மை உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம்.’ (Gandhi, M.K. 1921. A Guide to Health. Madras: S. Ganesan Publisher).

இங்கு நோய், செயல், சிந்தனை, அடிமைநிலை, சுதந்திரம், மனம், அறியாமை, இயல்பற்ற நசிவு (abnormalities) மனிதர்களின் உயர்ந்தநிலை என்பவை சொற்பொருள் கடந்து உருவகக் குறியீட்டுக் கோட் பாட்டுப் பொருள்களை அடைகின்றன. இந்தச் சொற்களை அடிப்படையாக வைத்தே நாம் பல்வேறு தத்துவங்களை விவாதத்திற்கு உள்ளாக்கிவிட முடியும். அதேபோல் இன்றைய உலகு சார்ந்த மனிதச் சிக்கல்களைப் பற்றிய கேள்விகளையும் அணுகிவிட முடியும்.

காந்தியின் எளிமைக்குள் உள்ள சிக்கல்களைப் போலவே இந்தச் சொற்களும் நம்மைப் பல்வேறு கேள்விகளை நோக்கி நகர்த்துகின்றன. அந்தக் கேள்விகளை நாம் அணுகுவதென்பது காந்தியின் மொழியில் சொன்னால் ‘காந்தியத்துடன் நமது பரிசோதனை’ என்பதாக அமையலாம். காந்தி இறுதிவரை தனது நம்பிக்கைகள், செயல்கள், திட்டங்கள் எல்லாவற்றையும் பரிசோதனைகள் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் காந்திக்குப் பிறகு காந்தியம் இந்தியச் சமூக அரசியல் தளங்களில் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை என்பதையும்கூட நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய அரசும் அதன் மக்கள்சார் அணுகுமுறைகளும் காந்தியத்தையும் காந்தியையும் மறுத்து இயங்கத் தொடங்கிய இடத்திலிருந்தே இந்தப் பிழைகளும் தொடங்குகின்றன.

(காலச்சுவடு வெளியீடான "காந்தியைக் கடந்த காந்தியம்" நூலிலிருந்து.)

0 comments:

 
Follow @kadaitheru