Monday, December 6, 2010

விக்கிலீக்ஸ் - ஒரு முழுமையான அலசல்.


அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் குறித்து 1961-62இல் யேல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி மில்கிராம் நடத்திய ஆய்வுகளில், ‘தங்கள் செயல் குறித்துத் தாங்களாக முடிவெடுக்கும்போது மனிதர்கள் செய்யத் தயங்குகிற பல வன்முறைச் செயல்களை அதே மனிதர்கள் அவை தங்களுடைய மேலதிகாரிகளின் உத்திரவுகளாக வருகிறபோது செய்யத் தயங்குவதில்லை’ என்பதைக் கண்டுபிடித்தார். ராணுவம், உளவு, காவல் துறைகளில் பணியாற்றும் பெரும்பான்மையானோர் தங்களது தனிப்பட்ட வாழ்வில் மிக மென்மையான மனிதர்களாக இருந்தபோதிலும் தங்கள் பணிகளின்போது தயங்காது பெரும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்.

மதம், குடும்பம், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதல் நிர்வாகம், ராணுவம்வரை சமூக, அரசு நிறுவனங்கள் அனைத்தும் கீழ்ப்படிதலை வற்புறுத்துவதற்கு இதுவே காரணம். மனித வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை மாற்றங்களும் கீழ்ப்படிய மறுத்தவர்களாலேயே நிகழ்ந்தன. இவையே மனித வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. ராணுவம், உளவு, காவல் துறைகள் பெரும் வன்முறைக்கான கருவிகளாக இருப்பதாலேயே அவற்றில் முழுமையான, கேள்விக்குட்படுத்த முடியாத கீழ்ப்படிதல் விதியாக இருக்கிறது.

இன்று ஊடகத் துறையில் இத்தகைய பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் விக்கிலீக்ஸ் வலைத்தளத்தின் நிறுவனரும் தலைமையாசிரியருமான ஜூலியன் பால் அஸாஞ் தனது சிறுவயது முதல் கீழ்ப்படிதலை வெறுத்தவர். பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் எதிர் பார்க்கப்படும் ஆரோக்கியமற்ற கீழ்ப்படிதலை அவருடைய அம்மா விரும்பாத காரணத்தினாலேயே தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்பித்தார். 2010 ஜூலை 25, ஊடக வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய நாள். ஆப்கானிஸ்தானில் 2004 முதல் 2010 வரையில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளின் செயல்பாடுகள் பற்றிய 91,000 ஆவணங்களில் 76,000 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் அன்று தான் வெளியிடப்பட்டன. இன்னும் 15,000 ஆவணங்கள் வெளியிடப்படாமல் விக்கிலீக்ஸ் வசமிருக்கின்றன. இவை வெளியிடப்படும்பட்சத்தில் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள - தாலிபன் பற்றி நேட்டோ படைகளுக்குத் தகவல்கள் கொடுத்த ஆப்கானியர்கள், ராணுவ வீரர்கள் உட்படப் - பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே வெளியிடப்படாமல் உள்ளன. இந்த ஆவணங்கள் போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள், உளவுத் துறை அதிகாரிகளால் எழுதப்பட்டவை. இவை கொள்கை முடிவுகள் சம்பந்தமானவையோ ராணுவ நடவடிக்கைகள் பற்றிய விளக்கக் குறிப்புகளோ அல்ல. எதிரிகளின் (தாலிபன்கள்) நடவடிக்கைகள், தாலிபன்களைப் பற்றித் தகவல்கள் தருபவர்கள், போர்க்களத்தில் நடந்தவை பற்றிய நேரடியான குறிப்புகளான இவை அமெரிக்க ராணுவத்தால் ரகசிய ஆவணங்களாகக் (classifed documents) கருதப்படுபவை. இவற்றை விக்கிலீக்ஸுக்குத் தந்தது யார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம், ஜூலியன் அஸாஞ்சிற்குக்கூடத் தெரியாது என்பதுதான் இதன் சிறப்பு. தங்களுக்குத் தகவல்களை, ரகசிய ஆவணங்களைத் தருபவர்கள் யார் என்பது இந்த வலைத்தளத்தை நடத்துபவர்களுக்கு எப்படித் தெரியாதோ அதைப் போலவே தகவல்களைத் தருபவர்களால் விக்கிலீக்ஸ் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்ளவோ அறிந்துகொள்ளவோ முடியாது. இந்த வலைதளத்தின் கட்டுமானம் அத்தகையது.

சில சமயங்களில் கற்பனைகளைவிட உண்மைகள் அதிசயமானவை என்று சொல்லப்படுவதுபோல் ஜூலியன் அஸாஞ்சின் வாழ்க்கையும் விக்கிலீக்ஸ் வலைதளம் செயல்படும் விதமும் ஜான் கிரிஷாம் நாவல்களைவிடப் புதிர்கள் நிறைந்தவை. இவருக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, நாடு நாடாகச் சுற்றிக்கொண்டேயிருப்பவர். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்களுடைய வீடுகள் என இவர் தங்குமிடங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். அடிக்கடி தனது மின்னஞ்சல் முகவரிகளையும் செல்பேசி எண்களையும் மாற்றிக்கொண்டேயிருப்பார். இவர் எங்கிருக்கிறார் என்பது இவருக்கு மிக நெருக்கமானவர்களுக்கே தெரியாத விஷயம். இவரைப் பத்திரிகைகள் புதிர் மனிதர் (man of mystery) என்றழைப்பது பொருத்தமானதே. பல நாடுகளின் அரசுகளுக்கு மிகப் பெரும் தலைவலியாக, குடைச்சலாக இருக்கும் இந்த வலைத்தளத்திற்கான நிரந்தர ஊழியர்கள் ஐந்து பேருக்கும் குறைவே. ஆனால் பல நாடுகளில் பகுதி நேர ஊழியர்களாக, தன்னார்வத் தொண்டர்களாக இருப்பவர்கள் சுமார் நூறு பேர். இந்த வலைத் தளத்தை நடத்துவதற்கென ஓரிரு கணிப்பொறியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்குத் தங்களது சக ஊழியர்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பது இதில் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய விஷயம். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி ஜூலியன் அஸாஞ். பல அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் இந்த அமைப்போ மிக ரகசியமாகச் செயல்படுவது ஒரு முரண்நகை. ஆனால் இது தவிர்க்க முடியாதது. தங்களைப் பற்றிய ரகசியங்கள் ஒருபோதும் வெளியாக மாட்டா என்னும் சூழல் தரும் துணிவால், அரசாங்கங்களாலும் கொள்கைவகுப்பாளர்களாலும் மக்களிடமிருந்து மறைக்கப்படும் பல ரகசியங்களையும் ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் விக்கிலீக்ஸுக்கு அளிக்க உலகெங்கும் பலர் (whistle-blowers) முன்வருகின்றனர். (இந்தியாவில் இவ்வாறு ஊழல் குறித்த ரகசியங்களை அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் வெளிப்படுத்திய பலர் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களால் கொல்லப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்க.)

கணிப்பொறியிலும் சங்கேத மொழிகளை எழுதுவதிலும் அவிழ்ப்பதிலும் நிபுணராக இருக்கிற காரணத்தினாலேயே இத்தகைய வலைத்தளத்தை அஸாஞ்சால் உருவாக்க முடிந்தது. எல்லோருக்கும் எல்லாத் தகவல்களும் கிடைக்கும்படியானவையாக இருக்க வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோட்பாடு. பல அநீதிகளுக்குக் காரணங்களாக அமைவது, தேசிய நலன்கள் என்னும் பெயரில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுவதே என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த இவருக்கு பிரான்ஸ் காஃப்கா, ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர் மிகப் பிடித்தமான எழுத்தாளர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் விக்கிலீக்ஸ் ஆன்லைனில் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் அதிகமான வழக்குகளை இந்த வலைத்தளம் சந்தித்துள்ளது. இதன் உள்ளடக்கமானது உலகெங்கும் இருபதுக்கும் அதிகமான serverகளில் பராமரிக்கப்படுவதாலும் நூற்றுக்கணக்கான இணைய முகவரிகளில் செயல்படுவதாலும் விக்கிலீக்ஸில் வெளியிடப்படும் ஆவணங்களை வலைத்தளத்திலிருந்து அகற்றுவது என்பது உலகளாவிய இணையத்தையே முடக்கினால் மட்டுமே சாத்தியம். தனது ராணுவ நடவடிக்கைகளை இந்த அளவிற்கு அம்பலப்படுத்திப் பெரும் குடைச்சலைத் தந்திருக்கும் இந்த வலைத்தளத்தை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள 76,000 ஆவணங்கள் இதுவரை வெளியுலகம் அதிகம் அறியாதிருந்த பல ராணுவ நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. இவை அதிர்ச்சி தரும் ரகசியங்கள் அல்ல, ஏனெனில் இவற்றில் பல அரசல் புரசலாக ஏற்கனவே வெளிவந்தவை. இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த விஷயங்கள்தாம் என வெள்ளை மாளிகை ஒப்புதல்வாக்கு மூலம் தந்தது. ஆப்கன் போர் குறித்த எங்களது பொது விவாதங்களில் இடம்பெறாத எந்த விஷயத்தையும் இந்த ஆவணங்கள் வெளியிட்டுவிடவில்லை என்றும் இப்போர் குறித்த தனது புதிய வியூகத்தைச் (மேலும் 30,000 அமெரிக்க ராணுவத் துருப்புகளை ஆப்கான் அனுப்புவது) சரி என்பதை இந்த ஆவணங்கள் காட்டுவனவாகவும் ஒபாமா குறிப்பிட்டார்.

இவ்வளவிற்குப் பிறகும் இது ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் சாதாரணமானவையல்ல. (அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவது அனைவருக்கும் தெரிந்த மிகச் சாதாரண விஷயம் என்றபோதிலும் தெஹல்காவின் ரகசியக் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த பங்காரு, லஷ்மணன் பணத்தை வாங்கும், காட்சியைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வுகளைப் போன்றவை இவை.) மேலும் இந்தக் குறிப்புகளை எழுதியது பத்திரிகையாளர்களோ வேறு பார்வையாளர்களோ அல்ல. மாறாக இக்குறிப்புகள் போர்க்களத்திலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களால், உளவுத் துறை அதிகாரிகளால் தங்களது மேலதிகாரிகளின் பார்வைக்காக எழுதப்பட்டவை. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை முழுமையானது என்பதை இவை பற்றி அமெரிக்க ராணுவத்தில் யாரும் கேள்வியெழுப்பவில்லை என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

ஆப்கன் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை எப்போதும் மிகக் குறைத்தே சொல்லப்பட்டது. பொதுமக்கள் போரில் கொல்லப்படுவது கருத்தில் கொள்ளப்படாத பாதிப்பு (collateral damage) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவற்றில் பலவும் ராணுவத்தினரின் அலட்சியமான போக்கால் நிகழ்பவை. பொதுமக்களைக் கொல்வது அவர்களது நோக்கமாக இல்லை என்பது உண்மையே. ஆனால் பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பற்றி அக்கறையற்றவர்கள் இவர்கள். இதைப் பற்றிக் கூறுகிறபோது, “தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிற எறும்புகளைக் கொல்வது நமது நோக்கமல்ல. ஆனால் நாம் நடக்கிறபோது அவ்வாறு கொல்லப்படுகிற எறும்புகளைப் பற்றி நமக்கு அக்கறை கிடையாது என்பதைப் போன்றது இது” என்றார் நோம் சோம்ஸ்கி. இந்தப் போரில் 2004 -10 காலகட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000த்திற்கும் அதிகம். இதில் எதிரிகள் 15506 பேர், பொதுமக்கள் 4232 பேர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் 3819 பேர், நேட்டோ படையினர் 1138 பேர். அதாவது நேட்டோ படை வீரர் ஒருவருக்கு 20 ஆப்கானியர்கள் வீதம் பலியாகியுள்ளனர். இதில் எதிரிகள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் தாலிபன்கள். ஆனால் தாலிபன்களோடு சம்பந்தமற்றவர்களும் அவர்களின் அரசியல்பால் அனுதாபம் கொண்டிருந்தவர்களும் எதிரிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகின்றனர் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பல மேலை நாட்டுப் பத்திரிகைகள் அப்பாவிப் பொது மக்கள் இவ்வாறு கொல்லப்படுவதை அம்பலப்படுத்தியிருந்தபோதிலும் இப்போது அதைப் பற்றி முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளன. (நேட்டோ படைகள் தங்கள் தேவைக்காகவாவது இவ்வாறு தகவல்களை நேர்மையாகப் பதிவுசெய்கின்றன. ஆனால் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து இப்படிப்பட்ட துல்லியமான பதிவுகள் எவையும் இருக்கமாட்டா என உறுதியாக நம்பலாம். வாரென் ஆண்டர்சனை வெளியேற அனுமதித்தது யார் என்பது பற்றியும் நெருக்கடி நிலை குறித்த குடியரசுத் தலைவரின் பிரகடனம் பற்றியுமே நம்மிடம் ஆவணங்கள் எவையுமில்லை என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.)

இந்த ஆவணங்களில் வெளியான அடுத்த மிக முக்கியமான விஷயம் டாஸ்க் போர்ஸ் 373. நேட்டோ படைகளின் சிறப்புப் பிரிவு இது. தாலிபன், அல் கய்தாவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் புள்ளிகளைத் தேடிச் சிறைபிடிப்பது அல்லது கொல்வது என்பதே இதன் பணி. பிடிபடுகிறவர்கள்மீது வெளிப்படையான வழக்கு விசாரணை எதுவும் இருக்காது. இப்பணிக்குக் குறுக்கீடாக அமைந்த அப்பாவி பொதுமக்களின் உயிர் வழக்கம்போல் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட இத்தகைய கொலைகளைப் (extrajudicial killings) பற்றிய வதந்தி களை ஆராய 2008 மே மாதம் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த மனித உரிமைகளுக்கான ஐநாவின் சிறப்புத் தூதுவர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் ஆப்கானில் உள்ள சர்வதேசப் படைகள் வெளிப்படையாகவோ யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகவோ இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் தாலிபன், பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐஎஸ்ஐ இடையிலான உறவு குறித்த ஆவணங்களே இந்தியாவில் அதிகக் கவனம்பெற்றன. ஆனாலும் ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல் தாலிபனுடனான ஐஎஸ்ஐ உறவு ஏற்கனவே உலகறிந்த ஒன்று. Êசமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ‘‘பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரிகள் சிலருக்கு ஒசாமா பின் லேடன் இருக்குமிடம் தெரியும் என்று தான் நம்புவதாகக்’’ குறிப்பிட்டார். ஐஎஸ்ஐ மூலம் தாலிபன் பெறும் நிதி, ஆயுத உதவிகள் அமெரிக்காவைக் கவலைகொள்ளச் செய்தாலும் அதற்காகப் பாகிஸ்தானைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது. ஆக, தாலிபன் - ஐஎஸ்ஐ உறவு புதிய செய்தியல்ல என்றாலும் அமெரிக்கா, பாகிஸ்தான் இரண்டுக்குமே இந்த விஷயம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெளிவாகக் காட்டும் ஒரு விஷயம் இதுதான்: அமெரிக்காவிற்கு ஆப்கான் இன்னொரு வியட்நாம். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இங்கு முடிவான வெற்றி என்பது அமெரிக்காவிற்குச் சாத்தியமாகப் போவதில்லை என்பதையே இந்த ராணுவ ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆப்கான் போர் எப்படி வியட்நாம் போரை நினைவுபடுத்துகிறதோ அதைப் போலவே விக்கிலீக்ஸ், பென்டகன் பேப்பர்ஸ் (Pentagon Papers) விவகாரத்தை நினைவுபடுத்துகிறது. இரண்டிற்குமுள்ள தொடர்பு மிக நெருக்கமானது. 1967ஆம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராபர்ட் மெக்னமாரா Vietnam Study Task Force என்னும் குழுவொன்றை அமைத்தார். வியட்நாம் போர் குறித்த அமெரிக்காவின் அரசியல், ராணுவ நடவடிக்கைகளை, முடிவுகளை, 1945 முதல் 1967 வரை நடந்த செயல்பாடுகளைப் பற்றி மிக விரிவான, முழுமையான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிப்பதே இதன் பணி. இத்தகைய குழு அமைக்கப்பட்டது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லின்டன் ஜான்சனுக்கே தெரியாது.

இக்குழுவில் ராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக ஆய்வாளர்கள் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். அதில் ஒருவர்தான் டேனியல் எல்ஸ்பெர்க். ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்த இவர் (ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்) ஆய்வுக் குழுவில் செயலாற்றியபோதுதான் வியட்நாம் போர் குறித்த பல விஷயங்களை லின்டன் ஜான்சனும் அவரது நிர்வாகமும் மக்களிடமிருந்து மட்டுமல்ல அமெரிக்க காங்கிரசிடமே (அமெரிக்க நாடாளுமன்றம்) மறைத்திருந்தைத் தெரிந்துகொண்டார். மொத்த அறிக்கை 7,000 பக்கங்கள். குழுவிலிருந்த பலருக்கு இந்த அறிக்கையை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. அறிக்கையை முழுமையாகப் படிக்க வாய்ப்பு கிடைத்த எல்ஸ்பெர்க், 1945இலிருந்து தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐந்து ஜனாதிபதிகளும் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்துவந்ததை அம்பலப்படுத்தினாலொழிய வியட்நாம் போர் குறித்த உண்மைகள் மக்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை உணர்ந்தார்.

பென்டகன் பேப்பர்கள் விவகாரம் தனக்கு உந்துசக்தியாக இருந்ததாக ஒரு பேட்டியில் ஜூலியன் அஸாஞ் குறிப்பிட்டிருந்தார். பென்டகன் பேப்பர்ஸ் விவகாரத்திற்கும் விக்கிலீக்ஸ் விவகாரத்திற்கும் ஒரு வேற்றுமை உண்டு. வியட்நாம் போர் முடிந்த பின்னரே பென்டகன் பேப்பர்ஸ் வெளியானது. ஆனால் இப்போது ஆப்கன் போர் நடந்துகொண்டிருக்கும்போதே அதைப் பற்றிய உண்மைகள் அம்பலமாகியிருக்கின்றன. இதன் காரணமாகப் போரின் போக்கில் எத்தகைய மாற்றங்கள் இருக்கும் என்று சொல்வது கடினம். இந்த அளவிற்கு இந்த விவகாரம் பேசப்பட்டதற்குக் காரணமே இது நியூ யார்க் டைம்ஸ், த கார்டியன் ஆகிய பத்திரிகைகளில் வெளியானதுதான். இன்னமும் பாரம்பரியமான நாளிதழ்களின் நம்பகத்தன்மை, செல்வாக்கு வீச்சை இணைய ஊடகத்தால் பெற்றுவிட முடியவில்லை. பாரம்பரியமான நாளிதழ்களும் பத்திரிகையாளர்களும் விக்கிலீக்ஸ் வலைத்தளம் போன்று கட்டுப்படுத்த முடியாதவர்கள் அல்ல. இசைவு உற்பத்தியில் (Manufacturing Consent) அரசுகளும் ஆளும்வர்க்கங்களும் கைதேர்ந்தவை.

ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தைப் பார்க்கிறபோதும் ஜூலியன் அஸாஞ் போன்ற மனிதர்களைப் பார்க்கிறபோதும் புது ஊடகங்கள் (new media) அரசாங்கங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியைத் தர முடியும் என்பதும் எல்லாத் தகவல்களும் எல்லோரின் விரல் நுனியில் என்னும் நிலை உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகின்றன. அதிகாரம் என்ற ஒன்றை இல்லாது செய்வதன் மூலம் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும். கீழ்ப்படிதலும் ரகசியத் தன்மையும் ஒழிவது அதன் முதல்படி.


(நன்றி : காலச்சுவடு பதிப்பகம்).

0 comments:

 
Follow @kadaitheru