தன்னை ‘மகாத்மா’வெனப் பிறர் குறிப்பிடும்போது அவர்கள் ஒருவித லட்சிய உயர்நிலையை ஏற்பதைக் காந்தி உணர்ந்தார். இந்த ‘லட்சிய உயர்நிலை’ குறித்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வரிடமும் உயர்குணங்களை, நற்பண்புகளை, அறங்களை வளர்த்துவிட முடியுமென்று அவர் நம்பினார்.
அரசியல், சமூகச் செயல் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகள் என்பவை, முற்றிலும் பூடகமான, எளிய தனிமனிதர்களுக்கு இயலாத பெரும் நிகழ்வுகள் என்பதான ஒரு மயக்கநிலையைக் காந்தி இவ்விதமாகத் தெளியவைத்து தனித்த உடல், தனி ஒரு சொல் என்பதிலிருந்தே அரசியல், பொருளாதாரம், வரலாறு என்பவை தொடங்குகின்றன என்பதைப் புலப்படுத்திக்காட்டினார். இது நவீன அரசியல் சமூகச் சூழலில் வகிக்கும் இடம் நாம் மதிப்பிடுவதைவிடப் பல மடங்கு பெருமதி கொண்டது. ஏனெனில் தனிமனிதர், தனி உடல் என்பதற்கு எந்த மதிப்புமற்ற ஒரு முன்நவீனநிலை இந்தியச் சூழலில் இருந்த ஒரு காலகட்டமே காந்திய அரசியலின் காலகட்டம். தனிமனிதர் என்பதன் உருவாக்கத்தை நாம் அறிவொளிக்காலத்திலிருந்து அடையாளம் காண்பது அகிலம் சார்ந்த சூழலில் பொருத்தமாக இருக்கும் (இந்திய உப மரபுகள், கிளை மரபுகள் மறதிக்குட்பட்ட காலகட்டத்தைப் பற்றியது இந்தக் குறிப்பு). இந்தியச் சூழலில் சாதிய, சமய, மொழியினச் சூழல்களில் தனிமனிதர் என்பதன் பொருள் வேறு. காலனியச் சூழலில் இந்திய உடல்கள் ஆளப்படும் உடல்களாக, உற்பத்தி செய்யும் உடல்களாக, பொருள் நுகரும் உடல்களாக அடையாளம் காணப்பட்டன. இயந்திரங்கள், உற்பத்திச் சாதனங்கள், தொழில்நுட்பக் கருவிகள், நவீன நிர்வாகம், பொதுச் சமூகம் என்பவையும் சட்ட - ஒழுங்கு விதிமுறைகள், வெகுமக்கள் தொடர்பு ஊடகங்கள் என்பவையும் இந்தியச் சமூகங்களில் தனிமனிதர் என்னும் நிலையை ஒரு யூகவடிவமாக அறிமுகப்படுத்தியிருந்தன. அடிபணியும் ‘தனிமனித நிலை’ என்பது இரு வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. மரபான அமைப்புகளுக்குப் பணிந்திருக்கும் தனிமனிதர்; காலனியப் பேரரசுக்குப் பணிந்திருக்கும் ‘தனிமனிதர்’. இந்தப் பணிந்திருக்கும் தனிமனிதர் நிலையைத்தான் காந்தி செயல்படும் தன்னிலையாக, ‘வினையாற்றும்’ தனிமனித நிலையாக, தன்னைத்தானே அடையாளப்படுத்தும் தன்னிலையாக மாற்றிக்காட்டினார். இந்தப் புதிய தனிமனிதத் தன்னிலை உருவாக்கம் பெரும் அரசியல் இயக்கங்களாலும் போராட்டங்களாலும்கூட உருவாகியிருக்க முடியும். இந்தியச் சூழலில் போரும் சமயமும் உருவாக்கித் தந்திருந்த தானற்ற நிலை நோக்கிய கூட்டு அடையாளத்திற்கும் தன்னிலை அழிந்தநிலைக்கும் நெருக்கமாகவே இந்தத் தேசிய-விடுதலை மற்றும் போராட்ட அடையாளங்கள் இருந்திருக்கும்.
உலகை மாற்றும் முன் உம்மை மாற்றுதல் என்பதில் தொடங்குவதால் உடல் - மனம், அகம் - புறம், பொருள் -கருத்துருவம், தனிநிலை - கூட்டுநிலை என்பவை குறித்த நவீனத்துவச் சிக்கல்கள் பலவற்றைக் காந்தியம் அழகியல், உருவகத்தன்மை என்பதன் மூலமும் நம்பிக்கை, அறம் என்பதன் மூலமும் எளிமையாகக் கையாண்டுவிடுகிறது. இந்த எளிமைதான் காந்தியத்திலும் காந்தியிடமும் உள்ள சிக்கலானதும் கடினமானதுமான பகுதி. எளிமைகள் சிக்கலடைவதும் இயல்புகள் அச்சமூட்டுவதும் மனித அறிவுருவாக்கத்தின் முரண்கள். மனித சமூகங்கள், இனங்கள் என்பவை எளிய நிலையிலிருந்துதான் இவ்வளவு சிக்கல்களை அடைந்திருக்கின்றன. அப்படியெனில் காந்தியத்தின் எளிமையைப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் நவீன உலகின், நவீனத்துவ அறிவு மற்றும் மனித உருவாக்கத் திட்டத்தின், மனித பொருள்படுத்தும் முறைகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலுமா எனப் பார்க்க வேண்டும்.
காந்தியம் இவ்வகையில் உடலரசியல், நுண்ணரசியல், இனவியல் - பாலின அரசியல், அழகியல் - பண்பாட்டு அரசியல், அதிகார - கண்காணிப்பு அரசியல், ஓரமைவாக்க - மேலாதிக்க அரசியல், உலகமயமாக்கல் -இயந்திரமயமாக்கல் அரசியல், போர்மைய அரசியல், அழிவு அரசியல், தனிமனித - குழு அரசியல், மாற்று அரசியல் எனப் பலவித அரசியல்களைப் புரிந்துகொள்ளவும் மொழியாக்கிப் பார்க்கவும் நம்மைக் கொண்டு செல்கிறது. காந்தியைக் கடந்து காந்தியம் விரிவடையும் தளங்கள் இவை.
‘நோய் என்பது நமது செயல்களை மட்டும் சார்ந்ததல்ல. நமது சிந்தனைகளையும் சார்ந்தது.’ ‘மனிதரின் அடிமைநிலை அல்லது சுதந்திரம் என்பது அவரவரது மன அமைப்புச் சார்ந்து அமைவது.’ ‘அறியாமை என்பது நோய்க்கான ஒரு காரணம்.’ ‘இயற்கையான வாழ்வின் சுதந்திரத்துடன் வாழும் விலங்குகள், எப்போதும் பட்டினியில் இறப்பதில்லை. அவற்றுக்கிடையே ஒரு நாளைக்குப் பலமுறை உண்ணும் பணக்காரர், ஒருவேளை உணவு கிடைக்காத ஏழை என்ற பிரிவுகள் இல்லை. இந்த இயல்பற்ற நசிவுகள் மனிதர்களான நம்மிடையே தான் உள்ளன. இருந்தும் விலங்குகளைவிட நாம் நம்மை உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம்.’ (Gandhi, M.K. 1921. A Guide to Health. Madras: S. Ganesan Publisher).
இங்கு நோய், செயல், சிந்தனை, அடிமைநிலை, சுதந்திரம், மனம், அறியாமை, இயல்பற்ற நசிவு (abnormalities) மனிதர்களின் உயர்ந்தநிலை என்பவை சொற்பொருள் கடந்து உருவகக் குறியீட்டுக் கோட் பாட்டுப் பொருள்களை அடைகின்றன. இந்தச் சொற்களை அடிப்படையாக வைத்தே நாம் பல்வேறு தத்துவங்களை விவாதத்திற்கு உள்ளாக்கிவிட முடியும். அதேபோல் இன்றைய உலகு சார்ந்த மனிதச் சிக்கல்களைப் பற்றிய கேள்விகளையும் அணுகிவிட முடியும்.
காந்தியின் எளிமைக்குள் உள்ள சிக்கல்களைப் போலவே இந்தச் சொற்களும் நம்மைப் பல்வேறு கேள்விகளை நோக்கி நகர்த்துகின்றன. அந்தக் கேள்விகளை நாம் அணுகுவதென்பது காந்தியின் மொழியில் சொன்னால் ‘காந்தியத்துடன் நமது பரிசோதனை’ என்பதாக அமையலாம். காந்தி இறுதிவரை தனது நம்பிக்கைகள், செயல்கள், திட்டங்கள் எல்லாவற்றையும் பரிசோதனைகள் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் காந்திக்குப் பிறகு காந்தியம் இந்தியச் சமூக அரசியல் தளங்களில் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை என்பதையும்கூட நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய அரசும் அதன் மக்கள்சார் அணுகுமுறைகளும் காந்தியத்தையும் காந்தியையும் மறுத்து இயங்கத் தொடங்கிய இடத்திலிருந்தே இந்தப் பிழைகளும் தொடங்குகின்றன.
(காலச்சுவடு வெளியீடான "காந்தியைக் கடந்த காந்தியம்" நூலிலிருந்து.)