Thursday, October 29, 2015

உடையார் - அஜித்தின் அடுத்தபடம்

எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவருடன் இணைந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் பயனித்து கொண்டிருக்கிறேன், இது பற்றிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக அறிவித்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அவர் ஆறுபாகங்களாக வெளிவந்த பாலகுமாரனின் "உடையார்" நாவலுக்கு திரைக்கதை அமைத்துகொண்டு இருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும்.

தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக பாலகுமாரன் குறிப்பிடுகிறார்.


"நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையா தஞ்சை கோவிலுக்குப் போறேன். "இது உனக்கு பரிச்சயமான இடம்தான்'ன்னு, மனசு சொல்லுது! "இங்கே சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்'னு நினைக்கிறேன். அப்படியே இருக்குது. "அர்ச்சகர் இப்படி இருப்பார்'னு நம்புறேன். அவரும் அப்படியே இருக்கிறார். நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன். யாருக்கும் ஒண்ணும் தெரியலை. "இவ்ளோ பெரிய கோவில்! ஆனா, இதோட வரலாறு யாருக்கும் தெரியலையே'ங்கற வருத்தம் ஏற்பட்டது. கோவிலைச் சுத்தி வரும்போது, "இது ரொம்ப அநாதையா இருக்கு. இந்த கோவில் இப்படி இருக்கக்கூடாது'ன்னு அழுதேன்! ஆனா, அந்தசமயத்துல கூட, இந்த கோவிலைப்பத்தி எழுதணும். இதை நாவலாக்கணும்னு எனக்கு தோணவேயில்லை. ஆனா, தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்?ன்னு யோசிச்சேன். கல்வெட்டுக்களை தேடிப் படிக்கணும்னு முடிவு பண்ணுனேன்.

என் 27 வயசுலதான், முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்'ங்கற ஒரு கல்வெட்டை, கையில புத்தகம் வைச்சுக்கிட்டு தடவித் தடவி படிச்சு முடிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி, பல கல்வெட்டுக்களை படிச்சேன். அதுமூலமாத்தான் ராஜராஜனை விட, கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.

 கிருஷ்ணன்ராமன்...அவன்...பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியா இருந்திருக்க முடியும்?ன்னு, எனக்குள்ளே ஒரு ஆச்சர்யம்! அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடிப் போனேன். அங்கே, அற்புதமான காளி கோவில் இருக்கு. அது, அவன் கட்டின கோவில். அந்த கோவிலை நான் ரசிச்சுட்டு இருந்தப்போ, 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தார். "இத்தனை நாளாச்சா வர்றதுக்கு?'' அவர் கேட்டவுடனே, ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து, கருங்கல் சுவத்துக்குள்ளே புகுந்து போயிட்டார். அந்த நிமிஷத்துலதான்...சோழனைப் பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட, "கிருஷ்ணன்ராமன் இல்லையெனில் ராஜராஜன் இல்லை'ன்னு, என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனைப் பத்தின தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுன தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான் ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்த கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழ தேசத்தின் மீது எனக்கு காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களை தேட ஆரம்பிச்சேன். சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறது காதல் அல்ல...வெறி!

 ராஜராஜனின் உள்மன அலசல்! இதை... யாருமே மக்களுக்கு சொல்லலை! நான் " உடையார்' மூலம் சொல்லியிருக்கிறேன்!'

என்று விளக்கம் அளித்து இருக்கிறார் பாலகுமாரன்.



சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து,யுடிவி மோஷன் பிக்சர்ஸ் கூட்டுதயாரிப்பில், இயக்குனர் விஷணுவர்தன் இப்படத்தை
உருவாக்க இருக்கிறார்.

வேதாளம் படத்தை அடுத்து, முதல்முறையாக இந்த சரித்திர படைப்பில் ராஜராஜ சோழனாக, அஜித்குமார் நடிக்க இருக்கிறார்.

அவரது சேனாதிபதியாக, படத்தில் முக்கிய வேடத்தில், ஆரம்பம் புகழ்  ராணா டகுபர்டி நடிக்கவிருக்கிறார்,

உடையார் என்பது பெருவுடையார் என்று குறிக்கும்.

தெலுங்கு மக்களுக்கு எப்படி "பாகுபலி"யோ, அதுபோன்று தமிழ் மக்களுக்கு "உடையார்" நிச்சயம் அமையும்.

-இன்பா 

 
Follow @kadaitheru