Sunday, October 25, 2015

கண்களை நிறைக்கும் தஞ்சை பெரியகோவில்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீஸ்வரரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு.

நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட, தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும்.

. தஞ்சாவூர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கவுரவிக்கும் விதமாக , பெரியகோவில் கட்டி 1000 ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நமது தமிழக அரசு எடுத்துவரும் சதய விழா, அரசின் பாராட்ட வேண்டிய சாதனைகளில் ஒன்று.

கடந்த 23 அன்று தஞ்சை பெருவுடைய தேவருக்கு  1030 வது ஐப்பசி சதய திருவிழா கோலாகலமாக கொண்டாடபட்டது.


ராஜராஜ சோழன் - தஞ்சை பெரியகோவில் இடையிலான தொடர்புகளை தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.

இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.

என்று பெரியகோயிலில் உள்ள சான்றுகளோடு விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் திரு.ஸ்ரீதரன்.

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.


ஆனாலும், இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தீராத கரும்புள்ளியாக இருக்கிறது ஒரு மூட நம்பிக்கை. அதாவது...இக்கோவிலின் நேர்வழியாக,முன்வாசல் வழியாக சென்றால், செல்லும் அரசர் அல்லது தலைவரின் பதவி பறிபோய்விடும் என்பதே அது.

இக்கோவிலில் ஒருமுறை பெரும் தீவிபத்து நடந்தபோது, முற்போக்கு சிந்தனைகளை பேசும் கருணாநிதி அவர்கள் கூட, பின்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.

"இது போன்ற ஐதீகம் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு குறிப்புகளிலும், வரலாற்றிலும் இல்லை" என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் எனது நண்பரான ஒரு தமிழாசிரியர்.

 ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும்,இல்லாவிட்டாலும் சரி. அவர் கோவிலின் முன்வாசல் வழியாக சென்று, உலகமே வியக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலின் மேல் உள்ள கரும்புள்ளியை துடைக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

"கண்கொள்ளாகாட்சி" என்னும் வார்த்தைக்கு நான் உணர்ந்த சரியான,அழகான உதாரணங்கள் இரண்டு.

ஒன்று, அதிகாலை சூரியஉதயத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்.

இரண்டு, அந்திமாலையில்,...இரவில் மின்னொளியில் ...தஞ்சை பெரியகோவிலின் கோபுரம்.

-இன்பா

 
Follow @kadaitheru