Thursday, February 13, 2014

'காதலை' பிரித்து மேயும் சுஜாதா

இதுவரை கவிஞர்களும், கலைஞர்களும், காதலர்களும் கையாண்டுவந்ததை விஞ்ஞானிகள்தீவிரமாக ஆராயத் துவங்கி குட்டையைக் குழப்பியிருக்கிறார்கள். 

பெருமூச்சிலும், துடிப்பிலும்,கண்ணீரிலும், மோசமான கவிதைகளிலும் சிலவேளை உடுப்பி லாட்ஜில் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலையிலும் ஓடிக்கொண்டு இருந்த காதல் தன் தெய்வீக, அமரகாரணங்களைத் துறந்து வெறும் கெமிஸ்ட்ரி ஆகிவிடும் போல இருக்கிறது. கடந்த பிப்ரவரி 'டைம்’இதழில் காதல் ரசாயனத்தைப் பற்றிய கட்டுரை சிந்திக்கவைக்கிறது.

'யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும்’ என்று யாரையும்விட நாம் ஜாஸ்தி காதல் என்றால் கோபத்துடன் 'யாரைவிடயாரைவிட’ என்று கேட்கும் 'புலவி நுணுக்கம்’. வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்.
யாருள்ளித் 'தும்மினீர்’ என்று தும்மினபோது 'Bless you’ என்று வாழ்த்திவிட்டு ''ஆமாம்! நான் உன்னை நினைக்கலையே... யார்உன்னை நினைச்சுத் தும்மியது?'' என்று அதீத ஆக்கிரமண அன்பைக் காண்பிக்கும் மிகசுவாரஸ்யமான குறட்பாக்கள் திருக்குறளின் மூன்றாவது பாலில் உள்ளன.

வள்ளுவர்தான் அதற்குக் காமத்துப் பால் என்று பெயரிட்டாரா என்பதுபற்றி ஆராய்ச்சி உண்டு.காமத்துப் பால் என்றுபெயரிடப்பட்டது இன்றைய விஞ்ஞானப்படி பொருத்தமே! எப்படிச்சொல்கிறேன்... நீங்கள் காதலித்து இருக்கிறீர்களெனில் கீழ்க்கண்ட அடையாளங்கள் உங்களுக்கு ஏற்படும். 

காலுக்குக் கீழ் பஞ்சு, காதில் கொஞ்சம் சலங்கைச் சப்தம், மிதப்பது போல் உணர்வு,ஒட்டுமொத்தமாக உலகமே ஏன், பிரபஞ்சமே உங்கள் காதலி/காதலனாக மாறிவிட்டது போன்ற பிரமை. 

உலகத்தில் மற்ற எந்தப் பிரகிருதிக்கும் இந்த உணர்ச்சி ஏற்பட்டது இல்லை. எனக்கு மட்டும்ஸ்பெஷல் இது என்கிற பிரமை. காதல் என்பது இம்சை, இன்பம், அடிமை, விடுதலை, கொடுமை,கோலாகலம்... காதல் இல்லையேல் கவிஞர்களில் இருந்து ஐஸ்க்ரீம் விற்பவர்கள் வரை பிழைப்புஇழந்துவிடுவார்கள். சினிமாக்களில் கூட்டம் இராது. சுண்டல் வியாபாரமும் கிண்டல்ஜோக்குகளும் படுத்துவிடும். காதல் உலகை இயக்குகிறது.

இதுவரை விஞ்ஞானிகள் காதல் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கவில்லை. காரணம் - காதல்என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞானக்கருவிகளைக்கொண்டு அளக்க முடியும். ஆனால், காதல்! ம்ஹும். அதன் அடையாளங்கள்குழப்பமானவை. அஜீரணமாக இருக்கலாம்... பைத்தியமாகவும் இருக்கலாம்... காதலுக்கு என்றுதனிப்பட்ட அடையாளங்களைத் தேடுவது மிக கஷ்டமாக இருந்தது. கோபத்துக்கும் பயத்துக்கும்நேரடியான பரிமாணரீதியான தேவை இருக்கிறது. கோபம் சண்டை போட, பயம் ஓடிப்போக! மனிதஇனம் நீடிக்க இவை இரண்டும் தேவை. ஆனால், காதல்? காதல் என்பது இல்லாமலேயே சேர்ந்துபிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது நம்மால்.பெருமூச்சுக்கள், கைக்குட்டையில் சென்ட்,கவிதைகள் எதுவும் இன்றியே பெற்றுத்தள்ள முடிகிறது. 


எனவே, காதல் இன நீடிப்புக்குத்தேவையற்றது என்று உயிரியலாளரும் (பயாலஜிஸ்ட்) மானிட இயலாளர்களும்(அன்த்ரபாலஜிஸ்ட்) இதை நிராகரித்தார்கள். காதல் என்பது வெறும் மனத்தில் நிகழ்வது. நாகரிகம்பெற்றதும் மனிதன் பொழுது போகாமல் காவியங்களாகப் படைத்த நேர விரயம்... காதலைப் பற்றிகவிஞர்களும் மாத நாவல்காரர்களுமே எழுதட்டும் என்று விட்டு வைத்திருந்தார்கள். 

ஆனால்,சென்ற பத்தாண்டு களில் மனம் மாறிவிட்டார்கள். ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்யத்துவங்கிவிட்டார்கள். இந்த மாறுதலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல் கிறார்கள். எய்ட்ஸ்கூடக்காரணமாக இருக்கலாம். காதல் இல்லாத செக்ஸினால் பரவும் இந்த வியாதியின் தீவிரமும்அபாயமும் 'இரண்டு பேரை ஒன்று சேர்ந்து இணைத்து வருஷக்கணக்காக நேசிக்கும் இந்தக் காதல்என்னும் சக்தி’யின் முக்கியத்துவத்தை உணரச்செய்துள்ளன.

'காதலித்துப் பார்! காதலிக்கப்பட்டுப்பார்!’ இந்த ஆணை உலகம் எங்கும் இப்போது ஒலிக்கிறது.கவிதை, சினிமா, நாவல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அனைத்திலும் இந்த மந்திரவார்த்தைதான். விளம்பரங்களிலும் எத்தனை காதல் என்று யோசித்துப் பாருங்கள்! ஸிட்ரா சூப்பர்கூலர் குடித்தால் காதலி மோட்டார் சைக்கிளில் பின்னேறுவாள். லெஹர் பெப்ஸி சாப்பிட்டால்ஸஞ்சனா உங்களைத் தேடி வருவார். காதல் என்பது மஹா வியாபார கலாசாரத்தின் முக்கியஅங்கமாகிவிட்டது. லாரன்ஸ் காஸ்லர் என்னும் சைக்காலஜிஸ்ட், 'காதல் என்பது மனித இயற்கைஅல்ல. அது சமூகத் தேவைகளால் ஏற்படுவது’ என்கிறார்.

கவிஞர் சக்திக்கனல்

'திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்
என் கல்யாணம் மட்டும் ஏன்
செட்டிப்பாளையத்தில்
நிச்சயிக்கப்பட்டது?’

என்று கேட்கிறார். சிலருக்குக் காதல் வாய்ப்பதில்லை.

தெய்வீகக் காதல், இந்த மாதிரி 'பிஸின’ஸை எல்லாம் விட்டுவிட்டு விஞ்ஞானப்பூர்வமாக அதற்குஇரக்கம் காட்டாமல் பார்க்கலாம். காதலர்கள் நடந்துகொள்வது மேம்போக்காகப்பித்துப்பிடித்ததுபோல் இருந்தாலும், அதை விஞ்ஞான முறையில் அலசும்போது அதற்கு ஒருகாரணமும் தேவையும் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். மைக்கல் மில்ஸ் என்னும்சைக்காலஜிஸ்ட் ''காதல் என்பது நம் முன்னோர் கள் நம் காதில் பேசும் ரகசியம்'' என்கிறார்.

40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள்.அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்துகாதலின் காரணத்தால் அசட்டுச் சிரிப்பும் கை களில் வியர்வையும் ஏற்பட்டதாம். ஆணும்பெண்ணும் கண்ணும் கண்ணும் கலந்து பார்த்து நிற்க... ''ஏய்! என்னடாது புதுசா?'' என்றுபெற்றோர்களால் அதட்டப்பட்டனர். மனிதன் இரண்டு கால்களில் நிற்கத் துவங்க, காதலால் அவன்உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியத் துவங்க,தோளின் அகலம், கண்கள் இவை எல்லாம் ஒவ்வொருவருக்கு வேறுபடுவதை உணர்ந்தபோதுகாதல் பிறந்தது.

காதல் ஆணையும் பெண்ணையும் ஸ்திரமான உறவுக்கு இழுத்தது. இது குழந்தை வளர்ப்புக்குத்தேவைப்பட்டது. சமவெளிப்பகுதியில் மனிதன் இரை தேடும்போது ஒருத்தனாகவோ,ஒருத்தியாகவோ கையில் குழந்தையை வைத்துக்கொள்வது அபாயகரமானதாக இருந்தது.அதனால், குழந்தையைப் பார்த்துக்கொள்ளவாவது இருவரும் கொஞ்ச நாள் ஜோடியாக இருப்பதுதேவைப்பட்டது. ஜோடியாக இருக்க அன்பு வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் வேண்டும்.காதல் வேண்டும்.

இதை 'நான்கு வருஷ அரிப்பு!’ என்கிறார்கள். மேற்கத்திய நாகரிகத்தில் (கொஞ்சம் கொஞ்ச மாகஇந்தியாவிலும்) இந்த நான்கு வருஷத்துக்குப் பின்தான் இல்வாழ்வில் முதல் அலுப்புகள்தோன்றுகின்றன. நாலாவது வருஷத்தில்தான் விவாகரத்துக்கள் அதிகரிக்கின்றன. ஆதலால்,கல்யாணமாகி நாலு வருஷத்தை நெருங்குபவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். இன்னும் நாலுவருஷத்துக்குக் காதல் தாங்குமா? சொல்வது நானில்லை, விஞ்ஞானம்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5 சதம் ஜீவராசிகளுக்குத்தானாம்! மனிதர்களிடம்'பொதுவாக ஒருத்தி, சிலவேளை மற்றொருத்தி’ என்கிற கொள்கையைத்தான் பெரும்பாலும்கடைப்பிடிக்கிறார்கள். இந்தச் சிலவேளை மற்றொருத்திக்குக் காரணம். ஜீன்களின் புதியசேர்க்கைகளை முயன்று பார்த்து அடுத்த தலைமுறைக்குக் கொஞ்சம் அதிகச் சிறப்பானபிரஜைகளை உண்டாக்கும் தேவை என்கிறார்கள்! அதேபோல், ஆதிகாலத்துப் பெண்மணிகள்அவ்வப்போது பரபுருஷனுடன் புதர்களில் மறைந்தது, மனித இனத்தின் வேறுபாடுகளை, புதியசாத்தியக்கூறுகளை முயல்வதற்கே என்கிறார்கள்!

இதனுடன் உங்களுக்கு உடன்பாடோ... இல்லையோ, காதல் என்பது ஏற்படும்போது உடம்பில்நிகழும் மாற்றங்கள் எல்லோருக்கும் பொது. காதல் என்பது என்னை வெள்ளம் போல் அடித்துச்செல்கிறது என்னும்போது தம்முள் வெள்ளம்போல் ரசாயனப் பொருள்கள் பிரசவிப்பதைக்கண்டிருக்கிறார்கள்.

கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது ஒரு நறுமணம். ஒரு மெல்லிய மிகமெல்லிய ஸ்பரிசம் போதும் மூளையில் இருந்து ரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள்பாய்கின்றன... விளைவு-கை ஈரம், மேல்மூச்சு, காதலும் பதற்றமும் ஒன்றுபோல் அறிந்தார்.காரணம் - ஒரே கெமிக்கல்கள்! எல்லாவற்றுக்கும் மேல் பரவசம்! உற்சாகம்! உலகமேஅலம்பிவிட்டாற்போல் வியப்பு. காரணம், அம்ப்தோ மின்கள், இவற்றில் டோப்பாமின்,நோரெபின்ஃப்ரைன் குறிப்பாக, ஃபினைல் எத்தில் அமின் போன்ற வஸ்துகள்தான் அத்தனை'கிக்’குக்கும் காரணம்.

''காதல் என்பது இயற்கை தரும் போதை!'' என்கிறார் அந்தொனி வால்ஷ்.

போகப்போக இந்த எதில் அமின்கள் பழகிப்போக... ஒரு வாரத்துக்குப் பின் காதலியைத் தொட்டால்மட்டும் போதாது, கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது.படுக்கைக்கு அருகே செல்ல வேண்டியுள்ளது. இதெல்லாம் சுலபமாகக் கிடைத்துவிட்டால், வேறுநபரிடம் காதல் செய்தால்தான் மீண்டும் இந்த ரசாயனங்கள் சுரக்கின்றனவாம். இருந்தும் பலகாதல்கள் வருஷக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம்? வேறு வகை கெமிக்கல்கள். மூளையில்என்டார்ஃபின் என்ற மற்றொரு சமாசாரம் சுரந்து காதலை நீடிக்கவைக்கிறதாம்.

''முதல் காதல் என்பது ஒருத்தர் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைக் காதலிப்பது!''

''முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது!'' என்கிறார்கள்.

ஆக்ஸிடோஸின் என்னும் பொருள்கூடக் காதலுக்குக் காரணம் என்கிறார்கள். நரம்பை நிரடி,தசைகளைச் சுருக்குகிறது, விளைவு - காதல்! பெண்களிடம் இதே 'டோஸின்’ யூட்டிரஸ் சுருங்கவும்,முலைப்பால் சுரக்கவும் பயன்படுமாம். குழந்தையைக் கொஞ்சவும் இதுதான் காரணமாம். இதேகெமிக்கல்தான் காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறதாம். ஆண்-பெண் சேர்க்கையின்போதுஇருவர் உடலிலும் ஆக்ஸிடோஸின் அளவு மூன்றில் இருந்து ஐந்து பங்கு அதிகரித்து...உச்சகட்டத்தில் மத்தாப்பு வாணவேடிக்கைகள் ஏற்படுவதெல்லாம் ஆக்ஸிடோஸின்! வாழ்க நண்பர்ஆக்ஸிடோஸின்! ஹோமோசெக்ஸுக்கும் ஆதார காரணம் காதல்தானாம். இதற்கு இனவிருத்தியின் வேலை இல்லை என்றாலும், காதல் உண்மையானதாம். இதற்குக் காரணம் பிறப்பின்போது ஏற்பட்ட சில பயோகெமிக்கல்ஸ் கோளாறுகள்!

''ஒரு வகை புன்னகை, ஒரு வகை முகம்...''

ஆண்கள் ஏன் சீக்கிரம் காதல் வசப்படுகிறார்கள்? இதற்கும் பரிணாம தேவைதான் காரணம்.ஆண்கள் பெண்களிடம் (விஞ்ஞானப்படி) அதிகம் பிள்ளை பெறும் தகுதியைத்தான் முதலில்விரும்புகிறார்கள். அதனால்தான் அதிகம் பிள்ளை பெறும் வயதான 17-லிருந்து 28 வரை பெண்கள்கவர்ச்சிகரமாக இருக்கிறார்கள். ஆண்கள் பெண்களைப் பார்த்த மாத்திரம் அவள் இளமையையும்திறமையையும் உடனே கணித்துவிடுகிறார்கள். அதனால்தான் உடனடி திடீர் காதல்!

பெண்கள் அப்படியல்ல... கொஞ்சம் ஆற அமர யோசித்து, 'ஆசாமி காப்பாற்றுவானா, விசுவாசமாகஇருப்பானா?’ என்பதெல்லாம் தெரிந்தபின்தான் காதல் வசப்படுவார்கள்.

இப்படி இருந்தும் எப்படி கல்யாணியைப் பிடிக்கறது, காமாட்சியைப் பிடிப்பதில்லை? இதற்கும்விஞ்ஞானம் பதில் சொல்கிறது. ''இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்துவைத்திருக்கிறதாம். உங்கள் ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகன்அல்லது நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம்... 'தனிப்பட்ட முகம், சுருள் முடி,அழுத்தமான உதடு... தனிப்பட்ட...’ இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைக் காலத்தில் மனத்தில்உருவாகிறது. அந்த முகத்தைச் சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் காதல்!''

இதுதான் சயின்ஸ் சொல்கிறது. திருப்தியா? இல்லையா? பரவாயில்லை. நம்மில்பெரும்பாலானவர்களுக்குக் காதல் என்பது செம்புலப் பெயனீர்.

'யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.’

என்று குறுந்தொகை சொல்ல, கவிஞர் மீரா,


'உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்

திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்

உறவினர்கள் - மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயனீர் போல அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே...''


என்று தற்கால சமூகத்தை நையாண்டி செய்கிறார்.


(கட்டுரை : எழுத்தாளர் சுஜாதா).

0 comments:

 
Follow @kadaitheru