Sunday, January 22, 2012

காமம் போற்றும் பெண் கவிஞர்கள்


"எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சமிபத்தில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலைமுகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .


- அனார்

சிறுசுடரான யோனி

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

காமத்தின் பேரலையை
ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
மேலே கூடமைக்கின்றன
தூரதேசப் பறவைகள்
நட்சத்திரங்கள் புதைந்துபோன
சதுப்பு நிலத்தின்
கூதிர்கால இரவொன்றில்
இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
கொத்திக்கொண்டு பறக்கிறது
கருங்கால் நாரை
அதன் அலகில்
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.


"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??

- இன்பா

2 comments:

Keertivaasan said...

ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!
http://www.tamilhindu.com/2009/09/miracle-called-andal/

சிரிப்புசிங்காரம் said...

கவிஞர்களின் சிந்தனையே தனிதான்..பொதுவாக கவிஞர்கள்(ஆண்கள் ) பெண்களை பற்றியே எழுதுவர்,பெரும்பாலும் தன் இனம்(ஆண்கள்)பற்றி எழுதுவது இல்லை.பெண் கவிஞர்கள் பெண்கள் பற்றி அதுவும் காமம் பற்றி எழுதுவது அவ்ர்களின் துணிவை,விரிந்த சிந்தனையைக் காட்டுகிறது.வாழ்க

 
Follow @kadaitheru