Sunday, January 29, 2012

'ஒய் தி கொலைவெறி' - ஒரு ஆராய்ச்சி(?) கட்டுரை.


அபத்தமான, அர்த்தமற்ற பாட்டு என்று அதைப் பாடியவரே ஒப்புக்கொள்கிறார். என்ன ராகம்? யாருக்குத் தெரியும்? எங்கள் யாருக்கும் முறைப்படி இசைப் பயிற்சி இல்லை என்கிறார் வெள்ளையாக சிரித்தபடி.

மெட்டை ஒரு இளைஞன் போட்டான், அதற்கு இசைவாக மனத்தில் தோன்றிய வார்த்தைகளையெல்லாம் கல்லூரி மாணவர்கள் பேசுவதுபோல ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்லிஷில் ஒரு காதல் பாடல்.

தாபம் நிறைந்த பாடல். காதலியால் ஏமாற்றப்பட்ட காதலன். கையிலே க்ளாஸூ, க்ளாஸ்லே ஸ்காட்ச்சு என்று அலைபவன். வார்த்தைகள் முக்கியமில்லை. மொழியும் முக்கியமில்லை. மெட்டும் ஒலியும் தாளமுமே போதும், உலக இளைஞர்களை இணைக்க. விளையாட்டாக உருவான ஒரு பாடல் உலகெங்கும் ஆட்டம் போடுகிறது.

சீனர்களையும் ஜப்பானியர்களையும் ஒய் திஸ் கொலைவேறி டீ என்று பாடவைக்கிறது. யூ ட்யூபில் லட்சக்கணக்கானவர்கள் வயது பேதமில்லாமல் அதை டவுன் லோட் செய்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அமிதாப்பச்சனும் க்ரிக்கெட் வீரர்களும் அதைப் பாராட்டுகிறார்கள். இசை அமைத்த இளைஞர்கள் இதன் வெற்றி எங்களுக்கே ஆச்சரியம் என்று அவை அடக்கத்துடன் சிரிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆங்கில சானலும் அவர்களைப் பேட்டி எடுக்கும்போது அழகான ஆங்கிலத்தில் புத்திசாலித்தனமாக, கொஞ்சமும் பாசாங்குத்தனம் இல்லாமல் அமரிக்கையாகப் பேசுகிறார்கள்.

ஜாவேத் அக்தர் போன்ற ஆசார சீலர்கள், இது இசைக்கு நேர்ந்த இழுக்கு. இசையமைப்பாளர்களுக்கு அவமதிப்பு என்கிறார். இத்தனை அபத்தமான ஒரு பாடலைத் தான் கேட்டதே இல்லை என்கிறார்.

பள்ளியில் ஆசிரியை வராத சமயத்தில் சிறுவர் சிறுமியர் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு இருப்பதாக ஆசிரியைகள் கவலைப்படுகிறார்கள். இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டிக்கிறார்கள். கொலைவெறி என்கிற சொல் அவர்களை அச்சுறுத்துகிறது. குழந்தைகளுக்கு அதன் அர்த்தம்கூட தெரிந்திராது.

எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இது கிட்டத்தட்ட தாலிபான் கண்ணோட்டம். இசை யாருக்கு சொந்தம்? கவித்துவம் மிக்க வார்த்தைகளே இசைக்கு உகந்தவை என்பதும் குழந்தைகளுக்கு நீதி புகட்டும் இசையே கற்பிக்கப்படவேண்டும் என்பதும் ஒரு வகையில் அடிப்படைவாதம்.

ஜேக் அண்ட் ஜில் பாடலுக்கு என்ன அர்த்தம்? அதைப் பாடுவதால் சிறுவர்களின் அறிவு எந்த வகையில் விசாலமாகும்? இங்கிலி பிங்கிலி மைனமோவுக்கு என்ன அர்த்தம்? மெட்டும் தாளமுமே பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து செவிப்புலன்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவை. மனித மனத்தை இளக்குபவை. சமத்துவ உணர்வை சிலிர்த்தெழுப்புபவை. பீட்டில்ஸ் அலை எழுந்தபோதும் மைக்கேல் ஜாக்ஸன் வெறியூட்டியபோதும் இப்படித்தான் விமர்சனங்கள் எழுந்தன. கலாச்சார அழிவின் சின்னங்கள் என்றார்கள்.

ஒய் திஸ் கொலைவெறி ஓர் அர்த்தமற்ற அபத்தப் பாடல் - சந்தேகமில்லை. ஆனால் வெளிப்பட்ட விநாடியிலிருந்து மொழி புரியாத லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இசைக்கு மொழியில்லை. எல்லைகள் இல்லை. வரம்புகள் இல்லை. இலக்கணம் கூட இல்லை. அபத்தமோ, பிதற்றலோ அதை ரசித்து வெள்ளை மனத்தோடு எல்லோரும் தாளம் போடுகிறார்கள் என்றால் அதை விமர்சிக்கும் தகுதி நமக்கு இல்லை.

இப்படிப்பட்ட ஒரு தெனாவட்டான ஒரு பாடல் எப்படி உலக மாந்தர்களை இணைத்திருக்கிறது என்று எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. கட்டுகளைத் தளர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளமாகிவிட்டது -ஒய் திஸ் கொலைவெறி டீ.

- எழுத்தாளர் வாஸந்தி. (நன்றி : உயிர்மை பதிப்பகம்)

ஒய் திஸ் கொலைவெறி டீ :


உலகம் எங்கும் இந்த பாடல் மெகா ஹிட்டாக நான் அறிந்தவரை முக்கிய காரணங்கள் பின்வருமாறு.

படம் வெளிவரும் முன்பே ' 3 ' படத்தின் பாடலாக இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட இந்த பாடல், படக்காட்சிகளாக இல்லாமல் பாடல் பதிவு செய்யும் விதத்தை காட்டிய புதுமை முயற்சி.

முழுக்க முழுக்க வசன நடையில், தங்லிஷில் எழுதப்பட்ட படால்வரிகள் மற்றும் தனுஷின் புலம்பல்தன்மை கொண்ட குரல்.

ரஜினிகாந்தின் மகள் மற்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வரியா தனுஷின் மார்கெட்டிங். இதே பாடலை நவீன் என்ற சிறுவனை வைத்து பாடல் வரிகளை கொஞ்சம் மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சென்றது போன்றவையே.

தனுஷின் போட்டியாளாரான் சிம்பு, இந்த 'கொலைவெறி' பாடலுக்கு போட்டியாக வெளியிட்ட 'லவ் ஆன்தம்' இந்த பாடலின் ஹிட்சுக்கு அருகே கூட நெருங்கவில்லை.

காரணம், 'கொலைவெறி' ப்ரோமோ பாடலாக இணையத்தில் வெளியிடப்பட்ட முதல் முயற்சி. இனி, இதே ' 3 ' கூட்டணி நினைத்தாலும் இனி 'கொலைவெறி' பாடல் போன்று இன்னொரு வெற்றியை பெற முடியாது என்பதே நிதர்சனம்.

-இன்பா

1 comments:

Jayadev Das said...

கட்டுரை டாப்பு. இந்தப் பாடலுக்கு அர்த்தமே இல்லை என்று நான் நினைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களாக நீங்கள் சொல்லியிருப்பது ஏற்கத் தக்கதாக இல்லை. உண்மையான காரணம் \\இதன் வெற்றி எங்களுக்கே ஆச்சரியம்\\ யாருக்குமே தெரியாது!! \\சிம்பு, இந்த 'கொலைவெறி' பாடலுக்கு போட்டியாக வெளியிட்ட 'லவ் ஆன்தம்' இந்த பாடலின் ஹிட்சுக்கு அருகே கூட நெருங்கவில்லை.\\ ஒய் திஸ் கொலைவெறி சிம்பு?

 
Follow @kadaitheru