Sunday, December 11, 2011

குரலைத் திருடியது யாரோ?

நம் நாட்டில் நீதிமன்றம் தரும் சில தீர்ப்புகள் பெரும் விவாததிற்கு உள்ளாகி விடும். அப்படி, கடந்த நவம்பரில் வெளியான ஒரு தீர்ப்பு இஸ்லாமிய சமுகத்தில் விவாதத்திற்கும், கவனத்திற்கும் உரியதாக இருக்கிறது.


கவிஞர் ரசூல் - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த இவர் தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பெரிதும் கவனிக்கபட்டு வருபவர். இஸ்லாமிய சமுகத்தை விமர்சிப்பதாக இவர் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி, இவரது ஊரில் உள்ள முஸ்லீம்களை கட்டுபடுத்தும் ஜமாஅத், இவருக்கு பதவா என்னும் தடை விதித்து ஊர் விளக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து ரசூல் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றம் ஜமாத்தின் தடை மனித உரிமை மீறல் என்று அறிவித்து, அந்த தடையை நீக்கி விட்டது.

இதை குறித்து இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த எழுத்தாளர் களந்தை பீர்முகமது அவர்களின் கருத்துக்களை கிழே கொடுத்துள்ளேன்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நாகர்கோவில் ஏசுசபை குழுவால் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் குடியும் குடிப்பழக்கமும் என்னும் பொதுத் தலைப்பின் கீழ், இஸ்லாத்தில் குடிசார்ந்த இனங்கள் என்று கட்டுரை எழுதப்பட ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, ‘இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்’ என்னும் தலைப்பில் உயிர்மை இதழில் பிரசுரமானது. அந்தக் கட்டுரையை எழுத அவர் இணையதளம் உள்ளிட்ட பலவழிகளிலும் முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகளைத் தேடி வாசித்து, அவற்றின் குறிப்புகளைக் கையாண்டு தன் பணியை நிறைவேற்றியிருந்தார். அக்கட்டுரையை எழுதியதற்காகத் தக்கலை அபீமுஅ ஜமாத் கவிஞர் ரசூலை காஃபிர் (இறை மறுப்பாளர்) ஆக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவரிடம் விளக்கம் கேட்டது.

28.05.2007 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்டுரைக்கான விளக்கத்தை அளித்தார் ரசூல். அந்த விளக்கத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என்று ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார்; அவரும் அவ்வாறே எழுத்துபூர்வமான விளக்கத்தை அளித்தார். முஸ்லிம் சட்டத்திற்கோ இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கோ எதிராக அந்தக் கட்டுரையில் எதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஜமாத்தின் பிடிவாதம் தளரவில்லை. அவர் அந்தக் கட்டுரையை எழுதியதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவே கருதியது. இதைச் சரிசெய்ய அவர் ‘கலிமா’ என்னும் இஸ்லாமிய உறுதியேற்பைச் செய்ய வேண்டுமென்று கூறியது. அவர் அதையும் செய்தார். ஜமாத்தோ தன் நிலையிலிருந்து கீழிறங்க மறுத்தது. ரசூலை காஃபிர் என்று அறிவிப்பதன் மூலமே அவர்களுடைய அதிகாரத்தின் பசி அடங்குவதாக இருந்தது. இஸ்லாத்தின் உள்ளே ஒருவர் நுழைவதற்கான புதிய விதிகளைத் தக்கலை அபீஅமு ஜமாத் தனக்குள் தானாகவே உருவாக்கிக்கொண்டிருந்திருக்கலாம். இவ்வாறாக ரசூல் காஃபிர் ஆனார்.

காஃபிர் என்பது அல்லாஹ்வை மறுப்பவர் அல்லது ஏற்றுக்கொள்ளாதவர் என்ற மேலோட்டமான அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை. ஒருவர் காஃபிர் என்று அறிவிக்கப்படுவதன் மூலம் முதலில் அவருக்கும் அவர் மனைவிக்குமான ‘மணஉறவு’ தானாகவே முறிந்துவிடுகிறது. ‘அவர்’ பெற்றெடுத்த குழந்தைகள் அவருடையவை அல்ல. ‘அவர்’ தன் தந்தைவழிச் சொத்துகளின் மீது உரிமையற்றவர். அவரது ஜமாத் உறவுகள் முழுவதும் துண்டிக்கப்படும். அவர் பிறர் வீட்டு பிறப்பு - இறப்பு வைபவங்களில் கலந்துகொள்ள முடியாது. ஜமாத்தின் எல்லைக்குள் அவர் இருப்பதால் மற்றவர்களும் அவருடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வர உரிமை கிடையாது. (ஆனால் காஃபிர் என்பவர் தன்வீட்டு வைபவமாக எதையும் நடத்த முடியாது என்பதே உண்மை) மகளின் திருமணத்தை நடத்த முடியாதபடி அனைத்துவிதமான தடை நடவடிக்கைகளும் இந்தக் காஃபிர் என்ற அறிவிப்பின் மூலம் வந்துவிடுகின்றன. (கோர்ட் விசாரணையின்போது இதைப் பிரதிவாதிகளின் சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்)

இவ்வளவு பெரிய அடக்குமுறைகளை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாது. சமய ஒற்றுமையையும் சமூக வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ரசூல் கலிமாவைச் சொன்ன பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. ரசூலுடன் அவர் மனைவி மக்களும் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். இதனால் தன் உரிமைகளை நிலைநாட்ட பத்மனாபபுரம் உரிமையியல் கோர்ட்டை ரசூல் அணுகினார்.

ரசூல் காஃபிர் என அறிவிக்கப்பட்டதும் ஊர்விலக்கம் செய்யப்பட்டதும் எழுத்துபூர்வமாக அவருக்குத் தரப்படவில்லை. ரசூல் அபீமுஅ ஜமாத்தின் துணைத் தலைவராக இருந்த நிலையிலேயே இந்த அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜமாத் என்னும் அடிப்படையின் கீழ் ஜமாத் நிர்வாகிகள் அனை வரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் அதன் மேற்பார்வையில் இருப்பவர்கள். வக்ஃப் வாரியத்தின் எந்தவொரு சட்டப் பிரிவும் ஒரு முஸ்லிமைக் காஃபிர் ஆக அறிவிக்க அதிகாரம் அளிக்கவில்லை.

ஆனால் தக்கலை அபீமுஅ ஜமாத் தனக்குத் தானே வெவ்வேறு விதமான அதிகாரங்களைக் கற்பனை செய்து கொண்டு மனித உரிமைகளுக்குப் புறம்பான நிலையில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தனக்கும் ஒரு சமூக வாழ்க்கையும் சமூக உறவும் உள்ளது என்பதையோ தன்னுடைய இஸ்லாமியப் புரிதல் பரிகாசத்திற்கு உள்ளாகும் என்பதையோ உணர மறுத்தபடியே ஜமாத் இருந்தது. ரசூலைத் தண்டிக்க வேண்டும் என்பது அவர்கள் ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிட்ட ‘தீர்ப்பாக’ இருந்திருக்கிறது. பின்பே விசாரணையை நாடகமாக நடித்துள்ளனர்.

அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இப்போது ரசூலுக்குச் சாதகமாக வந்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதமாகியும் அபீமுஅ ஜமாத் ரசூல்மீதான ஊர்விலக்க உத்தரவையும் காஃபிர் என்ற அறிவிப்பையும் ரத்துசெய்யவில்லை. அதற்கான எண்ணங்களும் ஜமாத்திற்கு இல்லை. இருதரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடித்துவிட விரும்பி மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கும் இதுவரையில் பலனெதுவும் கிட்டவில்லை.

ரசூலின் மீதான ஏதோ தனிப்பட்ட பகைமைக்குப் பழிதீர்ப்பதாக இருந்தால், அவரை இஸ்லாமிய விரோதக் கட்டுரையாளர் என்று காட்டுவதன் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்னும் ராஜதந்திரம் தக்கலை அபீமுஅ ஜமாத்திற்கு நிறையவே இருக்கக்கூடும். புகழ்பெற்ற ஜமாத்தின் நிர்வாகிகளாகவே இருப்பதனாலேயே, இஸ்லாத்தில் கற்றுத்துறைபோகிய ஞானிகளாக விளம்பரம்பெற அவர்கள் விரும்புகிறார்கள். ஜமாத் நிர்வாகம் வேறு, இஸ்லாமிய ஞானம் வேறு இரண்டுக்கும் இடையே தொடர்புகள் இல்லை.

வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வெளியுலகம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியப் போர்வையின் கீழே இரும்புக்கரம் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளை ஆண்டுகொண்டிருந்த முஸ்லிம் சர்வாதிகாரிகள் எல்லாம் இன்று இலவம் பஞ்சுகளாக ஊதித் தள்ளப்படும் சூழலில், இஸ்லாமும் முஸ்லிம் ஜமாத்துகளும் எந்தப் புள்ளியில் தங்கள் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எனவே கோர்ட்டின் வாசகங்களின் கீழே தக்கலை அபீமுஅ ஜமாத்தின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பது அவசியமானது.

இந்த வழக்கின் மிகவும் ருசிகரமான அம்சங்களில் ஒன்று, ஜமாத் தான் ஒளிந்துகொள்வதற்குச் சரியான இடமின்றி ஓடியலைந்த கதை. ஜமாத் நடவடிக்கைகளால் ரசூல்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அது அவரின் குடும்பத்தின் மீதும் பாதிப்பை உண்டாக்கியது. எனவே கோர்ட்டை அணுகினார். ஆனால் அபீமுஅ ஜமாத், பை-லாவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தனக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தப் பிரச்சினை வக்ஃப் சம்பந்தப்பட்டுள்ளதால் வக்ஃப் டிரிப்யூனலுக்கு மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டென்றும் இந்தக் கோர்ட்டிற்கு அந்த வழக்கை விசாரிக்க உரிமையில்லை என்பதால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுடென்றும் கோரியது. ஆனால் வக்ஃப் வாரியம் இந்த விசயத்தில் வெகு ஆக்கபூர்வமாகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கருத்தில் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.


வக்ஃப் வாரியத்தின் அதிகாரமே கூடும் என்று குறிப்பிட்டவர்கள் அதற்கும் பணிய மறுத்தது ஏன்? எனவேதான் “பிரதிவாதிகள் செயல்பட்டுள்ளதைப் பார்க்கும்போது வாதியின் மேலுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே வாதிக்கு எதிராகப் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தை மிஞ்சிய இஸ்லாமிய விசுவாசிகள்?

மேலும் ஜமாத் தன் செயலை ஊர்விலக்கம், காஃபிர் என்று சொல்வதைத் தவிர்த்து ஒழுங்கு நடவடிக்கை என்று பசப்பிக்கொள்கிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையால் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் ஜமாத் சொல்கிறது. ஒரே சமுதாயத்தவர்களாக நிறைந்துள்ள தெருவில் ஒருவரின் மீது காஃபிர் பத்வாவும் ஊர்விலக்கமும் செலுத்தப்பட்டால், அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று கூறுவதைப் போன்ற ஒரு மோசடியான பொய் என்ன இருக்க முடியும்? ஒரு பெண்ணின், அவருடைய பிள்ளைகளின் துயரச் சூழலை அபாண்டமான பொய்கூறி மறைப்பதற்கு ஜமாத்திற்கு ஓர் இரும்பு இதயம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அளவற்ற அருளாளனை, நிகரற்ற அன்புடையவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளிலும் எண்ணிக்கையில் அடங்காத தொழுகைகளாகத் தொழுது வருபவர்கட்கு ‘அல்லாஹ்’வின் பெயரை உச்சரிக்க என்ன தகுதி உண்டு?

கலிமா சொல்வது, மன்னிப்புக் கேட்பது, வக்ஃப் வாரியத்திற்குக் கட்டுப்படுவது என்று ஜமாத், வாதிக்கு அடுத்தடுத்துத் தடைகளை உண்டாக்கியபோதும் வாதி எல்லாவற்றையும் செய்தே வந்திருக்கிறார். ஆனால் ஜமாத்திற்குத்தான் தன் கோட்பாடுகளைத் தன்னாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது. எனவே இதில் இருக்கும் காரணம் இஸ்லாமிய விரோதம் அல்ல. ஜமாத்தின் சொந்த மனசாட்சிக்கே எதிரான விரோதம்தான் இப்போது முழுமையாகி நிற்கிறது.

உரிமைகளைப் பறிப்பது, ஊர் விலக்கம் செய்வது என்பதை இந்த நாள்களிலும் ஜமாத் நிர்வாகங்கள் கையிலெடுப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் மென் மேலும் நெருக்கடிகளே. இவற்றில் செயல்படுவது இஸ்லாமியப் பற்று அல்ல. இவையெல்லாம் ஒருவிதமான அதிகாரத்தின் சாமியாட்டம். எந்த ஒரு மதத்தின் வாழ்க்கை நெறியையும் முழுதாகப் பின்பற்றி வாழும்படியாக உலக நடைமுறைகள் இல்லை. முடியக்கூடிய, கடைப் பிடிக்கக் கூடிய கொள்கைகளிலும் மதச் சுத்தவான்களாக இங்கே எவரும் நடமாடவில்லை. அபீமுஅ ஜமாத்தருக்கும் இதுதான் உண்மை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறோம்.

அவர்களின் ஆட்சேபத்திற்குரிய கட்டுரையை ரசூல் தன் கருத்துகளால் நிரப்பவில்லை. மிகத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளையே அவர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். இவர்களின் இஸ்லாமிய அறிவை எந்த ஊன்று கம்பைக் கொண்டு தாண்டிவந்திருக்கிறது தக்கலை அபீமுஅ ஜமாத்? ஒருவேளை இந்த வழக்கைப் பிரதிவாதிகள் மேல்முறையீட்டுக்கும் கொண்டுசென்றால், இன்னும் அதிக அதிகாரங்கள் கொண்ட கோர்ட்டுகளால் அபீமுஅ ஜமாத் கடும்கண்டனங்களுக்கு உள்ளாக நேரிடலாம்.

ரசூல் தன்வாழ்வில் இதுவரை ஒரு துளி மதுவும் அருந்தவில்லை என்கிறார். இதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் முஸ்லிம்கள் காணப்படுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடைமுறையில் செயல்படுத்துவோருக்கு இங்கே தண்டனைகள் இல்லை. ஆனால் ஆய்வுரீதியாக ஒன்றைச் சொன்னால் தண்டனை. முஸ்லிம் சமுதாயம் சுற்றுப்புறங்கள் சூழ வாழ்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சுற்றியும் பல சூழல்கள் உள்ளன. டாஸ்மாக்கை எதிர்க்கிறோம்; டாஸ்மாக்கைக் கொண்டுவந்த ஆட்சியை, கட்சியை ஆதரிக்கிறோம்! இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள முடியாத ஜமாத்கள், சமூகத்தின் சுமைகள். அவர்களைச் சுமந்து வழிநடக்கும் நாமும் கீழே விழுவோம். ஜமாத்காரம் கீழே விழுந்து நொறுங்கும்!

மாநில உலமா சபை இதில் காட்டும் மௌனத்தைப் புரியவழியில்லை. அது உடனே செயல்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்மீதான அதன் அக்கறையே இவ்வழக்குகளின் கைவிளக்கு! கருத்து வெளிப்பாட்டு உரிமையை உணர்ச்சிமயமான மனிதர்கள் எப் போதும் தடுத்தபடியே இருக்கிறார்கள். இனிமேலும் உலமா சபை நேரிய வழிகாட்ட முயற்சி எடுக்கட்டும்; அவ்வாறு நடக்கவில்லையென்றால் தீராப்பழி வரும்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும்! ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாய் இருந்தால் அது அவன் மனத்திற்கும் இறைநிலைக்கும் உள்ள நேரடி உறவாகத்தானே இருக்க முடியும்? அந்த உறவுகளையெல்லாம் தடுத்தவிடக்கூடிய கைவிலங்குகளை - கால்விலங்குகளைத் தக்கலை ஜமாத்தாரால் தயாரித்துவிட முடியுமா, என்ன?

என்கிறார் களந்தை பீர்முகமது.


மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகிவழிய
ஒரு மாயவனத்தின்
வரிகளுக்குள் கடல்.

உன் இசை நதியில் மிதந்துவந்ததொரு
குழந்தை
உடல்சுழி உயிர்தொட்டு
கன்னத்தில் முத்தமிட்டு
பின் திரும்பிச் செல்கிறது
மற்றுமொரு பூவாய்.

குரலைத் திருடியது யாரோ
பாட மறுத்தது பொம்மை ஒன்று.

வீட்டிற்குள் நடந்த பூகம்பத்தை
அக்கறையோடு விசாரிக்கிறது
முற்றத்தில் நட்டுவைத்த ரோஜாச் செடி.

- ஹெச்.ஜி.ரசூல்

ரசூல் அவர்களுக்கு ஆதரவான இந்த சிறப்புமிக்க நீதிமன்ற தீர்ப்பு,இஸ்லாமிய படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதுடன்,ஜமாஅத் போன்று மதத்தின் பெயரால் செயப்படும் கட்ட பஞ்சாயத்துக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது.

-இன்பா

1 comments:

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

 
Follow @kadaitheru