எனது பள்ளி நாட்களில் நான் விரும்பி வாசிப்பது சினிமா பாட்டு புத்தகங்களைத்தான். அதுவும், டி.ராஜேந்தர் படங்களின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 'மைதிலி என்னை காதலி' . மேலும், வைதேகி காத்திருந்தாள்,இதய கோவில் போன்ற படங்களின் பாட்டு புத்தகங்களையும் நான் அடிக்கடி படிக்கும் வழக்கம் கொண்டு இருந்தேன்.
இன்றும் பள்ளியில் படிக்கும் பெண்கள் விஜய் மற்றும் சூர்யா நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை சாலையோர கடைகளில் வாங்குவதை கண்டு இருக்கறேன்.
தியடோர் பாஸ்கரன் , அவர்கள் சினிமா பாட்டு புத்தகங்கள் பற்றி ஆற்றிய ஒரு கருத்துரை இங்கே...
‘சினிமாவின் எந்தப் பரிமாணத்தைப் பற்றிப் பேச முயன்றாலும் அது நம்மை சினிமா அழகியலுக்கு இட்டுச் செல்லும். அதாவது சினிமா எனும் ஊடகத்தின் இயல்புகள், சாத்தியக்கூறுகள், நியதிகள், கோட்பாடுகள், தனித்துவங்கள் இவை கண்டிப்பாகப் பேசப்பட வேண்டும். அந்தப் பகைப்புலத்தில்தான் நாம் சினிமாவின் வெவ்வேறு கூறுகளையும் புரிந்துகொள்ள முடியும். சினிமாவின் அடிப்படை இயல்பு என்ன? காட்சிப் படிமங்கள். இவை பற்றிப் பேச வேண்டும்.
தமிழ் பேசும்படம் தோன்றியது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ் சினிமாக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக சினிமா பாட்டுப் புத்தகம் நிலைத்திருந்தது. எந்த அரங்குகளில் தமிழ்ப் படம் திரையிடப்பட்டதோ அங்கே இந்தச் சிறு அச்சுப் பிரதியும் தனது இருப்பை அறிமுகப்படுத்திக்கொண்டது. அரங்குகளில் இடை வேளையில் ‘பாட்டுப் புஸ்தகேம்’ என்ற அறைகூவல் கேட்டது. முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் (1931) திரையிடப்பட்டபோது அங்கே இந்தச் சிறு வெளியீடும் தோன்றிவிட்டது. கடைசியாக நான் பார்த்த பாட்டுப் புத்தகம் மணிரத்தினத்தின் திருடா . . . திருடா (1992) படத்தின் ஒலிப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த பாட்டுப் புத்தகம்தான்.
தொடக்க காலத் தமிழ் சினிமாவின் பல கூறுகள் அதற்கு முந்தைய நிகழ் கலைகள் சிலவற்றிலிருந்து உள் வாங்கிக்கொள்ளப்பட்டவை. பாடல்களைச் சிறு புத்தகங்களாகப் பதிப்பிக்கும் மரபு கிராமபோன் தட்டுகள் வெளியிடப்பட்ட காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இது கிராம போன் சார்ந்த ஒரு வணிக முயற்சியாக அமைந்திருந்தது. ஆனால் சினிமாப் பாட்டுப் புத்தகத்தின் முன்னோடி சென்னையிலிருந்து வெளியான குஜிலிக்கடை பாட்டுப் புத்தகங்கள்தான்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழகத்தில் நாட்டுப்பாடல்கள், கதைப்பாடல்கள் அச்சிடப்பட்டு எட்டு அல்லது பத்துப் பக்கங்கள் கொண்ட சிறு புத்தகங்களாகக் காலணா அரையணா வெளியீடுகளாக வந்தன. (காண்க: ஆ.இரா. வேங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம்) சைனா பஜாருக்கு அருகில் இருந்த ‘தீவிங் பஜார்’ என்றறியப்பட்ட ஒரு தெருவில்தான் இந்த அச்சகங்கள் இருந்தன. மு. மாதவய்யா அவர்கள்தான் அன்று முனிசிபல் கமிஷனராக இருந்த தனது நண்பர் மலோனி துரைக்கு எழுதி அத்தெருவின் பெயரைக் குஜிலித்தெரு என்று மாற்றச் செய்தார். அதன் பின்னர் இந்தப் பாட்டுப் புத்தகங்களுக்குக் ‘குஜிலிக்கடை புத்தகங்கள்’ என்று பெயர். இந்த வெளியீடுகளின் ஒரு புது அவதாரமே சினிமாப் பாட்டுப் புத்தகம்.
முதல் தமிழ் பேசும்படமான காளிதாஸ் பாட்டுப் புத்தகம் விலை காலணாதான். Kalidas - Song and story book என்று ஆங்கிலத்திலும் அட்டையில் தலைப்பு இருந்தது. இந்தப் படத்தில் ஏறக்குறைய ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதனால்தான் இந்தப் படத்தை விமர்சித்த கல்கி, ‘இது தமிழ் டாக்கி அல்ல . . . தமிழ் பாட்டி’ என்று எழுதினார். அறுபதுகள்வரை தயாரிப்பு நிறுவனங்களே பாட்டுப் புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டன. படத்தை உருவாக்கியவர்கள் பட்டியல், கதைச்சுருக்கம், பின்னர் பாடல்கள், விளம்பரங்கள் என ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசை அமைத்தவர் போன்ற பாடல் சம்பந்தப்பட்ட பல விவரங்களும் தரப்பட்டன. சில படங்களின் பாட்டுப் புத்தகங்களில் பாட்டு வரும் காட்சியும் விவரிக்கப்பட்டிருந்தது. ‘கணவன் இன்றாவது வரமாட்டாரா என்று கல்யாணி கடவுளைப் பிரார்த்திக்கின்றாள்.’ என்பது போல. அல்லது ‘ரேடியோ பாட்டு’ என்றிருக்கும்.
படங்களுக்கு விளம்பரமாகவும் இயங்கின இந்தப் புத்தகங்கள். சில வெளியீடுகள் கண்ணைக்கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பாட்டுப் புத்தகம் இதய வடிவில் இருந்தது. மற்றொன்று ஒரு அம்பு வடிவில் வந்தது. பளபளக்கும் ஆர்ட் காகிதத்தில் பல நிலைப்படங்களுடன் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. சில பதிப்புகளில் பல விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தன. அந்தப் படத்தின் பாடல்கள் கொண்ட கிராமபோன் தட்டுகளின் விளம்பரம். அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படங்கள், அந்தப் பட வினியோகஸ்தர் வெளியிடும் படத்தின் விளம்பரம் இவையும் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. சில சமயம் இது ஒரு இந்திப் படத்தின் விளம்பரமாகவும் இருக்கலாம். சரஸ்வதி ஸ்டோர்ஸ் தனது கிராமபோன் தட்டுகளை, உரிய எண்களுடன் இப்புத்தகங்களில் விளம்பரப்படுத்தியது. சினிமாவிற்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத தேயிலை, ஆடைகள் சார்ந்த விளம்பரங்களையும் சில சமயம் காண முடிகின்றது.
சில பாட்டுப் புத்தகங்களில் கதைச்சுருக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது. இந்தப் பகுதி சராசரியாக ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் நீண்டிருந்தன. துக்காராம் படப் பாட்டுப் புத்தகத்தில் கதைச் சுருக்கம் 6 பக்கங்கள் இருந்தது. திகம்பரசாமியார் என்ற திரைப் படத்தின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் முடிவில் சில கேள்விகள். ‘வடிவாம்பாளை தன் தம்பிக்கு மணமுடிக்க சட்டநாதன் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்? திகம்பரசாமியார் யார்? திருட்டுப் போன குழந்தை திரும்பக் கிடைத்ததா? அலங்காரத்தின் கதி என்ன?’ இவற்றிற்கு விடை வெள்ளித் திரையில் காண்க. . . சில சமயம் ஒரு படத்தின் முக்கியக் கருத்து கதைச்சுருக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வானரதம் என்ற படத்தின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் கடைசி வரி ‘அதிகாரத்தால் அன்பைப் பெற முயற்சி செய்தாள் ஒரு ராணி. முடிந்ததா?’ 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி படப் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தின் முடிவில் உள்ள பல கேள்விகளில் ஒன்று ‘சுதாமதி என்ன கதி?’
கர்நாடக இசையை சாமான்ய மக்களிடையே பரப்பியதில் திரைப் படங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. ஒரு பாட்டு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு, 78 Rpm கிராபோன் தட்டின் ஓட்ட நேரத்திற்கு ஏற்ப, குறைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. செவ்வியல் இசைக்கு வெகுதூரத்தில் இருந்த மக்கள் இந்தப் பாடல்களைக் கேட்க, பாட ஆரம்பித்தனர். இந்த ஜனநாயக இசை இயக்கத்திற்குப் பாட்டுப் புத்தகம் ஊன்றுகோலாக அமைந்தது. பாட்டைப் பாடியவர், எழுதியவர் இவர்களுடைய பெயர்களுடன் பாட்டின் ராகம், தாளம் இவை குறிப்பிடப்பட்டிருக்கும்; ராகம்: பிலஹரி தாளம்; திஸ்ரம் என்பது போல. பல்லவி, அனுபல்லவி சரணம் எனப் பகுதிகள்படி பாடல்கள் அச்சிடப்பட்டிருந்தன. தமிழ் பேசும்படத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பாட்டை எழுதியவரே இசையையும் அமைத்தார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். பாஸ்கரதாஸ், பாபநாசம் சிவன் போல. ஒருவர் மட்டுமே ஒரு படம் முழுவதிற்கும் இசை அமைக்கும் வழக்கம் நிலைகொண்டது நாற்பதுகளின் பிற்பாதியில்தான்.
சமகாலப் பத்திரிகைகளைக் காணும்போது நமது சினிமா கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, மக்களுடன் நெருங்கிய ஒரு கலாச்சாரக்கூறாகப் பாட்டுப் புத்தகம் இருந்திருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது. கதைச்சுருக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதற்குப் பதிலாக, தமிழிலும் தெலுங்கிலும் இருக்க வேண்டுமென ஒரு வாசகர் எழுதியிருக்கின்றார். பாடல்களின் ராகங்களையும் மெட்டுகளையும் சில தயாரிப்பாளர்கள் அச்சிடுவதில்லை என்று மற்றொரு வாசகர் குறைப்பட்டுக்கொள்கின்றார்.
திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் பட்டியல் முழுமையாக இருப்பதில்லை என்று ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்தப் புத்தகங்களை வாங்கி பைன்ட் செய்து பாதுகாத்து வைப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஒரு பழக்கமாக இருந்திருக்கின்றது. திருநெல்வேலி சந்திப்பில், ஒரு சாலையோர பழைய புத்தகக்கடையில் இரண்டு பைன்ட் செய்த இத்தகைய சேகரிப்புகள் எனக்குக் கிடைத்தன.
நான் சில படங்களின் பாட்டுப் புத்தகத்தில் கதைச்சுருக்கத்தைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்த்தேன். எடுத்துக்காட்டாக 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி. அப்போதுதான் கதைச்சுருக்கத்தின் மகிமையை நான் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கதைச்சுருக்கத்தைப் படித்திருக்கா விட்டால் அந்தப் படத்தின் கதை புரிந்திருக்காது. ஆரம்பகால பேசும் படங்களைப் பார்க்கும்போது காட்சிப் படிமங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளர்த்துக்கொள்ளப்படவில்லை என்று படுகின்றது. ஆகவே, எழுத்தறிவு பெற்றவர்கள் குறைவாக இருந்தாலும் படம் பார்க்கும் அனுபவத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்தக் கதைச் சுருக்கம் அமைந்திருந்தது.
காட்சிப் படிமங்கள் மூலம் கதைசொல்லும் திறனை நாம் ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை? 1916இல் கீசகவதம் என்னும் படத்தில் தொடங்கி 18 ஆண்டுகளாக இயங்கிய தமிழ் மௌனப்படக்காலத்தில் கோவலன் கண்ணகி, நல்லதங்காள் போன்ற மக்களுக்குத் தெரிந்த கதைகளே படமாக்கப்பட்டன. ஆகவே, கதையைப் பிம்பங்கள் மூலம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை. சீதைக்கு முன் தோன்றும் மான், மாரீசனின் மாயத்தோற்றமேயென்பதும் அதைத் தொடர்ந்து சீதை போவாள் என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே பிம்பங்கள் மூலம் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பல இயக்குநர்களுக்கு அன்று எழவில்லை. அதனால் சினிமா இலக்கணம், மொழி இங்கு வளரவில்லை.
புதிய கதைகளைப் படமாக்க ஆரம்பித்தபின், பிம்பங்கள் மூலம் கதை சொல்ல இயலாமையை நம் இயக்குநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்.? வார்த்தைகளால் கதையைச் சொல்கிறார்கள் ஒரு கதாபாத்திரத்தைப் பேசவைத்துக் கதையைச் சொல்லிவிடுகின்றார்கள். இந்தப் பழக்கத்தை அண்மையில் வந்த சந்திரமுகி படத்தில்கூடக் காணலாம். படத்தின் இறுதியில் கதையின் முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நீண்ட பிரசங்கமே செய்து கதையைப் பாத்திரப்பேச்சால் விளக்கும் குறுக்கு வழியை இயக்குநர் கையாள்கின்றார்.
சுதந்திரப் போராட்ட காலத்திலும், பின்னர் திராவிட இயக்க காலத்திலும், இடதுசாரியினராலும் தங்கள் கருத்தை மக்களிடையே பரப்பத் திரைப்படப் பாடல்களும் பாட்டுப் புத்தகங்களும் பயன்படுத்தப்பட்டன. மாத்ருபூமி என்னும் படத்தில் இடம்பெற்ற ‘நமது ஜென்ம பூமி நமது ஜென்ம பூமி’ என்ற நாட்டுப்பற்று சார்ந்த பாடல் பள்ளிகளில் பாடப்பட்டது. சொர்க்கவாசல் படத்தில் வந்த உடுமலை நாராயண கவி எழுதிய ‘எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம்’ பாடல் திராவிட இயக்கத்தின் நாத்திகக் கொள் கையைப் பறைசாற்றியது. உடுமலை கவிராயர் எண்பதுகள்வரை தமிழ்த் திரையுலகில் திராவிட இயக்கத்தின் குரலாக இயங்கினார். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமைக் கருத்துகளைக் ‘காடுவிளஞ் சென்ன மச்சான் நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்?’ போன்ற தன் பாடல்கள் மூலம் பரப்பினார்.
தமிழ்நாட்டில் கல்விப்புலத்தில் அண்மையில் திரையியல் ஆய்வு அதிகரித்துள்ளது. திரைப்பட வரலாறு போன்ற துறைகளில் இன்று ஒரு ஆர்வத்தை நாம் காண முடிகின்றது. ஆனால் முதல் இருபது ஆண்டுகளில் வந்த தமிழ் பேசும் படங்களில் வெகுசிலவே எஞ்சியுள்ளன. நாம் பார்ப்பதற்குப் படங்கள் கிடைக்காத நிலையில் அந்த ஆண்டுகளின் திரைப்பட வரலாறு பற்றி நமக்கிருக்கும் ஒரு முக்கிய விவரக் களஞ்சியம் பாட்டுப் புத்தகமே. அச்சுப் பிரதிகளை ஆதாரமாகவைத்துத் திரைப்பட வரலாறு எழுதுவதில் உள்ள சிக்கல்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக நந்தனார் படத்தைப் பற்றி அறிந்துகொள்ள பாட்டுப் புத்தகத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், படம் தலித் மேம்பாடு பற்றியதாகத் தோன்றும். ஆனால் படத்தைத் திரையிட்டுப் பார்த்தீர்களேயானால், காட்சிப் படிமங்கள் சொல்வது வேறாக இருக்கின்றது. சேரியைக் காட்டும்போதெல்லாம் அங்கிருக்கும் மக்கள் யாவரும் குடிபோதையிலிருப்பது போல் காட்டப்படுகின்றது. வேதியர், நந்தனார் பாத்திரங்களின் உடல்மொழி பாரம்பரிய உயர்வு தாழ்வு நோக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
சினிமா கல்விப்புலத்திலிருந்து வரும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் ஆய்வாளர்கள் சினிமா பற்றிய ஆராய்ச்சிக்குப் பாட்டுப் புத்தகங்களை ஒரு மூலாதாரமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். அவற்றில் பெருவாரியான ஆய்வுகள் சினிமாரீதியாக இருப்பதில்லை. இலக்கியரீதியில் அமைந்துவிடுகின்றது. கண்ணதாசனின் திரைப்படப் பாடல்களில் சமூக சீர்திருத்தம் என்று எழுதும்போது அது ஒரு இலக்கியம் சார்ந்த ஆய்வாகவே இருப்பதைக் காணலாம். சினிமா இலக்கியமல்லவே. தமிழ் சினிமா பற்றிய கல்விப்புல ஆய்வுகள் தமிழ்த் துறையிலிருந்துவருவதைக் கவனியுங்கள். சினிமாப் பாட்டு என்று ஆராயும்போது, ஒரு ஆய்வாளர் கேட்க வேண்டிய பல கேள்விகள் உண்டு. பாட்டு திரைப்படத்தில் எந்தக் கட்டத்தில் வருகின்றது? காட்சிப் படிமங்கள் இந்தப் பாட்டின் கருத்திற்குத் துணைபோகின்றனவா அல்லது அதை நீர்த்துப்போகச் செய்கின்றனவா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். திரை இசை ஒரு applied art. அது தனியாகக் கேட்பதற்கென்று மட்டும் உருவாக்கப்படுவதில்லை.
பாட்டுப் புத்தகம் போன்ற ஒரு அச்சுப் பிரதியை வைத்துக்கொண்டு பாடல்களை ஆராய முற்படுவதிலும் பிரச்சினைகள் உண்டு. பாட்டை அதுவரும் காட்சிப் படிமத்திலிருந்து பிரித்துப் பார்த்து ஆராய முடியாது. அப்படித் தனியாகப் பாடல்களை ஆய்விற்குட்படுத்தினால் அது சினிமா சார்ந்ததாக இல்லாமல் ஒரு இலக்கிய ஆய்வாக உருவெடுக்கும். இப்படித்தான் பல ஆய்வுகள் கல்விப்புலத்தில் இன்று நடத்தப்படுகின்றன. திரைப்பாட்டு, காட்சிப் படிமங்களுக்குத் துணைபோகத்தான் எழுதப்படுகின்றது. திரைக்கதையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்காக எழுதப்படுவது. அது ஒரு பார்க்கும்-கேட்கும் அனுபவம். நாம் திரையில் பார்க்கும் காட்சி நாம் கேட்பதையும் பாதிக்கின்றது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். . . எதனைக் கண்டான். . . மதங்களைப் படைத்தான்’ என்னும் வரிகளைப் படிக்கும்போது, திரையில் அது ஒரு இஸ்லாமிய இளைஞனால் பாடப்படுவது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அப்போதுதான் அப்பாட்டின் முழுத்தாக்கத்தை ஆய்வாளர் உணர முடியும்.
-இன்பா
1 comments:
அட....
நம்ம இன்பா.... ஃபுல் ஃபார்ம்ல திரும்பி வந்துட்டா போல இருக்கே...
தல... நாங்க எல்லாம் கூட வெளயாட்டுல இருக்கொம்ல....
Post a Comment