Sunday, June 12, 2016

'வித்தையடி நானுனக்கு' - என் பார்வையில்


என் அருமை நண்பர் லாரன்ஸ் பிரபாகர் மூலமாக எனக்கு அறிமுகமானவர் திரு.செல்வகுமார் அவர்கள்.

செல்வகுமார் சாரை சில வருடங்களுக்கு முன் வடபழனியில் சந்தித்து இருக்கிறேன். "நான் இன்பா, இட்லிவடை வலைப்பதில் சண்டேனா இரண்டு எழுதுபவன்." என்று அறிமுகம் செய்துகொண்டு அவருடன் கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபங்களில் ஒன்று.

வித்தையடி நானுக்கு பட ஸ்டில்களில் இருந்த அவர் பெயர் அந்த இனிய நினைவை கொண்டுவந்தது. அட,நம்ம செல்வா சார் என்று உரிமை கொண்டாட, நண்பர்களிடம் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தெரிந்தவர் என்று சொல்லவைத்தது.

நண்பரின் படத்தை எப்படி விமர்சிப்பது என்ற தயக்கமெல்லாம் எனக்கு இல்லை.

வித்தையடி நானுக்கு -  புதிய,வித்தியாசமான முயற்சி என்று சொல்வதற்கு இல்லை. இதைபோன்றதொரு ஐடியாவை பாலுமகேந்திரா அவர்கள் தனது "ஜூலி கணபதி" படத்தில் செய்து விட்டார்கள். 

அதில் தனது அபிமான எழுத்தாளரை சரிதா தனியாக ஒரு வீட்டில் அடைத்துவிடுவார். க்ளைமாக்சில் அதறக்கான காரணமும் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கும். வித்தையடி நானுக்கு படத்தில் இயக்குனர் நடிகையை அடைத்துவைக்கிறார்.

ஆனால் ஜூலிகணபதி படத்தில் இருக்கும் அழுத்தமும், அழகியலும் இதில் மிஸ்ஸிங்.  குறைந்த பட்ஜெட்டில் அழுத்தமான திரில்லர் என்பதற்க்கு மிகச்சரியான உதாரணம்,,,மெகாஹிட் கன்னட படமான "ரங்கிதாரங்கா".

வித்தையடி நானுக்கு - முதலில் பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டு பின்னர் அதற்கான கதையை உருவாக்கி இருக்கிறார்களோ என்று ஆரம்பத்தில் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்வதை தவிர்த்து இருக்கலாம் செல்வா சார். 

சவுரா சையத் நடிப்பு வெகு அருமை. ஷோபா, ரேவதி வரிசையில் ஒரு நடிக்க தெரிந்த நடிகை நமக்கு கிடைத்து இருக்கிறார். ராமனாதன் சார், தமிழ்சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் அருமையான ஒரு குண்சித்திர நடிகர்.

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அளவு பார்த்து கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் விவேக் நாராயணன். இன்னும் அவரின் முழுமையான இசைத்திறமைகள் தெரியுமளவுக்கு படங்கள் அவருக்கு அமையவேண்டும். 

இன்றைய காலகட்டங்களில் படத்தை எடுப்பதைவிட, அதை திரைஅரங்குகளில் ரிலிஸ் செய்வது ஒரு மிகப்பெரிய சாதனை. அதுவும் பெரிய நட்ச்சத்திரங்கள் இல்லாமல், எளியமுறையில், புதுமுகங்களை வைத்து படம் எடுத்து அதை வெளியிடுவது......கிரெட் டீம் வொர்க்.

செல்வா சாருக்கு என் பூங்கொத்து.

இன்னும்...இன்னும்...இன்னும்.... நிறைய எதிர்பார்க்கிறோம் செல்வா சார், ராமனாதன் சார் அண்ட் விவேக் சார்.

-இன்பா

Wednesday, May 4, 2016

"கபாலி" படத்தின் கதை - Exclusive FIR


சென்னையில் தனிமையில் வசிக்கும் தொழிலதிபர் கபாலிஷ்வரன். அவரது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர் தெய்வம்,

ஒரு நாள் அவருக்கு கருத்துவேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக அவரை பிரிந்து மலேசியாவில் வாழும் அவரது மனைவி ராதிகா ஆப்தேயிடம் இருந்து போன் வருகிறது. மகள் தனிஷிகாவுக்கு திருமணம். தந்தை என் கிற முறையில் அதில் கலந்துகொள்ளவதற்க்காக கோலாலம்பூர் செல்கிறார் கபாலி. அங்கே மணமகன் கலையரசனையும் சந்திக்கிறார்.



மறுபடியும் மனைவி,மகள் என இணையும் தருணத்தில், திருமணத்திற்க்கு முதல் நாள் ஒரு மர்மகும்பல் காபாலி இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்த, அதில் ராதிகா ஆப்தே கொடுரமாக கொலை செய்யபடுகிறார். மகள் தனிஷிகா கோமா நிலைக்கு செல்கிறார்.

கபாலி இதற்க்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க புறப்படுகிறார். அவருக்கு பக்கபலமாக கூடவே மகளின் காதலனான கலையரசன்.

காபாலியின் ப்ளாஷ்பேக்.

முப்பது வருடங்களுக்கு முன் மலேசியாவை ஆட்டிப்படைக்கும் தாதா காபாலி மற்றும் அவரது நண்பன் கம் பார்ட்னர் கிஷோர்.

காபாலியை கண்டு காதலில் விழுகிறார் ராதிகா ஆப்தே. இந்த காதல் காரணமாக கபாலிக்கும், கிஷோருக்கும் பிளவு ஏற்படுகிறது, ராதிகாவுடன் திருமணம்,குழந்தை என மாறும் குடும்ப வாழ்க்கையில் இறங்கும் காபாலி, தாதா தொழிலைவிட்டு விலக முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில், மலேசிய போலிசிடம் கிஷோர் சிக்கிகொள்ள, அவரது ஆட்கள் காபாலி காட்டிகொடுத்துவிட்டார் என்று அவரை அழிக்க புறப்படுகிறது.

தன்னால் தன் குடும்பத்திற்க்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதென்று, மனைவி,மகளை பிரிந்து சென்னைக்கு வந்துவிடுகிறார் காபாலி.


இத்தனை வருடங்களாக தனக்காக காத்திருந்து, தன் கண்முன்னே குடும்பத்தை கிஷோர் சீர்குலைத்துவிட்டதாக முடிவெடுத்த காபாலி, அவரை தேடி புறப்படுகிறார். இந்த வேட்டையில் மலேசியாவில் உள்ள வேறு சில தாதா கோஷ்டிகளுடன் அவர் மோத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது


தடைகளை தகர்த்து, எதிரி கிஷோரை நெருங்கும்பொது, அதிரடி திருப்பமாக மனைவியை கொலை செய்து மகளை படுத்தபடுக்கையில் ஆக்கியது கிஷோர் இல்லை, தன் கூடவே இருக்கும் கலையரசன் மற்றும் அவரது தந்தை என்ற உண்மை காபாலிக்கு தெரியவருகிறது,

அதன் பிண்ணனி என்ன? மகள் பிழைத்தாரா? காபாலி என்ன செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பரபரவென பதில் அளிக்கிறது பட்த்தின் க்ளைமாக்ஸ்.

இதுவரை சூப்பர்ஸடார் படமாக பழிவாங்கல், மாஸ், பன்ச்  வசனம், ஆக் ஷன் என்று  செல்லும் காபாலி, கடைசி பத்து நிமிடத்தில் மட்டும் மெட்றாஸ் ரஞ்சித் படமாக, ஒரு சமூக கருத்துடன் முடிவடைகிறது,



மொத்ததில் கபாலி - நிறைய மாஸ், கொஞ்சம் க்ளாஸ்

(கதை(!?!) - இன்பா)

Monday, February 29, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்


ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில்  பரிசு பெற்ற என் கவிதை


ராம்ஜி தாத்தாவை
ராயப்பேட்டை இப்ராகிம்
மூன்றாவது மாடியில் இருந்து
முதுகில் கட்டிக்கொண்டு இறங்க,
அவரை கைகளில் தாங்கி
படகில் ஏற்றுகிறார்
காசிமேடு அந்தோணி.

மதத்தை 'இடி'த்து
மனிதமாய்
பொழிந்திருக்கிறது
பெருமழை.

சுயநலத்தை
சுட்டுப்பொசுக்கிய
தீக்குளிப்பாய்..
இந்த
'மழை'க்குளிப்பு.

இங்கே
வெள்ளத்தில் இறங்கியவர்கள்
எழுந்தார்கள்
வேள்வியில் வெளிவந்தவர்களாய்.

மனிதர்களை
புனிதர்களாக்கியது
ஆகாய கங்கை.

ஆட்டுக்குட்டியை
தலையில் சுமக்கும் மனிதன்.
மனிதனை காப்பாற்றும் நாய்.
அன்பிற்கும் உண்டோ
அலைமோதும் வெள்ளம்?

எல்லாம் இருந்தும்
எதுவுமில்லா நிலையில்
எல்லாவற்றிலும் பெரிது
மனிதாபிமானமென்று
புரியவைத்தது
பெருமழையொன்று.


-இன்பா

Wednesday, February 3, 2016

கெயில் - கொலைவாளினை எடுப்போம்


தமிழகத்தின், ஏழு மாவட்டங்கள் வழியாக, 'கெய்ல்' எனப்படும், 'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' பொது துறை நிறுவனம் சார்பில், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

                                               -செய்தி


காவிரி மற்றும் முல்லை பெரியாறில் தண்ணீர் வழங்க மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு சாதகமாகவும், கெய்ல் வழக்கில், தமிழக விவசாயிகளுக்கு பாதகமாகவும்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

-அய்யாக்கண்ணு, தேசிய தென் மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்









எரிவாயு மட்டுமல்ல
தமிழகத்தின் பிராணவாயுவையும்
கொண்டுபோகும்
கெயில் திட்டம்.

விளை நிலங்களை
விலை நிலங்களாககூட
விற்க இயலாமல்
மலட்டுமேடுகளாக்க
துணைபோகும் சட்டம்.

விவசாயத்தின் நரம்புகளை
அறுக்கபோகின்றன
ராடசத குழாய்கள்.

நாட்டை ஆள்வதோடு
நீதிமன்றத்தையும்
நிர்வகிக்கும்
தனியார் நிறுவனங்கள்.

ஒரு மாநிலத்தை பலியாக்கி
இரு மாநிலங்களை வாழவைக்கும்
ப(பி)ண நாயகம்
இந்திய சனநாயகம்.

வேடிக்கை பார்க்கும்
சனங்களும்
வெட்டிக்கதை பேசும்
அரசியல்வாதிகளும்
இருக்கும்வரை

தமிழ் நாட்டிற்க்கு
துரோகங்கள் தொடர்கதை.

மீண்டும்..மீண்டும்
சாந்தி அடையாமல்
தவிக்ககிறதே
நம்மாழ்வாரின் ஆன்மா.

உச்சநீதிமன்ற தீர்ப்பை
துச்சமென ம(மி)திப்போம்.

கோரிக்கைகளை விடுத்து
கொலைவாளினை எடுப்போம்.

-இன்பா

Sunday, January 17, 2016

அஞ்சலி - முனைவர் கே.ஏ.குணசேகரன்

"மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா"

தலித் இசையை தரணியெங்கும் 'தன்னானே' இசைக்குழு மூலம் கொண்டு சென்ற ஐயா முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் இன்று புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

" வலையென்ன பெரும் கனமா…. அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா…" என்று பாடிய மக்கள் கலைஞனை மரணவலையிலிருந்து விடுவிக்க இயலுமா??

-இன்பா

Thursday, January 7, 2016

ஆனந்தவிகடனில் (13.1.2016) பத்து செகண்ட் கதை

இந்த வார ஆனந்தவிகடனில் (13.1.2016) எனது பத்து செகண்ட் கதை பிரசுரமாகி உள்ளது. இது விகடனில் வெளிவரும் எனது மூன்றாவது கதை.


பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் அந்த கதை இங்கே.

                                      கண்டனம்

இணையத்தில் பரவிவரும் ஆபாசபாடலை தடை செய்யகோரி சென்ற
மாபெரும் கண்டன ஊர்வலத்தை மெதுவாக ஊர்ந்து கடந்தன
ஆற்றுமணல் அள்ளிய லாரிகள்.

-இன்பா

Friday, December 25, 2015

பாருரு வாய...



இசைஞானி இளையராஜாவின் இசையில் 1000 வது படமாக வரவிருக்கும் "தாரை தப்பட்டை" படத்தில் மாணிக்கவாசகர் அருளிய "பாருருவாய"  என்னும் திருவாசக பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன.

அந்த பாடல்களும், அதன் விளக்கமும் இங்கே.



பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.

                                                (திருவாசகம் பாடல்:1)

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.

                                               (திருவாசகம் பாடல்:4)

விளக்கம் :(திருவாசகம் பாடல்:1)

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக.

விளக்கம் : (திருவாசகம் பாடல்:4)

எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக.

- இன்பா

 
Follow @kadaitheru