இசைஞானி இளையராஜாவின் இசையில் 1000 வது படமாக வரவிருக்கும் "தாரை தப்பட்டை" படத்தில் மாணிக்கவாசகர் அருளிய "பாருருவாய" என்னும் திருவாசக பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன.
அந்த பாடல்களும், அதன் விளக்கமும் இங்கே.
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.
(திருவாசகம் பாடல்:1)
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.
(திருவாசகம் பாடல்:4)
விளக்கம் :(திருவாசகம் பாடல்:1)
சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக.
விளக்கம் : (திருவாசகம் பாடல்:4)
எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக.
- இன்பா
4 comments:
நல்ல பாடல்....
பாடலுக்கான விளக்கம் அருமை.
உயிரை உண்ணும் வரிகள்.
இனிமையான விளக்கம். நன்றி.
உயிரை உண்ணும் வரிகள்.
இனிமையான விளக்கம். நன்றி.
Good explanation
Post a Comment