Saturday, October 31, 2015

சென்னையில் நேதாஜி


"நேதாஜி உயிருடன் இருக்கிறார். அதற்க்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது' என்று வைகோ அவர்கள் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

சமீபகாலமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை பற்றிய செய்திகள் அடிப்பட்டு கொண்டு இருக்கின்றன.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லுமுன் பிப்., 8, 1943ல், தன் சகோதரர் சரத்சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியில் ஒரு கடிதம் எழுதி, அதை அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி ஷெங்கில்லிடம் கொடுத்திருந்தார்.

நேதாஜி 1941ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். 1935ல், "இந்தியப் போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது, சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றினார் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.

அக்கடிதத்தை, 1948ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத்போசுவிடம் கொடுத்தார் எமிலி.

நேதாஜி எழுதிய வங்கக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு...

பெர்லின், 8.2.1943
என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,

இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கிப் புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிரயாணத்தில் நான் ஏதும் விபத்திற்குள்ளானால் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி, அதை தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளேன்.

நான் இங்கே கலியாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்ணா! தாங்கள் என் வாழ்நாள் முழுதும் என்னிடம் காட்டி வந்த அன்பு எல்லையற்றது. அதே அன்பை, கருணையை, என் மனைவி, மகள் இருவரிடத்தும்... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும், பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டுச் செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! இதுவே, நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதியான பிரார்த்தனை. விடை பெற்றுக்கொள்கிறேன்.

அண்ணா! தங்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும், நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்.

தங்கள் பேரன்பிற்குரிய

சகோதரர் சுபாஷ்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல...' என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.

அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், "தேவையில்லை' என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.

நம்மிடையே, "வாழ்ந்து' கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.

தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

"காங்கிரஸ் தலைமை,நேதாஜியின் இறுதி காலம் குறித்து முழுமையான விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டதே அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் போனதற்க்கு காரணம்" என்று முதல்முறையாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரசை கலைத்துவிடுங்கள் என்று சொன்னார் காந்தி. ஆனால்,காந்தியடிகளின் பெயரை அடித்தளமாக வைத்து ஆட்சி பிடித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. அதன்பொருட்டே காந்தி தாத்தா, நேரு மாமா என்று பெருமையுடன் பாடப்புத்தங்களை திட்டமிட்டு தயாரித்த காங்கிரஸ், நேதாஜியையும்,அவரது வரலாற்றையும் இருட்டிப்பு செய்துவிட்டது.


காணாமல் போகும் குருவிகள் - தைலஞ்சிட்டுகள்


பருவ மழையால் இந்தியாவேகுறிப்பாக நம் தமிழகம் தற்போது நனைந்து நடுங்குகிறதுதெருவெல்லாம் தண்ணீர் ஓடகுறுகிய உடலும் குடையுமாய் இல்லம் நோக்கி விரைகின்றனர்ஒழுகும் வீட்டையும்ஒடிந்து போன மரக்கிளைகளையும்அறுந்து விழுந்த மின்சார வயரின் மறு இணைப்புக்காக மின்வாரிய ஊழியரை வேண்டிய வண்ணம் சலிப்புடன் காத்திருக்கின்றனர்

தாய்மார்கள் ஈரத்துணியைக் காய வைக்க முடியவில்லை என்ற கோரிக்கையில் துவங்கி இன்னும் ஏதேதோ பட்டியலிடுகின்றனர்மழையே காரணமாய் அமைந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்ற இனிய செய்தி தொடர் செய்தியாய் காதுகளுக்குள் பாயாதா என ஏங்கிய வண்ணம் குழந்தைகள்

என்னைப்போல் வெகுசிலரே கொட்டும் மழையிலும்உடைந்து ஓடும் கண்மாய்க் கரையோரமும்கம்பீரமாய் நுங்கும் நுரையுமாய் வெளியேறும் மறுகா வாயிலிலும் கால்களை நனைத்தவாறு உள்ளோம்கூட்டமும்குடும்பமும் விநோதமாய் பார்க்கிறது...........

எங்களைப்போலவே புள்ளினங்களும் என் வீட்டுக் கூரை மீது மகிழ்வுடன் பறந்து போகின்றனஏதேதோ பெயர் தெரியாத செடி கொடிகள் மிக அழகாய் பூத்துக் குலுங்கின்றன.

தீபாவளி தினத்தன்று குன்னூர் பாலம் கீழே ஓடும் வைகை ஆற்றைப் பார்ப்பதற்குச் சென்றேன்

நூற்றுக்கும் மேற்பட்ட தைலஞ்சிட்டுகள்.ஆனந்தமாய் பாட்டுப்பாடி நடனமாடி பறந்தவாறு இருந்தனஇது போல 4,5 கும்பல்களை என்னால் காண முடிந்ததுமழைக்கால குளிர் வேளையில் இதனைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதுஇவ்வளவு குருவிகளை நான் கண்டு பத்து வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது...!


ஆங்கிலத்தில் swallows என அழைக்கப்படும் இச்சிட்டுகள் பல பிராந்திய பெயர்களைச் சுமந்துள்ளனதகைவில்லான்தலையில்லாக் குருவிதம்பாடி என பல பெயர்கள் சூட்டி அழைக்கப்பட்ட இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாய் சிவப்பு எழுத்துக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது

இக்குருவிகளைப்பற்றிய தகவல் சேமிப்புகளும்புத்தக வெளியீடுகளும் மிகக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது

1789ல் டாக்டர் கில்பர்ட் ஒயிட் இக்குருவிகள் தொடர்பாக ஆய்வு நடத்தி வெளியிட்ட கட்டுரையே இன்றளவும் ஆகச்சிறந்த குறிப்பாக பறவையியல் வல்லுநர்களால் வாசிக்கப்படுகிறதுஇக்கட்டுரைத் தொகுப்பில் இவர் பல பறவைகள் ,சிறு பூச்சியினங்கள் குறித்தும் எழுதியுள்ளார்தகைவிலான் குருவிக்காக இவர் 21 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

உலகம் முழுதும் 89 உள் வகுப்பு இவ்வினத்தில் உண்டுதென்னிந்தியாவில் மிக அதிக அளவு வாழ்ந்த இவை இளைப்பிற்கான மருந்து தயாரிக்ககுழந்தைகளின் நெஞ்சுச் சளி தீர்ப்பானாக பாவிக்கப்பட்டும்இதன் கறிக்காவும் கும்பல் கும்பலாக கொல்லப்பட்டுவிட்டன.

ஒரு நபர் இப்பறவைகள் வேட்டையில் 25 குருவிகளைக் கொல்லுவதை நானே பார்த்திருக்கிறேன்மிக வேகமாவும்வளைந்து நெளிந்துமேல் கீழ் எனபறக்கும்அலைவரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்ளும்இப்பறவைகளைக் கொல்வதற்கு என்றே நேர்த்தியான கவை கொண்ட தேர்ச்சி பெற்ற கொலையாளிகள் காட்டிற்கு அனுப்பப்படுவர்1970களில் தேவாரம் நகர் முழுதும் நிறைந்து காணப்பட்ட இவை இன்று முற்றிலும் அழிந்தே போனது.


கூட்டம் கூட்டமாக வாழும் தம்பாடிகளில் ஆணே தலைவனாக முன்னின்று ,அனைத்து செயல்பாடுகளையும் நடத்துகிறதுபெண் துணை புரிகிறதுஇளம் வயதினர்கும்பலின் உறுப்பினர்களையும்சிறு உதவிகள் செய்பவராகவும் உள்ளனர்உணவிற்காக இக்கும்பல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும்ஆதலால் இடம்விட்டு இடம் பெயருதல் நடைபெறும்அப்போது குழுக்களுக்கு இடையே பெரும் போர் நிகழும்ஒரு குழு மற்றொரு குழுவால் விரட்டியடிக்கப்படும் வரை போர் நிகழும்தவிர பிற பறவைகள் இவைகளை வெகு எளிதில் வேட்டையாடும்குறிப்பாக கழுகுராஜாளிவல்லூறுசில சமயம் காக்கை போன்றவையும் மூர்க்கத்தோடு,இக்கும்பலைத் தாக்கி ,துவம்சம் செய்கின்றனஇவை உணவைப் பங்கிட்டு கொள்ளும் இயல்பு கொண்டவை

புழுக்களையும்பூச்சி,வண்டினங்களையும் தின்பதால் விவசாய சேதாரத்தை ஓரளவு குறைக்கின்றனஆனாலும் விவசாயிகள்வலை விரித்து பிடித்துக் கொல்லும் அவலம் இன்றும் நடந்தவாறு உள்ளது.

இதன் காதல் வாழ்க்கை ரொமாண்டிக்கானதுபெண்ணை மயக்க ஆண் பல உத்திகளைக் கையாள்கிறதுகுறிப்பாக இக்குருவிகளின் சிறப்பே இவைகளின் நீண்ட இரட்டைவால் அமைப்புதான்ஆணிற்கு மிக நீண்ட வாலும்பெண்ணிற்கு சற்று குட்டையானதாகவும் இருக்கும்நீண்ட வாலைக் கொண்ட ஆணின் மீதே பெண் காமம் கொள்கிறதுஇக்குருவிகள் பழுப்புகறுப்பு வண்ண இறகுகளைக் கொண்டிருக்கும்ஆண் அவ்வப்போது அதைக் கோதி விட்டபடி நேர்த்தி செய்தவாறே இருக்கும்

1 வருடத்திற்கு ஒரு ஜோடி என்ற விகிதாசார அமைப்புபடி சேர்ந்து வாழும்காமம் கொள்ளும் சமயங்களில் இவை அடிக்கடி பாரம்பரிய முறைப்படியே உறவு கொள்கின்றனஅப்போது பெண்தன் இரு கன்னக் கதுப்புகள் உப்பியவாறும்நெஞ்சின் முன்பாகம் லேசான வௌ்ளை அல்லது நீலநிறம் ,பளபளக்கும் பச்சை நிறம் படர மேலெழும்பிதான் காமம் கொண்டிருப்பதை ஆணிற்கு சமிக்ஞை செய்யும்இதைப் புரிந்த ஆண் உறவுக்குத் தயாராகும்அப்போது அதுபலவித ஸ்வரங்களில் குரலெழுப்பி ,மேலும் கீழும் பறந்தவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்இந்த தருணங்களில் மற்ற இளம் ஆண் பெண் பறவைகள் ,பிற பறவையினங்கள் இந்த ஜோடியைத் தாக்காதவாறு அரண் போல் நின்று காவல் செய்யும்இது இப்பறவைகளுக்கே உரித்தான சிறப்பு குணம் என்கிறார் கில்பர்ட்.


உறவுக்குப்பின் பெண் கருவுற்ற 18 நாட்களுக்குப்பின் 2 முதல் 5 முட்டைகளை இடஅவை பிற பறவைகளின் கூடுகளை,மரப்பொந்துகளைப் பயன்படுத்துகின்றனஆப்பிரிக்க தேசத்திலுள்ளவைகளில் ஆண்மண்ணால் குளவிகளைப் போல கூடமைத்து தருகிறதுஐரோப்பிய தேசங்களில் நகர முனிசிபல் நிர்வாகம் இப்பறவைகளுக்கென செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கூடுகளை,கம்பம் அமைத்துநீள வாக்கில் கயிறுகளைக் கட்டித் தொங்க விடுகின்றனஇம்முட்டைகளின் மேல் சிவப்பு புள்ளிகள் இருக்கும்21நாள் அடைகாத்தலுக்குப்பின் குஞ்சு பொரிகின்றனஅடைகாப்புகுஞ்சுகளுக்கான உணவு வேட்டை போன்ற பணிகளை பெண்களே ஏற்று செய்கின்றனஇக்குருவிகள் அத்தகு காலங்களில் தண்ணீர் அருந்துவதில்லை

இதனை ஐசோடோப் சோதனை மூலம் கண்டறிந்தனர்ஒரு வருட பெற்றோரின் கவனிப்புக்குப் பின் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறுகின்றனஇருப்பினும்அவை கொல்லப்படாமல் இருப்பின் சில வருடங்கள் வரை தங்கள் பெற்றோரைக் காண வருகை புரிகின்றனதாங்கள் பருவம் எய்யும்போது,தங்கள் பெற்றோரின் கூட்டைக் கைப்பற்ற தயங்குவதில்லை.

எதிரிகளைத் தாக்குவதில் இவை ஒற்றுமையாகச் செயல்படுகின்றன
அப்போது சில தந்திரங்களைக் கையாளுகின்றனகும்பலாக எதிரிகளைத் தாக்குவதும்முக்கோண வடிவில் வியூகம் வகுத்து மிக விரைவாக பறந்து வருவதும் இவைகளின் சிறப்பியல்பு.இப்பறவைகளின் பறக்கும் திறன் மிகச் சாதரண தருணங்களில் 30 கி.மீட்டரும்விரைவாகச் செயல்பட வேண்டிய தருணங்களில் 60கி.மீட்டராகவும் உள்ளனபாம்புகீரிபிற மாமிசம் உண்ணும் பறவை உயிரிகள் கூட்டில் உள்ள முட்டைகளைகுஞ்சுகளையே தாக்குகின்றன.


அரிஸ்டாட்டில்ஷேக்ஸ்பியர்ஜான் கீட்ஸ் போன்ற பேரிலக்கியவாதிகள் முதல் மருதகாசிகண்ணதாசன்பாரதி என நம் தமிழ் பாடலாசிரியர்கள் வரை தங்கள் பாடல்களில் இக்குருவியைத் தூது விட்டவர்களாகவும்இதன் வட்டமைத்த இசையில் மயங்கியவர்களாகவும் உள்ளனர்எஸ்டோனியா நாடு தங்கள் தேசியப் பறவையாக இதனை மரியாதை செய்கிறது

ஐரோப்பிய தேசம் முழுதும் "தங்கள் பறவை"(our bird) என யாரேனும் அழைத்தால் அது இக்குருவியையே அழைக்கின்றனர் என்பதை நாம் அறிய வேண்டும்

ஆனால் நம் மக்கள்......இக்குருவியை பற்றிப் பேசும்போதுஇதன் "மாமிச சுவையின் அலாதி"க்குத் தான் மதிப்பளிப்பதை இன்றும் கைவிடவில்லை.......?

கட்டுரை : எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.

Thursday, October 29, 2015

உடையார் - அஜித்தின் அடுத்தபடம்

எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவருடன் இணைந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் பயனித்து கொண்டிருக்கிறேன், இது பற்றிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக அறிவித்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அவர் ஆறுபாகங்களாக வெளிவந்த பாலகுமாரனின் "உடையார்" நாவலுக்கு திரைக்கதை அமைத்துகொண்டு இருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும்.

தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக பாலகுமாரன் குறிப்பிடுகிறார்.


"நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையா தஞ்சை கோவிலுக்குப் போறேன். "இது உனக்கு பரிச்சயமான இடம்தான்'ன்னு, மனசு சொல்லுது! "இங்கே சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்'னு நினைக்கிறேன். அப்படியே இருக்குது. "அர்ச்சகர் இப்படி இருப்பார்'னு நம்புறேன். அவரும் அப்படியே இருக்கிறார். நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன். யாருக்கும் ஒண்ணும் தெரியலை. "இவ்ளோ பெரிய கோவில்! ஆனா, இதோட வரலாறு யாருக்கும் தெரியலையே'ங்கற வருத்தம் ஏற்பட்டது. கோவிலைச் சுத்தி வரும்போது, "இது ரொம்ப அநாதையா இருக்கு. இந்த கோவில் இப்படி இருக்கக்கூடாது'ன்னு அழுதேன்! ஆனா, அந்தசமயத்துல கூட, இந்த கோவிலைப்பத்தி எழுதணும். இதை நாவலாக்கணும்னு எனக்கு தோணவேயில்லை. ஆனா, தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்?ன்னு யோசிச்சேன். கல்வெட்டுக்களை தேடிப் படிக்கணும்னு முடிவு பண்ணுனேன்.

என் 27 வயசுலதான், முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்'ங்கற ஒரு கல்வெட்டை, கையில புத்தகம் வைச்சுக்கிட்டு தடவித் தடவி படிச்சு முடிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி, பல கல்வெட்டுக்களை படிச்சேன். அதுமூலமாத்தான் ராஜராஜனை விட, கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.

 கிருஷ்ணன்ராமன்...அவன்...பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியா இருந்திருக்க முடியும்?ன்னு, எனக்குள்ளே ஒரு ஆச்சர்யம்! அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடிப் போனேன். அங்கே, அற்புதமான காளி கோவில் இருக்கு. அது, அவன் கட்டின கோவில். அந்த கோவிலை நான் ரசிச்சுட்டு இருந்தப்போ, 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தார். "இத்தனை நாளாச்சா வர்றதுக்கு?'' அவர் கேட்டவுடனே, ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து, கருங்கல் சுவத்துக்குள்ளே புகுந்து போயிட்டார். அந்த நிமிஷத்துலதான்...சோழனைப் பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட, "கிருஷ்ணன்ராமன் இல்லையெனில் ராஜராஜன் இல்லை'ன்னு, என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனைப் பத்தின தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுன தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான் ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்த கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழ தேசத்தின் மீது எனக்கு காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களை தேட ஆரம்பிச்சேன். சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறது காதல் அல்ல...வெறி!

 ராஜராஜனின் உள்மன அலசல்! இதை... யாருமே மக்களுக்கு சொல்லலை! நான் " உடையார்' மூலம் சொல்லியிருக்கிறேன்!'

என்று விளக்கம் அளித்து இருக்கிறார் பாலகுமாரன்.



சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து,யுடிவி மோஷன் பிக்சர்ஸ் கூட்டுதயாரிப்பில், இயக்குனர் விஷணுவர்தன் இப்படத்தை
உருவாக்க இருக்கிறார்.

வேதாளம் படத்தை அடுத்து, முதல்முறையாக இந்த சரித்திர படைப்பில் ராஜராஜ சோழனாக, அஜித்குமார் நடிக்க இருக்கிறார்.

அவரது சேனாதிபதியாக, படத்தில் முக்கிய வேடத்தில், ஆரம்பம் புகழ்  ராணா டகுபர்டி நடிக்கவிருக்கிறார்,

உடையார் என்பது பெருவுடையார் என்று குறிக்கும்.

தெலுங்கு மக்களுக்கு எப்படி "பாகுபலி"யோ, அதுபோன்று தமிழ் மக்களுக்கு "உடையார்" நிச்சயம் அமையும்.

-இன்பா 

Sunday, October 25, 2015

கண்களை நிறைக்கும் தஞ்சை பெரியகோவில்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீஸ்வரரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு.

நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட, தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும்.

. தஞ்சாவூர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கவுரவிக்கும் விதமாக , பெரியகோவில் கட்டி 1000 ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நமது தமிழக அரசு எடுத்துவரும் சதய விழா, அரசின் பாராட்ட வேண்டிய சாதனைகளில் ஒன்று.

கடந்த 23 அன்று தஞ்சை பெருவுடைய தேவருக்கு  1030 வது ஐப்பசி சதய திருவிழா கோலாகலமாக கொண்டாடபட்டது.


ராஜராஜ சோழன் - தஞ்சை பெரியகோவில் இடையிலான தொடர்புகளை தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.

இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.

என்று பெரியகோயிலில் உள்ள சான்றுகளோடு விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் திரு.ஸ்ரீதரன்.

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.


ஆனாலும், இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தீராத கரும்புள்ளியாக இருக்கிறது ஒரு மூட நம்பிக்கை. அதாவது...இக்கோவிலின் நேர்வழியாக,முன்வாசல் வழியாக சென்றால், செல்லும் அரசர் அல்லது தலைவரின் பதவி பறிபோய்விடும் என்பதே அது.

இக்கோவிலில் ஒருமுறை பெரும் தீவிபத்து நடந்தபோது, முற்போக்கு சிந்தனைகளை பேசும் கருணாநிதி அவர்கள் கூட, பின்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.

"இது போன்ற ஐதீகம் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு குறிப்புகளிலும், வரலாற்றிலும் இல்லை" என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் எனது நண்பரான ஒரு தமிழாசிரியர்.

 ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும்,இல்லாவிட்டாலும் சரி. அவர் கோவிலின் முன்வாசல் வழியாக சென்று, உலகமே வியக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலின் மேல் உள்ள கரும்புள்ளியை துடைக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

"கண்கொள்ளாகாட்சி" என்னும் வார்த்தைக்கு நான் உணர்ந்த சரியான,அழகான உதாரணங்கள் இரண்டு.

ஒன்று, அதிகாலை சூரியஉதயத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்.

இரண்டு, அந்திமாலையில்,...இரவில் மின்னொளியில் ...தஞ்சை பெரியகோவிலின் கோபுரம்.

-இன்பா

Monday, October 19, 2015

இலக்கியத்தில் குளியல் காட்சிகள் - கவிஞர் ஞானக்கூத்தன்



ஆறு, குளம், கடல் இவற்றில் குளிப்பது மக்களிடத்தில் இருந்து வரும் வழக்கம். இந்த மூன்றில் கடலில் குளிப்பது தூய்மைக்காக அல்ல. புறத் தூய்மை நீரால் அமையும் என்பது ஒரு பழைய வாக்கு. அகத் தூய்மை என்பதும் ஒன்றுண்டு. குளியல் இரண்டு தூய்மைக்கும் பொதுவானதுதான். கடலில் குளிப்பது சமயச் சார்பான சடங்கை நிறைவேற்ற. ஆற்றில் குளிப்பது அகப்புறத் தூய்மை இரண்டுக்குமாக. பெரியஅளவில் நாட்டில் கோயில்கள் அமைந்த பிறகு திருக் குளம் என்று பெயரிடப்பட்ட குளங்களும் மக்களின் அகப்புறத்தூய்மைக்குத் தேவையான நீர்நிலைகளாயின. சுனைகள், ஓடைகள் மற்றும் அருவிகள் இவற்றிலேயும் மக்கள் குளித்தார்கள்.

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளான வைகையும் காவிரியும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. குளித்தல் என்பது மகிழ்ச்சியான செயல்தான். ஆண் குளித்தால் பெண்ணுக்கும் பெண் குளித்தால் ஆணுக்கும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியான செயலாகத்தான் இலக்கியம் குளிப்பதைக் கணித்து இருக்கிறது. ஏன்? இருபாலரது உடல்களும் நிர்ப்பந்தம் இல்லாமல் பார் வைக்குக் கிடைக்கிறது. ஒரு நீர்நிலையை தனக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டுவதற்குத்தான் மனிதன் குளியலைக் கண்டுபிடித்தான் போலும். தன் உடலை முழுமையாகத் தண்ணீரில் மனிதன் அமிழ்த்திக் கொள்கிறான். தண்ணீரோடு ஆழ்ந்த தொடர்பு கொள்ளும் அந்த உடம்பு பாராட்டுப் பெறுகிறது. இதற்கு எதிரான குளிப்பு தீக்குளிப்பு.

தமிழிலக்கியம் பரிபாடல் என்ற ஒரு தொகுப்பைப் பெற்றுள்ளது. நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழ வந்ததைக் கூறுகிறது பரிபாடல் . புனல் விளையாட்டு என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பரிபாடல்தான் முதலில் இலக்கியத்தில் பதிவு செய்கிறது. அடுத்துவந்த நூல்களை சீவக சிந்தாமணி, கம்ப இராமாயணம் முதலியவற்றிலும் இந்தப் புனல் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. வடமொழியிலும் புனல் விளையாட்டு என்பது ஜலக்கிரீடை என்று பெயர் பெற்றுள்ளது:

பரி பாடல், வைகை நதியில் மக்கள் புதுவெள்ளத்தில் கொட்டம் அடிப்பதைக் காட்டுகிறது. மக்களுக்குப் புனல் விளையாட்டின்போது மான அவமானம், கூச்சம் போன்ற பிரச்சினைகள் எழுவதில்லை. இல்வாழ்க்கைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்பட்ட பரத்தையர்களின் நடத்தை பற்றியும் பரிபாடல் குறிப்பிட்டிருக்கிறது.

பரத்தையர்களின் நடத்தை பற்றிக் குறிப்பிடும்போது பரிபாடல் புறநூல்களில் ஒருவரான நல்லழிசியார் தயக்கம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். வைகையின் கரை புதுவெள்ளம் நிறைந்தபோது இருந்த நிலையை நாடக அரங்குபோல் இருந்தது என்கிறார் நல்லழிசியார். நாடக அரங்கு என்றதால் சொல்லப்பட்ட விஷயம் நாடக வழக்கு சம்பந்தப்பட்டது என்று பொருளில்லை. ஆனால் ஓர்அசாதாரணத் தன்மையை, இந்த நிகழ்வு குறிக்கவே செய்கிறது. அரங்கு-நிகழ்வின் வெளி-நாடகத்தை நினைவூட்டுகிறதே தவிர, சொல்லப்பட்ட நிகழ்வு அல்ல. ஆனால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் என்ற அர்த்தமும் இந்த நாடகம் என்ற சொல்லாட்சியில் தொக்கி நிற்கவே செய்கிறது.

கவிதையில் அர்த்தம் உத்தேசிக்கப்பட்டதும் உத்தேசிக்கப்படாததுமாகத் தானே அமைகிறது.

நல்லழிசியார் வைகையைப் பற்றிய பரிபாடலில் (16 ஆம் பாட்டு) குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

பரத்தையின் தோழிகள் மூங்கில் குழாய் மூலமாக அரக்கு நிறத்தில் உள்ள தண்ணீரைக் காதல் பரத்தை மேல் பீச்சினார்கள். அவளுடைய குரும்பைப் போன்ற முலையில் அந்த செந்நீர் தங்கி இருக்க, அவள் அதைத் துடைக்காமல் இருந்தாள். அப்போது தலைவன் அங்கே வருவதைப் பார்த்த அவளது தோழிகள் ‘அவளைச் சேராதே. அவள் பூத்திருக்கிறாள்’ என்றார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தலைவனுக்குத் தெரியும். அது செஞ்சாந்தின் குழம்பு என்பதும் அவன் அறிவான். உடனே வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து அவளது குருதி பொறும் பூ நீரைத் துடைத்து மருவினான். இவள் பூத்தனள் என்று அவன் சொல்ல, அவள் நாணினாள். (பரிபாடல் 16-வரி 20-30)

இந்தப் பாட்டின் கடைசியில் பரத்தை வெட்கப்பட்டாள் என்று தோழி கூறுகிறாள். பரத்தை வெட்கப்பட்டது தலைவன் செய்த கேலிக்காகத்தானே தவிர, தோழிகள் சொன்னதற்கோ அல்லது பூப்பு பற்றிய செய்திக்கோ இல்லை. வைகை ஆற்றின் புது வெள்ளம், மூங்கில் குழாய்களால் பெண்கள் பீய்ச்சும் செந்நிறத் தண்ணீர்; செஞ்சாந்துக் குழம்பு- அதாவது திரவ நிலை- ஆக மூன்றும் சேர்ந்து ஒரு நீர்மையைக் கூச்ச நாச்சமின்றி பாடலில் நிலைநாட்டுகின்றன. ஆனால் இந்தத் தலைவனை அவனது முறையான மனைவி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். தடையற்றதும் தடை உடையதுமாக இரண்டு விஷயங்களை வைத்து நல்லழிசியார் இப்பாட்டை அமைக்கிறார். பரத்தையின் நடத்தையையும், தலைவன் நடத்தையையும் தலைவி நிராகரிப்பதன் மூலம் ‘பொதுக்குளியல்’ பற்றி ஒரு கருத்துக்கு அழிவிலார் பரிபாடல் வித்திடுகிறது. ஆனால் பெண் தான் குளிக்கப்போகும் நிலையில் இருக்கும்போது ஆணால் பார்க்கப்படுகிறோம் என்ற பயத்தை அனுபவிக்கவில்லை. பரத்தை என்பதால் அப்படி ஒரு மனநிலை உடையவள் என்று சொல்லி விட முடியுமா?

பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது. அழகிய சிறிய நூலான திருப்பாவையில் ஆண்டாள் பழைய நீராடல் ஒன்றைப் புதுப்பிக்கிறாள். ஆனால் ஆண்டாளின் நீராடலில் ரகசியம் நுழைகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் எழுப்பப்படுகிறது. பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடைபெறுகிறது. பரிபாடலில் குளியல் ஒரு புனல் விளையாட்டு.


ஆண்டாளின் நீராடல் ஒரு நோன்பு. பரிபாடலில் தோழிகள் பொய் சொல்கிறார்கள். அது கண்டனத்துக்குரியதாக காட்டப்படவில்லை. ஆனால் ஆண்டாளின் நீராடல் பொய் சொன்ன பாவம் நீங்கவும் பயன்படுகிறது. பரிபாடலின் தோழியர்கள் பரத்தையின் சகவாசிகள். ஆண்டாளின் தோழிகள் பக்தைகள், நீராடல் பற்றி ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைக் காட்டிலும் அவர் இயற்றிய ‘கண்ணனிடம் புடவைகளைத் திரும்பக் கேட்டல்’ என்பது பற்றிய பாசுரங்கள்தாம் நம்மைக் கவர்கின்றன ஆண்டாளின் பாட்டு.

கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான் போந்தோம்

என்று தொடங்குகிறது. முதல் அடியே பெண்கள் குளிக்கப்போகும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. கோழி கூவும்முன்- அதாவது இன்னும் இருள் பிரியாத நேரம். ஆண்டாளின் ‘கோபிகைகள்’ தாமரைப் பொய்கைக்குப் போகிறார்கள். அது அவர்களுடைய ஊருக்குக்குத் தொலைவில்தான் இருக்கிறது. ‘கங்குல் கனைசுடர் கால் கீயாடுன்’ என்று இளங்கோவடிகள் வருணித்த ஒரு பொழுதில் புறப்பட்டுப் போய் நன்றாகப் புலர்வதற்கு முன் ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் கோபிகையும் அவளது தோழிகளும் புறப்படுகிறார்கள். இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.

கோபிகை பயந்தது போலவே இவளுக்கு முன்பாக அங்கே கண்ணன் போய்விட்டான். தங்கள் சேலைகளைக் கழற்றி வைத்துவிட்டுத் தண்ணீரில் குளித்துத் துறையேறிய பின்புதான் கோபிகைகள் தங்களது சேலைகள் காணாமல் போய்விட்டதைத் தெரிந்து கொள்கிறார்கள். அந்தச் சேலைகளைக் குருந்த மரத்துக் கிளைகளில் மறைத்து விட்டுக் கண்ணனும் அங்கே இருக்கிறான் என்பதையும் கோபிகையர்கள் தெரிந்து கொள்கிறார்கள். கண்ணனிடம் சேலைகளைத் தந்துவிடச் சொல்லிக் கெஞ்சும் கோபிகையின் கூற்றில் சில வதந்திகளை ஆண்டாள் கூறுகிறார். பொய்கை ஆணுக்கே உரியது போன்ற நிலைமை உள்ளதை இந்த வதந்தி சொல்கிறது.

‘இனி என்றும் பொய்கைக்கு வாரோம்’ என்கிறாள் கோபிகை. தோழியும் நானும் வாரோம் என்று வாக்குறுதி செய்கிறாள். இனி வரமாட்டோம் என்பதால் வந்தது தவறென்று ஒப்புக்கொள்கிறாள். இப்பொய் கைக்கு எவ்வாறு வந்தாய் என்று கேட்கிறாள். என்னுடைய தாய் முதலியவர்கள் எங்களை இப்படிக் கண்டால் தாங்க மாட்டார்கள் என்கிறாள். ‘நீ கேட்டதையெல்லாம் தருவோம்’ என்று சொல்கிறாள். ‘யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறோம்’ என்கிறாள். ஒரு கட்டத்தில் கண்ணனைக் ‘குரங்கு’ என்றும் திட்டுகிறாள். மகிமை இல்லாதவன் என்றும் திட்டுகிறாள்.

கோபிகையர் கெஞ்சுதல்களின் இடையே ‘நீ வேண்டியதெல்லாம் தருவோம்’ என்னும் வாக்கு திடுக்கிட வைக்கிறது. ஆணுக்கே உரிமை உடையது போன்ற நீர்நிலையில் அவனது அனுமதியில்லாமல் பெண் இதைப் பயன்படுத்தக்கூடாது என்பது போல் ஆண்டாள் பாசுரத்தில் தொனிக்கிறது. எனவே பெண் ஆணுக்குத் தெரியாமல் குளிக்க வேண்டியுள்ளது போலும். பெண்ணின் குளியல் ஒரு கள்ளக்குளியல். எனவே பயப்படுகிறாள். இதை மறைக்கும் முயற்சியாகப் பெண் தன் குளியலைப் பிறர் பார்த்தால் தன் மானம் போய்விடும் என்ற குரலை எழுப்புகிறாள். பெண் ஏற்படுத்திக்கொண்ட சிக்கலை விடுவிக்க முடியவில்லை. அவள் மானமும் கள்ளத்தின் வெளிப்பாடும் கலந்துவிட்டன.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
பலர்குடைந்தாடும் சுனையில்

என்கிறாள் கோபிகை. இந்த வரிகளில் ஆண்டாள் ஒரு பொருள் மயக்கத்தை அல்லது தெளிவின்மையை ஒரு யுக்தியாகச் செய்கிறார் என்று தோன்றுகிறது. ‘பலர்’ என்பதற்குப் பல ஸ்திரீகள் என்று வைணவ உரையாசிரியரான பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியிருக்கிறார். பலரோடு வந்ததால் கோபிகை பலர் என்று குறிப்பிட்டது தோழிகளைத்தான். எனவே பலர் எனப்பட்டவர் பெண்கள்தான் என்பது தெளிவாகிறது. ஆனால் ‘பலர்’ என்ற பன்மை ஒரு நொடியில் பால்பாகுபாட்டை விட்டுவிட்டு ஆண்களையும் காட்டி மறைகிறது. முன்னமே கண்ணன் என்ற ஆணால் பார்க்கப்பட்டு விட்டார்கள் அல்லவா? ஒரு ஆணாலும் பார்க்கப்படாத பெண் ஒரு ஆணால் பார்க்கப்பட்டாலும் பார்க்கப்பட்டிராமை என்ற நிலையிலிருந்து விலக்கப்பட்டவள் தானே! இதற்கு அடுத்து இந்த வரியில் இடம்பெறும் ‘சுனை’ என்ற சொல்.

‘சுனை’ என்ற சொல்லைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது குன்றுகளில் காணப்படும் நீர்நிலைதான். ஆனால் இங்கே ஆண்டாள் கோபிகை குளிக்க வந்த தாமரைப் பொய்கையை சுனை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலத்தில் சுனை இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது போலும். ஆனால் பெரியவாச்சான் பிள்ளை ஒரு விஷயத்தை சுனை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘தமிழர் கலவியை சுனையாடல் என்று பேரிட்டுப் போருவார்கள் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இந்தப் பொருளை இந்தப் பாடலின்போது நினைவு கூரவில்லை. அர்த்தப்படுவதும் அப்படி ஒரு விபத்து ஏற்படுவதைக் கவிதை காட்டுகிறது. நீராடல் விஷயமாக ஆண்டாள் இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியிருக்கும் பயம் நியாயமானது.


தண்ணீரில் மூழ்கிவிட்ட பெண்ணுக்கு எப்படிப்பட்ட முதலுதவியை ஆண்கள் செய்கிறார்கள் என்பதைத் தமிழ்த் திரைப்படங்கள் காட்டுவதும் இங்கு நினைவுக்கு வருகிறது.


ஆண்டாள் பாடலில் சுட்டிக்காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.


இதற்கு முன்பும் இதற்குப் பின்பும்’ என்ற மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பில் ‘பிரக்ஞை’ என்ற கவிதை திணை இலக்கியம், பக்தி இலக்கியத்தைத் தொடர்ந்து, குளிக்கும் பெண்ணையும் பற்றி எழுதுகிறது. கவிதைக்கு ‘பிரக்ஞை’ என்ற தலைப்பு தவிர்க்க முடியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். முன்னே சொன்ன பரிபாடல், ஆண்டாள் பாடல் இரண்டிலும் விழிப்புணர்வு இருக்கிறது. மனுஷ்ய புத்திரன் கவிதையில் விழிப்புணர்வுக்குப் பிரக்ஞை என்று பெயர். பரிபாடல் கவிதையில் நாடகம் நினைவுகூரப்படுவதால் ஆசைக் கனவாகவும் கொள்ளலாம். ஆண்டாள் கவிதையில் கனவுப் பண்பு இல்லையென்றாலும் அந்தக் கோபிகையின் மனம் பயத்தில் பிறழ்கிறது என்பதை அவளது நினைவு கூரலைக் கொண்டு சொல்லலாம். மனுஷ்ய புத்திரன் கவிதையில் இறுதியில் துர்க்கனவு வெளியிடப்படுகிறது.

இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

என்று கவிதையின் இறுதி வரிகள் சொல்லும்போது கதை கண்டவளின் பதற்றத்தை வாசகன் உணர முடிகிறது.

பாதுகாப்பான வீடுகளின்
தாழிடப்பட்ட குளியலறை
சாவித் துவாரங்களில்
தன்னை உற்றுநோக்கும்
கண்களைப் பற்றி
இரவெல்லாம்
துர்க்கனவு கண்டு விழித்தெழுகிறாள்
மனம் பிறழ்ந்த நங்கையொருத்தி

உற்றுப் பார்ப்பவனின் கண்கள்; அவற்றைத் தன்னுடைய கனவில் கண்டு விழித்தெழுந்த கண்கள் இவற்றை இக்கவிதை படம்பிடிக்கிறது. ஆண்டாளின் கவிதையில் வரும் கோபிகை ஒரு அசம்பாவிதத்தைக் கற்பனையாக எதிர்பார்த்துப் பயப்படுகிறாள். இதைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பு மொழியால் சொல்கிறார். தமிழர் கலவியை சுனையாடல் என்று பெயரிடுவார்கள் என்னும் அவரது தகவல் இந்த அசம்பாவிதக் கற்பனையைக் கிளறுகிறது. பரிபாடல், ஆண்டாள் கவிதைகளில் பெண்கள் இரு வகைப்பட்டவராகின்றனர். பரிபாடலின் பரத்தையை ஆண்டாள் கவிதையும் மனுஷ்ய புத்திரன் கவிதையும் விலக்கிவிடுகிறது. பரிபாடலிலேயே அதன் முற் பகுதியில் கனவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில் வரும் பெண்ணையே ஆண்டாள் தன் கவிதையில் உருவாக்குகிறாள்.

ஆண்டாள் கவிதையில் குடும்பம், அந்தக் குடும்பம் பின்பற்றும் சம்பிரதாயம், கடவுள், அதன் புராணம் எல்லாம் பேசப்படுகின்றன. மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் குடும்பம்தான் களமாக இருக்கிறது. ஆனால் அது துர்ப்பாக்கியமாக அமைந்துள்ளது. ஆண்டாளின் கவிதையில் வீட்டுக்கு வெளியே நடக்குமென பயந்த ஒன்று மனுஷ்ய புத்திரன் கவிதையில் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. இந்தக் கவிதையின் இரண்டாம் பகுதியை ஒரு நிதானமான வாசிப்புக்கு உட்படுத்தினால் வாசகனின் மனம் குழம்பக் கூடும்.


மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதை நவீன காலத்துக் கவிதையின் குறியீடுகளைக் கொண்டுள்ளது. பிரக்ஞை என்ற சொல்லே 1970க்குப் பிறகு பொருட் செறிவுடன் உலா தொடங்கிய சொல்லாகும். ‘மனப் பிறழ்வு’ என்ற பெயரிடுகையும் நவீன காலத்தை உணர்த்துவதே. இக்கவிதையின் முதல் பகுதியும் அப்படியே. நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு. ‘பிரக்ஞை’ கவிதையில் மனுஷ்ய புத்திரனிடம் இப்பண்பு காணப்படுகிறது. கவிதையின் முதல் பகுதி இது.

நதிகள்
குளங்கள்
ஓடைகளோரப் பயணங்களில்
நூறு நூறு
கண்பட்டு விலகும்
குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமற்று
வெட்டவெளிகளில்
சுடர்ந்து கடக்கின்றன

குளிக்கும் கோபியர்கள்! குளிக்கும் பெண்கள் கோபியர்களாகி விடுகிறார்கள். கோபியர்களைக் குளிக்கும் பெண்களாக மட்டுமே காட்டப்பட்டது தமிழ்நாட்டில்தான். வேறொரு நவீன கவிஞரின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. குளத்திலேயே அவர்கள் இருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கோபியர்களை நினைவு கூர்கிறது. அவர்களது ‘ஈர உடல்கள் அச்சமற்று கூச்சமற்று’ உள்ளன என்கிறது கவிதை. இந்த ஈர உடல்கள் நதிகள், குளங்கள், ஓடைகளோரப் பயணங்களில் தென்படுகின்றன. ‘ஓடைகளோரப் பயணங்களில்’ என்ற அமைப்பு உரைநடையை விலக்கிக்கொண்டு கவிதை நடையில் சிக்கனப்பட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

இப்பகுதியில் அச்சம், கூச்சம் இரண்டையும் இணைத்திருப்பது கவனிப்புக்குரியது. அச்சம், நாணம் இரண்டும் பெண்ணியல்புகளாகப் பேசப்பட்டு வருகின்றன. அச்சம் இல்லாத சமயத்திலும் கூச்சம் இருக்கும் அல்லவா. மறுபடியும் பரிபாடல் பக்கம் போகலாம். இந்தப் பரிபாடல் நல்லழிசியாரால் எழுதப்பட்டது. இதுவும் வைகையில் புனலாடல் பற்றிதான்.

நீர்த்துறையில் வரிசையாக நின்றவர்களுடைய மொழிகள் ஒன்றை உணர்ந்து ஒவ்வாமற் பலவாக ஒரே காலத்தில் எழுந்தன. புல்லாங்குழலின் இசை எழ முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுனி ஆகிய இவற்றின் தாளத்தை ஆடல் மகளிர் தன் கையால் அளந்து நிற்ப உண்டாகும் ஓசையே அங்ஙனம் கேளாமைக்குக் காரணம். ஆயினும் யாம் கேட்டன சில:

‘பலர் கூடியிருக்கிற இடத்திலே நின்று
அப்பூங்கொம்பு போன்றவருடைய நகங்களை
ஒருவன் நோக்கினான். அவன் இளநெஞ்சன்.
திண்மை அற்றவன் என்றார் சிலர்’

‘அவன் இப்பெண் பூண்ட முத்துமாலையின்
அழகைப் பார்த்து இதற்குப் பொருத்த
மாயிருக்கின்றன இவள் நகங்கள் என்று
அவற்றைப் பார்த்தான். இதற்கு அவள்
நாணமடையவில்லை’ என்றனர் சிலர்.


இந்தப் பகுதியில் உடல் திறக்க பெண் இருப்பதும், அந்த உடல் பார்க்கப்படும்போது பயமும் வெட்கமும் இல்லாதிருப்பதும் கண்டிக்கப்படுகிறது. சமுதாய விதிகளுக்கு வெளியே வைக்கப்பட்ட மக்களின் பண்பாடு வேறாகக் காட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் நீராடலில் ஒரே துறையில் எதிர்ப்படுகிறார்கள். பயப்படாதவர்கள், வெட்கப்படாதவர்கள் என்பதை நினைவில் கொண்டு மனுஷ்ய புத்திரனின் பிரக்ஞை கவிதையில்

குளிக்கும் கோபியர்களின்
ஈர உடல்கள்
அச்சமற்று கூச்சமுற்று

இருப்பதை ஆராய்ந்தால் இவர்கள் குலப் பெண்கள்தாம் என்பதும் ‘பொதுமகளிர்’ அல்லர் என்பதும் தெரியவருகிறது. ஏனெனில் அவர்கள் கோபிகையர்கள் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது கவசம்போல் அமைகிறது. ஆண்டாள் பாட்டில் கோபிகையர்களுக்கு இருந்த பயம் கூட அவர்களிடம் இல்லை. இவர்கள் குளிக்கும்போது இவர்களைப் பார்க்கும் ‘நூறுநூறு கண்களில்’ இவர்கள் எவ்வளவு விரைவாக மறைந்து விடுவார்களோ அவ்வளவு விரைவாக அவர்களது நிர்வாண பிம்பமும் மாறாது விடுகிறது. அவர்களை யாரும் உண்மையில் பார்க்கவில்லை. பயமில்லை. வெட்கமில்லை.

பரிபாடல் கவிதையிலும், ஆண்டாள் கவிதையிலும், மனுஷ்ய புத்திரன் கவிதையிலும் புராணம் இடம்பெறுகிறது. முன் இரண்டு பேர் கவிதைகளில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். மனுஷ்ய புத்திரன் கவிதையின் முதல் பகுதியில் பெண் திறந்த வெளியில் குளிக்கிறாள். இரண்டாம் பகுதியில் பெண் வீட்டில்தான் குளிக்கிறாள். வீட்டுக் குளியலிலும் பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்ற செய்தியை மனுஷ்ய புத்திரன் கவிதை பதிவு செய்கிறது. மனுஷ்ய புத்திரனின் மற்றொரு கவிதையான ‘யாரோ கவனிக்கும் போதில்’ மீண்டும் மனப் பிறழ்வு கொண்ட மங்கையைப் பார்க்கிறோம்.

மனப் பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்

பிரக்ஞையில் சொல்லப்பட்ட பெண் ‘மங்கை’ என்று சுட்டப்பட்டாள். இங்கே அவள் வெறுமனே ஒருத்திதான். இவள் எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள். இவள் நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது. நூறு நூறு கண்களால் இல்லாத பயம் இரண்டே கண்களில் ஏற்படும் என்பதை அவள் அறிந்துகொண்டுவிட்டாள்.

பழைய தமிழ்நாடு, இடைக்காலத் தமிழ் நாடு, நவீனகால தமிழ்நாடு ஆகிய மூன்றிலும் ஒரு பெண் உடம்பு தோற்றப்படுவதைப் பார்த்தோம்.


குறிப்புகள்

1. பழங்காலத்தில் நீர் நிலைக்குக் காவல் போடப்பட்டிருந்தது கரை காவலர்கள் அடிக்கும் பறையின் ஓசையைப் பரி பாடல் குறிப்பிடுகிறது. ஒரு நீர்
நிலைக்குக் காவலனாக ஒரு யட்சன் இருந்ததை மகாபாரதம் சொல்கிறது. குளிக்கவும் குடிக்கவும் விலங்குகளைக் கழுவவும் தனித்தனி நீர்நிலைகள் இருந்தன. பெண்கள் எதற்காகக் குளிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படாவிட்டாலும், அவர்களது மனசாட்சிக்கு விடப்பட்டது.

2. நீர்நிலைகளில் யதார்த்தமாகக் கண்ணில்படும் பெண் உடல்களை வெறிப்பவர்களை ‘ஓட்டை மனதினர்’ என்கிறது பரிபாடல்.

கோட்டியு கொம்பர்
குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரமிலி.

3. ஆண்டாளின் கன்னிமார் நீராடல் பற்றிய பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை எழுதியுள்ள உரை கவிதைக்குப் பொருள் கொள்ளும் முறையொன்றைக் காட்டுகிறது.

4. ஆண்டாளின் கோபிகைகள் கன்னிப் பெண்கள். பரிபாடல், மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் பெண்கள் பற்றி விவரம் சொல்ல முடியவில்லை. மூன்று கவிதைகளும் தங்கள் தங்கள் வகையில் ஓவியம் வரைகின்றன. ‘பெண்கள் பால் வைத்த நேயம்’ கம்பரின் வாக்கு. ‘பிழைப்பரோ சிறியர் பெற்றால்’ என்பவை மற்ற சீர்கள்.

5. குளியல் பெண்களின் பரிபாஷையில் கர்ப்பம் தரிப்பதைக் குறிப்பிடுகிறது.


(கட்டுரை : கவிஞர் ஞானக்கூத்தன், உயிர்மை பதிப்பகம்)

Saturday, October 17, 2015

"வேதாளம்" மெகாஹிட் , அடுத்தது "கபாலி"

"வேதாளம், தூங்காவனம் ட்ரைலர் விமர்சனம் ரெடியாயிருக்குமே" என்று திரு.கேபிள் சங்கர் அவர்கள், தனது இணையதளத்தில், கொத்து பரோட்டா -12/10/15 பகுதியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் பாதிப்பில், வேதாளம் படத்தின் டீசர் மற்றும் ஸ்டில்கள் சிலவற்றை வைத்து, நான் எழுதிய வேதாளம் - திரைவிமர்சனம்  என்ற பதிவுதான் இன்றைய இணையம் மற்றும் வாட்ஸ் அப்பில் 'ஹாட் டாபிக்' என்றாகி இருக்கிறது.

இந்த பதிவை எழுதி முடித்தவுடன், ப்ளாகின் லிங்கை திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அதை அவர் படித்துவிட்டு
"Interesting”  என்று ஒரே வரியில் பதில் அனுப்பினார். அவருக்கு என் நன்றிகள்.

நான் கற்பனையில் உருவாக்கிய இந்த பதிவை, பல பதிவர்கள் அப்படியே 'காப்பி' செய்து, தங்களது தளங்களில் பதிவேற்றம் செய்ய,
"ஆவி அஜித் " வேதாளம் படத்தின் கதை இணையத்தில் லீக் - திரைத்துறையினர் அதிர்ச்சி ! - என்று எழுதி இருக்கிறார் தனது முக நூலில்
நண்பர் பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.


தொடர்ந்து, இந்த பதிவு நூற்றுக்ணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டு, "வேதாளம் பேய்ப் படமா? இணையத்தைக் கலக்கும் கதை" என்று சினிமா விகடன்  உட்பட பல்வேறு இணையதளங்கள் தனியாக பதிவு வெளியிடும் அளவுக்கு அசுரவேகத்தில் வளர்ந்து விட்டது.

இணையத்தில் ஒரு செய்தி வந்தால், அதன் அடிப்படை உண்மை பற்றி ஆராயமல், அது அப்படியே இணையவெளியெங்கும் பரப்பபடுகிறது.

இதுவே ஒரு தனிமனிதரை பற்றிய தவறான செய்தியாகவோ இல்லை சாதி/மத உணர்வுகளை தூண்டும் செய்தியாகவோ இருந்தால்.....
அது எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும்???

எதை பற்றி படித்தாலும், அதை பகிரும்முன் சில நிமிடங்களாவது சிந்தியுங்கள்...சிந்திப்போம்(எனக்கும்தான்) என் அருமை இணைய நண்பர்களே.

(குறிப்பு : வேதாளம் கதை மெகாஹிட் ஆகிவிட்டதால், அடுத்து "கபாலி" கதையை(!) வெளியிட இருக்கிறோம்)

-இன்பா

தினமலர் :

http://cinema.dinamalar.com/tamil-news/38777/cinema/Kollywood/Is-Vedalam-story-leaked-in-Online.htm

தினத்தந்தி :

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/10/19144410/The-resources-will-Websites-Ajiths-vedhalam-Story.vpf

Tuesday, October 13, 2015

வேதாளம் - திரை விமர்சனம் - First on Net

முழுத்திரைக்கதையையும் பிரித்து எழுதிவிட்டால் உங்களுக்கு படம் பார்க்கும் சுவாரசியம் இருக்காது என்பதால், நேரடியாக கதைச்சுருக்கத்தை மட்டும் இங்கே தந்து இருக்கிறேன், மற்றவை வெள்ளித்திரையில் காண்க.


வேதாளம் - யெஸ், அஜித்துக்கு இரட்டை வேடங்கள்.

முதலில், கார் டிரைவர் அஜித், பரம சாது. தங்கை லெட்சுமிமேனன் மீது அதிகபாசம் கொண்டவர். ஏழை மாணவியான லெட்சுமிமேனனுக்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் 'ஸ்காலர்ஷிப்' அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்க்காக தங்கையுடன் கொல்கத்தாவுக்கு குடிபெயருகிறார் அஜித்.



அங்கே, அவர்கள் வசிக்கும் பகுதியை சர்வேத அளவில் கடத்தல் உடபட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.
லெட்சுமிமேன்னின் கல்லூரித்தோழியாக  வரும் ஸ்ருதிஹாசன், அஜித்தை ஒருதலையாக காதலிக்க தொடங்குகிறார்.



இதற்கு இடையே,  ஒரு மோதல் சம்பவத்தால் அஜித் ஒட்டும் கால்டாக்சியில் கபீர்சிங்கின் ஆட்கள் போதைமருந்தை வைக்க,  அதை போலீசிடம் ஒப்படைக்கிறார் அப்பாவி அஜித்.

விவகாரம் மீடியா மூலம் பெரிதாகி, கபீர்சிங்கின் ஆட்களை கைது செய்கிறது போலீஸ்.


கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லெட்சுமிமேனன் மீதும் திரும்புகிறது.. தொடரும் தாக்குதல் சம்பங்களில் லெட்சுமேனன் கொல்லப்பட, அஜித்தால் நடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்ருதிஹாசன், அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார்.

அங்கே மருத்துவமனையில் வீபரீத அனுபவங்கள் அஜித்துக்கு ஏற்படுகிறது. அவர் ஒரு 'ஆவி' யை சந்திக்கிறார். அது...அஜித் 'நெம்பர் டு'.


முதல் அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி கெத்து அஜித். அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின் காக்கமானு. ஊரில் பெரும் புள்ளியான பார்வையற்ற தம்பிராமையாவை பாதுக்காகிறது இந்த அணி,

தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள் 'கெத்து' இருக்கும் வரை அவரை நெருங்கமுடியாது என உணர்ந்து, 'கெத்து' அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடுரமாக வீழ்த்துகிறார்கள்.

ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார் அஜித்.

சாது அஜித்தின் உடலுக்குள் கெத்து அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, அப்புறம் என்ன பரபர பழிவாங்கும் படலம்தான்.

முதலில் லோக்கல் எதிரிகளை முடித்துவிட்டு, கொல்காத்தா, தாய்லாந்து என பறக்கிறார்கள் அஜித்(கள்). 'வேதாள வேட்டை' எப்படி என்பதே மீதிக்கதை.


சாதா அஜித் பழிவாங்கினாலே அதிரும். அதுவும் அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி அதாங்க 'வேதாள' அஜித் பழிவாங்கினால்...கேட்கவும்  வேண்டுமா...வீஷுவல் டிரீட்டை.

கெத்து அஜித், தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் எல்லாருக்குமான கெட்டப்.

எல்லா எதிரிகளையும் 'முடித்த' பின், அவ்வளவுதான் ஸ்ருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது வேதாளம், வேறு ஒரு அசைன்மெண்டுக்கு. மீண்டும்.......ஆரம்பம்.



சுருங்க சொன்னால்,நமக்கு மிகவும் பரிச்சயமான விக்கரமாதித்யன் - வேதாளம் கதையை, பக்கா கமர்ஷியல் சினிமாவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிவா. இதில் விக்கரமாதித்யன் - வேதாளம் இருவருமே அஜித்.

மொத்ததில், வேதாளம் - தீபாவளித் திரைவிருந்து, 'தல' வாழையில்.


(குறிப்பு: மேலே சொன்ன 'கதை'யின் உரிமை எங்களுக்கு மட்டுமே சொந்தம். All copy rights Reserved)

-இன்பா

Monday, October 12, 2015

கவி'விளம்பர'பேரரசு வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

"திராவிட இயக்கத்தின் இலக்கிய வெளியில் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் படைத்துக் காட்டியவற்றுள் சிறந்த சிறுகதைகளையும், புறந்தள்ளுவதை விமர்சன மோசடியென்றே கண்டிக்கிறேன்" என்று இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் வைரமுத்து.

"திருமணம் என்பதே வெறும் ஆடம்பரம்" என்று கவிதை எழுதிவிட்டு, திருமண மண்டபம் கட்டிய வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழா என்னும் விளம்பர திருவிழாவில், அவர் மறைந்த எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களுக்கு இழைத்த துரோகம் வெளிவராமல் போய்விட்டது.

இந்த சிறுகதை நூலுக்கு  ஒரு பாராட்டு கடிதம் வாங்குவதற்க்காக ஜெயகாந்தன் அவர்கள் படுத்தபடுக்கையில் இருந்தபோது,வைரமுத்து ஆடிய நாடகத்தை அமரர் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி, தனது வலைதளத்தில் எழுதி இருக்கிறார்.

"சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது: குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

 அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும். அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், 'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா' என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே! அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது"

.- என்று கடிந்து இருக்கிறார் தீபலட்சுமி.

அடையாளம் அற்று, அங்கீகாரம் அற்று எவ்வளவோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வறுமையில் வாடும் கூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள்.

வசதி இருந்தால், எதை எழுதினாலும் அங்கீகாரமும், விளம்பரமும் தேடி வரும் என்பதற்க்கு வைரமுத்துவின் சிறுகதை வெளியீட்டு விழா
ஒரு உதாரணம்.

வைரமுத்து - கவி'விளம்பர'பேரரசு

-இன்பா

 
Follow @kadaitheru