Thursday, August 1, 2013

வெண்ணிலா,கடல் மற்றும் நான்



இருட்டுச்சகதியில்
பூத்ததொரு
தங்கத்தாமரை.

பகலின்
கிழிந்துபோன
சட்டைப்பையிலிருந்து
நழுவி விழுந்த
வெள்ளி நாணயம்.

வானம்
மேகக்கைகுட்டைகளால்
துடைத்து,துடைத்து
பாதுகாக்கும்
ஒளிப்பேழை.

உலகக்கூரையின் கீழ்
எல்லா உயிரினங்களின்
காதலுக்கும்
இறைவன் வைத்த
சாட்சிக் கைநாட்டு.

காதலியின்
பெயர் எழுத
கள்ளிச்செடியின் இலை போதும்.
காதலர்களின்
பெயர் பதிக்க
பாறையொன்று போதும்,
ஆனால்,
காதலை
பதிவு செய்ய
வெண்ணிலா
மட்டுமே வேண்டும்.

.இதோ..
நிலாத்தாய்
தன் ஒளிக்கரங்கள் நீட்டி
உலகை அழைக்கின்றாள்.

துள்ளிவரும் அலைகளை..
தலையாட்டும் மரம்,செடி,கொடிகளை,
நிமிர்ந்து நிற்கும் மலைகளை,

முந்திக்கொண்டு
முதல் நிலையில் செல்கிறது
என் கவிதை.


கவிதை : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru