Tuesday, August 6, 2013

காதலன் - இறந்தும் இருக்கிறான்


இங்கே
காதல் நாடகத்தின்
இறுதிக்காட்சி
ஒரு
இறுதி ஊர்வலத்தில்
முடிந்துவிட்டது,

இதோ
தலை சிதைந்து
வீழ்ந்துவிட்டது
காதல்.

சாதியின்
முரட்டு 'பூட்ஸ்" கால்களில்
மிதிபட்டு நசுங்கிவிட்டது
தருமபுரியில் பூத்த
ஒரு காதல்மலர்.

காதலன்
இறந்தும் இருக்கிறான்.
காதலியோ
இருந்தும் இறந்துவிட்டாள்.

மொத்ததில் இங்கே
மரித்துவிட்டது காதல்.
பிழைத்துவிட்டது சாதி.

காதல் இளவரசனே!

உனக்காக கட்டப்பட்டுவிட்டன
எத்தனையோ உள்ளங்களில்
தாஜ்மகால்கள்.

காதல் போயின்
சாதல் என்று
மகாகவியின் வாக்குக்கு
வாழவளித்தவன் நீ.

இனி தமிழுக்கு
உன் காதல்
ஆறாம் பெருங்காப்பியம்.

பிறப்பு தொடக்கம்.
இறப்பு முடிவு.

வாழ்வெனும் நாடகத்தில்
காதல்
இடையே வந்துபோகும்
காட்சிதான்.

காட்சிகள் மாறலாம்.
உன் மரணம் உட்பட
எந்த சோகத்தையும்
காலம் ஆற்றலாம்.

இரண்டு நூறு வீடுகளை
எரித்ததும்
இரண்டு உயிர்களை
குடித்தும்
இன்னமும் அடங்காவெறியுடன்
அலைகிறதடா சாதி.

இனி உருவாகும்
இளவரசன்களும்,திவ்யாக்களும்
சாதி அரக்கனுக்கு
சமாதி கட்டட்டும்.
சமூகத்தின் முன்
கைகோர்த்து வாழ்ந்துகாட்டி.

-இன்பா

Thursday, August 1, 2013

வெண்ணிலா,கடல் மற்றும் நான்



இருட்டுச்சகதியில்
பூத்ததொரு
தங்கத்தாமரை.

பகலின்
கிழிந்துபோன
சட்டைப்பையிலிருந்து
நழுவி விழுந்த
வெள்ளி நாணயம்.

வானம்
மேகக்கைகுட்டைகளால்
துடைத்து,துடைத்து
பாதுகாக்கும்
ஒளிப்பேழை.

உலகக்கூரையின் கீழ்
எல்லா உயிரினங்களின்
காதலுக்கும்
இறைவன் வைத்த
சாட்சிக் கைநாட்டு.

காதலியின்
பெயர் எழுத
கள்ளிச்செடியின் இலை போதும்.
காதலர்களின்
பெயர் பதிக்க
பாறையொன்று போதும்,
ஆனால்,
காதலை
பதிவு செய்ய
வெண்ணிலா
மட்டுமே வேண்டும்.

.இதோ..
நிலாத்தாய்
தன் ஒளிக்கரங்கள் நீட்டி
உலகை அழைக்கின்றாள்.

துள்ளிவரும் அலைகளை..
தலையாட்டும் மரம்,செடி,கொடிகளை,
நிமிர்ந்து நிற்கும் மலைகளை,

முந்திக்கொண்டு
முதல் நிலையில் செல்கிறது
என் கவிதை.


கவிதை : இன்பா

 
Follow @kadaitheru