Tuesday, August 28, 2012

'சிவாஜி 3D' - மீண்டும் ஒரு திரைவிமர்சனம்

லோகத்தில் எப்பொழுதெல்லாம் அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஷங்கரின் கடவுள் அவதாரமெடுக்கிறார். அதர்மத்தை அதர்மத்தால் முறியடித்துத் தர்மத்தை நிலைநாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார். 
அர்ஜுன், கமல்ஹாசன், விக்ரம் போன்ற நாயகர்களின் வடிவில் முந்தைய யுகங்களில் மனிதனுக்குரிய குணாம்சங்களோடு அவதரித்த ஷங்கரின் கடவுள் இப்பொழுது நேரடியாகக் கீழே வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு 'விஸ்வரூபதரிசனம்' தந்திருக்கிறார். 

முந்தைய யுகங்களின் அதர்மக்காரியங்களுக்கும் 'சிவாஜி' யுகத்தின் அதர்மக்காரியங்களுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. அதர்மத்தைத் தூண்டும் இந்த யுகத்தின் அசுரர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கை நீட்டும் சாதாரண அரசு ஊழியர்களோ பெட்டிக் கடைக்காரர்களோ தெருச் சுற்றிகளோ அல்லர். கல்வி நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து வரம்பே இல்லாமல் கொள்ளையடிக்கும் பகாசுரன். 

அவனுடைய சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்று கொண்டிருக்கிறது அரசாங்கம். காசிமேட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதிசேஷன் என்னும் அந்த அசுரனை அழிக்க, சாஃப்ட்வேர் இன்ஜினியரின் ரூபத்தில் அமெரிக்காவிலிருந்து டாலர் மூட்டைகளுடன் வந்திறங்குகிறார் கடவுள்.

அவனைச் சும்மா போகிறபோக்கில் வதம் செய்துவிட முடியுமா? அதற்காகத்தான் ரஜினி தேவைப்படுகிறார். ஏ.வி.எம். என்னும் பெருமுதலாளியின் முதலீடு தேவைப்படுகிறது ஷங்கருக்கு. ரஜினி ஏற்கனவே தமிழக விளிம்பு நிலை மனிதர்களின் கடவுள். அவரை எல்லோருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான 'திருப்பணி'களை ஊடகங்களின் துணையோடு மேற்கொண்டது 

ஏ.வி.எம். நிறுவனம். சி.என்.என். ஐ.பி.என்., டைம்ஸ்நௌ, என்.டி.டி.வி. போன்ற ஆங்கிலச் செய்தி சானல்களின் உபயத்தால் ரஜினி இப்பொழுது இந்திய நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குமான கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். 

ஷங்கரின் சமூகப் பொறுப்பு உலகறிந்தது. ஊழலுக்கெதிராகப் போராடுவதில் அவருக்கு நிகரான இயக்குநர்கள் யாருமில்லை. சதா சர்வகாலமும் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதன் தற்போதைய சீரழிந்த நிலைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் தேடுவதில் தனது வாழ்நாட்களையும் பணத்தையும் செலவிட்டுக்கொண்டிருப்பவர். வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் தீர்க்கவும் (தீர்த்துக்கட்டவும்) செய்திருக்கிறார். அதற்கு கே.டி. குஞ்சுமோன், 'சிந்தனைச் சிற்பி' சுஜாதா எனப் பலரும் துணை நின்றிருக்கிறார்கள்.

ஆனால், தீர்க்கத் தீர்க்கச் சீரழிவு பெருகிக்கொண்டே போகிறது. இந்த அரசு அதிகாரிகளும் குமாஸ்தாக்களும் மந்திரிகளும் அரசியல்வாதிகளும் 'லஞ்சம் வாங்காதே' என்று ஒரு தடவை சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். 'நூறு தடவை சொன்னா'லாவது கேட்பார்களா என்னும் அவரது பொறுப்புணர்வு மிக்க சிந்தனையின் விளைவே ரஜினி அவருடைய படத்தின் நாயகரானதற்கான காரணமாயிருக்க வேண்டும்.


மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தத் திரைப்படத்தை எப்பாடுபட்டாவது ஒன்றுக்குப் பத்துத் தடவை பார்க்க வேண்டியது மட்டும்தான். 'மற்றதை' அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ரஜினி தனியொரு மனிதனாகவேகூடப் பார்த்துக்கொள்வார். அவர் சிங்கம்; பன்றி அல்ல. இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் இந்தப் படத்தை அடுத்தடுத்துப் பார்த்து 'நல்ல படம்' எனச் சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் 'கூட்டம்' அவர்களைப் பின்தொடர்கிறது. 

பிரம்மாண்டங்களின் மீதும் கிராபிக்ஸ் போன்ற நவீன உத்திகளின் மீதும் ஷங்கருக்கு இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் நிலையை மேம்படுத்திக்கொண்டுள்ளார் ரஜினி. அவரது ஒப்பனைகளும் உடையலங்காரங்களும் சண்டையும் நடனமும் இளம் நடிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாபாவின் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஜினி, ஒரு நடிகராகத் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கு முக்கியத்துவமளித்திருக்கிறார். ஷங்கர், சுஜாதா கூட்டணியின் திரைக்கதை வழக்கமான ரஜினி பட பார்முலாக்களோடு சமரசம் செய்துகொண்டுள்ளது. ஷங்கர் படங்களின் அடையாளமாக விளங்கும் அதிகார அமைப்பின் மீதான விமர்சனங்கள் மென்மையாக்கப்பட்டு ரஜினியின் பழிதீர்க்கும் கதையாடல் உத்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை 'ரஜினி விளைவு' என்றுகூடச் சொல்லலாம். ஆனால் ஷங்கர்- சுஜாதா கூட்டணியின் நுண் அரசியல் படம் முழுவதும் கிருமிகளைப் போல் பரவியிருக்கிறது.

நகைச்சுவைப் பாத்திரமொன்றில் நடித்திருக்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையா 'அங்கவை, சங்கவை' என்னும் கறுப்பு நிறம் கொண்ட தன் மகள்களைக்காட்டி 'எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்கு, கட்டறதா இருந்தா கட்டிக்குங்க, பழகறதுன்னா பழகிக்கிங்க' என 'இளிக்கும்'பொழுது சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்கிறது. 

சிரிப்பைத் தூண்டியது சாலமன் பாப்பையா பேசிய வசனங்களா அந்தப் பெண்களின் தோற்றமா? படத்தில் ரஜினி பேசும் 'சொன்னா அதிருதில்ல?' என்னும் 'பஞ்ச் டயலாக்' ரஜினி ரசிகர்களால் வெவ்வேறு தருணங்களில் பலவித அர்த்தங்களில் பிர யோகிக்கப்படுகிறது. 

ரஜினி ரசிகர்கள் கறுப்பான இளம் பெண்களைக் குறிப்பிடுவதற்குப் பாரி மகளிரின் பெயரைக் கேலியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையின் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் காட்டி, 'அங்க ஒரு அங்கவை சங்கவை நிக்குது பாரு' என ஒரு இளைஞன் சொன்னதைக் கேட்டபொழுது அது ரஜினி விளைவாக அல்ல, சுஜாதா-ஷங்கர் விளைவாகவே தோன்றியது எனக்கு. 

கறுப்பாக இருப்பது தொடர்பான தாழ்வு மனப்பான்மையை ஆழப்படுத்தும் இக்காட்சிகளில் பேசப்படும் வசனங்களில் தென்படும் விரசத்தையும் விஷமத்தனத்தையும் தமிழ் ரசிகர் 'கூட்டம்' கைதட்டி ரசிக்கும் என்பதில் ஷங்கருக்கோ சுஜாதாவுக்கோ எள்ளளவும் சந்தேகம் தோன்றியிருக்க முடியாது. 

சமூகத்தின் நெருக்கடிகளையும் தனிமனிதனின் பலவீனங்களையும் மட்டம்தட்டும் சொல்லாடல்கள் தொடர்ந்து நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. வெள்ளைச்சட்டையில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் ரவுடி ஆதிசேஷனின் பூர்வாசிரமம் சென்னையின் விளிம்புநிலை மனிதர்கள் வாழும் காசிமேடு. காசிமேடு போலீஸ் ரெக்கார்டுகளில் இடம்பெற்றுள்ள ரவுடி அவன். பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் மயிலாப்பூரையோ திருவல்லிக்கேணியையோ மேற்கு மாம்பலத்தையோ அப்படியொரு கொடிய வில்லனின் பூர்வீகமாகக் கற்பனை செய்ய முடியாததும்கூட சுஜாதாவின், ஷங்கரின் நுண்அரசியலின் விளைவுகள்தாம்.

இப்படத்தின் முதிர்ச்சியற்ற திரைக்கதையையும் விஷமத்தனமான வசனங்களையும் சிறுபிள்ளைத்தனமான தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டாடும் ஊடக அரசியலைப் பற்றித் தனியே எழுத வேண்டும்.

கையில் ஒரு லேப்டாப்பையும் மனம் திருந்திய சில ரவுடிகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு சில நாள்களுக்குள் 46 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்துவிடும் சாமர்த்தியம் கொண்ட ஒரு கற்பனையான நாயகனை மையப்படுத்தித் தமிழ் வாழ்வின் பல கூறுகளை நுட்பமான முறையில் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தைப் பொருட்படுத்துவதற்கோ விவாதிப்பதற்கோ ஒன்றுமில்லைதான். 

(எல்லா பத்திரிகைகளும் சாதா 'சிவாஜி' வெளியிட்ட சமயத்தில் 'ஜால்ரா' அடிக்க, காலச்சுவடு இதழ் மட்டுமே படம் பற்றி நேர்மையொடு பிரசுகரித்த ஒரு விமர்சனத்தை, "3டி சிவாஜி" வரப்போகும் இந்த சமயத்தில் இங்கே மறுபதிப்பு செய்து உள்ளேன். கட்டுரையாசிரியர் : தேவிபாரதி.)

0 comments:

 
Follow @kadaitheru